Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
ஜ.ரா. சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி)
- அரவிந்த் சுவாமிநாதன்|செப்டம்பர் 2009||(5 Comments)
Share:
Click Here Enlargeநகைச்சுவை எழுத்தாளர்களுள் மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர்கள் கல்கி, தேவன், எஸ்.வி.வி., நாடோடி, சாவி ஆகியோர். அவர்கள் வரிசையில் இடம்பெறுவதோடு இன்றும் குறிப்பிடத்தக்க வகையில் எழுதி வருபவர் ஜலகண்டபுரம் ராமசாமி சுந்தரேசன் எனப்படும் ஜ.ரா. சுந்தரேசன்.

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் ராமசாமி-பாக்கியம் தம்பதியருக்கு மகவாகத் தோன்றிய சுந்தரேசன், இயல்பிலேயே நல்ல நகைச்சுவை உணர்வும் படைப்பூக்கமும் கைவரப் பெற்றிருந்தார். பிரபல குமுதம் பத்திரிகையில் 1953ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். குமுதம் எழுத்துப் பயிற்சிக் களமானது. கதை, கட்டுரை, நாவல், சிறுகதை என படைப்பிலக்கியத்தின் பல அம்சங்களையும் பல புனைபெயர்களில் எழுதிக் குவித்தார். பத்திரிகையில் பல்வேறு புதுமைகள் வெளிவருவதற்கு இவர், ரா.கி.ரங்கராஜன், புனிதன் ஆகியோரைக் கொண்ட ஆசிரியர் குழு காரணமாக அமைந்தது. உதவி ஆசிரியர், துணை ஆசிரியர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்த ஜ.ரா.சு., தன்கீழ் பணியாற்றிய எழுத்தாளர்களை ஊக்குவித்ததுடன், சிறந்த பத்திரிகையாளர்கள் பலர் உருவாகவும் காரணமாக அமைந்தார். இதழியல் உலகுக்கு பல்வேறு பங்களிப்புக்களைச் செய்த ஜ.ரா.சு. 1990ல் ஓய்வு பெற்றார்.

ஆர்தர் கானன் டாயிலின் ஷெர்லாக் ஹோம்ஸ், தமிழ்வாணனின் சங்கர்லால், சுஜாதாவின் கணேஷ்-வசந்த் போல ஜ.ரா.சு. உருவாக்கிய அப்புசாமி-சீதாப்பட்டி தம்பதியினர் இலக்கிய உலகில் சாகாவரம் பெற்றனர்.
குமுதத்தில் பணியாற்றி வந்த காலத்தில் தமது தாய், தந்தையார் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்ற புனைபெயரில் எழுதிய அப்புசாமி-சீதாப்பாட்டி கதைகள் இவருக்கு நீடித்த புகழைத் தேடித் தந்தன. வாராவாரம் ஆவலோடு வாசகர்கள் எதிர்பார்த்த அம்சமாக அமைந்ததோடு நூலகம் என்றும் பாராமல் பலர் சத்தம்போட்டுச் சிரிக்கும் அளவுக்கும் அவை இருந்தது உண்மை. ஆர்தர் கானன் டாயிலின் ஷெர்லாக் ஹோம்ஸ், தமிழ்வாணனின் சங்கர்லால், சுஜாதாவின் கணேஷ்-வசந்த் போல இவர் உருவாக்கிய அப்புசாமி-சீதாப்பட்டி தம்பதியினர் இலக்கிய உலகில் சாகாவரம் பெற்றனர்.

குறிப்பாக அப்புசாமி-சீதாப்பாட்டி கதைகளுக்கு ஓவியர் ஜெயராஜ் வரைந்த ஓவியங்கள் அந்தக் கதைகளின் வெற்றிக்கு மிக்க உறுதுணையாக அமைந்தன. "நான் எத்தனையோ கதைகளுக்கு அல்ட்ரா மாடர்னாகப் பல ஓவியங்களை வரைந்து கொடுத்திருந்தாலும், எனக்கு மிகவும் பெயரும் புகழும் வாங்கிக் கொடுத்தது அப்புசாமி-சீதாப்பாட்டி ஓவியம்தான்" என்று கூறும் ஜெயராஜ், தனது முகவரி அட்டையில் பொறித்திருப்பது, அப்புசாமி-சீதாபாட்டி ஓவியங்களையே!

சென்னைத் தமிழில் பேசும் அப்புசாமி, அழகான ஆங்கிலத்திலும் ஆங்கிலம் கலந்த தமிழிலும் பேசி அசத்தும் சீதாப்பாட்டி, அசடு வழியும் ரசகுண்டு, சதா கன்னடத்தில் மாட்லாடும் பீமாராவ், சீதாப்பாட்டி மேல் பொறாமையும் அப்புசாமி மேல் கரிசனமும் கொண்ட கீதாப்பாட்டி, அகல்யா சந்தானம், அரை பிளேடு அருணாசலம் என பாக்கியம் ராமசாமி உருவாக்கிய பாத்திரங்கள் இன்றளவும் வாசக நெஞ்சங்களில் இன்னமும் கிச்சுகிச்சு மூட்டி வருவது சத்தியம். புத்தகச் சந்தைகளில் அப்புசாமி-சீதாப்பாட்டி புத்தகங்களுக்கு இன்றும் நல்ல வரவேற்பு இருப்பதே அவரது எழுத்தின் வெற்றிக்குச் சான்று.

"தேவன், எஸ்.வி.வி., கல்கி காலங்களில் மென்மையாக இருந்த நகைச்சுவை எழுத்து, காலப்போக்கில் மிகைக் கலாசாரத்தின், விளம்பர யுகத்தின் தாக்குதலால், எதையுமே இரண்டிலிருந்து பத்து மடங்காக்கிச் சொன்னால்தான் சிரிக்கிறார்கள் என்றாகி விட்டது" என்று கூறும் சுஜாதாவின் கூற்றுக்கேற்ப, அப்புசாமி படம் எடுக்கிறார்; அலாவுதீன் விளக்கை வைத்து மாயங்கள் செய்கிறார்; மாணவர் தலைவராக இருக்கிறார்; அரேபியாவிற்குச் செல்கிறார்; ஆப்பிரிக்க அழகியோடு காதல் செய்கிறார், ஏன் கொள்ளைகாரராகக் கூட இருக்கிறார்! இப்படி அப்புசாமியின் பலதரப்பட்ட முகங்களை தனக்கேயுரிய பாணியில் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி தமிழ் நகைச்சுவை எழுத்தாளர்கள் வரிசையில் அழுத்தமாக தனது முத்திரையைப் பதித்திருக்கிறார் ஜ.ரா.சு.

தமிழ் வாசகப் பரப்பில் அப்புசாமிக்குக் கிடைத்த வரவேற்பால் 'அப்புசாமி நாவல்' என்ற மாத இதழ் கூட தொடங்கி நடத்தப்பட்டதே அப்புசாமி கதாபாத்திரத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும்.
நகைச்சுவைப் புதினங்கள் மட்டுமல்லாமல் பல சமூகக் கதைகளையும் ஜ.ரா.சு எழுதியிருக்கிறார். இரண்டு ரிக்‌ஷாக்காரர்கள் பேசிக்கொள்வது போன்று சென்னைத் தமிழில் பகவத்கீதையை விளக்கி இவர் எழுதியிருக்கும் 'பாமர கீதை' ஒரு குறிப்பிடத்தக்க நூல்.
"நான் கும்பிடும் சாமி, தினமும் நான் தொழுகையாகப் படிக்கும் பாக்கியம் ராமசாமி. இவரது அப்புசாமி சீதாப்பாட்டி கதைகள், சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் இந்த இரண்டின் கலவை பாதிப்புதான் மிஸ்டர் கிச்சா-எச்சுமிப் பாட்டி" என்கிறார் கிரேசி மோகன், தனது மிஸ்டர் கிச்சா நூலுக்கான முன்னுரையில்.

பிரபல இயக்குநரும், பிரசாத் ஸ்டூடியோவின் உரிமையாளருமான எல்.வி. பிரசாத் நடிக்க மிகுந்த விருப்பம் கொண்ட கதாபாத்திரம் அப்புசாமி. பின்னர் இக்கதாபாத்திரத்தில் காத்தாடி ராமமூர்த்தி நடித்துத் தனிமுத்திரை பதித்தார். ஜ.ராசு.வின் பல அப்புசாமி கதைகள் அவரால் நாடகமாக்கப்பட்டன.

நகைச்சுவைப் புதினங்கள் மட்டுமல்லாமல் 'கடம்பாவின் எதிரி' போன்ற பல சமூகக் கதைகளையும் ஜ.ரா.சு எழுதியிருக்கிறார். இரண்டு ரிக்‌ஷாக்காரர்கள் பேசிக்கொள்வது போன்று சென்னைத் தமிழில் பகவத்கீதையை விளக்கி அவர் எழுதியிருக்கும் 'பாமர கீதை' குறிப்பிடத்தக்க நூல்.

எழுத்து மட்டுமல்ல; சமூகப் பணியிலும் ஜ.ரா. சுந்தரேசன் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 'அக்கறை' என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் பல சமூக சேவைகளைச் செய்து வருகிறார். அவருடைய அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளையும் பல்வேறு சமூகநலப் பணிகளைச் செய்து வருகிறது.

மகன்-மருமகளுடன் சென்னையில் வசித்து வரும் ஜ.ரா. சுந்தரேசன், தனது கதாபாத்திரத்தின் பெயரால் ஓர் இணைய தளத்தை உருவாக்கி நடத்தி வரும் ஒரே எழுத்தாளர் என்ற சிறப்பைப் பெறுகிறார். அப்புசாமியின் பெயரிலேயே, www.appusami.com என்ற நகைச்சுவை - பல்சுவை இணையதளத்தைப் பல ஆண்டுகளாக இவர் நடத்தி வருகிறார்.

அப்புசாமி-சீதாப்பாட்டி நாவல்கள் மூலம் தமிழில் நகைச்சுவை இலக்கியத்தைப் பெரிதும் வளப்படுத்தியிருக்கிறார் ஜ.ரா. சுந்தரேசன் என்றால் அது மிகையல்ல.

அரவிந்த் சுவாமிநாதன்
Share: 




© Copyright 2020 Tamilonline