|
|
|
மதுமிதா ஒரு கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர். நிகழ்காலத் தமிழிலக்கியத்தின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளுள் ஒருவர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, சமஸ்கிருதம் எனப் பலமொழிப் பரிச்சயம் கொண்ட இவர், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், போர்ட்ஃபோலியோ மேனேஜ்மெண்ட்டில் பட்டயமும் பெற்றவர். ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் சிறப்புப் பட்டம் பெற்றவர். இயற்பெயர் மஞ்சு. பூர்வீகம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம். ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த ரகுபதிராஜா இவரது தந்தை. தாயார் பாக்கியலட்சுமி. மகாத்மா காந்தி, அன்னிபெசன்ட் அம்மையார் போன்றோரோடு நெருங்கிப் பழகிய சுதந்திரப் போராட்டத் தியாகி காந்தி அரங்கசாமி ராஜாவின் பேத்தி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழில் தொடர்ந்து பல தளங்களிலும் எழுதிவரும் இவர், ஆரம்ப காலத்தில் மஞ்சு ரெங்கனாதன் என்ற பெயரிலேயே எழுதி வந்தார். பின்னர் 'மதுமிதா' ஆனார். இவரது குறிப்பிடத்தகுந்த படைப்புகள் - மஹாகவி பர்த்ருஹரி சமஸ்கிருதத்தில் எழுதிய நீதி சதகத்தை பர்த்ருஹரியின் பொன்மொழிகள் என்ற பெயரில் தமிழாக்கம் செய்திருப்பதும், 300 பாடல்கள் கொண்ட பர்த்ருஹரியின் சுபாஷிதத்தை தமிழில் முழுமையாக மொழிபெயர்த்து வெளியிட்டிருப்பதும் ஆகும். இந்நூல் வெளிவருவதற்கு உறுதுணையாக இருந்ததுடன், அதற்கு அணிந்துரையும் வழங்கியிருப்பவர் அமரர் பன்மொழிப் புலவர் மு. ஜகந்நாத ராஜா. பாராட்டுரை வழங்கியிருப்பவர் ஜெயகாந்தன். 'சுபாஷிதம்' நூலை சமஸ்கிருதத்தில் இருந்து தமிழில் ஆக்கம் செய்த சாதனையைப் பாராட்டி 'நல்லி திசையெட்டும்' அமைப்பு சமீபத்தில் மதுமிதாவுக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது. (சுபாஷிதம் நூல் 'வேட்டையாடு விளையாடு' என்ற கமல் திரைப்படத்தில் நான்கு காட்சிகளில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது).
கவிதைகள் வரிசையில் 'மெளனமாய் உன் முன்னே' என்ற இவரது கவிதைத் தொகுப்பு மிக முக்கியமானது. பாசாங்கற்ற வார்த்தைகளைக் கொண்டது. இது தவிர 18 பத்திரிகையாசிரியர்களை நேர்காணல் செய்து இவர் வெளியிட்டிருக்கும் 'நான்காவது தூண்' நூல் தமிழின் குறிப்பிடத் தகுந்த நூல்களுள் ஒன்றாகும். இவ்வகையில் தமிழில் முதல் நூல் என்று இதனைக் கூறலாம். துக்ளக் சோ, மங்கையர் மலர் அனுராதா சேகர், உயிர்மை மனுஷ்யபுத்திரன், கல்கி சீதாரவி, கலைமகள் கீழாம்பூர், காலச்சுவடு கண்ணன், தென்றல் மதுரபாரதி, அண்ணா கண்ணன் எனப் பலரது விரிவான பத்திரிகை அனுபவங்களை இந்நூலில் மதுமிதா பதிவு செய்திருக்கிறார். இவரது 'தைவான் நாடோடிக் கதைகள்' மற்றும் 'பாயுமொளி நீ எனக்கு' என்ற மின்னூல் கவிதைத் தொகுப்பு ஆகியவை மிக முக்கியமானவை ஆகும். இவை தவிர இவரது கதை, கவிதை, கட்டுரை, நேர்காணல்கள் இணையதளங்களிலும் கல்கி, மங்கையர்மலர், அமுதசுரபி, புதிய பார்வை, யுகமாயினி, உயிரெழுத்து, வார்த்தை போன்ற இலக்கிய இதழ்களிலும் வெளியாகியுள்ளன. பல மடற்குழுக்களிலும், (Groups) விவாதக் களங்களிலும் (Forums) தனது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார். |
|
| இராஜபாளையத்தில் பெண்களுக்கான தனி நூலகம் அமைய வேண்டுமென்று போராடி அது கிடைக்கக் காரணமாக இருந்தவர் மதுமிதா. | |
இளம் பருவத்தில் தமக்கமைந்த வாழ்க்கை முறையும், தந்தையாரின் ஊக்குவிப்பும், நல்ல பல நூல்களின் அறிமுகமுமே தம்மால் இன்று ஒரு எழுத்தாளராக முடிந்திருக்கிறது என்று கூறும் மதுமிதா, பல இணைய இதழ்கள், குழுக்கள் நடத்திய போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றிருக்கிறார். பல்வேறு இலக்கிய அமைப்புகளாலும் கௌரவிக்கப்பட்டுள்ளார். இராஜபாளையத்தில் பெண்களுக்கான தனி நூலகம் அமைய வேண்டுமென்று போராடி அது கிடைக்கக் காரணமாக இருந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை வானொலியில் இவர் இயற்றிய பாடல்கள் ஒலிபரப்பாகியுள்ளன. பொதிகை, மக்கள் தொலைக்காட்சிகளில் கவிதைகள் வாசித்துள்ளார். 'புதிய பார்வை', 'வார்த்தை' இதழ்களில் தொடர்ந்து இவரது பத்திகள் வெளியாகின்றன.
தற்போது சாகித்ய அகாதெமிக்காக 'வசீகரிக்கும் தூசி' என்ற பெயரில், பிரதீபா சத்பதி ஒரிய மொழியில் எழுதிய 'தன்மய தூளி' நூலைத் தமிழாக்கம் செய்துள்ளார். டாக்டர் தமிழ்ச்செல்வியோடு இணைந்து அக்கமகாதேவியின் கன்னட வசனங்களைத் தமிழாக்கி வருகிறார். ஃபிரான்சிஸ் பேகன் கட்டுரைகளையும், ஷேக்ஸ்பியரையும் தமிழில் தர வேண்டும் என்பதே தனது தீராத ஆவல் என்கிறார். இரத்த தானம், மனநல ஆலோசனை, பார்வையற்றோருக்கு வாசித்தல், சிறார் கல்வி எனப் பல சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வரும் இவர் பரதநாட்டியம் தெரிந்தவர்.
தனது எழுத்துப் பணிக்கு உறுதுணையாக நின்று ஊக்கம் தருபவர் கணவர் ரங்கநாத ராஜாதான் என்று கூறும் மதுமிதா, கணவர், குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார், தனது கருத்துக்களை காற்றுவெளி என்ற வலைப்பதிவில் பகிர்ந்து கொண்டு வருகிறார்.
அரவிந்த் |
|
|
|
|
|
|
|