Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
நாகூர் ரூமி
- அரவிந்த்|நவம்பர் 2009|
Share:
Click Here Enlargeநெடுங்காலமாகவே தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குச் சமணர், பௌத்தர், கிறிஸ்தவர், இஸ்லாமியர் எனப் பல திறத்தினரும் தந்த கொடை அளவிடற்கரியது. குறிப்பாக, இஸ்லாமியரில் 'சீறாப்புராணம்' பாடிய உமறுப்புலவர், செய்யது அப்துல் காதர் லெப்பை, நயினா முகமது, சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர், நீதிபதி மு.மு.இஸ்மாயில் ஆகியோர் வரிசையில், வண்ணக் களஞ்சியப் புலவர் பரம்பரையில் வருபவர் ஏ.எஸ். முஹம்மது ரஃபி என்ற இயற்பெயர் கொண்ட நாகூர் ரூமி. இவரது பெரியம்மா சித்தி ஜுனைதா பேகம் தமிழின் முதல் முஸ்லிம் பெண் நாவலாசிரியர். 1938ல் வெளியான ஜுனைதாவின் 'காதலா கடமையா?' நூலுக்கு டாக்டர் உவேசா முன்னுரை வழங்கியிருக்கிறார். ரூமியின் தாய் மாமா தூயவன் (அக்பர்) புகழ்பெற்ற எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் வசனகர்த்தா. மற்றொரு மாமா நாகூர் சலீம் பிரபலமான பாடலாசிரியர். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். அந்த வகையில் ஓர் இலக்கியக் குடும்பத்தில் பிறந்தவர் நாகூர் ரூமி.

1980ல் கல்லூரிக் காலத்தில் ரூமியின் முதல் படைப்பு 'கணையாழி' இதழில் வெளியானது. 'தமிழ் சில வட்டங்கள்' என்ற அக்கட்டுரையைத் தொடர்ந்து மீட்சி, மானுடம், சுபமங்களா, ஃ, கொல்லிப்பாவை எனச் சிறு பத்திரிக்கைகளிலும் குமுதம், குங்குமம், குமுதம் ஜங்ஷன், விகடன் போன்ற வெகு ஜன இதழ்களிலும் எழுதத் தொடங்கினார். குமுதம் டாட் காமில் வந்த 'கப்பலுக்குப் போன மச்சான்' என்ற குறுநாவல் பரவலான கவனத்தைப் பெற்றது.

மொழிபெயர்ப்புகளில், மூலத்தை நகலெடுக்காமல் அதை உள்வாங்கிக்கொண்டு மறுபடைப்புச் செய்வது ரூமியின் தனிச் சிறப்பு. திருப்பூர் தமிழ்ச்சங்க விருது உட்பட பல்வேறு விருதுகள் இவரது படைப்புகளுக்குக் கிடைத்திருக்கின்றன.
தி. ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற 'குட்டியாப்பா' இவரது மிகச் சிறந்த படைப்புக்களில் ஒன்று. "குட்டியாப்பா ஒரு மகத்தான சாதனை என்றே கருதத் தோன்றுகிறது. பாத்திரத் தேர்வு, சம்பவத் தேர்வு எவ்வளவுக்கெவ்வளவு இயல்பாகத் தோன்றுகிறதோ அதே அளவுக்கு தனித்துவமிக்கது" என்கிறார் அசோகமித்திரன். "அண்மையில் தமிழில் எழுதப்பட்ட சிறந்த குறு நாவல்களில் ஒன்று 'குட்டியாப்பா'" என்று நாவலாசிரியர் சுஜாதா இதனைப் பாராட்டியிருக்கிறார். இக்கதை நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்தியாவின் சிறுகதைத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், சென்னைப் பல்கலைக் கழகத்தின் எம்ஃபில் பட்டத்திற்காக மாணவர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தின் முதலாண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. திருச்சி ஜமால் முகமது கல்லூரி தமிழ்த்துறையிலும் இவரது சிறுகதைகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. (அது ரூமி படித்த கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.)

'அடுத்த விநாடி' என்ற நூலின் மூலம் இலக்கிய உலகில் பரவலான கவனத்தைப் பெற்றதுடன் தொடர்ந்து படைப்புலகின் பல தளங்களிலும் ரூமி தீவிரமாக இயங்க ஆரம்பித்தார். கவிதை, சிறுகதை, நாவல், மொழிமாற்றக் கவிதை, மொழிமாற்றச் சிறுகதை ஆகியவற்றுடன் இஸ்லாத்தைப் பற்றியும், சூஃபி தத்துவம், நாகூர் ஆண்டவர் வரலாறு எனப் பல ஆன்மீக, தத்துவ, வாழ்க்கை வரலாற்றுப் படைப்புகளையும் தந்து தனது பன்முக ஆற்றலை வெளிப்படுத்தினார். காமராஜரைப் பற்றி இவர் எழுதியுள்ள நூல் முக்கியமானது. தொடர்ந்து மாணவர்களுக்காக எழுதிய 'ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ்' நல்ல வரவேற்பைப் பெற்றது.

வண்ணநிலவனின் மழை என்ற சிறுகதையை The Rain என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருப்பதுடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் பல விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார். மொழிபெயர்ப்புகளில், மூலத்தை நகலெடுக்காமல் அதை உள்வாங்கிக்கொண்டு மறுபடைப்புச் செய்வது ரூமியின் தனிச் சிறப்பு. திருப்பூர் தமிழ்ச்சங்க விருது உட்பட பல்வேறு விருதுகள் இவரது படைப்புகளுக்குக் கிடைத்திருக்கின்றன. எண்ணூறு பக்கங்களுக்கு மேலான ஹோமரின் இலியட் இதிகாசத்தை ஆங்கிலம் வழியே தமிழில் மாற்றம் செய்ததற்காகச் சமீபத்தில் நல்லி-திசை எட்டும் மொழிபெயர்ப்பு விருது இவருக்குக் கிடைத்துள்ளது.
கிட்டத்தட்ட 27 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கும் ரூமி தன் எழுத்துலக அனுபவம் பற்றி "அனுபவம் என்பதே ஒரு விஷயத்தை உள்வாங்குவதுதான். அதற்கு உடல் தொடர்பிருக்க வேண்டியது ஒரு கட்டாயமில்லை" என்று கூறுகிறார்.

ஆம்பூரில் உள்ள மஸ்ஹரூல் உலூம் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் ரூமி, கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது மாணவர்களுக்கான சுய மேம்பாட்டுப் பயிற்சியரங்குகளிலும், ஆளுமைத் திறன் வளர்ச்சிப் பயிற்சிகளிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொண்டு அவர்களை ஊக்குவித்து வருகிறார். ஆல்ஃபா தியானம் போன்றவற்றில் பலருக்கும் பயிற்சி கொடுத்து வருவதுடன், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்சிக்களிலும் பங்கு பெற்று வருகிறார். Distance Healing என்று சொல்லப்படும் பிரார்த்தனை முறையின் மூலம் தம்மைத் தொடர்பு கொள்பவர்களுக்கு நலம் அளித்து வருகிறார்.

டாக்டர் அ.ச.ஞா., டாக்டர் மு.வ. போன்றோர் வரிசையில், பேராசிரியர்களாலும் வெகுஜனம் விரும்பும் நல்ல படைப்புகளைத் தர முடியும் என்பதை நாகூர் ரூமி அழுத்தமாக நிரூபித்து வருகிறார்.
மனைவி நஸீஹா, மூன்று பெண் குழந்தைகளுடன் வசித்து வரும் ரூமி, "மனைவி நஸீஹா மட்டும் இல்லையென்றால் என்னால் ஒரு வரிகூட எழுதியிருக்க முடியாது" என்கிறார் நெகிழ்ச்சியுடன். இவரது மூத்த பெண் மூன்றாமாண்டு பட்ட வகுப்பில் இருக்கிறாரென்று இவரைப் பார்ப்பவர்கள் சொல்ல முடியாது, ரூமிக்கு அப்படி ஒரு இளமையான தோற்றம்.

ரூமி, தற்போது 'பராக் ஒபாமா', ஹோமரின் 'ஒடிஸி', 'ஹராம் ஹலால்', 'இந்த விநாடி' போன்ற நூல்களை எழுதிக் கொண்டிருக்கிறார். 'என் பெயர் மாதாபி' (சுசித்ரா பட்டாச்சார்யாவின் சிறுகதைகள்), 'சவ்ரவ் - வாழ்க்கை வரலாறு', 'Prabhakaran: Entry and Exit' (பா. ராகவனின் பிரபாகரன் வாழ்வும் மரணமும் என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு), 'பெருமானாரின் வெளியுறவுக் கொள்கைகள்', 'சொல்லாத சொல்' (கவிதைகள்) போன்ற நூல்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

டாக்டர் அ.ச.ஞா., டாக்டர் மு.வ. போன்றோர் வரிசையில், பேராசிரியர்களாலும் வெகுஜனம் விரும்பும் நல்ல படைப்புகளைத் தர முடியும் என்பதை நாகூர் ரூமி அழுத்தமாக நிரூபித்து வருகிறார்.

அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline