Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
அன்புள்ள சிநேகிதியே
பொருட்களை உபயோகப்படுத்தி மனிதர்களை நேசிக்க வேண்டும்; மாறாக அல்ல!
- சித்ரா வைத்தீஸ்வரன்|செப்டம்பர் 2009||(1 Comment)
Share:

ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Vijayalakshmi Raja, Texas


(பல வாசகர்கள் விரும்பியபடி, மாமியார் மாமனார்களின் சார்பில் 'Comfort zone for the in-laws' என்ற இந்தத் தொகுப்பை வெளியிடுகிறேன். தென்றலைப் படிக்கும் இளம் தம்பதியினர் யாருக்காவது இந்தத் தொகுப்பு பிடித்திருந்து எங்கோ, யாரோ ஒரு Mother/Father-in-law, Mother/Father-in-love என்று மாறினாலே சந்தோஷம்தான்)

பெரியவர்கள், சிறியவர்களிடம் எதிர்பார்ப்பது கொஞ்சம் மரியாதை, அன்பு, அக்கறை, நாலு நல்ல வார்த்தை பேசிக்கொண்டிருத்தல்.

மாமியார், மாமனார் வருகிறார்கள். அப்பா, அம்மா வருவதைப் போலப் பரபரப்பு, சந்தோஷம் இல்லைதான். Let us be Practical. ஆனால் நாம் அன்பு செலுத்தும் கணவர்/மனைவியின் பெற்றோர்கள் இல்லையா, அவருக்கு அந்த இன்பமான எதிர்பார்ப்புகள் இருக்கும் இல்லையா? நாம் ஒருவரை உண்மையாக நேசிக்கும்போது, அவர் நேசிப்பவர்களையும் நாம் நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அன்பு உரிமைப் பொருள் அல்ல. அது உறவின் அடையாளம்.

நாம் ஒருவரை உண்மையாக நேசிக்கும்போது, அவர் நேசிப்பவர்களையும் நாம் நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அன்பு உரிமைப் பொருள் அல்ல. அது உறவின் அடையாளம்.
மாமியார் ஆதிக்கம் செலுத்துபவர், மாமனார் சாது என்பது போல அபிப்பிராயங்கள் எல்லாம் மனதில் அலைமோதும், இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அவர்கள் வயதில் பெரியவர்கள். தாம்பத்திய உறவுகளில் நம்மைவிட அனுபவம் பெற்றவர்கள். முதன்முறையாக 30 மணிநேரப் பயணம். எல்லாவற்றிலும் ஒரு பய உணர்ச்சி. சீட்பெல்ட் சரியாகப் போட்டுக் கொண்டிருக்கிறோமா; PAவில் சொல்வது ஒன்றும் புரியவில்லையே; டாய்லெட்டில் எங்கே ஃப்ளஷ் செய்யும் பட்டன்; பிளேனில் கொண்டு வைத்தது வெஜிடேரியன் சாப்பாடா; நாம் பருப்புப் பொடியும், வடுமாங்காயும் கொண்டு வந்ததை அமெரிக்க கஸ்டம்ஸில் கண்டுபிடித்து விடுவார்களா; செக்யூரிட்டியின் போது வளையல், வாட்ச், மோதிரம் என்று அந்த ட்ரேயில் போட்டேனே, ஏதாவது ஒரு வளை மறந்து போய்விட்டதோ; ஏன் மறுபடியும் சீட்பெல்ட் போட்டுக்கொள்ளச் சொல்கிறார்கள், ப்ளேன் கவிழ்ந்து விடுமோ; இவர்கள் சரியான சமயத்தில் வெளியே நமக்காகக் காத்திருப்பார்களா -- என்று ஆயிரம் ஆயிரம் அச்சங்கள். வாடி வதங்கி வெளியில் வருவார்கள், நம்மைப் பார்த்த உடனேயே அத்தனையும் ஒரு நொடியில் மறைந்துபோகும். அதுதான் உறவின் ஆத்ம பலம். அன்பின் ஆணிவேர். ஓடிப்போய் கட்டிக்கொண்டு, கையில் ரோஜாவையோ, பலூனையோ கொடுத்தால் குழந்தை போலச் சந்தோஷப்பட்டுக் கொள்வார்கள்.

காரில் ஏறி அமர்ந்தவுடன் (20-30 நிமிடங்களில் வீடு செல்லக் கூடியவர்கள் கொடுத்து வைத்தவர்கள்) சூடாக ஃப்ளாஸ்கிலிருந்து காபி கொடுத்தாலே அத்தனை சுறுசுறுப்பும் வந்துவிடும். வெகுதூரம் பயணம் செய்ய வேண்டியவர்கள் இட்லி, தயிர்சாதம் என்று எடுத்துக் கொண்டுதான் போவோம். ஆனால், அந்த முதல் காபி இருக்கிறதே....!

2-3 நாட்கள், ஏன் ஒருவாரம், 10 நாள் வரைகூட எல்லாம் நன்றாகத்தான் இருக்கும். அப்புறம் சிறிது சிறிதாக ஏதேனும் துளிர ஆரம்பிக்கும். உதாரணத்துக்கு எத்தனையோ....

* நான் ஆசைப்பட்டு வாங்கின 'சைனாவை' கைதவறி உங்கம்மா உடைத்துவிட்டார். கேட்டால், 'பாண்டி பஜாரில் 'இதுபோன்ற ஜாடிகள் கொட்டிக் கிடக்கிறது. இதற்கா இவ்வளவு விலை? பேசாமல் அடுத்த தடவை வரும்போது ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் டப்பாக்களாக வாங்கி வைத்துக் கொள்' என்ற அட்வைஸ் வேறு.

மனதில் இரண்டு கட்சிகள். ஒன்றிற்கு கோபம் வருகிறது. ஆத்திரம் வருகிறது. பல்லைக் கடித்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. (மாமியாராக இருக்கிறாரே!)

இரண்டாவது கட்சி இயங்க மறுக்கிறது. நாமே கஷ்டப்பட்டு இயக்க வேண்டும். பொறுமையாக வித்தியாசத்தை உணர்த்த வேண்டும். மிகமிக ஜாக்கிரதையாக அதுபோன்ற பொருட்களைக் கையாளும் அவசியத்தைச் சொல்லி, அதே சமயம் அவரை குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட வைக்க வேண்டும்.

* மஞ்சள் பொடிக் கறை எளிதில் போகாது. குளித்து விட்டு வந்தால் மஞ்சள் நிறம் எல்லா இடங்களிலும் படிந்துதான் இருக்கும்.

* சிலருக்கு கை, கால் வலி என்று நிறைய எண்ணெய் பாட்டில்கள் கொண்டு வருவார்கள். அந்த எண்ணைக் காலுடன் வெள்ளைக் கார்பெட்டில் நடக்கும்போது நமக்குப் பதறும்.

* பூஜை, விசேஷ தினங்களில் நாம் ஆசையாக வீட்டுக்கு வரும்போது வடை, பாயசம் என்று செய்யக் கிளம்புவார்கள். பாயசம் அமர்க்களமாக அமையும். வடையைப் பொறித்தெடுக்கும் போதுதான் 'பூம், பூம் பூம்' என்ற அலறல். பயந்து நடுங்கி, அடுப்பை அணைத்து விட்டுத் திரும்பினால் போன் அலறும். செக்யூரிட்டியிலிருந்து பாஸ்வேர்டு கேட்பார்கள். தெரிந்திருக்காது. போலிஸ் வரும். ஃபயர் எஞ்சின் தொடரும். நடுங்கிப் போய்விடுவார்கள். நமக்கு ஃபோன் செய்தால் நாம் ஏதாவது ஒரு கான்பெரன்ஸ்/மீட்டிங்கில் மாட்டித் திணறிக் கொண்டிருப்போம்.

* மைக்ரோ-வேவில் ஒரு நிமிடம் என்று நினைத்து, ஒரு பூஜ்யத்தை அதிகமாகச் சேர்த்து விடுவார்கள். பாத்திரம் 'டப்' என்று வெடித்து, தண்ணீர் சிதறியிருக்கும். பயந்து போய்விடுவார்கள். நம்முடைய 'டெக்'தானே என்று புடவைகளையும், வேஷ்டிகளையும் நல்ல வெயிலில் உலர்த்திக் கொண்டிருப்பார்கள்.

* ஒரு பார்ட்டிக்குப் போனால் 'சென்சிடிவ்' விஷயம் என்று நமக்குத் தோன்றுவதை அவர்களுக்குத் தெரியாமல் சொல்லிக் கொண்டிருப்பார்கள். நாம் பட்டென்று ஏதாவது சொல்லி விட்டால் மனசு உடைந்து போய்விடுவார்கள்.
வயதானவர்கள் இரண்டு பேர், பாசத்தைச் சுமந்து கொண்டு, நம் விருந்தோம்பலை நம்பிக்கொண்டு 2-3 மாதம் இருக்கும்போது நாம் அவர்கள் வழியில் கொஞ்சம் விட்டுக்கொடுப்பது நல்லது.
இந்த ஊர்க் கலாசாரமும், வாழ்க்கை விதிமுறைகளும், உபகரணங்களை உபயோகப்படுத்தும் முறையும் அவர்களுக்கு ஒருமுறை அல்ல, பலமுறை புரியவைக்க வேண்டும். பொறுமை வேண்டும். சகிப்புத்தன்மை வேண்டும்.

எல்லோருக்குமே படித்த, உலக ஞானம் தெரிந்த Computer savy in-lawக்கள் அமைய மாட்டார்கள். எப்படியிருந்தாலும், எல்லோருக்குமே நேரடி மனிதவாசனை தேவையாக இருக்கிறது. நாம் ரொம்ப களைத்துப்போய் வேலையிலிருந்து வரும்போது அவர்கள் அழகாக டிரெஸ் செய்துகொண்டு வெளியில் அழைத்துச் செல்லப்படத் தயாராக இருப்பார்கள். நாம் வள்ளென்று விழுந்தால் சுருங்கிப் போய்விடுவார்கள்.

மாமியார், மாமனார் வருகையே நம்முடைய நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். பொறுமை வரும்; சகிப்புத்தன்மை வரும். எப்படி அவர்களுக்கு ஏற்றாற் போல் ஒரு விஷயத்தை எடுத்துச்சொல்வது என்கிற 'கம்யூனிகேஷன்' திறமை வளரும். எந்த விஷயத்திலும் முன்ஜாக்கிரதையாக இருக்கக்கூடிய எண்ணம் வளரும்.

மாமியார் கொஞ்சம் அதிகாரம் செய்தால் என்ன? மாமனார் நாம் எண்ணெய் குறைத்து, உப்பு குறைத்துச் செய்யும் சமையலைக் குறை சொன்னால் என்ன? இரண்டுமுறை சிரித்தபடி கேட்டுக்கொண்டால் மூன்றாம் முறை அவர்கள் சொல்வதில் அதிகக் காரம் இருக்காது.

அவர்கள் எதிரில் அவர்கள் மகனை இழித்து அல்லது இடித்துப் பேசினால் உள்ளுக்குள்ளே வருத்தப்படுவார்கள். கணவன், மனைவி சண்டையை அவர்கள் முன்னிலையில் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.

வயதானவர்கள் இரண்டு பேர், பாசத்தைச் சுமந்து கொண்டு, நம் விருந்தோம்பலை நம்பிக்கொண்டு 2-3 மாதம் இருக்கும்போது நாம் அவர்கள் வழியில் கொஞ்சம் விட்டுக்கொடுப்பது நல்லது.

நூறு டாலர் கொடுத்து ஒரு நல்ல நான்ஸ்டிக் பேன் வாங்கியிருப்போம். தெரியாமல் ஒரு கரண்டியால் அதைச் சுரண்டியிருப்பார்கள். நாம் பொருட்களை உபயோகப்படுத்தி மனிதர்களை நேசிக்க வேண்டும். ஆனால் மாறாகச் செய்கிறோம். நாமும் எல்லாமே இங்கு வந்துதானே கற்றுக்கொண்டோம். கொஞ்சம் கொஞ்சமாக மாறிப்போனோம். இந்தியாவிற்குப் போனால் நம் குழந்தைகளுக்கு இருக்கும் கலாசார அதிர்ச்சிகளும், வசதிக் குறைவுகளும் இருப்பதுபோலத் தானே நம்மைப் பெற்றவர்களுக்கும் இருக்கும்.

வெஸ்டர்ன் டாய்லெட், டிஷ்யூ பேப்பர் இல்லாவிட்டால் நம் குழந்தைகளுக்கு ஒருநாள் கூட ஒரு வீட்டில் தங்க முடிவதில்லை. வாழ்நாள் முழுவதும் வேறு பழக்க முறையில் வாழ்ந்த பெரியவர்களுக்கு, இங்கே ஒவ்வொரு விஷயத்துக்கும் அட்ஜஸ்ட் செய்துகொள்வது எவ்வளவு கஷ்டம். ஒவ்வொரு முறையும் அவர்களைப் பற்றி ஏதேனும் குறையாக நினைத்தால், நாம் எப்படி இருந்தோம், அந்த நிலையில், ஒரு காலத்தில் என்று ஒரு விநாடி யோசிப்பது நல்லது.

நாம் கொடுக்கும் பொருள்-சுகங்கள் அவர்களுக்குச் சிறிது நாளில் அலுத்துவிடும். அவர்களுக்கு வேண்டியது அனுசரணை. அந்த comfort zone-ஐ அவர்களுக்குக் கொடுக்க முயற்சி செய்தால் நாமே புது மனிதர்களாக மாறிவிடுவோம்.

வாழ்த்துக்கள்!

சித்ரா வைத்தீஸ்வரன்
Share: 




© Copyright 2020 Tamilonline