Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
நினைவலைகள்
பாரிஸுக்குப் போனோம் - 2
- சி.கே. கரியாலி, திருவைகாவூர் கோ.பிச்சை|செப்டம்பர் 2009|
Share:
Click Here Enlargeஆங்கில மூலம்: சி.கே. கரியாலி
தமிழில்: திருவைகாவூர் கோ.பிச்சை

மறுநாள் நாங்கள் பாரிஸ் நகரத்தின் அடையாளச் சின்னமான ஈஃபெல் கோபுரத்தைப் பார்க்கச் சென்றோம். ஆறு ஃபிராங்க் நுழைவுக்கட்டணம். மேலே ஏற ஏற, பரந்து விரிந்து கிடந்த பாரிஸ் நகரை முழுவதுமாகப் பார்க்க முடிந்தது. இந்தக் கோபுரம் ட்ரோசிடேரோ சவுக்கத்தில் அமைந்துள்ளது. அங்கே மீனும் வறுவலும் விற்கிறார்கள். ஜிப்ஸிகள் நகைகளையும் மணிமாலைகளையும் மலிவான ஆபரணங்களையும் விற்கிறார்கள். ஈஃபெல் கோபுரத்திற்குப் பின்னால் சாம்ப் டி மார்ஸ் என்ற மிக அழகான பூங்கா உள்ளது. பிற்பகல் நேரத்தை அங்குக் கழித்தோம். அங்கிருந்து மெட்ரோ ரயிலில் நாட்டர் டாம் மாதாகோவிலுக்குச் சென்றோம்.

பிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹ்யூகோவின் புகழ்பெற்ற 'நாட்டர் டாமின் கூனன்' நாவலைப் படித்ததிலிருந்து இந்த மாதாகோவிலின் உருவம் என் மனத்தில் நிலைகொண்டிருந்தது. அந்தக் கோபுரங்கள்! பகட்டான நுழைவாயில்கள்! ஜிப்ஸிப் பெண்ணின் கதையும், கூனனும் உயிரோடு என் கண்முன் வந்து நின்றனர். பதின்மூன்றாம் நூற்றாண்டின் கோதிக் பாணியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த அமைப்பைக் கட்டி முடிக்க அநேகமாக நூறு ஆண்டுகள் ஆகி இருக்கலாம். இது ஒரு கத்தோலிக்கக் கோவில். இங்கு பலிபீடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெரிய ஏசுநாதரின் படிமம் உள்ளது. அனைத்து முக்கியமான பிரெஞ்சு மன்னர்கள், கடைசி மன்னரான 16வது லூயி உள்பட, இங்குதான் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவரது ராணியான மேரி அன்டோனியெட்டும் இங்குதான் அடக்கமாகி உள்ளார்.

காஞ்சிபுரம் பட்டுப்புடவையுடனும் நீண்ட கூந்தலுடனும் தோசை கேட்டுக் கொண்டிருக்கும் பெண்ணைப் பார்க்க கூட்டம் கூடி விட்டது. அநேகம் பெண்கள் பட்டையும் ஜரிகையையும் தொட்டுப்பார்க்க நின்றார்கள்.
பாரிஸ் எங்கும் கால்நடையாகச் சுற்றித் திரிந்தோம். 'ஆர்க் டி டிரியோம்பே'யின் கீழ் நின்றோம். 'லே டுயிலெரிஸ்' சென்றோம். சிற்பங்களுக்குப் பக்கத்தில் அமர்ந்து குழந்தைகள் சறுக்கி விளையாடுவதைப் பார்த்துக்கொண்டே சாப்பிட்டோம். அங்கிருந்து ஸீன் நதிக்கு நடந்து சென்றோம். அதன் கரையில் கண்ணை மூடி அமர்ந்திருந்தோம். பிறகு 'பேட் யூ மூச்'சில் ஒரு படகை அமர்த்திக் கொண்டு பயணம் செய்தோம். வழி நெடுகிலும் தெரிந்த பாரிஸின் அழகிய காட்சிகளை ரசித்தோம். மாலையில் பொம்பீடு மையம் சென்றோம். அது நவீன பிரெஞ்சு கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டான இடம். மையத்தின் முற்றத்தில் ஜிப்ஸிகள் பலவித கரணங்களையும் வீர விளையாட்டுக்களையும் வித்தைகளையும் செய்துகாட்டிக் கொண்டிருந்தனர்.

மையத்திலிருந்து வரிசையாக காபிக்கடைகள் இருந்த நடைபாதையில் நடந்து சென்றோம். ஒரு கடையில் சமையல்காரர் இனிப்புச் சேர்த்து சில பணியாரங்கள் செய்து கொண்டிருந்தார். அது நமது தோசையைப் போல இருந்தது. சைகையால் உப்பிட்ட தோசை கேட்டேன். காஞ்சிபுரம் பட்டுப்புடவையுடனும் நீண்ட கூந்தலுடனும் தோசை கேட்டுக் கொண்டிருக்கும் இந்தியப் பெண்ணைப் பார்க்க அங்கே ஒரு சிறு கூட்டம் கூடி விட்டது. அநேகம் பெண்கள் பட்டையும் ஜரிகையையும் தொட்டுப்பார்க்க நின்றார்கள். உற்சாகமடைந்த சமையல்காரர் தொடர்ந்து தோசையைச் சுட்டுக் கொண்டிருந்தார். நான் நான்கும் என் கணவர் ஐந்துமாகச் சாப்பிட்டு முடித்தோம். நாங்கள் பணம் கொடுத்தபோது நான் சாப்பிட்டதற்கு பணம் பெற்றுக்கொள்ள அவர் மறுத்து விட்டார். ஆனால் என் கணவர் சாப்பிட்டதற்கு மட்டும் பணம் பெற்றுக் கொண்டார். அவருடைய சொற்ப ஆங்கிலத்தில் "மேடம் கொடுக்க வேண்டாம் மிஸ்டர் கொடுக்கட்டும்" என்றார். பிரெஞ்சு விருந்தோம்பலுக்கு ஆச்சரியமான உதாரணம்.

பாரிஸில் கடைசி நாள்

மறுநாள் புனித இதய மாதாகோவில் அருகில் உள்ள மாண்ட்மார்டேர் சென்றோம். அங்குச் சாலையோர ஓவியர்கள் வரைந்த எங்களுடைய கேலிச் சித்திரங்களைப் பெற்றுக் கொண்டோம். பிறகு சாம்ப் எலீஸியில் உள்ள உணவு விடுதிகளுக்குச் சென்றோம். பாரிஸில் அது எங்கள் கடைசி நாள். அன்று என் கணவரின் பிறந்தநாளும் கூட. நாங்கள் மாலை 9.30 ரயிலைப் பிடித்து காலைஸ் சென்று, அங்கிருந்து படகேறி இங்கிலாந்து திரும்ப வேண்டும். தாராளமாக நேரம் இருந்ததால் மாலைப்பொழுதை லத்தீனியப் பகுதியில் கழித்துவிட்டு ரூ டே லா சென்று கிரேக்க உணவகத்தில் சாப்பிட எண்ணினோம். நகரப்படத்தை வைத்துக்கொண்டு வெகுநேரம் சுற்றிச் சுற்றி வந்தோம். இறுதியில் வழியைத் தவறவிட்டதை உணர்ந்தோம். சில இளைஞர்களை லத்தீனியப் பகுதியில் கிரேக்க உணவகத்திற்கு வழிகாட்டும்படி கேட்டோம். நாங்கள் ஆங்கிலத்தில் பேசினோம். அவர்கள் பிரெஞ்சில் பதில் சொன்னார்கள். புரிந்துகொள்ள முடியவில்லை. உடனே அவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு எங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டனர்.
ஒரு துண்டை எடுத்து மென்றேன். மென்றேன் அப்படி மென்றேன். அதை விழுங்குமளவுக்கு என்னால் மிருதுவாக்க முடியவில்லை. பிறகுதான் தெரிந்தது அது ஒரு ஆக்டோபஸ்ஸின் தலை என்பது.
அந்த இளைஞர்களிடம் குறைந்தபட்சம் எங்களுடன் காபியாவது சாப்பிடக் கேட்டுக் கொண்டோம். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டுத் தங்கள் பாதையில் சென்றுவிட்டனர். உள்ளே கிரேக்க உணவக உரிமையாளரிடமிருந்த அன்பான வரவேற்பைப் பெற்றோம். இதற்கு முன்பு எந்த இந்தியப் பெண்ணும் காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்து இங்கு வருகை தந்ததில்லை. சில சக வாடிக்கையாளர்கள் பட்டின் மென்மையையும் அதிலுள்ள தங்க ஜரிகை வேலைப்பாடுகளையும் தொட்டுப்பார்க்க விரும்பி எங்களிடம் அனுமதி பெற்றுக் கொண்டனர்.

உணவுப்பட்டியல் கிரேக்க மொழியில் இருந்தபடியால் உண்மையில் எதைக் கேட்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை. நான் காரசாரமான அரிசிச் சாப்பாடு கேட்டேன். என் கணவர் நல்ல கிரேக்க உணவு வேண்டுமென்றார். சமையல்காரர் வெளியே வந்து என்ன பரிமாற வேண்டுமென்பதைத் தன்னிடம் விட்டுவிடும்படிச் சொல்லிவிட்டார். முதலில் ஒரு பெரிய மது பாட்டிலைக் கொண்டுவந்து வைத்தார். "பாரிஸில் கிரேக்க மது. இது சரியல்ல" என்று சொன்னோம். "அவர் கிரேக்க உணவகத்தில் கிரேக்க மதுவையே பருகலாம்" என்றார். நாங்கள் சிரித்தோம். எங்கள் உணவு வந்தது. மணமுள்ள கிரேக்க சூப்பும், காரசாரமான உலர்ந்த மீன் தயாரிப்பும் இருந்தன. அரிசிச் சோறுடன் தக்காளி, கடுகுக் கூட்டும் இருந்தது. அடுத்த தட்டில் இருந்த கடல் உணவு கவர்ச்சியாக இருந்தது. அதில் ஒரு துண்டை எடுத்து மென்றேன். மென்றேன் அப்படி மென்றேன். அதை விழுங்குமளவுக்கு என்னால் மிருதுவாக்க முடியவில்லை. பிறகுதான் அது ஆக்டோபஸ்ஸின் தலை என்றறிந்தேன்.

திடீரென நேரம் கடந்து விட்டதையும் இரவு 9.30க்கு ரயில் என்பதையும் கவனித்தோம். உடனே எங்கள் பணத்தை அவசரமாகச் செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். கையிலிருந்த பணம் அநேகமாகக் கரைந்துவிட்டது. அன்று இரவே அங்கிருந்து கிளம்புகிறபடியால் எங்களுக்கு நாங்கள் அதுபற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் காலைஸ் செல்லும் கடைசி ரயில் புறப்பட்டுச் சென்றுவிட்டது. அடுத்த ரயில் மறுநாள் காலை எட்டு மணிக்குத்தான். எங்களுடன் ஆங்கிலத்தில் உரையாடிய இரவு நேர பயணச் சீட்டு பரிசோதகரிடம் எங்களுடைய மோசமான நிதி நிலைமையை சொல்லி, இரவில் தங்குவதற்கு மலிவான தங்கும் விடுதி எங்கே கிடைக்கும் என்று கேட்டோம். அடுத்த ரயிலையும் தவறவிடக்கூடாது என்பதைச் சொன்னோம். ரயில் நிலையத்தைச் சுற்றி நிறையச் சிறிய தங்கும் விடுதிகளும் ஓட்டலும் இருப்பதாக அறிந்து கொண்டோம்.

அது டிசம்பர் மாதக் குளிர்கால இரவு. எங்கள் பைகளின் சுமையுடன் நடந்து விடுதிகளைத் தேட ஆரம்பித்தோம். திடீரென ஓரிடத்தில் 'English Talking-American Speeching' என்று கையால் எழுதப்பட்டிருந்த சுவரொட்டியைப் பார்த்தோம். அது சிறு தங்கும் விடுதியாக மாற்றப்பட்ட நான்கு மாடி வீடு. வரவேற்பாளரே அதன் உரிமையாளர். அவரிடம் எங்கள் கதையைச் சொல்லி எங்களிடம் இருந்த ஃபிராங்குகளை எல்லாம் கொடுத்துவிடுவதாகவும் அறை ஒன்று தரும்படியும் கேட்டுக் கொண்டோம். என் கணவர் தன் சட்டைப் பைகளைத் துழவியெடுத்து எண்ணிச் சில்லறையாக நாற்பத்திரண்டு ஃபிராங்குகளை உரிமையாளர் முன் வைத்தார். அவர் சிரித்துக் கொண்டே முப்பத்திரண்டு ஃபிராங்க் மட்டும் எடுத்துக் கொண்டு பத்து ஃபிராங்க்கை எங்களிடம் கொடுத்து, காலையில் காபி சாப்பிட வைத்துக் கொள்ளும்படிச் சொன்னார். சாதாரண வாடகையை விட இது மிகவும் குறைவுதான் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். எங்கள் மூட்டை முடிச்சுக்களை அவரே நான்காவது மாடிக்கு எடுத்துச் சென்று அறையைக் காட்டி காலையில் எங்களை எழுப்பி விடுவதாகவும் வாக்களித்தார்.

மத்தியில் படுக்கை கொண்ட பெரிய அறை அது. பெரிய திறந்த பிரெஞ்சு ஜன்னல்கள். அதன் வழியாக இரவில் சுகமான பாரிஸ் நகரின் விளக்குகளைப் பார்க்க முடிந்தது. களைத்திருந்த நாங்கள் உடை மாற்றாமல், காலணிகளைக் கழற்றாமல், ஜன்னல்களையோ கதவுகளையோ மூடாமல் அப்படியே படுக்கையில் சாய்ந்தோம். காலையில் உரிமையாளர் எங்களை எழுப்ப வந்தபோதுதான் நாங்கள் தூக்கத்தில் கட்டைபோல் படுக்கையில் கிடந்தும் அதிர்ஷ்டவசமாகக் குளிர் ஜுரம் எங்களைப் பீடிக்காததை உணர்ந்தோம். ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதகர் இன்னும் வேலையில் இருந்தார். அவருக்கு மீண்டும் நன்றி செலுத்திவிட்டு ரயிலில் ஏறினோம். அவர் அன்புடன் கை அசைத்தார்.

விருந்தோம்பலும், நற்பண்பாடும், உதார குணமும் உடைய பாரிஸ் மக்களின் நினைவுகளை என் இதயத்தில் தாங்கிக் கொண்டிருக்கிறேன். அங்கு மீண்டும் செல்ல விரும்புகிறேன்.

தொடரும்...

ஆங்கில மூலம்: சி.கே. கரியாலி
தமிழில்: திருவைகாவூர் கோ.பிச்சை
Share: 




© Copyright 2020 Tamilonline