Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறுகதை
கலைமகள் கைப்பொருள்
முதலீடு
- என். சுவாமிநாதன்|செப்டம்பர் 2009||(1 Comment)
Share:
Click Here Enlarge'சிறுகதைப் போட்டியில் தேர்வு பெற்றது'

ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Madhurabharati


நந்தன் சோகமே உருவாக அமர்ந்திருந்தான். அவன் எதிரில் அன்றைய செய்தித்தாள் பிரித்தபடி கிடந்தது. முதல் வரியில் கொட்டை எழுத்தில் "ஆர்.பி. கம்பெனியின் பங்குகள் விலை பெருமளவில் சரிந்தது. மிகப்பெரிய ஆர்டர் கான்சல் ஆனதால் வந்த நட்டம். 24 டாலர் விற்ற பங்கு 2 டாலருக்கு இறங்கியது. மேலும் சரிய வாய்ப்பு... கம்பெனி மூடப்படலாம்" என்ற செய்தி இருந்தது.

முதலீட்டின் பெரும்பகுதி போய்விட்டதே! எல்லா முட்டையையும் ஒரே கூடையில் வைக்காதே என்பார்களே... இப்படி எல்லாச் சொத்தையும் விற்று ஆர்.பி. பங்கில் போட்டுத் தொலைத்தேனே! இப்போது இருக்கிறதையும் விற்கமுடியாது போல இருக்கிறதே. போச்சு எல்லாம் போச்சு. இனிமேல் நான் எப்படி வாழ முடியும்? தற்கொலைதான் வழி.

டெலிபோன் மணி அடித்தது. அதை எடுக்காமல் டெலிபோனையே முறைத்துப் பார்த்தான் நந்தன். ரெக்கார்டரில் பதிவான குரல் கேட்டது. "ராமு பேசேறன் நந்தன், பேப்பர் பார்த்தியா. ஆர்.பி. பங்கு கீழ இறங்கிடுச்சு.... சுற்றுச்சூழல் பாதிப்பு இருக்கலாம்கிற சந்தேகத்தில பெரிய வெளிநாட்டு ஆர்டர் கான்சலாயிடுத்தாம். நல்ல வேளையா நான் முந்தா நாள் 23க்கு விற்க ஆர்டர் போட்டு வெச்சிருந்தேன். வித்துடுத்து. தப்பிச்சேன். நீ இன்னம் வெச்சிருக்கயா, வித்துட்டயா? வந்தப்பறம் எனக்கு போன் பண்ணு."

இந்த ராமு மகாபாவிதான் ஆர்.பி. வாங்குடா, பெரிய ஆர்டர் வரப்போகுதாம் பங்கு 50 ரேஞ்சுக்குப் போயிடும்னு டிப் கொடுத்தான். சாமர்த்தியமா தன் பங்கை வித்துட்டு இப்ப எங்கிட்ட வந்து துக்கம் விசாரிக்கறான். இவனைப் போட்டுத் தள்ளிட்டு தற்கொலை பண்ணிக்கலாமா? வேண்டாம். கொலைகாரன் என்ற பெயராடு போகக் கூடாது.

ஆர்.பி. பங்குகளின் விலை விழுந்ததில் என் முதலீட்டை இழந்ததால் தற்கொலை செய்து கொள்கிறேன். இதற்கு வேறு யாரும் பொறுப்பு அல்ல.
எப்படித் தற்கொலை பண்ணிக்கலாம்? தூக்கு போட்டுக்கலாமா? தன் எடையைத் தாங்கக் கூடிய கயிறு வீட்டில் இல்லை. உத்தரமும் எடை தாங்காது. போன மாசம், தானே மாட்டிய சீலிங் ஃபேன் ஒரே நிமிடத்தில் பிய்த்துக் கொண்டு கீழே விழுந்தது நினைவுக்கு வந்தது. மின்சாரத்தில் கை வைக்கலாம் என்றால் வோல்டேஜ் பிரச்சனை. எலக்டிரிக் டோஸ்டரில் ரொட்டி சுடுவதே சரியாக வருவதில்லை. வீட்டுக்கு வயரிங் மாத்த வேண்டும் என்று எலக்ட்ரீசியன் சொன்னான். மனிதனைக் கொல்ல அவ்வளவு மின்சாரம் தேவையாக இருக்குமோ? ஒரு துப்பாக்கி வாங்கி சுட்டுக் கொள்ளலாமா? ஆனால் துப்பாக்கிகள் மாறிவிட்டன. சின்ன வயசில் தான் தீவாளிக்கு வாங்கி கேப் வெடிக்கும் துப்பாக்கிகள் போல எளிமையானவை அல்ல. ஏகப்பட்ட பாகங்கள். தடிமனாக முன்னூறு பக்கத்தில் ஒரு மான்யுவல். அதைப் படித்து, புரிந்து கொள்வதற்குள் இயல்பாகவே முதுமை வந்து செத்துப் போய்விடுவேன். விஷம்? நல்ல யோசனை. விஷத்துக்கு என்ன பண்ணுவது? கடைக்குப் போய் வாங்கி வரலாமா? எப்படி என்ன சொல்லி எதைக் கேட்பது? குழப்பத்தோடு மருந்துக் கடைக்குப் போனான்.

"விஷம் தேவைப்படுது..."

"எதுக்கு? எறும்பு, ஈ, கரப்பு, எலித் தொல்லையா?"

எறும்பு, ஈ, கரப்பு சமாசாரம் உதவாது. எலி பரவாயில்லை. இந்தியால இதுதானே ப்ளஸ் டூ பரீட்சை முடிவு வரச்சே அதிகம் விக்குது? ஃபெயிலான மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். "நீங்கள் பரிட்சையில் ஃபெயில் ஆகி இருக்கலாம், ஆனால் உங்கள் தற்கொலை முயற்சியில் ஃபெயில் ஆகவே மாட்டீர்கள், இந்த எலி பாஷாணத்தை உபேயாகித்தால்" என்று விளம்பரம் வேறு செய்கிறார்களாமே! இதில் பணம் இருப்பதால் அரசே இந்த எலி மருந்து வியாபாரத்தைச் செய்யலாமா என்றும் யோசிக்கிறதாம்.

"ஆமா எலி..."

"சாதாரணம், ஸ்பெஷல், சூப்பர் ஸ்பெஷல் இப்படி மூணு வகை இருக்கு. எது வேணும்?"

அடப் பாவிகளா... எலிப்பாஷாணத்தில கூட இவ்வளவு வகையாடா? அது என்ன டாக்டர் காளிமுத்துவோட தாது புஷ்டி மருந்தா? சரி, தொலையுது. திங்கறதுதான் திங்கேறாம். வாழ்க்கையில ஒரு தடவை சாப்பிடப் போறோம். சூப்பர் ஸ்பெஷல தின்னா என்ன?

"சூப்பர் ஸ்பெஷலே கொடுங்க"

பணம் கொடுத்து பாட்டிலை வாங்கிக் கொண்டான். வீட்டுக்குப் போய் ஒரு கடிதம் எழுதி வைத்தான். "ஆர்.பி. பங்குகளின் விலை விழுந்ததில் என் முதலீட்டை இழந்ததால் தற்கொலை செய்து கொள்கிறேன். இதற்கு வேறு யாரும் பொறுப்பு அல்ல."

எழுதியதைப் படித்துப் பார்த்தான். 'பொறுப்பு', 'பொருப்பு' எது சரி என்ற சந்தேகம் வந்தது. 'தப்பா எழுதிட்டா நான் செத்துப் போனதைப் பத்திக்கூட கவலைப்படமாட்டானுக. 'று' வா? 'ரு' வா? எது சரின்னு மண்டைய உடைச்சிகிட்டு பெரிய பட்டிமன்றமே நடக்கும்.

"சே... இப்பப் போயி ஸ்பெல்லிங் பார்க்கிறதா என்ன?" திருத்தினான். அதைத் திருத்திய பிறகு 'று' மாதிரியும் இருந்தது. 'ரு' மாதிரியும் தெரிந்தது.

பாட்டிலைத் திறந்து குடித்தான். கசப்புத் தாங்கவில்லை. "கஞ்சப் பயல்கள்... கொஞ்சம் சக்கரை கிக்கரை போட்டுத் தொலைச்சிருந்தால்தான் என்ன? எலிகளுக்குத்தான் மூளை இல்லியா? இந்தச் சனியனையா குடிச்சுச் சாவுதுங்க?" என்று தோன்றியது.

மருந்து வேகமாய் வேலை செய்தது. கண்ணைச் செருகியது. அப்பொழுது அவன் மனைவி லில்லி கையில் காபியுடன் உள்ளே நுழைந்தாள்.
மங்கலாய் அவள் முகம் தெரிய, "லில்லி... எல்லி... எலி... எல்லி..." என்று வாய் குழறினான்.

அவளுக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது.

நீங்க சாப்பிட்ட விஷம் ரொம்ப லோ டோஸ். அது இருநூறு கிராம் எடையுள்ள நூறு எலியைக் கொல்லும். எண்பது கிலோ மனுசனுக்கு எவ்வளவு சாப்பிட்டு இருக்கணும்னா...
"காப்பி கொண்டு வந்து கொடுக்க வந்தா எலி எலின்னா கூப்பிடறீங்க. ஏதோ ஷாம்பூ ஒத்துக்காம முடி கொட்டிட்டா எலிவாலுன்னா பரிகாசம் பண்ணணும்? உங்களுக்குக் காப்பி கிடையாது" என்று கத்திவிட்டு, தன் எலிவால் பின்னலைத் தடவிக் கொண்டு வெளியே போனாள்.

மனமே கணமும் மறவாதே ஈசன் மலர்ப்பதமே....
மரணம் நெருங்க கண்கள் மங்க நாவது குழற
என்ன செய்வாய் என்ன செய்வாய் யாரே வருவார்...

பாடல் நினைவுக்கு வர, நந்தன் மயங்கிச் சரிந்தான்.

****


தீவிர சிகிச்சைக்குப் பின் நந்தன் உயிர் பிழைத்தான்.

இரண்டு நாள் கழித்து, நந்தன் மருத்துவமனைப் படுக்கையில் கண் விழித்தபோது அவனைச் சுற்றி நண்பர்கள், மனைவி, டாக்டர் எல்லோரும் இருந்தார்கள்.

"போனாப் போகுது, போட்ட காப்பியைக் கொடுத்துடலாம்னு திரும்பிப்போனா, இவர் கீழே கிடந்தாரு. ஆம்புலன்சைக் கூப்பிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினது நல்லதாப் போச்சு" என்றாள் லில்லி.

"கண் முழிச்சிட்டான் பாருங்க. ஏதோ சொல்றான் புரியல. குரலும் எலிக்குரலா இருக்கே!"

"ஏங்க உங்க புத்தி இப்படிப் போச்சு? ஸ்டாக் விலை கீழே போனா தற்கொலையா பண்ணிக்கிறது?"

நந்தன் சோர்வுடன் கண்ணை மூடிக்கொண்டான்.

"ஸ்டாக் மார்க்கட்டுல முதலீடு பண்ணி, முதல் பத்து வருஷம் நஷ்டம் வந்தா கஷ்டமாத்தான் இருக்கும்" என்றார் விசு.

"அப்புறம் பணம் வர ஆரம்பிச்சுடுமா" என்றான் பாலு.

"இல்ல. நஷ்டம் மெதுவா பழகிடும். என்ன நஷ்டம் வந்தாலும் உறைக்காது. விட்டதைப் பிடிச்சுரலாம்னு மேலமேல போடத் தோணும்"

"என் ஸ்டாக் எல்லாம்கூட கீழ போயிடுச்சு. எனக்கும் தற்கொலை பண்ணிக்கலாம்னு தோணிச்சு. ஆனா ஆர்.பி. நஷ்டத்துக்குக்கு தற்கொலை பண்ணிக்கிறதா, கே.கே. நஷ்டத்துக்குப் பண்ணிக்கிறதா, .க்யூ.க்யூ.க்யூ. நஷ்டத்துக்குப் பண்ணிக்கிறதா, எப்படி மூணு தடவை தற்கொலை பண்ணிக்கிறதுனு குழம்பினதில தற்கொலை எண்ணமே போயிருச்சு" என்றார் ஷ்யாம். அவரை மறைவாக இழுத்துப் போய் மண்டையில் தட்டினார்கள் நண்பர்கள்.

"ஏன் டாக்டர் விஷம் சாப்பிட்டும் நான் சாகைல?" என்றான் நந்தன் கீச்சுக்குரலில்.

"உங்க மனைவி உங்களை உடனே அழைச்சிட்டு வந்து, நாங்க சிகிச்சை கொடுத்தது ஒரு காரணம். இன்னொரு காரணம், நீங்க சாப்பிட்ட விஷம் ரொம்ப லோ டோஸ். அது இருநூறு கிராம் எடையுள்ள நூறு எலியைக் கொல்லும். எண்பது கிலோ மனுசனுக்கு எவ்வளவு சாப்பிட்டு இருக்கணும்னா..."

"டாக்டர்... போதும் போதும். அவன் பிழைச்சதே அதிசயம். அவனுக்கு சரியான தற்கொலை டோஸ் வேறயா சொல்லித் தர்றீங்க? விட்டா பிரிஸ்கிருப்ஷனே எழுதிக் கொடுத்துடுவீங்க போல!"

"நந்தா, ந்யூஸ் தெரியுமா? ஆர்.பி. ஸ்டாக் நேத்திக்கு அம்பத்திரண்டுக்கு ஏறிடுத்து. மனுஷன் சாப்பிட்டும் சாகலைன்னு தெரிஞ்சதாலே, ஆர்.பி.க்கு மறுபடியும் பெரிய ஆர்டர் வந்துடுச்சாம்" என்றார் விசு.

"ஆர்.பி. பங்கு விலை ஏறினதுக்கும் நந்தன் விஷம் சாப்பிட்டதுக்கும் என்ன சம்பந்தம்" என்றார் டாக்டர்.

"ஆர்.பி. கம்பெனியோட முக்கிய தயாரிப்பே எலிப்பாஷாணம்தான். அதுதான் நந்தன் சாப்பிட்டது. வெளிநாட்டுல இதுக்கு பெரிய ஆர்டர் கொடுத்திருந்தாங்க. இந்த விஷத்தால மனிதனுக்கு ஆபத்துன்னு இதை இறக்குமதி செய்ய எதிர்ப்பு வந்து, ஆர்டர் கான்சலாகி ஸ்டாக் விலை கீழே போயிடுச்சு. இப்ப நந்தன் சாப்பிட்டும் ஒண்ணும் ஆகலைனு நிரூபணம் ஆனதால மறுபடியும் பெரிய ஆர்டர் வந்து ஸ்டாக் மேல போயிடுச்சு. சமயத்துல கம்பெனியக் காப்பாத்தினதாலே, ஆர்.பி. கம்பெனி நந்தனுக்கு ஒரு 50 சதவீத கழிவுக் கூப்பன் அனுப்பிச்சிருக்காங்க. அடுத்த தடவை வாங்கறச்சே பாஷாணம் பாதி விலையிலே தருவாங்களாம்."

கையை ஓங்கிக் கொண்டு லில்லி சொன்னாள், "முதல்ல இந்த ஸ்டாக் மார்க்கட் ஆசைய விடுங்க. மீறி ஏதாவது பண்ணினீங்க நான் அடிச்சே கொன்னுடுவேன். பேராசையே வேண்டாம். இப்பல்லாம் பேங்கக்கூட நம்ப முடியல. இருக்கிற பணத்தை தலகாணிக்குக் கீழ வச்சிட்டு நிம்மதியாத் தூங்குவோம்."

என். சுவாமிநாதன்,
லாஸ்ஏஞ்சலஸ், கலிபோர்னியா
More

கலைமகள் கைப்பொருள்
Share: 




© Copyright 2020 Tamilonline