Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
தென்றல் பேசுகிறது
தென்றல் பேசுகிறது...
- |செப்டம்பர் 2009||(1 Comment)
Share:
Click Here Enlargeநகைச்சுவையைப் பற்றிச் சொல்வது எளிது. ஆனால் சிரிக்க வைப்பது மிகக் கடினம். நாகேஷைக் கேளுங்கள், வேண்டாம் க்ரேஸி மோகனைக் கேளுங்கள், சொல்வார். வெற்றிகரமான நகைச்சுவையாளர்கள் மிகக் குறைவு. சிலர் பத்துப் பேரைச் சிரிக்க வைப்பதாகச் சொல்லிக்கொண்டு யாரோ ஒருவர் மனதை ரணமாக்கிவிடுவார்கள். யாரையும் புண்படுத்தாததே நல்ல நகைச்சுவை.

அதல பாதாளத்தில் தலைகுப்புற விழுந்த பொருளாதாரம், காணாமல் போகும் வேலைகள், அடிமாட்டு விலைக்குப் போகும் வீடுகள் என்று இத்தனைக்கும் நடுவே நகைச்சுவைச் சிறப்பிதழ் கொண்டு வருகிறோம் என்றால் நாங்கள் 'இடுக்கண் வருங்கால் நகுக' என்ற வள்ளுவன் வழிநிற்போர் என்பதை மீண்டும் நிரூபிக்கவே. வேறு காரணம் இல்லை. 'தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு மிக மிகக் குறைவு' என்று ஜெயமோகன் தென்றல் பேட்டியில் கூறியதற்கும் இதற்கும் தொடர்பில்லை என்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?

தென்றலுக்கும் நகைச்சுவைக்கும் சம்பந்தமில்லை என்பதாகப் பலர் நெடுங்காலமாகச் சந்தேகப்பட்டதுண்டு. அதைப் பொய்யாக்கவே எல்லே சுவாமிநாதன், வற்றாயிருப்பு சுந்தர் ஆகியோரின் எழுத்துக்களைத் தொடர்ந்து போட்டோம். 'என் காது செவிடான காரணம்' போன்ற போட்டிக் கதைகளும் வெளியாயின. அப்படியும் சந்தேகம் அகலவில்லையோ என்ற சந்தேகம் ஆசிரியர் குழுவுக்குத் தொடரவே, இந்த நகைச்சுவைச் சிறப்பிதழ் மூலம் அதைத் தகர்க்கப் பார்க்கிறோம்.

இந்த நகைச்சுவைப் போரில் மற்றொரு ஆயுதம்தான் சென்ற இதழிலிருந்து கேலிச் சித்திரத்தோடு வெளியாகும் ஜோக்குகள். இவற்றைத் தென்றல் வாசகர்கள் அனுப்ப, கேலிச் சித்திரங்களை வரைகிறார் சரவணன் என்ற இளைஞர். துணுக்குகள் சிரிக்கும்படியாக இருப்பதாகத்தான் நாங்கள் நம்புகிறோம். இல்லையென்றால் அதற்கு நீங்கள்தாம் பொறுப்பு - நல்ல ஜோக்கர்கள் எங்களுக்கு எழுதி அனுப்பவில்லை என்பதால்.
1953லிருந்து தொடர்ந்து ஒருவர் வெற்றிகரமாகப் பல தலைமுறைத் தமிழர்களைச் சிரிக்க வைத்திருக்கிறார் என்றால் அவர் ஜ.ரா. சுந்தரேசன் என்ற பாக்கியம் ராமசாமியாகத்தான் இருக்கமுடியும். இந்த நகைச்சுவைச் சிறப்பிதழின் 'எழுத்தாளர்' பகுதியை அவர் அலங்கரிக்கிறார். அவருடைய அப்புசாமியும் சீதாப்பாட்டியும் ரசகுண்டுவும் எந்த உம்மணா மூஞ்சியையும் அவுட்டுச் சிரிப்பில் ஆழ்த்திவிட வல்லவர்கள். அதே கிச்சுக்கிச்சுப் பாரம்பரியத்தின் மற்றொரு வாரிசு க்ரேஸி மோகன். அமெரிக்காவின் மூலைமுடுக்கெல்லாம் இவரது நாடகங்கள் தமிழர்களை விலாப்பிடிக்கச் சிரிக்கச் செய்துள்ளன. இவர் கதை, வசனம் எழுதிய 'மைக்கேல் மதனகாமராஜன்', 'சதி லீலாவதி' போன்ற படங்களின் நகைச்சுவை நினைத்து நினைத்து குபீரென்று சிரிக்கச் செய்வது. அவரது நேர்காணலும் அவ்வளவு சுவையானது.

இதில் சிரிக்க முடியாத விஷயம் பன்றிக் காய்ச்சல்தான். இது உலகையே அச்சுறுத்தி வருகிறது. யாரைப் பார்த்தாலும் சமண முனிவர்போல வாயைக் கட்டிக் கொண்டு நடக்கிறார்கள். '2009ஆம் ஆண்டு முடியும்போது அறுபதிலிருந்து நூற்றிருபது மில்லியன் அமெரிக்கர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பர். இவர்களில் 90,000 பேர்வரை அதனால் உயிரிழந்திருக்கலாம்' என்கிறது வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று. இதைக் கருத்தில் கொண்டுதான் இந்த இதழின் மருத்துவக் கட்டுரை H1N1 Swine Flu-வைப் பற்றி விவரமாகப் பேசுகிறது. 'எனக்குப் பிடிச்சது' பகுதி திருநெல்வேலி ராஜ்கஃபே தொடங்கிப் பல சுவையான அனுபவங்களைத் தாங்கி வருகிறது. 'போதும் இந்த மௌனம்' மற்றொரு முக்கியமான பதிவு, 'இலங்கைத் தமிழருக்கு உதவி' பகுதியோடு தொடர்புடையது.

தென்றல் தன் வேலையைச் செய்துவிட்டது, சிரிப்பதும் சிரிக்காததும் உங்கள் விருப்பம். உடல்நலத்தில் அக்கறை இருந்தால் சிரியுங்கள். ஏனென்றால் சிரிப்பு ஒரு சிறந்த மருந்து, இதைப் போல: ஓர் இளைஞர் கடவுளிடம் கேட்டான் “ஒரு கோடி வருடம் என்பது உங்களுக்கு எவ்வளவு காலம்”. கடவுள் சொன்னார், “ஒரு நொடிப் பொழுது”. இளைஞன் விடவில்லை “ஒரு கோடி டாலர்?”; கடவுளும் கூறினார், “ஒரு சென்ட் போல”. அமுத்தலாக இளைஞன் வேண்டினான் “கடவுளே! ஒரு சென்ட் தாரும்” என்று. “ஒரு செகண்ட் பொறுத்திரு” என்றார் கடவுள் நமுட்டுச் சிரிப்புடன்.

நவராத்திரி, ரம்ஜான் பண்டிகை வாழ்த்துகள்!


செப்டம்பர் 2009
Share: 




© Copyright 2020 Tamilonline