Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஹரிமொழி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
சிறுகதை
மணமகள் தேவை
இருக்கும் இடத்தை விட்டு...
- சேகர் கண்ணன்|ஆகஸ்டு 2009|
Share:
Click Here Enlarge'சிறுகதைப் போட்டியில் தேர்வு பெற்றது'

"என்ன ஒரு ஐந்து மணிக்கு எட்டுக்குடி போய்ச் சேர்ந்துடலாமா?" டிரைவரைப் பார்த்துக் கேட்டேன்.

"இல்ல சார், எப்படியும் சிதம்பரம் போக பனிரெண்டு, ஒரு மணி ஆயிடும். நீங்க கோயில் பார்க்கணும்னா அதுக்கு ஒரு மணி நேரம். அங்கேயிருந்து திருவாரூர் போக மூணு மணி ஆய்டும். கொஞ்ச நேரம் நீங்க எல்லாம் ரெஸ்ட் எடுத்துட்டுக் கிளம்பினா எட்டுக்குடிக்கு எப்படியும் ஒரு ஆறுமணிக்குப் போய்டலாம் சார்."

கார் அப்போதுதான் அம்பத்தூரில் இருந்து கிளம்பியிருந்தது. கண்ணாடி வழியே வந்த வெளிக்காற்று சில்லென முகத்தில் பட்டது. காலம்தான் எத்தனை வேகமாய் ஓடிப்போகிறது! கடைசியாக எட்டுக்குடி முருகனை தரிசித்து கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆகிவிட்டதை நினைக்கும் போது மலைப்பாக இருந்தது.

1973 அல்லது 1974ம் வருடம் என நினைக்கிறேன். எனக்கு வயது மூன்று. அண்ணனுக்கு எட்டு. அப்பாவுக்குக் கொற்கையில் தமிழ்நாடு அரசுத்துறையில் வேலை. கால்நடைப் பராமரிப்புத் துறை என்பதால் எங்களது ஜாகை எல்லாம் ஊருக்கு வெளியேதான். ஏதாவது ஆத்திரம் அவசரம் என்றால் கூட வண்டி கட்டிக்கொண்டு திருத்துறைப்பூண்டிதான் வரவேண்டும். அந்தக் காலத்திலேயே அப்பாவும், அம்மாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதால் சொந்தங்களின் வருகை என்பதே நான் காணாத ஒன்று. அம்மாதான் எங்களுக்கு எல்லாமே! அம்மாவுக்குப் படிப்பறிவு குறைவு என்றாலும் தைரியமும், உலக ஞானமும் அதிகம். கல்விதான் வாழ்வின் நிரந்தரமான செல்வம் என்பதில் அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அந்தச் சின்னவயதிலேயே அம்புலிமாமா, பாலமித்ரா, கோகுலம் வாசிக்கத் தொடங்கியது அம்மாவால்தான்.

நான்காவது நாள், அண்ணனிடமிருந்து அவசரமான செய்தி. அம்மாவை ஐ.சி.யூ.ல சேர்த்திருக்கிறேன். நீ எதுக்கும் உடனே கிளம்பி வர முடியுமா?" என்றான்
அம்மாவுக்கு பக்தி அதிகம். கோவில் கோவிலாகச் சுற்றுவது அவளுடைய ஒரே பொழுதுபோக்கு. கொற்கையில் இருந்து மாதம் ஒருமுறையாவது நான், அண்ணன், அம்மா மூன்று பேரும் எட்டுக்குடி வந்து முருகனைப் பார்த்து விடுவோம். அம்மாவுக்கு இந்த மதம்தான் என்று கிடையாது. அப்படியே வேளாங்கண்ணிக்கும் நாகூருக்கும் போய்த் திரும்பியது நினைவிலேயே இருக்கிறது. ஆனாலும் எட்டுக்குடி முருகன்மேல் அம்மாவுக்கு அளவில்லா பக்தி. என்னையும், அண்ணனையும் அந்தக் கோயிலுக்கே தத்து கொடுத்து விட்டதாக அடிக்கடிச் சொல்லியிருக்கிறாள். எனக்கு இரண்டு வயதாய் இருக்கும்போது தவறி அந்த கோயில் குளத்தில் விழுந்து விட்டேனாம். யாரோ அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர்தான் என்னைக் குளத்தில் இருந்து மீட்டாராம். இந்த நிகழ்ச்சிக்குப் பின் என் அம்மாவின் பக்தி அதிகரித்துப் போனது. அடிக்கடி இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தி, "உங்க ரெண்டு பேரோட திருமணமும் எட்டுக்குடியில்தான் நடக்கணும். ஏன்னா நீங்க அவனோட குழந்தைகள்" என்பாள்.

அண்ணன் மட்டும் "ஏம்மா, இதெல்லாம் நடக்கிற விஷயமா, பிராக்டிகலா யோசிம்மா" என்பான். அப்பா எதையுமே கண்டு கொள்ளாத ஜாதி.

வருடங்கள் ஆனது. இடையில் அப்பாவுக்கு ஒரத்தநாட்டிற்கும் புதுக்கோட்டைக்கும் இடமாறுதல் ஆகி இங்கேயும், அங்கேயும் அலைந்ததில் எட்டுக்குடி தரிசனம் மாதம் ஒருமுறை என்பதிலிருந்து கிட்டத்தட்ட ஆறுமாதத்துக்கு ஒருமுறை என்றாகிப் போனதில் அம்மாவுக்கு நிறைய வருத்தம். இந்தச் சூழ்நிலையில் அண்ணனுக்கு மும்பையில் வேலை கிடைக்க, எனக்கும் அடுத்த வருடத்திலேயே திருச்சி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்க, வீட்டில் அம்மாவும் அப்பாவும் மட்டும்தான்.

அண்ணன் அப்போதுதான் வேலைக்குப் போன சமயம். எனது பொறியியல் படிப்புச் செலவு, அப்பாவின் வருமானத்துக்குள் கட்டுப்படாமல் போகவே முழு பாரமும் அம்மாவின் மேல் விழுந்தது. அந்த நிலைமையிலும் கூட உதவிக்காகத் தன் சொந்தங்களை நாடாமல் எப்படி அம்மாவால் சமாளிக்க முடிந்தது என்பது எனக்கு இன்றுவரை ஆச்சரியமான விஷயம் தான். ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் எட்டுக்குடி போவதையே அம்மா நிறுத்திவிட்டாள் என்பது மட்டும் தெரிந்தது.

நான் படிப்பை முடித்ததும் அண்ணனுக்குச் சென்னைக்கே மாற்றல் கிடைத்ததும் ஒன்றாக நடந்தது. எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து சென்னையிலேயே வசிப்பதாக முடிவாயிற்று. அண்ணனுக்குத் திருமணம் செய்யும் ஏற்பாடுகளில் அம்மா தீவிரமாய் இறங்கினாள். அப்பாவின் பால்ய நண்பர் ஒருவர்மூலம் சென்னையிலேயே ஒரு வரன் அமைய, திருமணம் நிச்சயமானது. அம்மா மெதுவாக அண்ணனிடம் "திருமணத்தை எட்டுக்குடியிலேயே வைத்துக் கொள்ளலாமா?" எனக் கேட்க, அண்ணனோ, "ஏம்மா, இதெல்லாம் நடக்கிற காரியமா, எங்க தங்கறது, எவ்வளவு செலவு, எப்படி எல்லோரையும் அங்க கூட்டிக்கிட்டுப் போறது? இதெல்லாம் சரிப்பட்டு வராதும்மா" என சொல்லிவிட, அம்மாவின் முகத்தில் வருத்தம்.

என்னைப் பார்த்து, "நீயாவது அம்மாவின் ஆசையை நிறைவேற்று" என்றாள். நானும், "அதுக்கென்னம்மா அவசரம் இப்போ, அதெல்லாம் நடக்கும்போது பார்த்துக் கொள்ளலாம்" என்று சுரத்தில்லாத பதிலைச் சொல்லி நகர்ந்தேன்.

இடையில் அம்மாவுக்குக் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் போனது. அடிக்கடி நெஞ்சு படபடப்பாய் இருப்பதாகவும் நடக்கும்போது மூச்சு வாங்குவதாகவும் சொன்னாள். மருத்துவமனையில் சேர்த்தபின் அம்மாவுக்கு நாள்பட்ட ரத்தக் குழாய் அடைப்பு நோய் இருப்பது தெரிய வந்தது. மருத்துவர் அம்மாவைப் பூரண ஓய்வில் இருக்கும்படிக் கூறிவிட்டு, ஆயுள் முழுவதும் சாப்பிட நிறைய மாத்திரைகளையும் தந்துவிட்டார். எங்களுக்கு அம்மாவைப் பற்றிய பயம் வர ஆரம்பித்தது. அம்மாவின் ஆசையே கோயில் கோயிலாக வலம் வருவதுதான், எப்படி வீட்டிலேயே முடங்கியிருக்கப் போகிறாள்!

மீண்டும் அண்ணனுக்கு மும்பைக்கே போக வேண்டிய சூழல் ஏற்பட குடும்பத்தோடு கிளம்பினான். அம்மாதான், தனியாக குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்கள் சமாளிப்பது கஷ்டம் என்று சொல்லி அப்பாவை கூடவே போகச் சொன்னாள். அப்பா அண்ணனிடம், அம்மா என்னோடு என முடிவாயிற்று.

நான் காலை எட்டு மணிக்கு வேலைக்குப் போனால் வீடு திரும்ப இரவு ஒன்பது அல்லது பத்து மணி ஆகிவிடும். அம்மா அதுவரை வீட்டில் தனியாகத்தான் இருப்பாள். அவள் தனி ஆளாய் எப்படி தினம் பொழுதைக் கழித்தாள் என நான் கேட்டதே இல்லை. அம்மா என் திருமணப் பேச்சைத் துவங்கியது இந்தச் சூழ்நிலையில்தான்.

"சார், சிதம்பரம் வந்தாச்சு" டிரைவரின் குரல் கேட்டு நினைவுகளில் இருந்து சட்டென விடுபட்டேன். நேரம் மதியம் ஒருமணி ஆகி இருந்தது. கோயில் சாத்தி இருப்பார்கள். சரி, உள்ளே போய் வெளிமண்டபத்தில் உட்கார்ந்துவிட்டுக் கிளம்பலாம் என இறங்கி நடந்தோம். வெளியில் வந்து சாப்பிட்டுவிட்டு, திருவாரூர் நோக்கிப் பயணத்தைத் திரும்பவும் தொடங்கும் போது மணி 2.30க்கு மேல் ஆகி இருந்தது. சரியான வெயில் வேறு. ஆனாலும் வழியெல்லாம் இரண்டு பக்கமும் பசுமையான வயல்வெளி இருப்பது கண்ணுக்கும் மனதுக்கும் இதமாய் இருந்தது. திருவாரூர் வந்து சேரும்போது மாலையாகி விட்டிருந்தது.

"சார், ஐந்தரை மணிக்கு நாம கிளம்பினா, எட்டுக்குடிக்கு ஒரு மணி நேரத்தில போய்ச் சேந்துரலாம். திருக்குவளை வழியாப் போனா இன்னும் சீக்கிரமாப் போய்டலாம்" என்றார் டிரைவர்.

திருவாரூர் பேருந்து நிலையத்தில் இருந்து கொஞ்சம் வெளியே தள்ளி இருந்த ஒரு விடுதியில் அறை எடுத்துக் குளித்து விட்டு, கோயிலுக்குக் கிளம்ப முடிவு செய்தோம். நான் முதல் ஆளாய்க் குளித்துவிட்டு வந்து, அறையில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிக்கு உயிர் கொடுக்க அது, "அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்" எனப் பாடியது.

அம்மாவின் ஆசைப்படிதான் என் திருமணப் பேச்சும் ஆரம்பித்தது. இந்தமுறை கொஞ்சம் பிடிவாதமாய் அம்மா எட்டுக்குடிப் பேச்சை எடுக்க, நானோ திட்டவட்டமாய் மறுப்புச் சொல்ல முடிவெடுத்தேன். அம்மாவின் பேச்சை என்றுமே தட்டாத நான் எடுத்த அந்த முடிவு அம்மாவுக்கு அதிர்ச்சியாய்த்தான் இருந்தது. ஆனால் எப்போதும் போலச் சமாளித்துக்கொண்டு, "சரி, திருமணம் முடிந்ததும் நாம எல்லாம் ஒண்ணாப் போய் முருகனைப் பார்த்துட்டு வந்திடலாம்" என்றாள். திருமணம் முடிந்தபின் யாரும் அதைப்பற்றி யோசித்ததாய்த் தெரியவில்லை, அம்மாவைத் தவிர...

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பின் அம்மாவுக்கு எட்டுக்குடி ஆசை மீண்டும் வந்தது. என் மனைவியின் உறவுக்காரர் ஒருவரின் அறுபதாம் கல்யாணம் திருவிடைமருதூரில் நடக்க இருந்தது. "அங்கிருந்து ஒரு எட்டுப்போய் எட்டுக்குடி முருகனைப் பார்த்துவிட்டு வருகிறேன்" என்றாள். நானோ " உனக்கு இருக்கிற உடல்நிலையில் இந்தக் கல்யாணத்துக்குப் போறதே கஷ்டம். எட்டுக்குடியெல்லாம் தனியாகப் போக வேண்டாம்" என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டேன்.

சென்ற வருடம் மார்ச் மாத இறுதியில் எனக்கு இரண்டு வாரப் பயிற்சி வகுப்பு ஒன்றிற்காக பெங்களூர் போக வேண்டிய கட்டாயம். என் மனைவிக்குத் தன் சொந்த ஊருக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம். நான் அம்மாவிடம், "அம்மா, உன்னால தனியா வீட்டுல இருக்கிறது கஷ்டம். நீ அண்ணன் வீட்டுல போய் ஒரு இரண்டு வாரம் இருந்துவிட்டு வரயா? அப்பா, அண்ணன் குழந்தைகளையும் பார்த்த மாதிரி இருக்கும்" என்றேன்.

அம்மாவோ, "இப்ப எனக்கு உடம்பு இருக்குற நிலையில என்னால அங்கெல்லாம் அலைய முடியாதுப்பா. நா இங்கேயே இருக்கேனே!" என்றாள். நான்தான் பிறகு அம்மாவைக் கட்டாயப்படுத்தி விமானத்தில் ஏற்றி மும்பைக்கு அனுப்பி வைத்தேன். தனியாக இருந்தால் ஏதாவது ஆகிவிடுமோ என்ற கவலையில்.

மும்பை போய்ச் சேர்ந்தபின் தொலைபேசியில் மகிழ்ச்சியாகத்தான் பேசினாள். மனதுக்குக் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. எனது பயிற்சி வகுப்பும் முதல், இரண்டாம் நாள் என வேகமாக நகர்ந்தது. வேலைப்பளுவினால் நானும் அண்ணனையோ அம்மாவையோ கூப்பிட்டுப் பேசமுடியாமல் தள்ளிப் போனது. நான்காவது நாள், அண்ணனிடமிருந்து அவசரமான செய்தி, உடனடியாக நான் அழைக்க வேண்டுமென அலுவலகத்தில் இருந்து அழைப்பு வர, பயந்து போனேன். அண்ணன் உடனடியாக என்னை மும்பை கிளம்பி வரச்சொல்ல எனக்கு எதுவுமே புரியவில்லை. "அம்மாவை ஐ.சி.யூ.ல சேர்த்திருக்கிறேன். நீ எதுக்கும் உடனே கிளம்பி வர முடியுமா?" என்றான்.

உடனடியாக பெங்களூரில் இருந்து மும்பைக்கு பிளைட் டிக்கெட் எடுத்து நேரடியாக அவன் தந்த மருத்துவமனை போய்ச் சேர்ந்தபோது அதிகாலை மணி ஐந்து. அப்பா கவலையோடு வெளியே நின்று கொண்டிருந்தார். உள்ளே போய் அம்மாவைப் பார்த்தேன்... என் வாழ்வின் முதல் அதிர்ச்சி முகத்தில் அறைந்தது. அம்மா எந்தச் சலனமுமின்றி கண்மூடிப் படுத்துக் கிடந்தாள். பக்கத்தில் ஏதேதோ கருவிகளும், பிராணவாயுக் குழாய்களும் அம்மா உயிருடன் இருப்பதை உணர்த்திக் கொண்டிருந்தன.
"நமக்குப் பிடித்தவர்கள், நம்மோடு வாழ்பவர்களின் சின்னச் சின்ன எதிர்பார்ப்புகளைக் கூட நம்மால் ஏன் உடனுக்குடன் பூர்த்தி செய்ய முடிவதில்லை?"
வெளியே வந்து கவலையுடன் நின்று கொண்டிருந்த அண்ணனிடம், "அம்மாவுக்கு என்ன ஆச்சுடா?" எனக் கேட்டேன். "ரெண்டுநாளா தலைவலின்னு சொன்னாள், டாக்டரிடம் காண்பித்தேன். நேற்று திடீரென மயங்கி விழுந்து விட்டாள். ஃபிட்ஸ் வேற வந்துடுச்சி" என்றான்.

எனக்கு உலகமே நொறுங்கியது போல ஒரு உணர்வு. அழுகையாய் வந்தது. அம்மாவை எப்போதும் நான் கம்பீரமாய்ப் பார்த்துத்தான் பழக்கம். டாக்டர், என்னையும் அண்ணனையும் உள்ளே அழைத்தார். " உங்க அம்மாவுக்கு ‘மெனிஞ்சைடிஸ்' இருக்கலாம் எனச் சந்தேகப்படுகிறோம். அதை உறுதிப்படுத்த அவங்களோடமுதுகுத்தண்டில் இருந்து திரவம் எடுத்துப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால் இப்ப இருக்குற அவங்க உடல்நிலைமைல அதப் பண்ண முடியுமான்னு தெரியல... எங்களால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்கிறோம்" என்றார்.

நானும் அண்ணனும் மொத்தமாகக் குழம்பிப் போனோம். வேற ஏதாவது இன்னும் பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு போகலாம் என்றால், போகிற வழியில் ஏதாவது ஆகி விட்டால்... அந்த வேளையில் கடவுளைப் பிரார்த்திப்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. உடனே என் நினைவுக்கு வந்தது அம்மாவின் இஷ்டதெய்வம் எட்டுக்குடி முருகன்தான்.

இரண்டாவது நாள் அம்மா கொஞ்சம் கண் விழித்தாள். மருத்துவர்கள் இது ஆச்சரியமான விஷயம் என்றார்கள். ஆனால் அம்மாவுக்கு யாரையும் அடையாளம் தெரியவில்லை. அருகில் போய் " அம்மா, உனக்குச் சீக்கிரம் உடம்பு சரியாய்டும். அப்புறம் நாம எல்லாம் ஒண்ணா எட்டுக்குடி போய் முருகனைக் கும்பிட்டுட்டு வரலாம்" என்றேன். "சரி" என்பது போல ஒரு சின்னச் சிரிப்புடன் தலையாட்டினாள்.

கார் எட்டுக்குடியைத் தொட்டிருந்தது. இறங்கி அர்ச்சனைத் தட்டும், மாலையும் வாங்கினோம். கோயிலுக்குள் சொற்பக் கூட்டம்தான் இருந்தது. ஒரு குடும்பம் மட்டும் முருகனுக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து கொண்டிருக்க... முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னான நினைவுகள் என்னுள் நிழலாடியது. முருகன் விபூதி அலங்காரத்தோடு அழகாய் என்னைப் பார்த்துச் சிரிப்பது போல ஒரு உணர்வு. சாமி தரிசனம் முடித்து விட்டு வெளிப்பிரகாரத்தில் வந்து உட்கார்ந்தோம். சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்தை தொன்னையில் வைத்து எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருக்க... நாங்களும் ஆளுக்கு ஒன்றென வாங்கிச் சாப்பிடத் தொடங்கினோம்.

அம்மாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இருப்பதாய்த் தோன்றவில்லை. அலுவலகத்திற்கு நான் திரும்பிவர ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் ஆகும் எனச் சொல்ல, விடுமுறையே எடுக்காத என் இந்தச் செய்தி கேட்டு, அலுவலகத்தில் உள்ளவர்கள் நான் வேறு வேலை தேடி நேர்முகத்தேர்வுக்குச் சென்றிருப்பதாகப் பேசிக் கொண்டார்களாம்.

ஒரு சனிக்கிழமை மாலை... அம்மா கண் மூடியபடியே உயிரை விட்டாள். அதுவரை எந்த இழப்பையும் பார்த்திராத எனக்கு அது ஒரு பேரிடியாக இருந்தது. அம்மாவின் உயிர் இல்லாத கைகளைப் பற்றிக்கொண்டு, அவளுடைய அசைவற்ற ஆனால் வேதனையில்லாத முகத்தைப் பார்த்துக் கதறியபோது எனக்கு என்மேல்தான் கோபம் அதிகமாய் இருந்தது.

எல்லாம் முடிந்தது. அம்மாவை மும்பையிலேயே எரியூட்டினோம். இரண்டு வாரங்கள் கழித்து நானும் அலுவலகம் செல்லத் தொடங்கினேன். ஆனாலும் மனதுக்குள் ஏதோ ஒரு உறுத்தல் இருந்து கொண்டேதான் இருந்தது. "நமக்குப் பிடித்தவர்கள், நம்மோடு வாழ்பவர்களின் சின்னச் சின்ன எதிர்பார்ப்புகளைக் கூட நம்மால் ஏன் உடனுக்குடன் பூர்த்தி செய்ய முடியவில்லை?" என்ற கேள்வியே என்னுள் திரும்பத் திரும்பச் சுழன்றது.

நானும் அண்ணனும் அப்பாவும் கோயிலை விட்டு வெளியே வந்தோம். நான் சிறுவயதில் விழுந்து உயிர் பிழைத்த குளத்தைப் பார்த்தபோது அம்மாவின் நினைவுதான் வந்தது. யாருக்கும் தெரியாமல் நான் எடுத்து வைத்திருந்த அம்மாவின் அஸ்தியை அந்தக் குளத்திற்குள் இறங்கிக் கைகளில் ஏந்திக் கரைத்து விட்டேன். ஏதோ அம்மாவின் நிறைவேறாத ஆசை ஒன்றை 35 வருடங்களுக்குப் பிறகாவது நிறைவேற்ற முடிந்ததே என்ற திருப்தி எனக்கு.

பெரிய இழப்புகளில்தான் வாழ்வின் சில ரகசியங்களுக்கு விடை கிடைக்கிறது. "எதையும் நேசிப்பதற்கு ஒருவழி, அதை இழக்கலாம் என்பதை உணர்வதுதான்" என்று எங்கோ படித்ததன் உண்மையான அர்த்தம் அப்போதுதான் விளங்கியது.

கார் திருக்குவளை வழியாகத் திரும்பவும் திருவாரூர் நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தது. நான் கண்மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டேன்.

சேகர் கண்ணன், இல்லினாய்ஸ்
More

மணமகள் தேவை
Share: 




© Copyright 2020 Tamilonline