Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
சீதே ஜே.பி.
- ஜ.ரா. சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி)|செப்டம்பர் 2009|
Share:
Click Here Enlarge"என்ன தாத்தா! எவ்வளவு நேரமாகக் கை தட்டிக் கொண்டே பின்னால் வருகிறேன். திரும்பியே பார்க்க மாட்டேன் என்கிறீர்களே...ஹூம்... என்ன இருந்தாலும் ஒரு கெளரவ மாஜிஸ்திரேட்டோட கணவரில்லையா? புதுப் பெருமையினால் பழைய சினேகிதர்களெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை..." என்று பெருமூச்செறிந்தான் ரசகுண்டு.

"என்னது? கெளரவ மாஜிஸ்ட்ரேட்டோட புருஷனா? என்னடாப்பா பேத்தறே?" அப்புசாமி திகைத்தார்.

"சரிதான், உங்களுக்கே தெரியாதா? பாட்டிக்கு இப்போ கெளரவ மாஜிஸ்திரேட் பதவி கிடைத்திருக்கிறதாமே. பாட்டி உங்களை மதித்து எப்போதாவது, ஏதாவது சொல்லியிருந்தால்தானே தெரியும்? பேப்பர்லே கூடச் சின்னதாச் செய்தி வந்திருந்ததாம்... மிஸஸ் சீதா அப்புசாமி கெளரவ மாஜிஸ்ரேட்டாக நியமிக்கப்பட்டிருக்கிறார்... என்று உங்களைப் பார்த்தால் கேட்கணும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்."

அப்புசாமி பெருமூச்செறிந்தார். "புருஷன் என்று பெயரே தவிர அந்தக் கிழவி என்னை எங்கே மதிக்கிறாள்? என் ஸ்வெட்டரைப் பார்த்தியா? எந்தக் கிழவனாவது இந்த மாதிரிக் கண்ணராவி ஸ்வெட்டர் போட்டுக் கொண்டிருக்கிறானா? மத்த கிழவனலாம் என்னென்ன ஸ்டைலான ஸ்வெட்டரெல்லாமோ போடறான். சாயம் போய், மயிர்க்கூச்செறிந்த மாதிரி சிலிர்த்துக் கொண்டிருக்கிற இதைத்தான் நான் இருபத்தைந்து வருஷமாய்ப் போட்டுக் கொண்டிருக்கிறேன்... வேறு ஸ்வெட்டர் வாங்கித் தரமாட்டாளாம். இப்படிப்பட்ட கிழவிக்குத்தான் காலமாக இருக்கிறது. அவள் காட்டில்தான் மழை பெய்கிறது."

அப்புசாமி தனது வழக்கமான ரெளண்டுகளை அடித்துவிட்டு வீடு திரும்பியபோது, ஒரே திமிலோகப்பட்டு கொண்டிருந்தது.

இடைகழியில் கல்யாண வீடு மாதிரி ஒரே செருப்புக் குவியல். எல்லாம் லேடீஸ் செருப்புகள். விதவிதமான வர்ணங்களென்ன, டிசைன்கள் என்ன. பப்பள...பளபள... ஓ... தலைமைக் கிழவியைப் பார்க்க பா.மு.கழக கிழவிகள் பட்டாளம் படையெடுத்து வந்திருக்கிறதாக்கும்.

"ஹி...ஹி! நான்... நான்... நான் என்ன பண்ணினேன்... ஒன்றுமே பண்ணலை" என்றவருக்குத் தன்னை யாரோ பேசச் சொன்ன மாதிரி தானாகவே நினைத்துக் கொண்டு, கையை முறுக்கினார். பிரித்துக் கொண்டார். தலையைத் தடவினார். மூக்கைத் தடவினார். காதைத் தடவினார்.
இம் மாதிரி செருப்புக் குவியல்களைப் பார்த்தவுடனேயே அப்புசாமி சாதாரணமாகச் செய்யும் காரியம், ஓசைப்படாமல் பின்புற வழியிலுள்ள படிக்கட்டு வழியாக மாடியிலுள்ள தன் அறைக்குப் போய்விடுவதுதான். சீதாப்பாட்டி, கணவருக்குக் கண்டிப்பாகப் போட்டு இருக்கும் ஸ்டாண்டிங் ஆர்டர் அது. தடையை மீறி நுழைந்தால் அவரது பட்ஜெட்டில் துண்டு, வேட்டி, துப்பட்டி எல்லாமே விழுந்துவிடும்.

அப்புசாமி இந்தத் தடவை மாடிக்குப் போகவில்லை. மெதுவாக உள்ளே எட்டிப் பார்த்தார்.

ரோஜா மாலைகள். ஸ்ட்ரா போட்ட கிரஷ் பாட்டில்கள். குதூகலம்...சிரிப்பு...கைதட்டல்...கை குலுக்கல்கள்!

பல டஜன் பாட்டிகள் கூடியிருந்தனர். ஓரிரண்டு ஈஸி சேர் பாட்டிகளைத் தவிர மற்ற பாட்டிகள் மிகவும் சுறுசுறுப்பாகவும் இளமையோடும் காணப்பட்டனர். ட்ரே ஒன்றில் கிரஷ் பாட்டில்களை வைத்துக்கொண்டு ஓர் இளங் கிழவி குறுக்கும் நெடுக்குமாக ஓடி ஓடி எல்லா அங்கத்தினர்களுக்கும் கிரஷ் சப்ளை செய்து கொண்டு இருந்தாள்.

சோபாவில் நடுநாயகமாகச் சீதாப்பாட்டி உட்கார்ந்திருந்தாள். கழுத்தில் ஆடம்பரமான பெரிய ரோஜா மாலையிருந்தாலும், முகத்தில் அடக்கமான ஒரு வெல்கமிங் ஸ்மைல். மெதுவாக எழுந்து நின்றவளின் கண்கள் நிதானமாக எல்லாரையும் பார்த்தன.

தொண்டையைக் கனைத்துக் கொண்டாள். பேசத் தொடங்கினாள் "ஆஃப்டர் ஆல் இது ஒரு சின்னவிஷயம். இதற்குப் போய் நீங்கள் என்னைப் பாராட்டுவதும், சம் ஆஃப் த மெம்பர்ஸ் ஸீரியஸாக என்மீது... வாட்கேன் ஐ ஸே..." (சிரித்துக் கொண்டாள்) "எஸ்...என் மீது 'டூ' விடுவதாக மிரட்டுவதும் (அங்கத்தினர்களின் சிரிப்பு)... அஃப்கோஸ் உங்கள் அன்புக்கு எப்படி தாங்க் பண்ணுவது என்றே எனக்குத் தெரியவில்லை. டெஃபனெட்லி திஸ் இஸ் ஏன் ஆனர் டு மி. ஜஸ்டிஸ் ஆஃப் பீஸாக நான் அப்பாயிண்ட் ஆகியிருக்கிற கெளரவத்தைவிட என்னை நீங்கள் வந்து பாராட்டி இவ்வளவு அமர்க்களம் பண்ணினது தான் எனக்கு ரொம்பக் கெளரவத்தைக் கொடுத்து இருக்கிறது..." பாட்டி இன்னும் பேசி முடிக்கவில்லை. அதற்குள் வாசலில் சலலப்பு.

அவசர அவசரமாகக் காரிலிருந்து இறங்கி மாலையும் கையுமாகப் பார்வதி மகாலிங்கம் என்ற கிழவி ஓடி வந்தாள். அவளைப் பார்த்ததும் கூட்டத்தில் ஒரே கிசுகிசுப்பு.

"மிஸஸ் வயித்தெரிச்சல் கூட வந்துவிட்டாளே?"

"பிரசிடெண்டைக் கரித்துக் கொட்டுகிறவளாச்சே. இவள் வந்து மாலை போடலைன்னுதான் நம்ம பிரசிடென்ட் அழுதாளாக்கும்!"

"வேறொண்ணுமில்லை. லேட்டாக வந்தால் அந்த அளவுக்காவது அலட்சியம் பண்ணமுடித்ததே என்கிற திருப்தி. வேறென்ன?"

அங்கத்தினர்கள் விமரிசனம் காதுபடக் கேட்டாலும் பார்வதி மகாலிங்கம் துளியும் லட்சியம் செய்யாமல் நேராக சீதாப்பாட்டியிடம் சென்றாள். கழுத்தில் மாலையைப் போட்டவள், "ஸாரிடி சீதா! நான் ரொம்ப லேட்! உனக்கு ஆனாலும் இவ்வளவு அழுத்தம் கூடாது. கெளரவ மாஜிஸ்திரேட்டாக உனக்குப் பதவி கிடைத்திருக்கிறது என்பதை இப்படியா அமுக்கமாக வைத்திருப்பது? உனக்குக் கிடைத்த கெளரவம் எங்களுக்கும் கிடைத்த மாதிரியில்லையா? கொண்டா இப்படிக் கையை..." என்றாள்.

சீதாப்பாட்டி எரிச்சலை அடக்கிக்கொண்டு, கை கொடுத்தாள். பல அங்கத்தினர்களின் முகமும் கடுகடுத்தது. பா.மு. கழகத்திலேயே கொஞ்சம் இடக்கான பேர்வழி பார்வதி மகாலிங்கம்தான். சீதாப்பாட்டியை எல்லா அங்கத்தினர்களும் 'பிரசிடெண்ட்ஜி' என்று மரியாதையாகக் குறிப்பிட்டால் பார்வதி மகாலிங்கம் மட்டும் 'சீதா வாடி, சீதா போடி' என்று தான் பேசுவாள். 'பிரசிடெண்ட் ஜி' என்ன பிரசிடெண்ட்ஜி?' என்று அவள் வாய்விட்டு வயிறெரிந்தது, சீதாப்பாட்டியின் காதுக்கும் எட்டிய சமாசாரம்தான்.

பல்லைக் கடித்துக்கொண்டு சீதாப்பாட்டி, "தாங்க்யூ, ஸோ மச்... திஸ் இஸ் ஆஃப்ட்டர் ஆல் ஒரு சின்ன விஷயம்." என்றாள் குரலில் அடக்கம் தொனிக்க.

"இந்தப் போலி அடக்கம்தானே வெண்டாமென்கிறது?" என்று குத்தலாகச் சிரித்தாள் மாலை போட்ட மிஸஸ் மகாலிங்கம். "இந்த மெட்ராஸில் எத்தனையோ லட்சக்கணக்கான பேர் இருக்கிறார்கள். அதில் எத்தனையோ ஆயிரக்கணக்கான பெரிய மனிதர்கள், பெரிய மனுஷிகள் இருக்கிறார்கள். அவ்வளவு பேரையும் ஆனரரி மாஜிஸ்திரேட்டாகப் போட்டுவிடுவதில்லையே. செலக்ட் பண்ணி, அதுவும் கவர்னரோட அப்ரூவலோடல்லவா நியமிக்கிறார்கள். எந்த விஷயத்துக்கும் இந்தக் காலத்தில் தகுதி மட்டும் இருந்தால் போதுமா? அதற்கென்று உழைக்கிற சாமர்த்தியமும் வேண்டுமே..."

'வாழைப் பழத்திலே ஊசி ஏற்றுகிற மாதிரி என்னவோ குத்தலாகப் பேசுகிறாள்...' என்று சீதாப்பாட்டி நினைத்து எரிச்சல்பட்டவள், மிஸஸ் மகாலிங்கத்தைக் 'கட்' செய்ய நினைத்து பவ்யமான குரலில் "உன் காம்ப்ளிமெண்ட்ஸுக்கு ரொம்ப தாங்க்ஸ். ஷல் ஐ கன்டின்யூ?" என்றாள்.

"தாராளமாக. என் அனுமதி எதற்கு?" என்றவாறு மிஸஸ் மகாலிங்கம் சீதாப்பாட்டிக்குப் பக்கத்திலேயே சோபாவில் உட்கார்ந்துகொண்டாள்.

இந்தச் சமயத்தில்தான் மெதுவாக உள்ளே ஒரு தலை எட்டிப் பார்த்தது.

அப்புசாமி தலை! அதுவும் கிராப் செய்து கொள்ளாத பரட்டைத் தலை.

கிழவிகள் பட்டாளம் வந்துவிட்டதென்றால் அவர் காததூரம் ஓடிவிடுகிறது வழக்கமென்றாலும், இப்போது அவர் தலைநீட்டக் காரணம், இரண்டுவிஷயங்கள். 1.சீதே என்னவோ கெளரவ மாஜிஸ்திரேட்டாமே. அது ஆகி ஒரே சந்தோஷமாக இருக்கிறாள். இந்த இனிமையான சூழ்நிலையில் தனது புது ஸ்வெட்டர் விஷயமாக அவளிடம் கேட்டால் காரியம் பலிக்கக் கூடும். 2. கிரஷ்! நீயே குடி, நானே குடி என்று ஆளுக்கு ஆள் இந்தக் கிழவிகள் குடிக்கும்போது, ஒன்றிரண்டு தானும் குடித்தால் என்ன?

அப்புசாமியின் வெண் கரடித் தலை முதலில் தென்பட்டதும், மிஸஸ் மகாலிங்கத்தின் கண்களில்தான்.

"எஸ்.... வாருங்களேன் உள்ளே...." என்று குரல் கொடுத்தவள், பேசிக் கொண்டிருந்த சீதாப்பாட்டியின் முதுகைத் தட்டி, "சீதா, உன் புருஷர் போலிருக்கிறதே!" என்றாள்.

எல்லாப் பாட்டிகளின் கண்களும் ஏக காலத்தில் வாசற்புறம் திரும்பி அங்கிருந்த அப்புசாமியைப் பார்த்தன.

சீதாப்பாட்டியின் கண்களில் அப்புசாமிக்கு மட்டுமே தெரியக்கூடிய, 'சீதே ரே' என்னும் கோபமான ஒளிக்கிரணம் புறப்பட்டது. ஆனால் அவரை ஏக காலத்தில் டஜன் கணக்கான பாட்டிகள் பார்த்ததால் கூச்சமிகுதியால், தலையைக் குனிந்து நாணிக் கோணிக் கொண்டு இருந்துவிட்டதால் அந்தப் பார்வையைச் சந்திக்கவில்லை.

"ஹி...ஹி! மீட்டிங் போலிருக்குது... நடத்துங்கள்.... நடத்துங்கள்..." என்றார் அப்புசாமி.

மிஸஸ் மகாலிங்கத்துக்கு அப்புசாமியின் அசட்டுத்தனமும், அதைவிட அவர் போட்டிருந்த கிழிசல் ஸ்வெட்டரும் ரொம்ப ரொம்பப் பிடித்திருந்தது. அவர் தலை தெரிந்ததுமே சீதாப்பாட்டியிடம் ஏற்பட்ட மாறுதலையும் அவளுடைய கம்பீரம் வோல்டேஜ் இறங்கின பல்ப் ஒளி மாதிரி குறைந்ததையும் கவனித்துவிட்டாள்.

"சீதா, உங்க புருஷர் உள்ளே வருவதைப் பற்றி உனக்கொன்றும் ஆட்சேபமில்லையே... ரொம்பக் கூச்சப்படுகிறாரே...." என்றாள்.

சீதாப் பாட்டிக்கு 'டைலமா'வாகப் போய்விட்டது. 'வீக் பாயிண்ட்டிலேயே குத்துகிறாளே இந்தப் பொறாமைக்காரி' என்று நினைத்துக் கொண்டவளுக்கு ஆத்திரமாக வந்தது.

'என்ன ஒரு கொழுப்பு இந்த மனுஷனுக்கு இருந்தால் என்னுடைய ஸ்டாண்டிங் ஆர்டரை மீறிக்கொண்டு இப்படித் தன் தலையை நீட்டியிருக்க வேண்டும்! டிரஸ்ஸாவது கொஞ்சம் டீஸன்ட்டாக இருக்கிறதா? உள்ளே அனுமதித்தாலும் எப்படி பிஹேவ் பண்ணுவாரோ? அனுமதிக்க மாட்டேன் என்று சொல்லவும் முடியாது....'

சீதாப் பாட்டி சமாளித்துக் கொண்டு, "எஸ், தாராளமாக அவர் வரலாமே. நாம் ஒண்ணும் கமிட்டி மீட்டிங் நடத்தவில்லையே. வெறுமே ஃபார்மலாகத்தானே கூடியிருக்கிறோம்" என்றவள், "உள்ளே வாருங்களேன்..." என்றாள்.

அப்புசாமி ஏழே முக்காலே அரைக்காலே வீசம் கோணலாக நாணிக் கோணிக்கொண்டு அடிமேலடி வைத்து சீதாப் பாட்டியை நோக்கி நடந்தார்.

'டங்கைப் பிடுங்கிக் கொண்டு டக்கென்று செத்துவிடலாம் போலிருக்கிறதே' என்று சீதாப் பாட்டி புழுங்கினாள்.

எல்லா அங்கத்தினர்களும் ஏதோ சவலைக் குழந்தையைப் பார்ப்பதைப் போல அனுதாபத்துடன் அப்புசாமியைப் பார்ப்பது சீதாப் பாட்டிக்கு உடம்பைக் கூச வைத்தது.

"வாருங்கள், உங்கள் சம்சாரம்தானே? இப்படியா கூச்சப்படுவது?" என்று மிஸஸ் மகாலிங்கம் எதிர்கொண்டு அவரை அழைத்தது சீதாப் பாட்டியின் உடம்பைக் கீறுவது மாதிரி இருந்தது.

"உங்கள் மனைவி கெளரவ மாஜிஸ்திரேட் ஆகியிருக்கிறாள் என்றால், அது உங்களுடைய சாமர்த்தியத்தினால்தான் என்று நாங்களெல்லாம் கொஞ்ச நேரம் முன்னால்தான் பேசிக்கொண்டிருந்தோம். நீங்களென்னடாவென்றால் இவ்வளவு அடக்கமாக, பாராட்டுவிழாவில் கூடக் கலந்து கொள்ளாமல்..."

அப்புசாமிக்கு தலை ஜிலீர் என்றது. ஐஸ் என்றால் ஐஸ்.... அப்படிப்பட்ட ஐஸ்.

"ஹி...ஹி! நான்... நான்... நான் என்ன பண்ணினேன்... ஒன்றுமே பண்ணலை" என்றவருக்குத் தன்னை யாரோ பேசச் சொன்ன மாதிரி தானாகவே நினைத்துக் கொண்டு, கையை முறுக்கினார். பிரித்துக் கொண்டார். தலையைத் தடவினார். மூக்கைத் தடவினார். காதைத் தடவினார். "சபை... சபை... சபையோர்களே... தாய்மார்களே... பாட்... பாட்... பாட்டிமார்களே.... மற்றும்..." என்று திணறத் தொடங்கிவிட்டார்.

அவரது கை தானாக, அருகிலிருந்த டீபாயின் மீதிருந்த ஸ்ட்ரா போட்டிருந்த கிரஷ் பாட்டிலைக் கைப்பற்றியது. மடமடவென்று கூச்சத்தைப் பார்க்காமல் எடுத்துக் குடித்துவிட்டு, வேட்டி நுனியைத் தூக்கி எடுத்து உதட்டை ஒற்றிக்கொண்டார். இன்பமான ஒரு கிரஷ் ஏப்பமும், ஒரு சிறு ஓசையுடன் எழுந்து அவரது வாயை மணக்க வைத்தது. பேசத் தொடங்கினார்.

"என்.. என்... பெண்டாட்டி சீதே ரொம்ப ரொம்பக் கெட்டிக்காரி. ஹேவ். (மீண்டும் ஒரு கிரஷ் ஏப்பம்) ஹி...ஹி! கலர்லே ரொம்ப கேஸ் ஏற்றியிருக்கிறான்.... (அங்கத்தினர்கள் சிரிப்பு) சீதே வந்து... கெளரவ மாஜிஸ்திரேட்டாகப் பதவி... வந்து... அது யாருக்கும் கிடைக்கக் கூடியதோ... எங்க பாட்டனார் ஒரு மாஜிஸ்திரேட்டாக இருந்ததாகச் சொல்வார்கள். அதிலே பாருங்கள்... பாட்டி ஒருத்தி இந்த மாதிரி கெளரவ மாஜிஸ்திரேட்டாக ஆகிறதுன்னா... அது... அது... என் சீதேயால் முடியும்கறது... ஹி... ஹி! நான் ஆணித்தரமாகச் சொல்லமுடியும்.... (சீதாவைப் பார்த்துக் கொள்கிறார். எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது அங்கே) ஹி!ஹி! நான் ரொம்ப நேரம் பேசிட்டேன்.... வந்து கடைசியாக... ஒரு சின்ன...விஷயம்... ஸ்வெட்... ஸ்வெட்..."

சீதாப் பாட்டி டக்கென்று எழுந்தாள். "ஸ்வெட்லானாவைப் பற்றி நீங்கள் அப்புறம் பேசலாம் என்று நினைக்கிறேன். ஏற்கெனவே எல்லாருக்கும் ரொம்ப லேட்டாகிட்டது. இட் இஸ் ட்வல்வ் நெள..." என்றவள் அப்புசாமியை மேற்கொண்டு பேசவிடாமல் யாருக்கும் தெரியாமல் காலை ஒரு மிதிமிதித்ததில் அவர் உட்கார்ந்துவிட்டார்.

நன்றி அறிவிப்புப் படலம் முடிந்து எல்லாரும் புறப்பட்டுப் போய்விட்டார்கள்.

"சீதேய்!" என்றார் அப்புசாமி உற்சாகமாக. அவர் மனத்தில் சீதாவைப் பற்றித் தான் பிரமாதமாகப் புகழ்ந்து பேசிவிட்டதாக நினைப்பு. "எப்படி இன்றைக்கு ஐயா உன்னைப் பற்றி அத்தனை கிழவிகள் முன்னிலையிலும் பாராட்டுரை வழங்கியது! சீதே... ஒரு நல்ல ஸ்வெட்டராக..."

"ஷட் அப்!"சீதாப்பாட்டி வெடித்தாள். "இன்று நீங்கள் பிஹேவ் பண்ணின கண்ணராவிக்கு ஸ்வெட்டர் வேறா? என் மானமே போயிற்று...."

அப்புசாமிக்கு 'பக்' என்றது. "சீதே!" என்றார் குரலில் உஷ்ணமாக. "உன்னை நான் அத்தனை பேர் எதிரில் புகழ்ந்து பேசியும் கூட... இந்தா பார்மே, அப்புசாமி நல்லவனுக்கு நல்லவன்... பொல்லாதவனுக்குப் பொல்லாதவன்... நம்மகிட்டே காடைக் காட்டாதே..."

"சீ! என் ப்ரஸ்டிஜே போயிற்று..."

"பெரிய ப்ரஸ்டிஜ் பத்மனாபி! ஸ்வெட்டர் வருமா வராதா?"

"வராது, வராது, வராது."

"அப்படியானால் வழிவிட முடியாது."

"என்ன, 'கேரோ' பண்ணுவீர்களோ! சீ! வழியை விடுங்கள்!"சீதாப்பாட்டி அப்புசாமியின் கையை விலக்கிக் கொண்டு போய்விட்டாள்.

அப்புசாமி பல்லைக் கடித்தார்.

அவர் மூளையில் பளிச்சிட்டது ஒரு யோசனை - பாட்டியைப் பணிய வைக்க.

***


பா.மு.கழகத்துக்குத் தினமும் செல்வதைப் போலத்தான் அன்றைய தினமும் சீதாப்பாட்டியின் கார் சென்றது. சீதாப் பாட்டியின் தலையைக் கண்டதுமே அங்கிருந்த சலசலப்பு சட்டென்று நின்றது. பாட்டிக்குக் குழப்பமாக இருந்தது.

'சம்திங் இங்கே ஏதோ மர்மமாக நடக்கிறது... பிரசிடெண்ட் எலெக்ஷன் நெருங்கிக் கொண்டிருக்கிறது... ஏதாவது கிராஸிங் த ஃப்ளோர் சதி நடந்து கொண்டிருக்கிறதோ?' குழம்பியவாறே தன்னுடைய அறைக்குப் போய் உட்கார்ந்தவளின் காதில் 'ஜல்! ஜல்! கலீர்! கலீர்!" என்று ஒரு சத்தம் கேட்கத் தொடங்கியது.

"வாட் இஸ் கோயிங் ஆன் ஹியர்...."

சீதாப் பாட்டி ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். பா.மு.கழக அங்கத்தினர்களில் ஒருவராகிய பார்வதி மகாலிங்கம் பெரிய உண்டியல் ஒன்றை வைத்துக் கொண்டு, எல்லா அங்கத்தினர்களிடமும் சென்று குலுக்கிக் கொண்டு இருந்தாள்.

சீதாப்பாட்டிக்குச் சுருக்கென்று கோபம் வந்துவிட்டது. 'எதற்கு உண்டி? ஏன் உண்டி! இது என்ன ஏதாவது கேள்வி கேட்பார் இல்லாத செளல்ட்ரியா? இல்லே, மூர்மார்க்கெட் க்ரெளண்ட்ஸா? என் பர்மிஷன் இல்லாமல் என்னத்தையோ உண்டி குலுக்கிக் கொண்டிருக்கிறாளே அந்த மிஸஸ் மகாலிங்கம்' என்று மனம் கொதித்தவள், காரியதரிசியைக் கூப்பிட்டு "கொஞ்சம் அந்த மிஸஸ் மகாலிங்கத்தை இங்கே வரச்சொல்லுங்கள்" என்றவள், "வேண்டாம்... நானே அங்கு வருகிறேன்" என்று எழுத்து வெளியில் வந்தாள்.

பார்வதி மகாலிங்கம் சீதாப்பாட்டியைக் கண்டதும் மர்மமாகப் புன்னகை செய்தாள்.
ஏய்யா... என்ன கொழுப்பு உனக்கு! என்னைப் பார்த்துப் பீமன் என்கிறாயா? சைக்கிளைத் தள்ளிட்டு வா என் பின்னாடி ஸ்டேஷனுக்கு...
சீதாப் பாட்டி தொண்டையைக் கனைத்துக் கொண்டு, "வாட் இஸ் இட் யு ஆர் டூயிங்.... என்னவோ உண்டி மாதிரி கண்ணில் தென்பட்டது?" என்றாள் குரலில் கண்டனம் தெரிய.

மிஸஸ் மகாலிங்கம் அலட்சியமான சிரிப்புடன், "இது ஒரு பரிதாபத்துக்குரிய உண்டி வசூல்... உனக்கெல்லாம் உதவ மனசு வராது. அதுதான் உன்னிடம் கேட்கவில்லை" என்றாள் பட்டுக் கத்தரித்தாற் போல். அருகிலிருந்த அவளுக்கு வேண்டிய ஓர் அங்கத்தினர். "ஆமாம். ஆமாம். அதுவும் உண்மைதான்" என்று சொல்லிச் சிரித்தாள்.

அதற்குள் இன்னும் ஓர் அங்கத்தினர். "ஏன் பார்வதி மகாலிங்கம். நீங்களாகவே பிரசிடெண்ட் உதவ மாட்டார் என்று முடிவு கட்டிவிட்டால் எப்படி? நம்ம பிரசிடெண்ட்ஜி எவ்வளவு தாராள மனம் படைத்தவர் என்பது ஊர் உலகத்துக்கு நன்றாகத் தெரியும். நாங்களெல்லாம் ஐந்து ரூபாய் போட்டால், அவர்கள் ஐம்பது ரூபாய் போடுவார்கள். போட்டதில்லையா அப்படி?" என்றாள்.

பார்வதி மகாலிங்கம், விஷமத்தனமான புன்னகையுடன், "சரி, நீ என்ன சொல்கிறாய்? பிரசிடெண்ட் கிட்டேயும் உண்டியை நீட்டேன்... காசு போடுவார் என்கிறாய்.அப்படித்தானே?" என்றவாறு உண்டியைச் சீதாப்பாட்டி பக்கம் நீட்டினாள்.

உண்டியைப் பார்த்த சீதாப்பாட்டிக்கு அவமானத்தால் உடம்பு கூனிக்குறுகிக் குடுகு மாதிரி ஆகிவிட்டது. உண்டியலின் மேல் கொட்டை எழுத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது.

'அப்புசாமி தாத்தா ஸ்வெட்டர் நிதி, அன்பர்களே, ஒரு ஜீவனைக் குளிரிலிருந்து காப்பாற்றுக.'

சீதாப்பாட்டிக்கு 'டங்'கைப் பிடுங்கிக் கொண்டு 'டக்'கென்று செத்து விடலாம் போலிருந்தது. ஒரு கணம் பேச்சு அண்ட் மூச்சு திணறிப் போய்விட்டது. அதட்டிக் கேட்பதற்காக அதிகாரத்தோடு வந்த ஜோரென்ன? இப்படி அவள் மூக்கை உடைப்பது போல்... 'ஷேம்... ஷேம்...சீதே! உனக்குப் படுஷேம்' என்று மனசாட்சி அலறியது. சீதாப்பாட்டி கைக்குட்டையால் முகத்தை ஒற்றித் தன்னைச் சமாளித்துக் கொண்டு, "பெக்யூலியராகத்தான் இருக்கிறது. ஸ்வெட்டர் நிதி! திஸ் இஸ்....ந்யூஸ் டுமி.... என் ஹஸ்பெண்ட் என்கிட்டே சொல்லவே இல்லையே?" என்றாள்.

கிண்டலான குரலில் மிஸஸ் மகாலிங்கம், "எப்படிச் சொல்வார் பாவம்? என்கிட்டே வந்து சொன்னார்."

சீதாப்பாட்டியின் கண்களில் கண்டிப்பு தெரிந்தது. "தி திங் இஸ்... உங்களிடம் சொன்னவர் என் ஹஸ்பெண்ட் என்பதால் நீங்கள் இப்படி டேக்கன் ஃபர் கிராண்டட் ஆக நம்ம கழகத்துக்குள் கலெக்ஷனைத் தொடங்கியது அவ்வளவு நன்றாயில்லை."

"நான் ஒன்றும் கழகக் கட்டடத்துக்கு உள்ளே வந்து வசூல் பண்ணவில்லையே. வெளியே தோட்டத்தில்தானே குலுக்குகிறேன்! நீயும் ஸ்வெட்டர் வாங்கித் தர மாட்டாய். ஐயோ பாவம்னு அவருக்காகத் தர்மம் வசூல் பண்ணினாலும் தடுக்கிறாய்.... நியாயமாகத் தெரியவில்லையே. நீ தடுத்தாலும் தடுக்காவிட்டாலும் உன் புருஷனுக்கு ஸ்வெட்டர் நிதி வசூலித்ததில் மளமளவென்று தொண்ணூற்றெழு ரூபாய் சேர்ந்துவிட்டது."

சுட்டெரிப்பது போலப் பார்த்துவிட்டு, சீதாப்பாட்டி தன் அறைக்குத் திரும்பினாள். உள்ளம் எரிமலையாகக் கொதித்தது. அவளுடைய சரித்திரத்தில் இப்படிப்பட்ட மாபெரும் அவமானம் அவளுக்கு ஏற்பட்டதில்லை.

***


அப்புசாமி ஒன்றுமே தெரியாதவரைப் போல, "சீய்தே! ஏன் என்னவோ மாதிரி இருக்கிறாய்?" என்றார் மனத்துக்குள் பொங்கும் உற்சாகத்துடன். கொஞ்ச நேரத்துக்கு முன்தான் ரகசியமாக ஓர் இடத்தில் உண்டியைப் பத்திரப்படுத்திவிட்டு வந்திருந்தார்.

சீதாப்பாட்டி சிரித்தாள். "ஒன்றுமில்லையே... லிட்டில் பிட் டயர்ட்...."

"ஹி!ஹி!" அப்புசாமியும் சிரித்தார். "உன்னைப் பார்க்க ஐயோ பாவம்னு இருக்கு சீதே! ஆமாம், மூஞ்சிக்குப் பவுடர் போட்டுக் கொள்ளவில்லையா? ஒரே கன்னங்கரேல் என்று அமாவாசை மாதிரி இருண்டு கிடக்கிறதே... ஏன்?"

கேவலம் அப்புசாமி கூடத் தன்னைக் கிண்டல் செய்கிறாரே என்று சீதாப்பாட்டி நினைத்து ஆச்சரியப்படவில்லை. "பை தி பை... மறந்து போனேன்... உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல... வழியில் இன்றைக்குப் பீமாராவைப் பார்த்தேன். சனிக்கிழமை அவன் நம்ம வீட்டுக்குச் சாப்பிட வருகிறானாம். என்னவோ எனக்கு ஒரு சாதாரண போஸ்ட் கிடைத்திருக்கிறதே... ஜஸ்டிஸ் ஆஃப் பீஸ் என்று... அதுக்காக அவனுக்கு ஒருவேளை சாப்பாடாவது நான் போடணும் என்று உரிமையோடு கேட்டான். சரி, தொலைகிறது, வா... என்று சாடர்டே ஃபிக்ஸ் பண்ணியிருக்கிறேன்."

"ஏது! இவ்வளவு தாராள புத்தி!" என்று அப்புசாமி கண்ணைச் சிமிட்டியவர் நினைத்துக் கொண்டார். 'உண்டி குலுக்கியது சீதேயைச் சரியானபடிதான் குலுக்கியிருக்கிறது. பேயறைந்தவளாட்டம் ஆகிவிட்டாள். என் சிநேகிதனுக்கு விருந்து போடுகிற அளவுக்குத் தாராள புத்தி. வந்துவிட்டதே... தாராள புத்தியோ இல்லை... ஐயாகிட்டே ஏற்பட்டிருக்கிற பயமோ?'

***


சுமார் பத்து மூட்டை சிமிட்டியைக் காரியரில் வைத்துக் கட்டிக்கொண்டு அப்புசாமி மூச்சுத் திணறியவாறு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இருட்டில் உற்றுப் பார்த்தால் அந்தப் பத்து மூட்டை சிமிட்டிக்குக் கழுத்துத் தலை, உடம்பு என்று இருப்பது தெரியும். இன்னும் நெருங்கிப் பார்த்தால் அது அப்புசாமியின் தோழன் பீமாராவ் என்பது தெரியும்.

"தாத்தா... அட அட! ஏனு பாயஸ... ஏனு பேளாஹுளி.... ஏனு ரஸா? பாட்டியோட விருந்தைச் சாப்பிட இன்னும் எனக்கு ஒரு வயிறு இல்லாமல் போச்சே..." சீதாப்பாட்டி அளித்த விருந்தைச் சாப்பிட்டுவிட்டு பீமாராவ் புகழ்ந்து கொண்டிருந்தான்.

"போதுமடா... பாட்டி பெருமை, என்னைப் பாராட்டு... நான் போட்ட போட்டில்தான் அந்தக் கிழவி உனக்குச் சோறு கொட்டியிருக்கிறாள்... ஏண்டா பீமா, நீ எத்தனை டன் எடை?"

"ஏன் தாத்தா... நான் வேணுமானால் மிதிக்கட்டுமா?"

"வேண்டாம்டா சாமி. நீ படு வேகமாக ஓட்டுவாய். அதுவும் இருட்டு. சைக்கிளுக்கும் பிரேக் இல்லை. லைட் இல்லை. எங்கேயாவது முட்டி மோதி என்னைக் கீழே தள்ளிவிடுவாய். நானே ஓட்டறேன்..."

"ரொம்ப சிரமம் தாத்தா உங்களுக்கு..." என்றவன், "ஏன் தாத்தா, பாட்டிக்கு இப்போ உங்ககிட்ட கொஞ்சம் பயம் போலிருக்கிறதே... முன்னெல்லாம் ஒரு சாதாரண டிபனுக்கு நீங்கள் என்னைக் கூப்பிட்டால் கூட உங்களைக் கண்ணாலே எரிப்பாள். இப்போ... எனக்கு விருந்தே போட்டுவிட்டாள். "உங்க மதிப்புக்குரிய சிநேகிதரை விருந்து போட்டுட்டு நடக்க வைக்கலாமா? சைக்கிள்லே கொண்டு போய்விட்டுட்டு வாங்க என்று சொல்கிறாள்... ஏனு, சொக்கு பொடி தாத்தா போட்டீங்க?"

"சொக்குப் பொடியா? ஹஹ! அவளுக்கு இப்போ என் பெயரைச் சொன்னாலே நடுக்கம். உட்கார் என்றால் உட்காருவாள். நில் என்றால் நிற்பாள்... ஓடு என்றால்..."

"பீப்!"

"என்னடா பீமா! ஏப்பமா விட்டாய்?"

"சே சே! எவனோ போலீஸ்காரன் விசில் ஊதறான். தாத்தா! நீங்க மிதிங்க தாத்தா வேகமா... எவன் இந்த இருட்டில் நம்மைப் பிடிக்கப் போறான்?"

"என்னது! போலீஸா!" என்று அப்புசாமி நடுங்கிய போதே, "யோவ்!" என்ற கட்டைக் குரலும் அதைத் தொடர்ந்து "ஹா! கால்! கால்!" என்ற அதே குரலின் அலறலும் கேட்டது.

இருட்டு... இருட்டு... என்ன, எங்கே, யார், யார் மேலே... யார் போலீஸ்... யார் பீமாராவ்... யார் சைக்கிள்.... யார் அப்புசாமி...!

சரக்கென்று நெருப்புக் குச்சி உரசப்பட்டது.

பயங்கரமான புஸ்தி மீசையுடன் ஒரு போலீஸ்காரர்.

"ஏய்யா கிழவனார்! இந்த இருட்டிலே விளக்கில்லாத தெருவிலே பிரேக் இல்லாத சைக்கிள்ல டபிள்ஸ் ஏற்றி கிட்டு, விசில் கொடுத்த என் கால் மேலேயே சைக்கிளை ஏற்றிவிட்டு..."

டெர்மினஸில் ஸ்டார்ட் செய்து அப்படியே விட்டுவிட்டுப் போன டிரான்ஸ்போர்ட் பஸ் என்ஜின் மாதிரி அப்புசாமியின் உடம்பு கிடுகிடுவென பார்ட் பார்ட்டாக ஆடிக்கொண்டிருந்தது.

"நான்..நீ....பீமன்..." என்று வாய் குழறியது.

"ஏய்யா... என்ன கொழுப்பு உனக்கு! என்னைப் பார்த்துப் பீமன் என்கிறாயா? சைக்கிளைத் தள்ளிட்டு வா என் பின்னாடி ஸ்டேஷனுக்கு..."

அப்புசாமிக்குச் சட்டென்று ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. ஜிப்பாப் பையைத் தடவிப் பார்த்தார். ஒரு ரூபாய் நாணயம் ஒன்றுதான் அங்கு இருந்தது. ஜிப்பாவிலிருந்த அந்த ஒரு ரூபாய் நாணயத்தை சட்டென்று எடுத்தார். போலீஸ்காரரின் கையில் வைத்து அழுத்தி, "ஹி...ஹி... என்னவோ பொன்னை வைக்கிற இடத்தில் பூவை வைத்தது போல... ஒரு வெற்றிலை பாக்காவது போட்டுக் கொள்ளுங்க சார்... பெரியவன் கொடுக்கிறேன்... வாண்டாம்னு சொல்லக் கூடாது. ஹிஹி... என்னடா இது, ஒரு ரூபா தானேன்னு அலட்சியம் வேண்டாம். சீதேகிட்ட நான் ரத்தத்தைச்சிந்தி சம்பாதித்தது..."

போலீஸ்காரருக்குப் பெரும் கோபம் வந்துவிட்டது.

"அடசீ! எனக்கு லஞ்சமா கொடுக்கப் பார்க்குற.... ஸ்டேஷனுக்கு வந்துமீதியைப் பேசு..."

***


கெளரவ மாஜிஸ்திரேட் கோர்ட். ஜஸ்டிஸ் ஆஃப் பீஸ் மிஸஸ் சீதா அப்புசாமி கிடுகிடுவென்று கேஸ்களை விசாரித்துக் கொண்டிருந்தவள், எஸ், நெக்ஸ்ட் கேஸ்....க்விக்" என்று குரல் கொடுத்தார்.

போலீசார் அடுத்த கேஸைக் கூண்டில் ஏற்றினார்கள்.

அப்புசாமி!

கெளரவ மாஜிஸ்திரேட்டின் ஸ்தானத்திலிருந்த சீதாப்பாட்டியைப் பார்த்ததுமே அப்புசாமி, அதுவரை எலிபோல் நடுங்கிக் கொண்டிருந்தவர், "ஹய்யா!" என்று சந்தோஷ மிகுதியுடன் போலீஸ்காரர்களுக்கு நடுவே ஒரு துள்ளுத் துள்ளினார்.

"உஸ்! இது கோர்ட்! சர்க்கஸ் வேலையெல்லாம் இங்கு செய்யாதே...." என்று ஒரு போலீஸ்காரர் எச்சரித்தவாறு அவரைக் கூண்டுக்குள் தள்ளினார்.

அப்புசாமி கூண்டிலிருந்தவாறே, ஒரே குதூகலத்துடன் கூவினார். "சீதே! நீயேதான் இங்கு கெளரவ மாஜிஸ்திரேட்டா... ஹாஹா! மடப் பசங்க! அது தெரியாமல் என்னை..."

சீதாப்பாட்டி அவரையே பார்த்துக் கொண்டிருந்தாலும், அவரது உடம்பு வழியே சுவரைப் பார்ப்பது போலிருந்ததே தவிர அந்த முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை. கூண்டிலிருந்து கொண்டு ஒரு ஜீவன் என்னவோ கதறியதே அது என்ன என்று அவள் காதுகள் கேட்டதாகவே தெரியவில்லை...

"எஸ்... இந்த நபர் மேல் உள்ள கேஸென்ன?" என்று பெஞ்ச் கிளார்க்கைப் பார்த்துக் கேட்டாள்.

"இந்த நபர்..."

அப்புசாமி அசந்துவிட்டார். 'நான்தான் அப்புசாமி. உன் புருஷன் சீதே... என்னை நபர் கிபர் என்கிறாயே' என்று கூவ வேண்டும் போலிருந்தது. ஆனால் நீதிபதியின் நாற்காலியில் உட்கார்ந்திருந்த சீதாப்பாட்டியின் மிடுக்கையும், கம்பீரத்தையும் பார்த்து அவர் வெலவெலத்துப் போய்விட்டார். டவாலி சேவகன் என்ன, கோர்ட் குமாஸ்தா என்ன, போலீஸ்காரர்கள் என்ன... இவள் வீட்டுச் சீதே இல்லை காட்டுச்சீதே... அதாவது காட்டுலே இருக்குமே சிங்கம்... அந்த சிங்க சீதே... நீதிபதி சீதே...'

கடுகடுவென்ற பார்வை மூக்குக் கண்ணாடி வழியே தெறித்து வர சீதாப்பாட்டி அவரைப் பார்த்து ஒரே வாக்கியம்தான் கேட்டாள். "மேற்படி குற்றங்களையெல்லாம் செய்தீரா?"

அப்புசாமிக்குத் தொண்டை வறண்டது. "நீ...நீ என்ன கேட்கி...." தடுமாறியவரின் விலாவில் போலீஸ்காரர் குத்தினார். "நீதிபதியவர்கள் கிட்டே மரியாதையாய்ப் பேசுய்யா தடி முண்டம்!"

அப்புசாமிக்குக் கண்ணில் நீர் வந்துவிட்டது. இந்த சீதே ஏற்கனவே கண்டிப்புக்காரி. நல்ல நாளிலேயே விதவிதமான தண்டனை கொடுப்பாள். இப்போ அசல் நீதிபதியாக, ஒழியட்டும்டா இந்த கிழவன்னு தூக்குத் தண்டனையே கொடுத்து விடுவாளோ... அவருக்குத் தலைச் சுற்றியது.... யாரோ கறுப்புத் துணியால் அவர் தலையைச் சுற்றிக் கழுத்தில் சுருக்கு மாட்டுவது போல அப்போதே தோன்றிவிட்டது. "நீ...நீ...நீதிபதி அவுங்களே... நான்... நான்... நான்..." தந்தி அடித்தன பற்கள்.

சீதாப்பாட்டி கடுமை சிறிதும் குறையாமல் "வாட் டஸ் ஹி ஸே?" என்று கேட்டாள் பெஞ்ச் கிளார்க்கிடம்.

"என்னய்யா சொல்றே? பிரேக் இல்லாத சைக்கிளில், லைட் இல்லாம டபிள்ஸ் ஏற்றிக்கிட்டு, போலீஸ்காரர் மேல் சைக்கிளை ஏத்திட்டு, அவர் கால் சுண்டு விரலைக் காயப்படுத்திட்டு, அவருக்கு லஞ்சம் வேறு கொடுக்கப் பார்த்தியே... இது எல்லாம் இல்லைங்கிறியா... ஆமாங்கிறியா?"

"நீ..நீ... நீதிபதி அவுங்களே....சீதேங்க... நாங்க... தப்புங்க எதுங்கனாலும் பண்ணியிருந்தாங்கன்னாலும் மன்னிச்சுக்குங்க.... கெஞ்சிங்க... கேட்டுக்கங்றேங்க...நீங்க தாங்க பீமாராவுங்களை வீட்லே கொண்டு போய் விடச் சொன்னீங்க..." அப்புசாமி விபரீதமாக மரியாதை போட்டு உளறினார்.

"திஸ் இஸ் கோர்ட்... கேட்ட கேள்விக்குப் பதில்?" சீதாப்பாட்டியின் குரல் கத்தி போல் வெட்டியது.

"மரியாதையா ஒப்புக் கொள்ளுய்யா, இல்லாட்டி நாசமாப் பூடுவே!" போலீஸ்காரர் அப்புசாமியின் விலாவில் நறுக்கென்று இடித்தார்.

"நம்புக்கறேங்க... தயவு செஞ்சு என்... என்... உசிரைக் காப்பாத்துங்க..." அப்புசாமி கை இரண்டையும் தூக்கிக் கும்பிட்டார்.

சீதாப்பாட்டிக்கு ஒரு கணம் நெஞ்சு நெகிழ்ந்துவிட்டது. அடுத்தகணம், "ஆல்ரைட்...எல்லாக் குற்றங்களுக்காகவும் சேர்த்து நைன்ட்டி செவன் ருபீஸ் அபராதம் போடுகிறேன்... ஃபைனைக் கட்டா விட்டால் பத்து நாள் ஜெயில்! நெக்ஸ்ட் கேஸ்!"

***


மிஸஸ் பார்வதி மகாலிங்கத்திடம் அவள் சிநேகிதி யாரோ பத்திரிகையை எடுத்து வந்து ஆவலுடன் காட்டினாள். "பார்த்தாயா... இந்தச் செய்தியை. நம்ம பா.மு.க. பிரசிடெண்ட்டைப் பற்றி என்ன ஒரு புகழ்ச்சியாகச் செய்தி வந்திருக்கிறது? 'சொந்தக் கணவராக இருந்தும்கூட நீதி துளியும் பிசகாமல் அபராதம் விதித்த அதிசய நீதிபதி' என்று பாராட்டி எழுதியிருக்கிறார்கள் பத்திரிகையில். நம்ம பிரசிடெண்ட்டின் மதிப்பு இறங்குவதற்குப் பதில் நூறு மடங்கு ஏறியல்லவா போய்விட்டது! நம்ம கழகத்தில் எல்லா மெம்பர்ஸும் சேர்ந்து பிரசிடெண்டுக்கு ஒரு 'வீரவாள்' பிரசண்ட் பண்ணப் போகிறார்களாம் இன்று!"

மிஸஸ் பார்வதி மகாலிங்கம் ஆத்திரத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டாள்.

அதேசமயம் அப்புசாமி தன் வீட்டில் முணுமுணுத்துக் கொண்டிருந்தார் இப்படி: "அடி கிராதகி! என் தொண்ணூற்றேழு ரூபாயை இப்படிச் சூழ்ச்சி செய்து வசூல் பண்ணிட்டியே! பீமாராவை விளக்கில்லாத சைக்கிளிலே கொண்டு போய் நீ விடச் சொன்ன சதியைத் தெரிந்து கொள்ளாத என் புத்தியை எதால் அடித்துக் கொள்வது?"

தொண்ணூற்றேழு ரூபாய் அபராதம் கட்டியபிறகு காலியாகப் போன தகர உண்டியைப் பார்த்துப் பெருமூச்செறிந்து கொண்டிருந்தார்.

"அடுத்த ஃபண்ட் என்ன கலெக்ட் செய்கிறதென்று யோசிக்கிறீர்களாக்கும்?" என்று கேட்டவாறு சீதாப்பாட்டி பா.மு. கழகத்துக்குப் புறப்பட்டாள்.

***


ஜ.ரா.சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி)
Share: 
© Copyright 2020 Tamilonline