|
டிரைவர் பாலு |
|
- மதுமிதா|அக்டோபர் 2009| |
|
|
|
|
காலைச் சூரியன் தென்றலுடன் கைகோர்த்து உயிர்களுக்கு காலைவணக்கம் சொல்ல ஆரம்பித்த நொடி. நடை முடித்துத் திரும்புகையில் மனதில் ஒரு பட்சி கூக்குரலிட்டுச் சொல்லியது இன்றைய மெயிலில் ஏதோ விஷயமென்று.
கணவரிடமிருந்து கணினி மடல். மூன்று விஷயங்கள்: 1. மீனாவிற்கு ஆண் குழந்தை (மீனா என் ஒன்று விட்ட தங்கை) ஜனனம் ஜூன் 25ல்; 2. உனது பாடல் வானொலி நிலையத்திலிருந்து தேர்வாகாமல் திரும்பி விட்டது. மிக்க மகிழ்ச்சி; 3. மனதை திடப்படுத்திக் கொள். டிரைவர் பாலுவின் மகள் இறந்து விட்டாள்.
காலையில் கொஞ்சிய குயிலின் குரல் சோகமாய் மாறியது. ஒருமணி நேரக் காலை நடையின் உற்சாகம் உடன் மறைந்தது.
"சுமாவை டாக்டருக்குப் படிக்க வைக்கணும் அக்கா" என்னும் பாலுவின் குரல். அதிர்ந்து திரும்பினால், இல்லை, இப்போது இருப்பது சென்னையில் என்னும் உண்மை உறைத்தது. இனி கணவரின் தொலைபேசி அழைப்பு வரும் வரையில் சக்தி உள்ளதோ இல்லையோ நினைவுகளுடன் போராடவேண்டும்.
டிரைவர் பாலு வேலையில் சேரும்போது ஈழத்திலிருந்து அகதியாக வந்த ஆள் என்று அறிமுகப்படுத்தப் பட்டவர். நல்ல உயரம். சற்று மெலிந்த தேகம். கூரிய கண்கள். நடுத்தர வயது. சோகமும், சுறுசுறுப்பும் வெளிப்படுத்தும் உடல்மொழி. சிலோனிலிருந்து வந்தது தெரியாத அளவில் தமிழ்நாட்டுத் தமிழ்மொழி. சிறு குழந்தைகளைக் கூட நீங்க என்று மரியாதையாய் அழைக்கும் விதம் மட்டுமே அங்கிருந்து வந்தவர் என நினைவூட்டும்.
காரை மென்மையாய்க் கையாண்ட விதம் பார்த்து கேட்க, பத்து வருடங்கள் எல்லா வாகனங்களையும் எடுத்து வழக்கம் என்று தயங்கித் தயங்கிச் சொன்ன விதம், ஒரே மாதத்தில் "அக்கா. மொட்டைமலைக்கு இன்று கலெக்டர் வர்றாரு. அகதி முகாமில இருக்கிற அறுவது வீடுகள்லயும் மழை வந்தால் வீடு உள்ளாற படுக்க இயலல. மனு தரணும்" என உரிமையாய்க் கேட்குமளவு தயக்கம் மறைந்திருந்தது.
அமுதா, பாலுவின் மனைவி. சுமலதா, மகள். பத்தாம் வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்புக்குச் செல்கிறாள். ராஜூ, மகன். ஒன்பதாம் வகுப்பு.
"அக்கா அமுதாம்மா மீன்கொழம்பு வெச்சா அகதி முகாமே மணக்கும்" எனக் கொஞ்ச கொஞ்சமாய் குடும்ப விஷயங்கள் பகிர்ந்து கொள்ளுமளவுக்கு முன்னேற்றம்தான்.
| ஒன்றின் இழப்புதான் அதன் தேவையினை அறியச் செய்கிறது. நீரின், மரங்களின் தேவைதான் அதன் அத்தியாவசியத்தை அறியச் செய்கிறது. | |
"அக்கா, பிளஸ்-டூ முடித்ததும் சுமாவை டாக்டருக்குப் படிக்க வைக்கணும்க்கா. ராஜுவை விடவும் சுமாதான் நல்லா படிக்கிறா. நல்ல மார்க் எடுக்கிறா. எங்க ஆளுங்க லண்டன்ல, பிரான்ஸ்ல, அமெரிக்காவிலல்லாம் இருக்காங்க. சுமா டாக்டருக்குப் படிச்சிட்டா நாங்களும் அங்கே போயி தலநிமிந்து வாழணும்."
விசாலின் அப்பாதான் சுமலதாவைப் பதினோராம் வகுப்பில் சேர்த்து விட்டார். இப்போது பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவிற்காக காத்துக் கொண்டிருக்கையில் இதென்ன சோதனை!
இரண்டு மணிநேரம் நிமிஷமாகக் கழிய, தொலைபேசியின் 'ட்ரிங் ட்ரிங்' ஒலிதான் நனவுலகுக்கு அழைத்து வந்தது. கணவரிடமிருந்துதான் தொலைபேசி அழைப்பு
"என்னம்மா போன மச்சான் திரும்பி வந்தது மாதிரி உன் பாட்டு திரும்பி வந்துடுச்சே"
ஒரு கோடி ரூபாய் திடுமெனக் கிடைத்திருந்தால் கூட இப்படி மகிழ்ந்திருக்க முடியுமா தெரியவில்லை, அப்படியோர் ஆனந்தம் குரலில் வழிந்தோடுகிறது.
"அதுதான் மெயில் செய்திட்டீங்களே. விசால் எப்படி இருக்கிறான்னு பையனைப் பத்திகூட கேட்காம இதுக்கு என்ன அவசரம். பாலுவின் மகளுக்கு என்னவாச்சு. உடல்நலம் சரியில்லாமல் இருந்தாளா?"
"இல்லை. முருகனை அனுப்பி விசாரித்தேன். பாலுவின் மகள் இறக்கவில்லையாம். யாருடனோ ஓடிப் போய்விட்டாளாம். இனி வேலைக்கு வரல்லைன்னு சொல்லி இருக்கிறான்."
ஆஹா, சுமாவைக் குறித்த டிரைவரின் கனவு என்ன, நடப்பது என்ன? தேர்வின் ரிசல்ட்டிற்கு காத்திருக்கையில் இப்படி ஒரு இடரா? எண்பது சதவிகதத்திற்கு மேல் எடுப்பாள்; மருத்துவப் படிப்பிற்கு அனுப்பவேண்டுமென்ற பாலுவின் கனவு?
உடனே ஊருக்குச் செல்ல வேண்டும்.
"ஏங்க சுமா இப்ப எங்க இருக்கிறாளாம்?"
"இன்னும் தெரியல. போலிஸில் புகார் கொடுத்திருக்கிறானாம், முருகன் சொன்னான். சரி பிறகு பேசுகிறேன்"
*****
சடன் பிரேக் போட்டும் கார் அலுங்காமல் நின்றது. மிக மெதுவாய், சாலையின் அகலத்திற்கு நீண்ட பாம்பு ஒன்று சரசரவென யாருமே கவனிக்காதது போல் சாலையைக் கடந்து சென்றது. சற்றுத் தாமதித்திருந்தாலும் கார் பாம்பின் மேல் ஏறியிருக்கக் கூடும்.
சாலையின் இரு புறங்களிலும் நின்ற மரங்களின் நிழல் வெயிலின் வெக்கையைக் குறைத்திருந்தது.
சரித்திரப் பாடங்கள் மாணவர்களுக்கு போரடிக்காது ஆர்வமூட்டும் வகையில் வகுப்பெடுக்கப் படவேண்டும். அசோக மன்னர் சாலை அமைத்து மரம் நட்டார்; குளம் வெட்டினார் என்னும் பாடம் இனி வரும் காலங்களில் கேலிக்குரியதாய் இருக்காது. ஒன்றின் இழப்புதான் அதன் தேவையினை அறியச் செய்கிறது. நீரின், மரங்களின் தேவைதான் அதன் அத்தியாவசியத்தை அறியச் செய்கிறது.
"அக்கா. என்ன யோசனை. பாம்புக்கு வழிவிட்டாச்சு. வண்டிய எடுங்க."
ஸ்டார்ட்டிங் ட்ரபிள் எதிலும், எப்போதும் எனக்கு. கார் ஸ்டார்ட் செய்கையில் அது அதிகம். கிளச்சிலிருந்து காலெடுத்து ஆக்சிலேட்டரை அழுத்தினேன். கார் சீறிப் பாய்ந்தது.
"அக்கா. மெதுவா மெதுவா. எதிரில வர்றவரு பாவம். வயசானவரு. சைக்கிள்ல பத்திரமாய் வீடு போய்ச் சேரட்டும். என்ன நம்பி மூணுபேரு இருக்காங்க. சுமாவ டாக்டருக்கு படிக்க வைக்கணும்."
"பாலு. என்ன தைரியத்தில என் கையில காரைக் கொடுத்தீங்க. விசால் அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்!"
"அதுதாங்க்கா எனக்கும் தெரியல. நீங்கதான் நேரடியா கன்டசாவிலயே பழகிட்டீங்க. அய்யாகூட வண்டி எடுக்கையிலே கன்ட்ரோல் இருக்காது. நீங்க நல்லா எடுக்கிறீங்க. இன்னும் ஒரு வாரம்தான் லைசன்ஸ் வாங்கிடலாம். அய்யா ஒண்னும் சொல்ல மாட்டார். எத்தன பேருக்கு சொல்லித் தந்திருக்கிறேன். எனக்கு மட்டும் உங்களுக்கு சொல்லித்தந்ததுக்கு பேசின பீஸ் தந்திடணும். வெளியில கத்துக்கணும்னா நாலாயிரமாகும் தெரியுமுல்ல."
"பாலு. எனக்கு அரைமணி நேரம் ஒரு மணிநேரம் போதல்ல. லாங்கா போகணும். அடுத்தமுறை திருவனந்தபுரம் போகையில் நான்தான் கார் எடுப்பேன். பிறகுதான் உங்களுக்கு பீஸ்."
"பேசின நூறு போதுமெனக்கு. மீதிய பிற்பாடு பாத்துக்கலாம்."
"போனவாரம் ரெண்டு நாள் வண்டி வெளியே போயிருந்ததாமே. எங்கே போனது வண்டி?"
சாலையை நோக்கிய கவனத்தில் பாலுவின் முகமாற்றம் பார்க்கவில்லை.
"என்ன பேச்சே இல்லை"
"அக்கா"
"ம்"
"நான் சொன்னா தப்பா நினைக்கக் கூடாது"
"ம்"
"அக்கா"
"ம்"
"அக்கா"
"ச்சே. என்ன பாலு என்ன விஷயம்னாலும் சொல்லுங்க"
"உங்க அண்ணா சரியில்லைக்கா"
வண்டியை நிறுத்தினேன்.
வெளியே மரத்தின் இலைக்கூட்டங்களின் இடைவெளி வழியே வந்து மாலைச் சூரியனின் கதிரொளி சாலையில் நாணயங்களை அள்ளி இறைத்தாற்போல் நடனமாடிக் கொண்டிருந்தது.
பார்வையைத் திருப்பி பாலுவைப் பார்த்தேன்.
"சொல்லுங்க"
"அக்கா. கொடைக்கானல் போனோம்.அங்கே ஹோட்டல்ல தங்கினார். ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தார். காரை எடுக்கச் சொன்னார். ஒரு இடத்தில் ஒரு பெண் ஒரு ஆணுடனும் குழந்தையுடனும் ஏறினாள். ஆண் குழந்தையை வைச்சிருந்தான். அவள் உங்க அண்ணாட்ட பேசிட்டிருந்தாள். ரொம்ப நாள் சிநேகம்னு தெரிஞ்சது. சிரிச்சு சிரிச்சு பேசினார். அவ கையில பணம் கூட கொடுத்தார்க்கா."
"அதனாலென்ன. சரியில்லன்னு ஏன் சொல்லணும்"
முகம் சிவந்தது. மூக்கு விடைக்க கழுத்தின் நரம்புகள் துடிக்க வெளியே பார்த்தான். |
|
| தேசம் விட்டு அகதியாய் வந்து படும் தொல்லைகள் என்று தீருமோ? பாலு டிரைவராக வரவில்லையெனில் இந்த அரசியல் அறியும் வேகம் வந்திருக்குமா? | |
எச்சிலை விழுங்கிக் கொண்டு "என்ன வா போ ன்னு பேசினார். அய்யாகூட என்ன பாலு இதச் செய்ங்கன்னுதான் சொல்வார். அய்யோவோட அப்பா கூட அப்படித்தான் பேசுவார். இவர் தான் மரியாதையே இல்லாம ஏ! பாலு அதக் கொண்டுவான்னு அந்தப் பொண்ணு முன்னாடி சொன்னார்."
"விடுங்க பாலு.அண்ணாவுக்கு அப்படியே பேசிப் பழக்..."
"என்ன பழக்கம்? என்னப் பத்தி என்ன தெரியும் அவருக்கு. விடுதலைப் புலியா சேர்ந்து துப்பாக்கி சுடுறது மொதக்கொண்டு படிச்சேன். அம்மும்மா சொன்னதால அதவிட்டு வந்தேன். இதுவரைக்கும் யாரும் என்ன மரியாதையில்லாம பேசினதில்லை தெரியுமா. எங்க ஊருல நாலு பங்களா மூணு காரு எங்களுக்கு இருந்தது தெரியுமா. நாங்களும் எல்லா வசதியோட இருந்து இங்கன வந்ததாலதான் இப்படியொரு பொழப்புல இருக்கோம்." விக்கித்து நின்றேன். என்ன பதில் சொல்லலாம்.
"அவர் சரியில்லைக்கா உங்க அண்ணிக்கு துரோகம் பண்றார். விமலாக்காவுக்கு என்ன குறைச்சல். எங்க அமைப்புல சுட்டுப்போடுவோம் தெரியுமா?"
"சரி. நான் பார்த்துக்கிறேன் பாலு, விடுங்க. வீட்டுக்கு போகலாம். நேரமாச்சு. உங்க சீட்டுக்கு வந்துடுங்க."
இடம் மாறி அமர்ந்தோம். பாலு கார் எடுக்க சுமா எப்படி படிக்கிறா என்று கவனம் திருப்பினேன்.
"அக்கா நீங்கதான் அய்யாட்ட சொல்லி சுமாவை மெடிசின்ல சேர்க்கணும்."
"அய்யாட்ட நீங்களே சொல்லுங்க பாலு. அய்யா யார்யாருக்கோ செய்றாரு. உங்களுக்கு செய்ய மாட்டாரா."
"அன்னைக்கே சொல்லிட்டேனக்கா. மறுபடி ஞாபகப்படுத்தச் சொன்னாரு."
"நீங்களே ஞாபகப் படுத்திடுங்க. நான் மூணு நாள்ல மெட்ராஸ் போறேன். வர ரெண்டு மாசமாகும்."
"என்னக்கா?"
"விசால் கூட இரண்டு மாசமிருக்கணும்."
"அய்யா வரலியா"
"இல்லை"
*****
ஊருக்கு வந்ததும் டிரைவரை விசாரித்தேன். மறுபடியும் வேலைக்கு வரச்சொல்லி முருகனிடம் சொல்லி அனுப்பிய பிறகு வந்தார் பாலு. கறுத்து மெலிந்து களையில்லா முகத்துடன்.
"என்ன பாலு சுமா..?"
"ஆமாம்க்கா. ஒரு வாரத்தில வந்தா. அந்தப் பையனும் நம்ம பையன்தான். போலிஸ் கம்ப்ளையின்ட் வாபஸ் வாங்கிட்டேன். அடுத்த வாரம் கோவில்ல கல்யாணம் வைக்கலாம்னு. நீங்களும் அய்யாவும் அவசியம் வரணும்."
"இப்பவும் கோவிலுக்குத் தான் கூப்பிடறீங்க. வீட்டுக்கு ஒரு முறையாவது அழைச்சிட்டு போகக் கூடாதா? அம்மும்மாவை, சுமாவை பார்க்கணும்னு நானும் ரெண்டு வருஷமா சொல்லிட்டிருக்கேன்."
"உங்களை உக்கார வைக்க இடமில்லக்கா அதான்"
"நான் தரையில உக்காருவேன் பாலு"
"சரி"
"என்ன பாலு. என்ன பண்ணுறீங்க. வேலைக்கு வரலாமே"
"காலையில கருவாடு வாங்கி விக்கிறேன். பின்னே இன்னொரு லோரியில் டிரைவரா இருக்கிறேன். சரி நான் வாரேன். இடையில போன் பண்றேனக்கா"
*****
பின்பு இருமுறை போன் வந்தது பாலுவிடமிருந்து.
முதல்முறை: "அக்கா. சுமாவை கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்ல சேர்க்கணும். மாப்பிள்ளையும் சரின்னுட்டார்."
"மாப்பிள்ளை எப்படி இருக்கிறார். சுமாவ நல்ல விதமா பாத்துக்கிறாரா?"
"ரொம்ப நல்லா பாத்துக்கிறார். நம்ம பையன்தானே. வேலையிலே படு சமத்து. நல்ல சம்பாத்தியம்."
"அக்கா ஒரு வேளை அக்டோபருக்கு மேல ஊருக்குப் போவோம்."
"எந்த ஊருக்கு"
"எங்க ஊருக்குத்தான்"
"எப்படிப் போவீங்க?"
"நார்வே நாட்டு புண்ணியத்துல பேச்சு வார்த்தை நடக்குது. முடிஞ்சதும் போயிடுவோம் எங்க மண்ணப்பாக்க"
"நடக்குற காரியமா பாலு"
"ஆமா.கண்டிப்பா"
"அப்ப சுமா"
"அதான் மாப்பிள்ளை ராசாத்தி மாதிரி பாத்துக்கிறார். இனி என்ன கவலை. அவரு இருக்கிறப்போ"
இரண்டாவது முறை: "அக்கா. அய்யா இருக்கிறாரா?"
"இல்லை ஊருக்குப் போயிருக்கிறார். வர இரண்டு நாளாகும்."
"சுமாவுக்குப் பொண் குழந்தை. என்ன கோளாறுன்னு தெரியல, டாக்டர் உடனே ஒரு ஊசி போடணுங்கிறார். மாப்பிள்ளை இன்னும் வரல."
"சரி. எந்த ஹாஸ்பிடல்"
"கவர்ன்மன்ட் ஆசுபத்திரி"
சொன்னதும் முருகனிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்தனுப்பினேன்.
ஒருவாரம் கழித்துக் குழந்தையைப் பார்க்கப் போகும் போது அமுதாம்மாவையும், சுமாவையும் முதல்முதலாய்ப் பார்த்தேன்.
"வீட்டுக்கு அழைத்துப் போகச் சொன்னால் அழைத்து வரமாட்டேனென்கிறார் அமுதாம்மா"
"அவசியம் வாங்க"
வெளிப்படுத்திய புன்னகை வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் கம்பீரம் சிறிதும் குறையாத பாவனையாய்.
சுமலதா, குழந்தையின் அருகே மற்றுமோர் குழந்தையாய் உறங்கிக் கொண்டிருந்தாள். இன்னும் டாக்டராகும் கனவு அவளின் கண்ணுக்குள் வருமோ?
"அப்ப பேத்திய டாக்டருக்குப் படிக்க வைங்க."
"சுமா மாப்பிள்ளை அப்படித்தான் சொல்றார்."
விடைபெற்றேன். தேசம் விட்டு அகதியாய் வந்து படும் தொல்லைகள் என்று தீருமோ? பாலு டிரைவராக வரவில்லையெனில் இந்த அரசியல் அறியும் வேகம் வந்திருக்குமா? ஆன்டன் பாலசிங்கம், பிரபாகரனுடனான பேச்சுவார்த்தை நல்ல முடிவுக்கு வழி வகுக்கும். 'கருணா பிரிவு', 'பேச்சுவார்த்தை பின்னடைவு' என தினம் ஒரு புதுச்செய்தி வரும்போதெல்லாம் பாலு, சுமாவின் நினைவு வந்துபோகும்.
*****
கடைசியாக டிரைவர் பாலு குறித்து வந்த செய்தி: டிரைவர் பாலுவின் மாப்பிள்ளை, சுமலதாவின் கணவன் விபத்தில் இறந்து விட்டான்.
அதன்பின் பாலுவைக் குறித்த எந்தச் செய்தியும் இதுவரையில் இல்லை.
*****
மதுமிதா |
|
|
|
|
|
|
|