|
|
|
கைக்கடிகாரம் மணி 8.40 காட்டியது.
அந்தக் காலை நேரத்தில் கடற்கரையின் காற்று ரொம்ப இதமாகத்தான் இருந்தது. வெயில்கூட இதமாகத்தான் இருந்தது. நடுப்பகலானாலும் கடற்கரையில் வெயில் தெரிவதில்லை. சுற்றி முற்றிப் பார்த்தான் வேலு. பெண்களும் குழந்தைகளுமாய் அலைகளோடு விளையாடிக் கொண்டிருந்தனர். ஆண்கள் சற்று தள்ளி மணலில் அமர்ந்தபடி அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டும், குழந்தைகளை ரொம்ப தூரம் போக வேண்டாமென்று அதட்டிக் கொண்டும் இருந்தனர். தங்கம்போல ஆங்காங்கே மின்னிக் கவர்ந்தன அலைகள்.
நிறைய பேர் வெளியூரிலிருந்து வந்திருப்பார்கள் போலிருக்கிறது. தர்காவுக்கு வருதல், பிரார்த்தனை முடித்தல், முடி இறக்கிக் கொள்ளுதல், சிங்கப்பூர் கடைகளில் ஷாப்பிங் எல்லாவற்றோடும் கடற்கரைக்கு வருதலும் ஒரு தவிர்க்க முடியாத சடங்காகிவிட்டது. எத்தனை முறை வந்திருக்கிறான்? எத்தனை குடும்பங்களைப் பார்த்திருக்கிறான்! ஆனாலும் இந்த கடற்கரைக்கு வரும் போது மனதுக்கு ஒரு சந்தோஷம் வரத்தான் செய்கிறது.
ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டான் வேலு. சொக்கலால் பீடி. அப்பாவிடம் திருடிப் பிடித்ததிலிருந்து பழக்கமாகிவிட்டது. கரைக்கு வந்த சிலர் தங்கள் செருப்புகளைத் தேடிக்கொண்டிருந்தனர். கடற்கரை மணலுக்கும் செருப்புகளுக்கும் உள்ள ரகசிய உறவு பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. நாங்கள் எடுக்கவில்லை என்று சொல்வதைப் போல சில நண்டுகள் பயந்து ஓடி மணலுக்குள் புகுந்து மறைந்து கொண்டிருந்தன. தூரத்தில் பெரிய மினாரா நிமிர்ந்து நின்றது.
"வேலு போலாம் வா"
குரல் கேட்டுத் திடுக்கிட்டு திரும்பினான் வேலு.
"பீடியா, சரி சரி, குடிச்சிட்டு வா"
| தென்னை மரத்தின் பாதிக்கு மேல் வந்த கறுப்பு அலை சில்லடி சுவற்றின் மீது மோதியது. தடுப்பாகப் போட்டிருந்த மூங்கில் வேலிகளெல்லாம் திசைக்கொன்றாக குச்சி குச்சியாகப் பிய்ந்து பறந்தன. | |
எல்லாம் விளங்கிக் கொண்டுவிட்ட மாதிரியான ஒரு அனுபவப் புன்னகையுடன் சொல்லிவிட்டு கறுப்பு குவாலிஸில் போய் ஏறிக்கொண்டார் அவர். திருச்சியிலிருந்து கார் பேசிக் கூட்டிக்கொண்டு வந்த குடும்பத் தலைவர். நல்ல குண்டாகவும் கறுப்பாகவும் இருந்தார். வேஷ்டியை அவர் சொருகிக் கட்டும் விதம் வித்தியாசமாக இருந்தது. யாரோ சண்டைக்குக் கூப்பிட்ட மாதிரியும், இருடா வர்றேன் என்று அவசரத்தில் கட்டுவது போலவும் கட்டினார். அவரைத் தொடர்ந்து நான்கு பெண்களும் ஆறு குழந்தைகளும் ஏறினர்.
அவர்கள் எல்லாரும் வண்டிக்குள் தனக்காகக் காத்திருப்பதை உணர்ந்ததும் பீடியை கடைசியாக ஒரு இழுப்பு இழுத்துவிட்டுக் கீழே போட்டான் வேலு. வண்டியை எடுக்கலாம் என்று நினைத்தபோதுதான் திடீரென்று ஒன்னுக்கு அடைத்தது. இவ்வளவு நேரமாக அந்த உணர்வு எங்கே போனது? சரி, அந்த ஆராய்ச்சி எதுக்கு என்று ஒதுக்கிவிட்டு, காரில் பின்பக்கமாக கடலைப் பார்த்தபடி, கடலுக்குப் போட்டி போல உட்கார்ந்தான் வேலு.
அப்போதுதான் அதைப் பார்த்தான்.
ரொம்ப தூரத்தில் அல்ல. ஒரு மைல் அல்லது இரண்டு மைல் தூரம்தான் இருக்கும். புராணப் படங்களில் வரும் பல தலைகள் கொண்ட ஆதி சேஷன் மாதிரி கடல் பூரா அடைத்துக் கொண்டு கன்னங்கரேலென்று ஒரு அலை படு வேகமாக கரையை நோக்கி வந்துகொண்டிருந்தது. ஒரு அலையா பல அலைகளா? அல்லது அது அலைதானா? சரியாகச் சொல்ல முடியவில்லை.
இதற்குமுன் அப்படி ஒன்றை அவன் பார்த்ததே இல்லை. அது அலைதானா என்றும் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் ஏதோ ஒரு கறுப்பு அபாயம் கடலிலிருந்து கிளம்பி புயல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது என்று மட்டும் உள்ளுணர்வு சொன்னது. 'ஆண் காத்தடிக்கிது பொண் காத்தடிக்கிது' என்று அலைகள் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு வந்ததாக பாட்டிதான் கதை கதையாகச் சொல்லுவாள். அது ஞாபகம் வந்தது.
ஒன்னுக்கு வரவே இல்லை.
உயிர், உயிர், ஓடு, ஓடு.
சட்டென்று எழுந்தவன் மின்னல் வேகத்தில் வண்டிக்குள் பாய்ந்து வண்டியைக் கிளப்பினான். அவன் உள்ளேவந்த வேகத்தையும் வண்டியை எடுத்த விதத்தையும் பார்த்த அந்த குண்டுப் பெரியவரும் பெண்களும் அதிர்ந்தனர்.
"ஏய், என்னாப்பா ஆச்சு?"
யாருக்கும் பதில் சொல்ல முடியாது. கிராண்ட் ப்ரியில் கார்கள் செல்வதை அவன் டி.வி.யில் பார்த்திருக்கிறான். ஆனால் தானே அப்படி ஒரு போட்டியில் கலந்து கொண்டதைப் போல் இருந்தது அவனுக்கு அப்போது. எதைப்பற்றியும் யோசிக்க நேரமில்லை.
உயிர், உயிர், ஓடு, ஓடு.
அவன் வேகத்தை அவனாலேயே நம்ப முடியவில்லை. வேகம் நூறா அதற்கு மேலா என்று கவனிக்கக்கூட முடியவில்லை.
புது க்வாலிஸ் நன்றாக ஒத்துழைத்தது. ராக்கட்டைப் போல பறந்தது வண்டி. ஒரு சில வினாடிகள்தான். குணங்குடி அப்பா நினைவிடத்தையும் ரயில்வே ட்ராக்கையும் கடந்துவிட்டது வண்டி. பயத்தில் குழந்தைகளும் பெண்களும் அலறினர்.
அப்போதுதான் அது நடந்தது.
யாரோ ஒரு கறுப்பு ராட்சஷன் பின்னாலிருந்து க்வாலிஸை அப்படியே கைகளால் பூ மாதிரி தூக்கினான். பூமியிலிருந்து முப்பதடி உயரத்தில் இருந்தது க்வாலிஸ். கதறல்களுக்கும் அலறல்களுக்கும் மசியாத ராட்சஷக் கை.
ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த தன்னார்வச் சேவை இளைஞர்கள் அங்கு வந்து சேர்வதற்குள் நிகழ்ச்சி நடந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகிவிட்டிருந்தது. ரயில்வே ட்ராக் அருகே ஒரு மின் கம்பத்தில் பல நூறு மைல் வேகத்தில் மோதப்பட்டு கூழாய்க் கிடந்தது க்வாலிஸ்.
க்வாலிஸைப் பிரித்து, உள்ளே நசுங்கியும், நுரையீரல் அடைத்தும் இறந்து கிடந்த பெண்களின், ஆண்களின் மற்றும் குழந்தைகளின் உடல்களை வெளியே சேதாரமில்லாமல் எடுப்பது ரொம்ப சிரமம் என்று பேசிக்கொண்டார்கள்.
2
"அட ஹராத்துல பொறந்த பயலுவலா, செருப்பு பிஞ்சு போயிடும்"
அதைத் தொடர்ந்து ராபியாம்மா சொன்ன வார்த்தைகள் கேட்கும்படியாக இல்லை. கடற்கரை மண்டபமான சில்லடியில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை யெல்லாம் அவள் வசவுகள் எழுப்பிவிட்டுவிட்டன.
ராபியாம்மாவுக்கு அந்த ஊரில் உறவினர்கள் யாரும் கிடையாது. பெரிய எஜமானை (நாகூர் ஆண்டவர்) நம்பி பிழைக்க வந்தவள். முப்பத்தைந்திருக்கும். நல்ல கட்டுமஸ்தான உடலை இறைவன் அவளுக்குக் கொடுத்திருந்தான். குணங்குடி அப்பா நினைவிடத்திற்கு எதிரில் உள்ள குடிசைகளில் ஒன்றில் சுடப்படும் சாயங்காலத் தின்பண்டங்களைக் கடற்கரையில் கொண்டுபோய் விற்றுவிட்டு வந்தால் ஏதாவது காசு கிடைக்கும். அதோடு, இரக்கப்பட்டு யாராவது அவ்வப்போது தரும் அரிசி அல்லது சோற்றில் காலம் கழிந்தது. இரவானால் சில்லடிதான் அவளுடைய வீடு. அவளுக்கு மிகவும் பிடித்த இடமும்கூட. பெரிய எஜமான் நாற்பது நாட்கள் தவமிருந்த இடம். சவரம் செய்து கொண்டே கடலில் மூழ்கிக்கொண்டிருந்த கப்பலைக் காப்பாற்ற முகம் பார்த்துக் கொண்டிருந்த கண்ணாடியை எறிந்த இடம். கப்பலைக் காப்பாற்றிய கண்ணாடி அவளையும் காப்பாற்றாதா என்ன?
அங்கிருந்த உயரமான சதுர வடிவத் திண்ணையில்தான் இரவில் அவள் படுத்து உறங்கினாள். திண்ணையின் நடுவில் உயரத்தில் ஒரு கல்லறை போல கட்டி வைக்கப்பட்டிருந்தது. ஒரு சின்ன அறையாக. ஒரு சின்னக் கதவும் உண்டு.
உள்ளே ஏறிப்போகப் படிகள் உண்டு. படிகள் துவங்கும் இடம்தான் அவளுடைய சயன அறை. அல்லது சயன வெளி. ஒரு போர்வை போதும். அதைப் போர்த்திப் படுத்துவிட்டால் ஒரு தனி உலகுக்குள் அவள் சென்றுவிடுவாள். கடற்கரையின் சீந்தாப்புக் காற்றால் அவளை ஒன்றும் செய்ய முடியாது.
அவளுடைய உடம்பைக் கவனித்துவிட்ட சில 'துணிச்சலான' பையன்கள் காசு தருகிறேன் வர்றியா என்று அவளிடம் ஒரு நாள் இரவு நேரத்தில் கேட்டிருக்கின்றனர். அதற்குத்தான் அவள் "அட ஹராத்துல பொறந்த பயலுவலா" என்று தொடங்கியிருக்கிறாள். 'பைத்து'(வசவு)களை பையன்கள் பெற்றுக்கொண்ட சேதி பரவியதிலிருந்து அவளிடம் யாரும் வாலாட்டுவதில்லை.
அன்று அவளுக்கு நிரம்ப அலைச்சல் இருந்தது. உடம்பில் தாங்க முடியாத ஒரு அசதி வந்திருந்தது. வழக்கம்போல படிக்குக்கீழே படுத்தவள் அடித்துப் போட்ட மாதிரி தூங்கிப் போனாள்.
காலை எட்டே முக்கால் மணிக்கு மேலாகியும் எழாத அவளைப் பற்றிக் கவலைப்பட ஊரில் யாரும் இல்லை. ஆனால் அன்றைக்கு அவள் எழவேண்டிய அவசியமே இல்லாமல் போனது.
அவசர அவசரமாக முதல் முறையாகவும் கடைசி முறையாகவும் தென்னை மரத்தில் ஏறிய சாதிக்தான் அந்தக் காட்சியைப் பார்த்தான். பார்க்க நேர்ந்தது.
அலை துரத்தி வருவதக் கண்டு ஒரே ஓட்டமாக ஓடி வந்த சாதிக் முதலில் மோதிய தென்னை மரமே கதி என்று விறுவிறு என்று அதன் மீது ஏறினான். ஏறிய பிறகுதான் அவனுக்கு இதுவரை எந்த மரத்திலும் தான் ஏறியதே இல்லை என்ற உண்மை பட்டது. அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அது ஆச்சரியம் என்ற உணர்வை அனுமதிக்கும் நேரமாக இல்லை. கைகளிலும் தொடைகளிலும் ஏற்பட்டிருந்த சிராய்ப்புகள், வழண்டுபோன தோல், அதில் கசிந்து கொண்டிருந்த ரத்தம் எதுவுமே அவன் மூளைக்குள் பதிவாகவில்லை. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுவது என்றால் என்ன என்று அன்று அவன் புரிந்துகொண்டான்.
தென்னை மரத்தின் பாதிக்கு மேல் வந்த கறுப்பு அலை சில்லடி சுவற்றின் மீது மோதியது. தடுப்பாகப் போட்டிருந்த மூங்கில் வேலிகளெல்லாம் திசைக்கொன்றாக குச்சி குச்சியாகப் பிய்ந்து பறந்தன. சுவர் உறுதியாக இருந்து தடுத்த காரணத்தால் அலை இரண்டாகப் பிரிந்து 'வி' போட்ட மாதிரி சென்றது. அதிலும் கொஞ்சம் சில்லடியின் மேலே சென்று அருவி மாதிரி கீழே கொட்டியது.
கீழேதான் படியருகே ராபியாம்மா அசந்து மல்லாக்கக் கிடந்தாள்.
மேலிருந்து வந்த வேகத்தில் அலையின் மிச்சம் ராபியாம்மாவின் வயிற்றில் இறங்கியது. ஒரு சில வினாடிகள்தான். பிளக்கப்பட்டு தூக்கி எறியப்பட்ட ராபியாம்மாவின் ஒரு நீளவாக்குப் பாதி, நடுநடுங்கி சாதிக் உட்கார்ந்து கொண்டிருந்த தென்னை மரத்தின் கீழே வந்து விழுந்தது.
அந்தக் காட்சிக்கு சாட்சியாய் இருக்க முடியாமல் மயக்கம் வந்தது சாதிக்குக்கு.
3
வழக்கம் போல பீரோட்டத்தெரு டீக்கடைக்கு வந்து ஸ்ட்ராங்கான டீயை கணக்கில் வாங்கி உறிஞ்சிக் கொண்டிருந்தபோதுதான் சேட்டு அதைப் பார்த்தான் தூரத்தில். ஏதோ நடக்கப் போகிறது என்று உள்மனசு சொல்ல டீயை வைத்துவிட்டு ஓடினான்.
"எஜமானே, எம் புள்ளைலுவலும் பொண்டாட்டியும் வூட்லதானெ இருக்கிறாலுவ?"
இந்த எண்ணம் வந்ததும் பதைக்க பதைக்க ஓடினான்.
அவன் போய் வீட்டை உஷார் படுத்தி குழந்தைகளைக் கையில் பிடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் வரவும் அலை வரவும் சரியாக இருந்தது.
"என்னாங்க, என்னாங்க" என்று கதறிய அவன் மனைவியை தூரத்தில் எங்கோ அடித்துக் கொண்டு போனது அலை. நாகப்பட்டினம் பக்கம் போன மாதிரி இருந்தது. அவனையும் பிள்ளைகளையும் அடித்துக் கொண்டு போன அலை ஒரு மரத்தில் மோதியது. நல்ல வேளையாக கைகால் உடையவில்லை. மரத்தின் மீது குழந்தைகளை எப்படி ஏற்றி நிற்க வைத்தான் என்று அவனுக்கே விளங்கவில்லை. இறைவனுக்கு நன்றி கூறியது மனசு. ஆனால் மனைவியை நினைத்துப் பதைத்தது.
அடுத்த அலையில் அவன் வேறொரு மரத்துக்கு அடித்துச் செல்லப்பட்டான். எங்கெங்கோ தான் இழுத்துச் செல்லப் படுவதையும், தன் குழந்தைகள் ஒரு மரத்தில் இருந்து அலறி அழுவதும்தான் அவனுடைய நினைவிலிருந்தது. வாய்க்குள்ளும் மூக்குக்குள்ளும் போனது தண்ணீர் மட்டும் அல்ல என்பது புரிந்தபோது சேட்டு இந்த உலகை விட்டுப்போய்க் கொண்டிருந்தான்.
"என்னங்க, என்னாங்க, எஜமானே, யா அல்லாஹ்" என்று அலறிய அவன் மனைவியின் குரல் எங்கோ உயரத்தில் இருந்து கேட்டது.
4
"தம்பி எத்தினி 'பாடி' வந்திருக்கு எண்ணுங்க"
ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ரஹீம் நானா உத்தரவு போலச் சொன்னார். பத்துப் பதினைந்து இளைஞர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.
"முப்பத்தஞ்சு நானா" என்று கொஞ்ச நேரம் கழித்து வந்து சொன்னான் கமால். "இருவத்திரண்டு புள்ளைலுவ, எட்டு பொம்புளைலுவ, அஞ்சு ஆம்புலெ" என்று தலைவர் கேட்காத தகவலையும் சேர்த்துச் சொன்னான்.
தர்கா குளத்துப் பக்கத்தில் இருந்த அடக்கஸ்தலத்தின் கதவைத் திறந்து வைத்திருந்தார்கள். மய்யத்தாங்கொல்லை (அடக்கஸ்தலம்) பிணங்களால் நிரம்பியிருந்தது. ஒரே நாளில் இத்தனை உடல்கள் அங்கு வந்ததேயில்லை. வரிசையாக உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. தண்ணீரில் செத்து, நாளாகி நொந்துபோன மீன்களைப்போலக் கிடந்தன உடல்கள். ஒருவித குழப்பமான குமட்டும் பிணவாடை வர ஆரம்பித்திருந்தது. ஏற்பாட்டுக் குழு இளைஞர்கள் ஆபரேஷன் தியேட்டரில் டாக்டர்கள் கட்டுவது மாதிரி கர்சீஃபை வாயில் வைத்து முக்கோண வடிவில் கட்டிக் கொண்டுதான் வேலை செய்தார்கள்.
"தம்பி, 'சேர்மன்'ட்டெ போயி, கஃபன் துணி(இறந்த உடலை மூடும் வெள்ளைத் துணி) போட்டு எல்லா ஒடலையும் மூடணும்டு சொல்லி துணி கேளுங்க" என்றார் தலைவர்.
"சரி நானா" உடனே ஓடினான் கரீம்.
"கஃபன் துணிதானே, ஒடனே ஏற்பாடு செஞ்சில்லாம்" என்று சொல்லிய சேர்மன் உடனே 'செல்'லை எடுத்து காமதேனு துணிக்கடை முதலாளிக்குப் பேசினார்.
"நாந்தான் தர்கா சேர்மன் பேசுறேன் செட்டியாரே, இங்கே ஒரு நூறு 'பாடி'க்கி மேலே வரும்டு நெனக்கிறேன். எல்லாத்துக்கும் வெள்ளைத்துணியைப் போட்டு மூடுனாத்தான் மரியாதியா இரிக்கும். நீங்க ஒரு ரெண்டு மூனு ரோலு குடுத்தணுப்புறீங்களா? என் அக்கௌண்ட்ல வச்சுகிங்க"
"அட, என்ன சாபு, கஃபன் துணிதானே? நம்ம அக்கௌன்ட்லயே இருக்கட்டும், ஒடனே குடுத்தனுப்புறேன். பையனெ அனுப்புங்க."
"சரி, செட்டியார் தர்றேண்டுட்டாரு, கடெக்கி போயி வாங்கிக்கிங்க" என்று சொல்லி 'செல்'லை 'ஆஃப்' செய்தார் சேர்மன். காமதேனு கடைக்குப் பறந்தது இளைஞர் குழு ஒன்று.
ஒவ்வொரு உடலையும் தையலில்லாத வெள்ளைத் துணியால் மூடினார்கள்.
"தம்பி நம்பர் போட்டுட்டா நல்லதுல்ல?" என்று தலைவர் கேட்டார்.
"ஆமா நானா, அப்புடியே செஞ்சிடலாம்" யாரோ ஒரு இளைஞன் பதில் சொன்னான்.
ஒவ்வொரு உடலின் மீதும் எண்கள் போடப்பட்டன. அதற்குள் கேள்விப்பட்டு அழுகை அலறல்களுடன் கும்பல் கும்பலாக மக்கள் அடக்கஸ்தலத்துக்குள் நுழைந்தனர்.
ஊர் எஸ்.ஐ. சம்பத், டாக்டர் அஸ்கர், தர்கா சேர்மன், ஏற்பாட்டுக் குழுத்தலைவர், பத்திரிகைக்காரர்கள், உறவுக்காரர்கள், ஒப்பாரி என நிறைந்திருந்தது தர்கா. எல்லா உடல்களும் நிழல்படம் எடுக்கப்பட்டன. சில முகங்கள் அடையாளமிழந்து கிடந்தன. நியமிக்கப்பட்ட பெண்கள் பலர் பெண் உடல்களில் இருந்த நகைகளை மெல்லக் கழற்றி போலிஸிடம் ஒப்படைத்தனர். என்னென்ன நகைகள், எந்த எண் போடப்பட்ட உடல் மீதிருந்தது போன்ற விபரங்கள் சேர்மன் ரெஜிஸ்டரில் ஏற்றப்பட்டு எஸ்.ஐ.யிடம் ஒப்படைப்பட்டன.
"ஐயோ, அவ எம் பொண்டாட்டி" என்ற அலறல் கேட்டு நிமிர்ந்தனர் சிலர். கதறிக்கொண்டே வந்தவரை காவல் துறையினர் விசாரித்தனர்.
"எந்த ஊரு?"
"திருச்சிங்க"
"எப்ப வந்திங்க?"
"நானும் எம் பொண்டாட்டியும் நேத்திக்கடனுக்கு வந்தோம். நா கடையில சாமான் வாங்கிட்டு வர்றேன் நீ மொதல்ல போன்னு நாந்தான் அனுப்புனேன்."
"பொண்டாட்டியெ தனியா அனுப்புனீங்களா?" |
|
"இல்லெங்க, அவ தங்கச்சி கூடத்தான் போனா"
"அவங்க எங்க?"
அவன் அழுதுகொண்டே தெரியவில்லை என கையை விரித்தான். அவன் வாயிலிருந்து நீராக வழிந்தது வேதனை.
"சரி, உங்க அட்ரஸெ சொல்லுங்க"
அவன் சொன்னான்.
"உங்க பொண்டாட்டி நகெ போட்டிருந்தாங்களா?"
ஆமாம் என்று தலையாட்டினான்
"என்னென்ன நகெ?"
சொன்னான்.
"சரி, இந்த ஃபாரத்தெ ஃபில் அப் பண்ணுங்க"
அவன் அழுதுகொண்டே வாங்கிக்கொண்டு போனான்.
"தம்பி, அவர்ட்ட கேட்டு நீங்களுவ ஃபில்லப் பண்ணுங்க"
"சரி நானா"
தர்கா சேர்மனிடம் இருந்த மனுவையும் டாக்டர் வசம் இருந்த மனுவையும் நிரப்பிய பிறகு அவனிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.
"சரி, இப்ப ஒம் பொண்டாட்டியெ ஊருக்கு எடுத்துட்டுப் போறியா, இல்லெ இங்கெயே அடக்கம் பண்ணிடலாமா?"
"இல்லே, ஊருக்கு எடுத்துட்டுப் போயிடுறேன்"
அவனிடம் திருச்சி என்று போடப்பட்ட 32ம் எண் உடல் ஒப்படைக்கப்பட்டது.
"நானா குளி வெட்டியாச்சு" கமால் சொன்னதும் காரியங்கள் மளமளவென நடந்தேறின.
| கமாலுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இவர்களெல்லாம் என்ன ஜென்மங்கள் என்று தோன்றியது. சுனாமி அப்படியே இவனைக் கொண்டு போயிருக்கக் கூடாதா? | |
அடையாளம் காணப்படாத, எண்களிடப்பட்ட உடல்கள் கும்பலாக ஒரே குழிக்குள் இறக்கப்பட்டன. குழிக்குள்ளும் தண்ணீர் இருந்தது. தண்ணீருக்குள்தான் உடல்களைப் போட வேண்டியிருந்தது. சிறிசும் பெருசுமாக உடல்கள் வெள்ளைத் துணியில் ஒரு குழியில் ஒன்றாகக் கலந்தன. எல்லாருக்குமாக சேர்த்து ஒரு ஃபாத்திஹா ஓதப்பட்டது. அவர்களின் நிம்மதியான மறுமைக்காக துஆ செய்யப்பட்டது. பின் மண்ணைத் தள்ளி குழியை மூடினார்கள். முஸ்லிம், ஹிந்து மீனவர், சின்னவர், பெரியவர், ஆண், பெண், குழந்தை என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லாரும் ஒற்றுமையாய்க் கிடந்தனர் குழிக்குள்.
5
"ஒரு லச்ச ருவா தர்றானாம்ல?"
"ஆமா"
"யாருக்குடா?"
"அதாண்டா சுனாமில செத்த குடும்பத்துக்கு"
செய்தி சுனாமியைவிட வேகமாகப் பரவியது ஊருக்குள்.
யாரோ வீட்டு காலிங் பெல்லை அழுத்துவதை அறிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கமால் அப்படியே எழுந்து வந்தான்.
"யாரு?"
"நாந்தான் தம்பி"
கதவைத் திறந்தான். சேக் நானா. ஊரின் முன்னாள் ஜமாஅத் தலைவர். மறு ஆண்டு தேர்தலுக்கு நின்று தோற்றவர்.
"என்னா நானா?"
அவர் தலையில் இருந்த வெள்ளைத் துணித் தொப்பி ரொம்ப அழுக்காகி கசம் பிடித்துக் கிடந்தது.
"இல்லெ தம்பி, இந்த சுனாமில எறந்தவங்க குடும்பத்துக்கு ஒரு லச்ச ருவா குடுக்குறாக்களாம்ல? அது விசியமா பேசிட்டுப் போவலாம்னு வந்தேன்"
"அதுல உங்களுக்கு என்னா நானா, உங்க குடும்பத்துலதான் யாருமே மௌத்தாவலெயே!"
அவர் முகம் ஒருவிதமாக மாறியது.
"இல்லெ...எங்க வாப்பா மௌத்தாப் போனாஹல்ல? அதுக்கு வாங்கலாமுல்ல தம்பி?" சேக் நானா இழுத்தார்.
"உங்க வாப்பா மௌத்தாப் போனது போன வருசமுல்ல நானா? அதுக்கும் சுனாமிக்கிம் என்னா சம்பந்தம்?"
"இல்லெ தம்பி நா தலைவரா இரிக்கிம்போது இந்த மொஹல்லாவுக்கு எவ்வுளவோ செஞ்சிருக்கேன். இப்ப அந்தப் பணம் கெடச்சா எனக்கு ரொம்ப ஒதவியா இரிக்கிம்"
கமாலுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இவர்களெல்லாம் என்ன ஜென்மங்கள் என்று தோன்றியது. சுனாமி அப்படியே இவனைக் கொண்டு போயிருக்கக் கூடாதா?
"இதுல நா செய்யிறதுக்கு ஒன்னுமில்ல நானா. தர்ஹா சேர்மன்ட்டெ போயி ஒரு சர்ட்டிஃபிகேட் வாங்கணும். அவர் அதெ குடுத்தா, அதெ வாங்கிட்டு போயி டாக்டர்ட்ட குடுக்கணும். அவர் அதெ வெரிஃபை பண்ணிட்டு ஒரு சர்ட்டிபிகேட் குடுப்பாரு. அதெ கொண்டு போயி கலெக்ட்டர்ட்ட குடுத்தா அவரு ஒரு லச்ச ருவா ஒடனே குடுப்பாரு அவ்வுளவுதான்"
"அது தெரியும் தம்பி அதுக்குத்தான் உங்களெ பாக்க வந்தேன்"
"அதுக்கு ஏன் நானா என்னெ பாக்கணும்?"
"இல்லெ தம்பி, தர்ஹா சேர்மன்ட்டெ சர்ட்டிபீட் வாங்க முந்தி, நீங்க ஏற்பாட்டுக் குழு தலைவர்ட்ட சொல்லி அவர் ஒரு சர்ட்டிபீட் குடுத்தாத்தான், அதெ வச்சுத்தான் தர்ஹா சேர்மன் சர்ட்டிபீட்டு தர்றாருண்டு சொன்னாஹ. அதுக்குத்தான்"
ரொம்ப விபரமாக விசாரித்துவிட்டு ஒரு முடிவோடுதான் வந்திருக்கிறார்.
"இல்லெ நானா, நா அப்புடி செய்ய முடியாது. அப்ப உண்மையிலேயே செத்தவங்க குடும்பத்துக்கு கெடைக்க வேண்டியது கெடைக்காம போயிடும். அந்தப் பாவத்தெ நா செய்ய முடியாது"
அதற்கு மேல் முன்னாள் ஜமாஅத் தலைவருக்கு பொறுமை காக்க முடியவில்லை.
"ஓய், நீம்பரு என்னா பெரிய மசிரோ? நா பாத்து வளந்த வலுக்கெ. ஒனக்கு இவ்வுளவு திமுரா? சாய்ங்காலமா ஏற்பாட்டுக் குழு தலைவரெ பாக்க வருவேன், நீ மட்டும் சர்ட்டிபீட்டு வாங்கித் தரலெ நடக்குறதே வேறெ"
சொல்லிவிட்டு வேகமாக அழுக்குத் தொப்பியைச் சரிசெய்து கொண்டே வெளியேறினார் சேக் நானா.
"இந்த சுனாமி வந்து நிம்மதியா சோறுகூட உங்க முடியலெ"
சொல்லிக் கொண்டே திரும்பி வீட்டுக்குள் சென்றான் கமால்.
நாகூர் ரூமி |
|
|
|
|
|
|
|
|