Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
கவிதைப்பந்தல் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்த்திராத சாரதி
- ஹரி கிருஷ்ணன்|மார்ச் 2016||(6 Comments)
Share:
சூதர்களைப்பற்றி நிலவி வருகின்ற பலவிதமானதும் தெளிவில்லாததுமான விவரங்களை மட்டுமே இந்தமுறை சுருக்கமாகப் பார்ப்போம். என்னதான் சுருக்கமாகச் சொன்னாலும் இந்த விவரங்களில் முக்கியமான ஒருசிலவற்றையாவது சொல்ல இரண்டு மூன்று தவணைகள் தேவைப்படும். ஆனால் பரவலாக அறியப்படாத விவரங்கள் என்பதால் சூதர்கள் பற்றியும், அவர்கள் செலுத்திய ரதங்களைப் பற்றியுமான மிகமிக மேம்போக்கான பார்வையையாவது செய்தாகவேண்டியது அவசியமாக இருக்கிறது. முதலில் சூ-த என்பதன் உச்சரிப்பு. இதிலுள்ள 'த'வை 'த'ட்டு என்பதிலுள்ள த-வைப் போல அழுத்தி உச்சரிக்க வேண்டும். தர்மம் என்பதிலுள்ள த-வைப் போல உச்சரித்தால் சூதாடுபவன் என்ற பொருள் வரும். இனி நாம் பார்க்கப்போகும் எல்லா சூ-தர்களும்-வேறுபாடு இருந்தால் குறிப்பிட்டுச் சொன்னாலொழிய-'த'ட்டு என்பதில் உள்ளதைப்போல அழுத்தி உச்சரிக்கப்படவேண்டிய வகையைச் சேர்ந்தவர்கள்.

சூதர்களில் மிகப்பெரிய புலவர்களும் உண்டு. சொல்லப்போனால், பாரதம் ஆரம்பிக்கும் நேரத்தில் ஜனமேஜயர் செய்யும் யாகத்துக்கு வரும் ரோமஹர்ஷணர் என்ற சூதருடைய மகனான உக்கிரஸ்ரவஸ்தான் வியாசரிடம் தான் கற்ற மஹாபாரதக் கதையை ஜனமேஜயருக்குச் சொல்லத் தொடங்குகிறார். சூத குலத்தில் பிறந்தமையால் சூதர் என்றும்; சூத புராணிகர் என்று பிரசித்திபெற்ற ரோமஹர்ஷணருடைய மகன் என்பதால் ஸௌதியென்றும் இவருக்குப் பெயர். ஜனமேஜயருக்கு பாரதக் கதையைச் சொல்ல விரும்புவதாக இவர் சொன்னதுமே அவருக்கு அர்க்கியம் (நீர்), ஆசனம் முதலியவற்றைக் கொடுத்து உபசரித்து, நைமிசாரண்யத்தில் வசிக்கும் ரிஷிகள் அவரை வணங்கி, பாரதக் கதையைக் கேட்கத் தொடங்குகிறார்கள். இவர் சூதர்களில் ஒருவகை.

இன்னொரு வகையான சூதர்களைப் பற்றி கர்ணன் சொல்வதைச் சென்றமுறை பார்த்தோம். க்ஷத்திரியர்களுக்கும் அந்தணர்களுக்கும் ஏற்பட்ட கலப்பால் (தாயோ தந்தையோ ஒருவர் ஒரினம், இன்னொருவர் மற்றோரினம்) குலத்தைத்தான் சூதவம்சம் என்று அழைத்தார்கள். அதாவது க்ஷத்திரியன்தான், ஆனால் முதல்நிலை க்ஷத்திரியனுக்கு அடுத்த நிலையில் வருபவன். க்ஷத்திரியன் என்பவன் கத்தி (க்ஷத்ரம்) வைத்திருப்பவன். தண்டல்காரனுக்குத் தடி என்றால், க்ஷத்திரியனுக்குக் கத்தி அடையாளம். பலவிதமான வம்சத்தவர்களும் க்ஷத்திரியர்களாக இருந்திருக்கிறார்கள். ஏகலவ்யன், ஹிரண்யதனுஸ் என்ற நிஷாத அரசனுடைய மகன்-இவன் ஒருவகை க்ஷத்திரியன். மத்ஸ்ய தேசத்து அரசர்கள் மீனவர்களாகப் பிறந்து அரசர்களாக மாறியவர்கள். பாண்டவர்கள் அஞ்ஞாதவாச காலத்தில் மறைவாக இருந்த விராட மன்னனும் மத்ஸ்ய அரசனே. இவனுடைய மகளான உத்தரையைத்தான் அபிமன்யுவுக்குக் கொடுக்கிறார்கள். இந்த உத்தரையின் பிள்ளைதான் பரீட்சித்து, பரீட்சித்தின் பிள்ளை ஜனமேஜயர்.

இதை எதற்காகச் சொன்னோம் என்றால், க்ஷத்திரியர்கள் என்பவர்கள் ஏதோ ஒரு குறிப்பிட்ட இனத்தவர் அல்லர். யாரெல்லாம் ஆண்டார்களோ அவர்களெல்லாம் க்ஷத்திரியர்கள். க்ஷத்திரியர்களுக்குள்ளே பலவிதமான பிரிவுகள் இருந்தன. சிலரை உயர்ந்தவகை என்றும் மற்றவர்களை இரண்டாம், மூன்றாம் நிலை க்ஷத்திரியர்களாகவும் பார்த்தார்கள். அப்படியொரு பிரிவுதான் இந்த சூதர் எனப்படும் பிரிவு. தேரோட்டுவது இந்தப் பிரிவின் வேலைகளில் ஒன்று. தசரதனுடைய மந்திரிசபையில் இடம்பெற்ற சுமந்திரரும் ஒரு சூதரே. தேரோட்டியாகவும் இருந்தார். ராமன் காட்டுக்குப் போகும்போது காட்டில் கொண்டுபோய் விட்டவர் இவர். அமைச்சராகவும் இருந்தவர் என்பதை கவனிக்கவேண்டும்.

தேரோட்டுவது சுலபமான பணியன்று. சாதாரணமாக உலாப்போதல், ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குப் போதல் முதலானவற்றுக்கும் தேரில் செல்லவேண்டியிருந்தது. ஓட்டுவதற்கு ஒருவன் தேவைப்பட்டது. வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், ஸர்க்கம் 39, ஸ்லோகம் 10-ராமன் காட்டுக்குக் கிளம்பும் தோற்றத்தைச் சொல்கிறது. 'ஔபவாஹம் ரதம் யுக்த்வா த்வம் ஆயாஹி' என்று தசரதன் சுமந்திரருக்குக் கட்டளையிடுகிறான். இந்த ஔபவாஹம் என்ற சொல்லை கீதா பிரஸ் வெளியிட்டுள்ள கோரக்பூர் பதிப்பு, 'Fitting with the best of horses a chariot fit for pleasure-drives' என்று குறிக்கிறது. ஆகவே, உல்லாசமாகப் பயணிப்பதற்கான தேர்கள் வேறுவகை என்பது தெளிவாகிறது.
அதே சமயத்தில் யுத்தகளத்தில் ஓட்டுவதற்கும் அதே தேரோட்டியே தேவைப்பட்டான். யுத்தத்துக்குப் போகும் தேரில் 'சேமப் பாகர்கள்' என்று spare charioteers சிலர் அமர்வார்கள்; இப்படி அமர்வதற்கான இடமும் தேரில் அமைக்கப்பட்டிருக்கும். இதையெல்லாம் கம்பராமாயணத்தின் யுத்தகளக் காட்சிகளில் பார்க்கலாம். சேமத்தேர், சேமப்பாகர் என்றெல்லாம் spare chariots, spare charioteers குறிக்கப்பட்டார்கள். ஒரு பாகன் போரில் இறந்துவிட்டால் உடனடியாக அந்த இடத்துக்கான பொறுப்பை ஏற்பதற்குத் தயார்நிலையில் சேமப்பாகர்கள் இருப்பார்கள். இவர்களுக்கான மறைவான ஆசனங்களும் தேரின் முன்பகுதியில் இருக்கும். ஓட்டுகின்ற சாரதி மட்டுமே எதிர்வில்லாளியின் நேர்ப்பார்வையில் இருப்பான்.

அபிமன்யுவின் கொலைக்குக் காரணமாக இருந்த ஜயத்ரதனை மறுநாள் சூரிய அஸ்தமனத்துக்குள் கொல்லாவிட்டால், தான் தீப்பாய்ந்து இறக்கப் போவதாக அர்ச்சுனன் சபதம் செய்ததும், காலத்தின் மொத்த வடிவினனான கண்ணனே மறுநாளைப் பற்றி சிந்திக்கிறான். இந்த விவரங்களை ஓரளவுக்கு விரிவாக 'காலமே நாளையைப் பற்றி சிந்தித்தால்' என்ற தலைப்பில் பார்த்திருக்கிறோம். இந்தச் சூழலை அறிய வேண்டுவோர் இத்தவணையைப் படிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

எத்தனையோ யுத்தங்களுக்கு கண்ணனுக்குத் தேரோட்டியவனான தாருகனுக்கு (Daruka) தேரை எப்படித் தயார்செய்ய வேண்டும் என்று கண்ணன் உத்தரவிடுகிறான். அர்ச்சுனனுக்கு 'ஒருவேளை' ஏதாவது நேர்ந்துவிட்டால் அக்கணம்முதல் தான் போருக்குத் தலைமை ஏற்கப் போவதாக அர்ச்சுனனுக்குத் தெரியாமல் முன்ஜாக்கிரதையான ஏற்பாட்டைச் செய்துகொள்கிறான். இந்த விவரிப்பில், தேரைப் போருக்கு எப்படித் தயார் செய்யவேண்டும் என்ற விவரங்கள் கிட்டுகின்றன. "நீ இன்று இரவு விடிந்ததும் உத்தமமான ரதத்தை யுத்தமுறைப்படி ஸித்தஞ்செய்து ஜாக்கிரதையோடு கொண்டு வா. சூத! கௌமோதகி என்கிற திவ்யமான கதையையும் சக்தியையும் சக்கரத்தையும் வில்லையும் அம்புகளையும் எல்லா உபகரணங்களையும் ரதத்தின் மீது எடுத்துவைத்து, வீரியமுள்ளதும் யுத்தபூமியில் ரதத்தில் விளங்குகின்றதும், கருடவடிவமுள்ளதுமான என்னுடைய கொடிமரத்துக்குத் தேரின் நடுவில் இடத்தை ஏற்படுத்து. .............. குடையையும் குதிரைகளையும் அலங்காரம் செய். தாருக! அந்தத் தேரில் வலாஹம், மேகபுஷ்பம் சைப்யம் ஸுக்ரீவம் என்கிற உத்தமமான குதிரைகளைப் பூட்டி நீயும் கவசம் பூண்டு நில்" என்று இவ்வாறு அந்த விரிவான உத்தரவு நடக்கிறது. (தொகுதி 5, துரோண பர்வம், அத். 71, பக். 264)

ரதத்தை யுத்தத்துக்கு உரியவிதத்தில் தயார்செய்; இன்னின்ன ஆயுதங்களை ரதத்தில் எடுத்து வை; என்னுடைய கருடக்கொடி பறப்பதற்கான இடத்தைத் தேருக்கு நடுவில் ஏற்படுத்து-அதாவது யுத்த காலத்தில் தேர், கொடியுடன் கூடியதாக இருந்தே ஆகவேண்டும், பிறசமயங்களில் அந்த அவசியமில்லை; குடை இருக்கவேண்டும்; குதிரைகளை அலங்காரம் செய்யவேண்டும். அலங்காரம் என்றால், யுத்தத்துக்கான குதிரைகளுக்கென்று விசேஷமான கவசங்கள் முதலானவை உண்டு. இவற்றைக் குறிப்பது இந்த 'அலங்கரித்தல்' என்ற பயன்பாடு. அப்படிக் குதிரைகளை ஆயத்தப்படுத்து. அப்புறம் மறக்காமல் நீயும் உன் கவசத்தைப் பூட்டிக்கொண்டு தயாராக இரு. தேவைப்படும் நேரத்தில் நான் சங்கை ரிஷப ஸ்தாயியில் ஊதுவேன், நீ எங்கிருந்தாலும் நான் இருக்கின்ற இடத்துக்கு உடனடியாக வந்தே ஆகவேண்டும் என்று ஜயத்ரத வதத்துக்கு முதல்நாள் இரவில், பார்த்தனுடைய சாரதியான கண்ணன், தன்னுடைய சாரதியான தாருகனுக்கு உத்திரவிடுகிறான். அதாவது, உல்லாசப் பயணங்களுக்காகத் தேரைத் தயார்செய்வது ஒருவிதம் என்று வால்மீகி ராமாயணமும், யுத்தத்துக்காக ரதத்தைத் தயார் செய்வது அடியோடு வேறு மாதிரியானது என்பதை நாம் இதுவரையில் பார்த்திராத சாரதியான கண்ணனுடைய உத்தரவும் பேசுவதைக் காண்கின்றோம்.

இனி சாரதிகளுக்குப் போர்க்காலத்தில் உள்ள சில தனிப்பட்ட கடமைகளையும் சற்று மேலோட்டமாகவாவது பார்ப்போம். சஞ்சயன் என்ற தேர்ச்சாரதியைப் பற்றியும் பார்க்க வேண்டும். திருதிராஷ்டிரனுக்கு எதிரில் அமர்ந்துகொண்டு, தொலைக்காட்சியில் பார்ப்பதுபோல அவன் ஒயாமல் சொல்லிக் கொண்டிருப்பது போன்ற சித்திரிப்புகள் எல்லாம் எத்தனை பொய்யானவை என்பதையும் சொல்லவேண்டும். சஞ்சயனுக்கு வியாசர் தெய்வீகப் பார்வையைக் கொடுத்திருந்தார் என்றாலும், சஞ்சயன் அதைப் பயன்படுத்திய விதமே வேறு. ஒவ்வொரு நாளும் சஞ்சயன் யுத்த பூமியில்தான் இருந்தான். 18ம் நாள் யுத்தத்தின் போது பீமனிடம் பிடிபடுகின்றான். 'இந்த எலியைப் போய் என்ன செய்வது? விட்டுவிடு' என்று பீமனிடம் சொல்லி சஞ்சயனை விடுவிக்கிறார்கள். இவற்றையும் பார்ப்போம். இவற்றையெல்லாம் பார்த்தால்தான் கர்ணன் என்னும் சூதபுத்திரனைச் சூழ்ந்திருக்கும் பனித்திரை விலகும். பார்வை தெளிவாகும்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline