Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
கவிதைப்பந்தல் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
ஓவியர் இளையராஜா
கொட்டலங்கோ லியோன்
- வெங்கட்ராமன் சி.கே., மதுரபாரதி|மார்ச் 2016|
Share:
அந்த ஆஸ்கர் விருது அரங்கில் கிடைத்த பதினைந்தே வினாடிகளில் 'எல்லோருக்கும் நன்றி' என்று தமிழில் பேசி முடித்தவர் கொட்டலங்கோ லியோன். கணினி வரைபட (Computer Graphics) பொறியாளரான இவர் சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸில் (Sony Pictures Imageworks) itView என்ற அனிமேஷன் படத் தொழில்நுட்பத்தைத் தமது சகாக்களுடன் 20 ஆண்டுகளாக முன்னெடுத்துச் சென்றதற்காக 2016ல் அகாடமி இந்த விருதை மூவரணிக்குக் கொடுத்துள்ளது. அகாடமியின் தகுதியுரை "To J Robert Ray, Cottalango Leon and Sam Richards for the design, engineering and continuous development of Sony Pictures Imageworks Itview. With an extensive plugin API and comprehensive facility integration including editorial functions, Itview provides an intuitive and flexible creative review environment that can be deployed globally for highly efficient collaboration" என்று குறிப்பிடுகிறது. இவர் பிறந்தது தூத்துக்குடி, வளர்ந்தது கோவை, முதுகலை முடித்தது அரிசோனாவில். தற்போது மனைவி ரூபா, மகள் சுருதி ஆகியோருடன் லாஸ் ஏஞ்சலஸில் வசித்து வரும் லியோன், இந்த நேர்காணலின் போதும் பெரும்பாலும் தமிழிலேயே பேசினார். அந்த உரையாடலிலிருந்து...

*****


தென்றல்: வணக்கம். இந்திய-அமெரிக்க மென்பொருள் விஞ்ஞானி ஒருவர் ஆஸ்கர் விருது பெற்றுள்ளதில் எமக்கு மிகுந்த பெருமிதம். வாழ்த்துக்கள். விடாமுயற்சியினால் இந்தப் பெருமையை நீங்கள் அடைந்தது இங்கிருக்கும் தமிழ்ச் சமுதாயத்துக்கு ஒரு தூண்டுகோலாக அமையும் என்று நம்புகிறோம். உங்கள் வாழ்க்கைப் பயணத்தைச் சிறுவயதிலிருந்தே தொடங்கலாமா?
கொட்டலங்கோ: நன்றி. தொடங்குவோம். என் அம்மாவின் ஊர் தூத்துக்குடி. நான் பிறந்ததுதான் அங்கே, ஆனால் வளர்ந்தது கோயம்புத்தூர் அல்லது அருகிலுள்ள ஊர்களில். ஏழாம் வகுப்புவரை கள்ளப்பாளையம் என்ற மிகச்சிறிய கிராமத்தில் படித்தேன். அந்த ஊரில் எல்லாரும் எல்லாரையும் அறிவார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்தப் பள்ளியில் என் அப்பா தலைமையாசிரியர், அம்மா ஆசிரியை. கோவை கதிரி உயர்நிலைப்பள்ளியில் படித்தபின் PSG தொழில்நுட்பக் கல்லூரியில் கணினிப் பொறியியல் படித்தேன். 1992ல் அதை முடித்ததும் கொஞ்சம் தொழில் அனுபவம் பெற்றபின் முதுகலை படிக்கலாம் என்று தோன்றவே டெல்லியில் வேலைக்குப் போனேன்.

அப்போதுதான் ஜுராசிக் பார்க் வந்தது. எனக்கு எப்போதுமே தொழில்நுட்பத்தில் ஆர்வம் அதிகம். ஜுராசிக் பார்க்கில் எப்படி 'ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்' செய்திருக்கிறார்கள் என்பதுபற்றி நான் பார்த்த ஒரு ஆவணப்படம் என்னைக் கவர்ந்தது. அந்தத் துறையில் முதுகலை படிக்கலாம் என்று தோன்றியது. திரைப்படத் துறையில் நாம் செய்வது எனக்கும் சுவையாக இருக்கும், எல்லோரும் ரசிக்கும்படியாக இருக்கும்; என்ன வேலை செய்கிறேன் என்று பிறருக்கு விளக்கவேண்டிய அவசியம் இருக்காது என்று தோன்றியது. என் நண்பர் ஒருவர் அமெரிக்காவில் அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிடியில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் படித்துக்கொண்டிருந்தார். அந்தப் பல்கலையில் அந்தத் துறை பெயர்பெற்றது. நண்பரின் அறிவுரைப்படி அங்கே சென்று நான் முதுகலை படித்தேன்.



தெ: நல்லது. நீங்கள் விரும்பியபடியே தொழிலும் அமைந்ததா?
கொ: ஆமாம். மாஸ்டர்ஸ் முடிக்கும்போதே விண்ணப்பிக்கத் தொடங்கிவிட்டேன். லாஸ் ஏஞ்சலஸில் DreamWorks Interactive என்கிற கணினிவிளையாட்டுத் துணைநிறுவனத்தில் ஆறுமாத காலம் ஒப்பந்தப்பணி கிடைத்தது. அங்கிருக்கும்போதே வேறு வாய்ப்புகளைத் தேடத் தொடங்கினேன். அங்கே அப்போது சோனி பிக்சர்ஸ் இமேஜ் ஒர்க்ஸ் தொடங்கி இரண்டாண்டுதான் ஆகியிருந்தது. அந்தத் துறையே தொடக்க நிலையில் இருந்தது. மேம்பட்ட மென்பொருள் எதுவும் கிடையாது. நான் டிரீம் ஒர்க்ஸிலிருந்து போயிருந்தது எனக்குச் சாதகமாக அமைந்தது. அவர்கள் என்னைப் பணி அமர்த்தினார்கள். அப்போது சாஃப்ட்வேர் டிபார்ட்மென்ட்டில் 15 பேர்தான் இருந்தார்கள்.

தெ: நீங்கள் செய்த முதல் வேலை அல்லது ப்ராஜெக்ட் என்ன?
கொ: என்னுடைய மேனேஜர் ரிச்சர்டு மாஸ்டர் என்னிடம், "அனிமேட்டர்ஸ் பயன்படுத்தும் மூவி ப்ளேயர் சாஃப்ட்வேருக்கு மாற்றாக, பயன்படுத்த எளியதாக ஒன்று தயார் பண்ணணும்" என்றார். நான் சரி என்று அந்த வேலையைத் தொடங்கினேன். மூன்று மாதத்தில் இணையான மற்றொரு மென்பொருளை ரிலீஸ் பண்ணினோம். அது எல்லோருக்கும் பிடித்திருந்தது. சிறிய கம்பெனியாக இருந்ததால் எல்லோரும் என்னை நேரடியாக வந்து பார்த்துப் பாராட்டினார்கள். கல்லூரியிலிருந்து புதிதாகச் சென்ற எனக்கு அது மிக எக்ஸைடிங் ஆக இருந்தது. அது கொடுத்த ஊக்கத்தில் நான் அதற்கு இன்னும் நேரம் செலவிட்டேன்.

அனிமேஷன் படத் தயாரிப்பில் ஒலி, ஒளி, உருவங்களை ஒருங்கிணைத்தல் போலப் பலவகை வேலை செய்பவர்கள் தமக்கு இது வேண்டும் என்று சொன்னால் அதை நாங்கள் செய்துகொடுப்போம். சின்ன சாஃப்ட்வேராக இருந்த அது, மேலும் பல அம்சங்களுடன் வளர்ச்சி அடைந்தது. கிட்டத்தட்ட அதிலேயே 8 வருடங்கள் வேலைசெய்தேன். அப்போதுதான் இதைத் தாண்டிப் பல விஷயங்கள் உள்ளன. அவற்றையும் செய்யவேண்டும் என்ற எண்ணம் வந்தது.

தெ: ஓ! அதற்கான வாய்ப்பு வந்ததா?
கொ: ஆமாம். அனிமேஷன் தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்துவிட்டது. அதனால் நாங்கள் நிறையப் புதிய பொறியாளர்களைப் பணிக்கு எடுக்கவேண்டியதாகிவிட்டது. படம் முடிந்தபின் ப்ரொஜக்டரில் ப்ரிவியூ என்பது போய் தினமும் செய்த வேலையை டிஜிடல் முறையில் டைரக்டர் பார்த்து கருத்துச் சொல்லும் முறை வந்தது. முன்புபோல ஒரு சிறிய அலுவலகத்தில் எல்லாரும் இருக்கவில்லை. அதுவும் தவிர, சில வேலைகள் அமெரிக்காவுக்கு வெளியே நடந்தன. அமெரிக்கா உள்ளேயும் வரிவிலக்குக் கொடுத்த ஆல்புகெர்க்கி போன்ற மாநிலங்களில் அலுவலகங்கள் தொடங்கினோம். இப்படிப் பல இடங்களில் பல குழுக்குள் வேலை செய்வதையும் ஒருங்கிணைக்கும் (collaboration) வகையில் இப்போது சாஃப்ட்வேர் வளர்ச்சி அடைய வேண்டியதாயிற்று.

முதல் எட்டு வருடங்கள் நான் Core Contributor ஆக இருந்தேன். பிறகு ஏற்பட்ட அசுர வளர்ச்சியில் நான் டிசைன், தொழில்நுட்பக் கூறுகள் (modules), நிர்வாகம் என்று பிறவகைகளிலும் பங்களிக்கத் தொடங்கினேன்.



தெ: படத்துறையில் நடக்கும் டிஜிடைசேஷனை (எண்ணியப்படுத்துதல்) நீங்கள் தொடக்கத்திலிருந்தே பார்த்து வருகிறீர்கள், அல்லவா?
கொ: ஆமாம், இருபது ஆண்டுகளில் என் கண்முன்னேயே இந்தத் துறை மிகவும் மாறிவிட்டது. இது மிகவும் டைனமிக்கான தொழில்துறை.

தெ: மிகச்சுவையான ஒரு தருணத்தைச் சொல்ல முடியுமா?
கொ: தியேட்டரில் தினமும் தத்தமது வேலையைக் காண்பித்து மதிப்பிட்ட காலத்தில் 200 பேர் அங்கே கூடுவார்கள். ஒவ்வொருவர் வேலையும் 30-35 வினாடிகள் இருக்கும். அதைப் பார்த்து டைரக்டர் விமர்சிப்பார். ஆனால், மொத்தத்தில் 2 மணிநேரம் ஆகிவிடும். எல்லோரும் இருந்தாக வேண்டும். அங்கேயே சிலர் தூங்கிப் போய்விடுவார்கள் (சிரிக்கிறார்). 10 மணிநேர வேலையில் 2 மணிநேரம் இதில் போய்விடும். இப்போது அது முழுதாக மாறிவிட்டது. யாரும் இப்போது ரெவ்யூவுக்குத் தியேட்டருக்குப் போகவேண்டியதில்லை. அவரவர் இடத்தில் உட்கார்ந்து வேலை செய்துகொண்டிருப்பார்கள், அங்கேயே இந்த 'டெய்லீஸ்' எனப்படும் அன்றைய பார்வைக்கான தயாரிப்பு ஓடிக்கொண்டிருக்கும். எல்லாம் சாஃப்ட்வேரே செய்துவிடுகிறது. "எங்க ஓய்வுநேரமே போயிடுச்சு" அப்படீன்னு சிலபேர் எங்களைத் திட்டறாங்க. (சிரிக்கிறார்). இப்போதெல்லாம் பத்து மணி நேரமும் வேலை, வேலைதான்.

தெ: இந்த மென்பொருள் வளர்ச்சியில் உங்களுக்குக் குறிப்பாகப் பிடித்தது என்ன?
கொ: தியேட்டர்ல டெய்லீஸ் ஓடும்போது டைரக்டர் அதை விரலால் காட்டி, 'இங்கே கலர் சரியில்லை' என்பது போலத் திருத்தங்கள் சொல்லுவார். அங்கே இருட்டாக வேறு இருக்கும். அது எங்கும் பதிவாவதில்லை. இப்ப சுட்டுவிளக்கம் (annotation) என்கிற வசதி சாஃப்ட்வேரில் இருக்கிறது. மதிப்பீடு செய்கிறவர் கையில் ஒரு டேப்லெட் இருக்கும். படம் ஓடும்போதே அவர் அதில் மார்க் செய்து தன் குறிப்புகளை எழுதிவிடுவார். அதை வைத்துச் சரிசெய்துவிடலாம். இதைச் செய்த தொழில்நுட்பம் மிகக் கடினமானதல்ல. ஆனால் கலைஞர்கள் இதில் மிகவும் சந்தோஷமடைந்தார்கள். இயக்குனர்களுக்கும் பிடித்துப்போனது.

தெ: இதே துறையில் இருபது வருடங்கள் தொடர்ந்து இருந்திருக்கிறீர்கள். இரண்டு பொருளாதாரச் சரிவுக் காலங்களைப் பார்த்திருக்கிறீர்கள். அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
கொ: பொருளாதாரச் சரிவு என்பது சுழற்சியில் வருவது (cyclical). டாட்காம் துறையளவுக்கு எங்கள் துறை அவற்றால் பாதிப்படையவில்லை. ஆனால் படத்துறைக்கென்றே ஏற்ற இறக்கங்கள் உண்டு. திடீர்னு எக்கச்சக்கமா வேலை வரும், எல்லாம் பிளாக்பஸ்டர் படங்களாக இருக்கும். சில வருடங்கள் ஒரு வேலையும் இருக்காது. ரொம்ப நிலையற்ற தன்மை கொண்ட துறை இது. வேலை போனால் வேறு வாய்ப்பு கிடைக்காது, காரணம், மிகச்சிறிய தொழில்துறை இது. நான் பிடிவாதமாகத் தொடர்ந்து இருக்கிறேன். என் நண்பர்கள்கூட என்னை எச்சரித்ததுண்டு. என்னுடைய பல இந்திய நண்பர்களுக்கு வேலை போனதுண்டு. அவர்கள் கனடாவுக்குப் போய்க் கொஞ்சகாலம் இருந்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் பிற மாநிலங்களோ அல்லது பிற நாடுகளோ ஏதாவது மானியம் கொடுத்தால் உடனே வேலையெல்லாம் அங்கே போய்விடும். அங்கே போய் வீடு, பள்ளிக்கூடம் பார்த்து ஒரு வருடம் இருந்தால், வேறொரு இடத்தில் அதைவிட அதிக ஊக்கத்தொகை கொடுக்கிறார்கள் என்று கம்பெனி அங்கே இடம் மாறிவிடும். அதுதான் மிகவும் கஷ்டம். நான் இதுவரை இதனால் பாதிக்கப்படவில்லை என்றாலும் இப்படி நடப்பதை நான் பார்த்திருக்கிறேன். இந்த வேலையில் நிரந்தரத்தன்மை இல்லைதான். Most people do it merely because they love it.
தெ: உங்களுடைய தணியாத ஆர்வத்தின் காரணமாக நீங்கள் மேலே வந்திருக்கிறீர்கள் என்று சொல்லலாமா?
கொ: இந்த வேலையில் பதவி உயர்வு, டைட்டில் எதுவும் பெரிதாகக் கிடையாது. ஆனால் எந்தப் படத்துக்கு வேலை செய்கிறோம், எந்த இயக்குனருக்கு வேலை செய்கிறோம் என்பதுதான் சுவாரசியமானது. அதிக வருமானம், நிரந்தர வேலை என்று எதிர்பார்ப்பவர்கள் இந்தத் துறையில் தொடர்ந்து இருப்பதில்லை. ஓரிரண்டு வருடங்கள் இருந்துவிட்டுப் போய்விடுகிறார்கள். ஆர்வம் இருந்தால்தான் இந்தத் துறையில் நீடிக்கமுடியும்.

படத்துறையில் டெக்னாலஜி ஆட்கள் ஓரளவுதான் மேலே போகமுடியும். இதுவே ஒரு ஓவியர்/கலைஞராக இருந்தால் நிறைய உயர வழியுண்டு. அவர் டைரக்டராகக்கூட ஆகலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் எனக்கு ஆரம்பத்திலிருந்தே நிறையச் சுதந்திரம் கொடுத்தார்கள். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நல்ல சூழ்நிலையும் கிடைத்தது. இதற்கு வருகிறவர்கள் ஆர்வத்தின் காரணமாக வருவதால், அவர்களே என்ன செய்யலாம் என்று பார்த்து 'இதைச் செய்யட்டுமா?' என்று கேட்டுச் செய்வார்கள். அலுவலக நேரத்துக்கு வெளியிலும்கூட வேறு மென்பொருள்கள் செய்வார்கள்.

செய்யவேண்டிய வேலையின் அளவும், செய்கிற எஞ்சினியர்களின் எண்ணிக்கையும் மிகவும் பெருகிவிட்டதால் நான் இப்போது நிர்வாகமும் செய்கிறேன், சாஃப்ட்வேர் வேலையிலும் பங்கேற்கிறேன். எங்களிடம் மிக நல்ல எஞ்சினியர்கள் இருக்கிறார்கள். என்னுடைய நேரத்தில் பாதி அவர்களை மேனேஜ் செய்வதில் போய்விடுகிறது.

தெ: உங்களை ஆஸ்கர் விருதுக்குத் தேர்ந்தெடுத்த போது உங்களுடைய எந்தப் பணி கருத்தில் கொள்ளப்பட்டது?
கொ: ஒருங்கிணைப்பின் (collaboration) முக்கியத்துவத்தை அவர்கள் கருத்தில் கொண்டார்கள் என்று நினைக்கிறேன். ஒரு திரைப்படம் தயாரிப்பதில் ஆயிரக்கணக்கானவர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்கள் எந்த அளவு ஒத்திசைவோடு செயல்படுகிறார்கள் என்பது ஒரு படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைகிறது. அதற்கு அவர்களுக்குள் சரியான செய்திப் பரிமாற்றம் மிகவும் முக்கியம்.

அதுமட்டுமல்லாமல், ஒரு டைரக்டர் ஒரு படத்துக்குத் தன் மனதில் ஒரு கருத்துவடிவம் கொடுத்திருப்பார். அதே 'artistic vision' மற்றவர்களுக்கும் இருக்கவேண்டும். அப்படிப் பலரும் ஒரேமாதிரிப் புரிந்து கொள்வதில் கொலாபரேஷன் சாஃப்ட்வேர் பெரிதும் உதவுகிறது. கலைஞரின் விரல்நுனியில் தகவலை வைத்திருக்க உதவுகிறது. படத்தில் வரும் ஒரு ஷாட் 30 வினாடியிலிருந்து ஒன்றரை நிமிடம்வரை இருக்கலாம். ஆனால் அந்த ஒன்றரை நிமிட ஷாட்டுக்கு லைட்டிங் டீம், அனிமேஷன் டீம் என்று பல டீம்கள் வேலைசெய்யும். அந்த வேலைகளை எல்லாம் ஒன்று சேர்க்க ஒரு டீம் இருக்கும். இறுதியில் டைரக்டர் பார்த்து ஓகே சொல்லவேண்டும். இல்லையென்றால் மறுபடி முதலிலிருந்து தொடங்கும். இப்படி ஆயிரக்கணக்கான ஷாட்கள் சேர்ந்தால்தான் ஒரு படம் உருவாகும்.

தவிர, ஆண்டுதோறும் கம்ப்யூட்டரின் ஆற்றல்கள் அதிகரிக்கின்றன. அதில் இருக்கும் ஃபைல் அளவு, மீடியாவின் அளவு எல்லாம் பெரிதாகிக்கொண்டே போகிறது. அதுவும் தவிர முன்புசொன்ன அனொடேஷன் என்கிற டைரக்டரின் சுட்டுக்குறிப்புகள், அதுவும் ஏராளமாக இருக்கும். எல்லாவற்றையும் ஒருங்கிணைப்பதும் மிகவும் முக்கியம். 1996ல் நாங்கள் தொடங்கும்போது இப்படி எதுவும் இருக்கவில்லை. ஆனால், இப்போது பல வணிகரீதியான சாஃப்ட்வேர்கள் கிடைக்கின்றன. அவற்றையெல்லாம் ஒப்பிட்டு அகாடமி இந்தக் கொலாபரேஷன் சாஃப்ட்வேரான இட்வியூ (Itview) சிறப்பானதென்று தீர்மானித்துள்ளது.



தெ: விருது பெற்றதும் உங்களுக்கு எப்படி இருந்தது? இது எதிர்பாராமல் வந்ததுதானே?
கொ: அப்படிச் சொல்லமுடியாது. போட்டிக்கு வந்த பிற சாஃப்ட்வேர் டெமோவெல்லாமும் பார்த்து ஒப்பிடும்போது நாங்களும் உடனிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மொத்தம் 20 என்ட்ரிக்கள் இருந்தன. பார்க்கும்போது நம்முடையது மிகச்சிறந்ததில் ஒன்று, நமக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தோன்றியது. அவர்கள் எங்களைப் பலமுறை நேர்காணல் செய்து தகவல்கள் கேட்டார்கள். ஆனாலும், விருது அறிவிக்கப்பட்டபோது அது பெரிய சர்ப்ரைஸ் ஆகத்தான் இருந்தது. சந்தோஷமாகவும்தான்.

தெ: இந்தியா ஏராளமான மென்பொருள் பொறியாளர்களை ஏற்றுமதி செய்கிறது. அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
கொ: I wish them the best. அவர்கள் மிகச்சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு ஏராளமான இந்திய சாஃப்ட்வேர் எஞ்சினியர்களைத் தெரியும். அவர்கள் மிகக்கடினமான உழைப்பாளிகள். பகலில் கம்பெனியில் வேலை செய்வார்கள். இரவில் போய் இந்தியாவில் இருக்கும் டீமுடன் இன்டராக்ட் செய்வார்கள். அவர்கள் தமது நேரத்தை, குடும்பத்தைத் தியாகம் செய்து உழைக்கிறார்கள். அவர்களுக்கு மிகநல்ல பெயர் இருக்கிறது. அந்தச் சமுதாயத்தின் ஓர் அங்கமாக இருப்பதில் நான் மிகவும் பெருமையடைகிறேன். Hats off to them!

நேர்காணல்: சி.கே. வெங்கட்ராமன்
தமிழில்: மதுரபாரதி

*****


லியோன் கைவண்ணத்தில்
லியோன் பல உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். அவற்றில் சில: ஸ்பைடர் மேன், மென் இன் பிளாக், ஓட்டல் டிரான்சில்வேனியா, தி ஸ்மர்ஃப்ஸ், கிளௌடி வித் தி சான்ஸ் ஆப் மீட்பால்ஸ், ஓபன் சீசன், ஸ்டூவர்ட் லிட்டில்.

*****


சமுதாயத்துக்கு என்ன செய்யலாம்?
சமுதாயத்துக்கு நான் என்ன திருப்பிச் செய்யலாம் என்று என்னைச் சுற்றிலும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இங்கே எனக்கு அதிகத் தொடர்புகள் இல்லை. இந்த விருதுக்குப் பின்னால் சில தொடர்புகள் வந்துள்ளன. நல்ல திறமையுள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு நிதிரீதியாக அல்லது வழிகாட்டியாக (mentoring) இருந்து அவர்கள் வளர்ச்சியடைய உதவத் தயாராக இருக்கிறேன். அப்படிச் செய்பவர்களோடு கைகோக்க நான் தயார். என்னோடு முகநூல் வழியே தொடர்பு கொள்ளலாம். எனது முகநூல்

- கொட்டலங்கோ லியோன்

*****


நான் நம்புவது
பொதுவாக எல்லோருக்கும் தனது ஆர்வம் எதில் என்பது சின்ன வயதிலேயே தெரிந்துவிடுகிறது. அவர்கள் அதைக் கண்ணைத் திறந்து பார்ப்பது முக்கியம். அது விஞ்ஞானம், கலை என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதை அடையாளம் கண்டுகொண்டு, அதைப் பின்தொடர்வது முக்கியம். இரண்டாவது, அதில் சிரத்தையோடு நம் மனதைக் குவிப்பது (focus). நிறைய திறமை, ஆர்வம் இருக்கலாம். வாழ்க்கையில் பல தடங்கல்கள் வரத்தான் செய்யும். ஆனால் போகும் திசையை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தால் எங்கும் போய்ச்சேர முடியாது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் எதையும் சாதிக்க வேண்டுமென்றால் நீ தேர்ந்தெடுத்த விஷயத்தைத் தொடர்ந்து செய்தால், நல்ல உயரங்களை எட்டலாம்.

- கொட்டலங்கோ லியோன்
More

ஓவியர் இளையராஜா
Share: 




© Copyright 2020 Tamilonline