Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
கவிதைப்பந்தல் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 19)
- கதிரவன் எழில்மன்னன்|மார்ச் 2016|
Share:
அலெக்ஸ் மார்ட்டனுக்கு மிக அதிகப் பணத்தேவை இருப்பதாகச் சூர்யா யூகிக்கவும், அதனால் தன்னையே சந்தேகிப்பதாக உணர்ந்த அலெக்ஸ் பொங்கியெழுந்து எரிமலையாக வெடிக்கவும், அகஸ்டா அவரைச் சமாதானப்படுத்த செய்த முயற்சி தோல்வியையே தழுவியது. முதுகுப் புறத்தைக் காட்டிய அலெக்ஸ் கையை உயர்த்தி வெளியேறுமாறு கூச்சலிடவே அகஸ்டா துப்பறியும் மூவரை அடுத்த சந்திப்புக்கு அழைத்துச் சென்றாள்.

அகஸ்டா மன்னிப்புக் கோரினாள். "ஸாரி சூர்யா, நீங்க அலெக்ஸைக் கேட்டது எனக்கும் சம்மதமில்லைதான். அவர் குட்டன்பயோர்குக்காக எவ்வளவு முயற்சி செஞ்சிருக்கார். அவரை நிச்சயம் சந்தேகிக்க முடியாது. ஆனாலும் அவர் அப்படி உங்களைத் திட்டி வெளியே தள்ளியிருக்கக் கூடாது. அவர் சார்பா நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன். அவரை நான் அப்புறம் பார்த்துப் பேசி சமாதானப் படுத்தறேன்."

சூர்யா கையசைத்து மறுதலித்தார். "அதுபத்தி ஒண்ணும் கவலையே வேணாம் அகஸ்டா. மன்னிப்புக் கோரத் தேவையேயில்லை. அலெக்ஸுக்குக் கோபம் வரும்னு எனக்கு நல்லாவே தெரியும். நான் அந்தப் பணத்தேவையைப் பத்தி யூகிச்சதும் நான் ஒண்ணும் சொல்லாம என் மனசுக்குள்ளயே குறிச்சிருந்திருக்கலாம். அவர் அதை எப்படி எடுத்துக்கறார்னு பாக்கத்தான் அப்படி அதிரடியா திடீர்னு கேட்டேன். அவரது வெடிச்சதுல எனக்குத் தேவையான விவரம் கிடைச்சாச்சு. அதுபோதும்."

அகஸ்டா ஆச்சர்யத்துடன் வினவினாள். "விவரம் கிடைச்சுடுச்சா!"

சூர்யா, "அதைப்பத்தி இப்ப விவரிக்கறது சரியில்லை. எல்லாரையும் சந்திச்சப்புறம் மொத்தமா யோசிச்சாத்தான் சரியான முடிவோட விளக்கலாம். அடுத்தது யாரை சந்திக்கப் போறோம்?" என்றார்.

சூர்யா உறுதியாக மறுத்துவிடவே, தன் வினாத் தோரணத்தைப் பெருமூச்சுடன் விழுங்கிக் கொண்ட அகஸ்டா, அடுத்து நடக்க வேண்டியதை கவனிக்கலானாள். "ஹூம்.... ஓகே, சரி, நாம் அடுத்து என் நிதி நிர்வாக மேலதிகாரி ஜேகப் ரோஸன்பர்கை சந்திக்கலாம்" என்று கூறிவிட்டு அவரது அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றாள்.

ஜேகபின் அறை அலெக்ஸின் அறைக்கு நேர் எதிர்மாதிரியாக மிகவும் நேர்த்தியாக இருந்தது.

அகஸ்டா மூவரையும் ஜேகபுக்கு அறிமுகம் செய்துவைத்தாள். கிரண் ஜேகபைப் பாராட்டினான். "ஆஹா, என் நிதித்துறை நிபுணர் ஒருத்தரைச் சந்திக்கறது ரொம்ப ஆனந்தமாயிருக்கு. இதுவரை எங்க கேஸ்ல இந்த மாதிரி ஒருத்தரை நான் சந்திச்சதில்லன்னுதான் நினைக்கறேன். என்ன சூர்யா?"

சூர்யாவும் தலையாட்டி ஆமோதித்தபடி அறையைச் சுற்றி நோட்டம் விட்டார். ஷாலினி அறையைச் சுற்றிப் பார்த்துவிட்டுப் பாராட்டினாள். "நீங்க அறையில் ஒரு தும்பு தூசியில்லாம வச்சிருக்கீங்களே, பிரமாதம். போன விஞ்ஞான அறைக்கும் இந்த நிதியலுவலகத்துக்கும் எவ்வளவு வித்தியாசம்! வாவ்! கிரண் நீயும் நிதித்துறைங்கறே, உன் வீட்டை இப்படி பளிச்சுன்னு வச்சுக்கயேன். குப்பைமேடு மாதிரி எல்லாத்தையும் போட்டு வச்சிருக்கயே!"

கிரண் பதிலுக்குப் பழித்தான். "ஆஹா, என்னருமைத் தமக்கையே, நீ என்னமோ பெரிய பரிசுத்த தேவதைன்னு நெனைப்போ? உன் வீட்டை வச்சிருக்கற லட்சணம் எனக்குத் தெரியாதா என்ன?"

ஜேகப் சிரித்தார். "ஓ, அக்கா தம்பி சண்டையா?! ரொம்ப நல்லாயிருக்கு! எனக்கு எப்போதுமே இருக்கற இடத்தை நேர்த்தியா வைக்கறது மிக முக்கியம். ஒவ்வொண்ணுக்கும் ஒரு இடம் இருக்கணும், அதனதன் இடத்துல அதது இருக்கணும்!"

சூர்யா இடைபுகுந்து ஓர் அதிர்வேட்டு வீசினார்! "அது நல்ல நோக்குதான், பாராட்டறேன் ஜேகப்! ஆனா, அதைவிட நான் பாராட்ட வேண்டிய விஷயம், உள்நபர் வர்த்தக (insider trading) விவகாரத்தினால் வால் ஸ்ட்ரீட் வேலையை இழந்து, பெரும் அபராதம் கட்டவேண்டிப் போனாலும் மனமுடையாமல், இந்தப் புதுவேலை, புது வாழ்வை அமைத்துக் கொண்டு அதிலும் மிகச்சிறப்பாகச் செய்கிறீர்களே, அது இன்னும் பிரமாதம்!"
சூர்யா கூறியதைக் கேட்டு ஜேகப் இடிந்துபோய் நாற்காலியில் தொப்பென்று அமர்ந்து தலையை கவிழ்த்து கைகளால் தாங்கி முகத்தை மூடிக்கொண்டார். அகஸ்டாவும் அதைக் கேட்டு அதிர்ந்தே போனாள். "என்ன... உள்நபர் வர்த்தகமா? அபராதமா! ஜேகப் என்ன இது உண்மையா? நம்பவே முடியலையே."

ஜேகப் தன் நாற்காலியிலிருந்து உணர்ச்சிப் பிழம்பாக குதித்தெழுந்தார். "ஆஹாஹா! என்ன ஒண்ணுமே தெரியாத மாதிரி இன்னொஸென்ட்டா நடிக்கறீங்க, அகஸ்டா! நீங்க அனுப்பி வச்சிருக்கற பாம்புதானே இந்த சூர்யா? நானே மறந்திருக்கற என் பழங்கால வாழ்க்கைக் கறையைக் குடைந்தெடுக்க வேற காரணமேயில்லை. உங்க நிறுவனத்துக்கு எதோ ஒரு பங்கம் வந்துடுச்சுங்கறத்துக்காக என் தனிவாழ்க்கையில் நடந்த ஒரு இழிசம்பவத்தைக் குடைய வச்சிருக்கீங்களே, சே! ஐ ஹேட் யூ, ரியலி ரியலி ஹேட் யூ!"

அகஸ்டா அவசரமாக உணர்ச்சியுடன் மறுத்தாள். "ஜேகப், நான் சத்தியமா சொல்றேன்.

எனக்கு இந்த நிமிஷம் வரைக்கும் இந்த விஷயம் தெரியாது. அது மட்டுமில்ல சூர்யாவுக்கும் ஜேகப் ரோஸென்பர்குன்னு ஒரு ஆள் இருக்கார்னே இன்னிக்குதான் தெரியும். அவர் இந்த அறையில இருக்கற எதையோ வச்சுதான் யூகிச்சிருக்கணும். என்னைப்பத்தியும் , அலெக்ஸைப் பத்தியும் இந்த மாதிரிதான் சில நொடிகளுக்குள்ள யூகிச்சு அதிரவச்சிட்டார். சொல்லுங்க சூர்யா, எதை வச்சு இந்த ரகசிய விவரத்தைக் கண்டு பிடிச்சீங்க?"

ஜேகப் நம்ப மறுத்தார். "இருக்க முடியாது, சில நொடிகளுக்குள்ளயா... எப்படி? நம்ப மாட்டேன். சரி, ஒரே ஒரு சான்ஸ் குடுக்கறேன். சொல்லட்டும் பாக்கலாம்".

சூர்யா முறுவலித்தார். "நான் சொன்னப்புறம் என்ன சே, இவ்வளவுதானாங்கப் போறீங்க. சரி பரவாயில்லை சொல்றேன். ரொம்பச் சின்ன தடயந்தான், ஆனா அத்தனை விவரமும் கொடுத்த தடயம். நீங்களே மறந்துட்டீங்க போலிருக்கு. அதோ பாருங்க உங்க மேஜைமேல் இருக்கற கண்ணாடித் தளத்துக்குக் கீழே வச்சிருக்கற செய்தித்தாள் துண்டு தலைப்பு சொல்லிடுச்சு: வால்ஸ்ட்ரீட் ரோஸன்பர்க் உள்வர்த்தகத் தண்டனை". பொதுவா அது மேலஎதாவது புத்தகம் வச்சு மறைக்கப்பட்டிருக்கும் போலிருக்கு, இன்னிக்கு அது கொஞ்சம் தள்ளி கோணலாயிருக்கு பாருங்க. அந்தக் கோணல்தான் என் கண்ணை முதலில் உறுத்திச்சு. அப்பதான் அந்தக் துண்டுக் காகிதத்தைத் தலைகீழாப் படிச்சு வேலை போனது, அபராதம் எல்லாம் யூகிச்சேன்."

ஜேகப் மீண்டும் தொப்பென்று நாற்காலியில் அமர்ந்தார். "நல்ல யூகந்தான் ஒத்துக்கறேன்... அது என் வாழ்க்கையிலேயே இருண்ட நாள். நான் தெரிஞ்சு செய்யாத, ஒரு கிராதகனால் ஏமாற்றப்பட்டு தற்செயலா நடந்த தப்புக்காகத் தண்டனை அனுபவிச்சேன். நியூயார்க்கே வேணாம்னுதான் இங்க வந்தேன். அந்தக் காகிதத்துண்டை மட்டும் என் மனச்சாட்சியா வச்சிருந்தேன். ஆனா இன்னிக்கு வெளிவந்துடுச்சு. பரவாயில்லை, ஏற்கனவே வெளிவந்த விஷயந்தானே, போகட்டும். இப்ப உங்களுக்கு என்ன வேணும் அந்த விஷயத்துக்கு வாங்க."

கிரண் இடைமறித்தான். "ஓ! வால் ஸ்ட்ரீட்டா? அந்தத் தொடர்புகளால்தான் குட்டன்பயோர்குக்கு அப்படி சட்டுன்னு நிதி திரட்ட முடிஞ்சது போலிருக்கு!"

ஜேகப் சோகமாக முறுவலித்தார். "கரெக்ட்! பாம்பின் கால் பாம்பறியும். கிரண் நீயும் நிதித்துறைன்னு அறிமுகம் சொன்னாங்களே, அது நல்லாத் தெரியுது!"

சூர்யா திடீரென இடைபுகுந்து இன்னொரு அணுகுண்டைப் போட்டார்! "ஜேகப், உங்க நிதி விவகாரப் பிரச்சனைகள் இன்னும் தீரலை போலிருக்கே? லாஸ் வேகாஸ்ல நிறைய பெட் வச்சு பணம் இழந்திருக்கீங்க போலிருக்கே? அதுக்கு உங்க சம்பளம் போதாதுன்னு எனக்குத் தோணுது, எப்படி சமாளிக்கறீங்க?"

ஜேகப் மீண்டும் இடிந்தே போனார். "என்ன... எப்படி..." என்று தடுமாறியவர், நிற்கமுடியாமல் தள்ளாடி மேஜைமேல் கைவைத்துச் சாய்ந்து கொண்டார். அகஸ்டா சீறினாள். "சூர்யா, திஸ் ஈஸ் ஜஸ்ட் டூ மச்! ஏன் இப்படி ஜேகபை இன்ஸல்ட் பண்றீங்க? எனக்குக் கொஞ்சங்கூட பிடிக்கலை. அவர்கிட்ட இப்பவே மன்னிப்புக் கேளுங்க."

ஷாலினி சினத்துடன் இடைமறித்தாள். "இன்ஸல்ட்? நிச்சயமாயில்லை. அவர் முகத்தைப் பாருங்க. சூர்யா சொன்னதெல்லாம் உண்மைன்னு புரியும். சூர்யா இதை எப்படி யூகிச்சீங்க, விளக்குங்க. அகஸ்டாவுக்குப் புரியட்டும்."

சூர்யா விளக்கினார். "ஜேகப் தன் சூதாட்டத்தை மறைச்சு வைக்கற முயற்சியில ஒரு அடிப்படைத் தவறு செஞ்சிட்டார். தன் மடிக்கணினியின் திரையை மறைக்கற கருந்திரை மாட்டியிருக்கணும் இல்லன்னா அது முழுவதும் மூடி அல்லது பின்புறம் திருப்பியாவது வச்சிருக்கணும். ஆனா ஒரு கோணத்துல கொஞ்சம் தெரியறா மாதிரி வச்சிருக்கார் பாருங்க. அதையும் நான் கவனிச்சேன். அதுல தெரியற சூதாட்டக் கணக்கைப் பாத்தப்புறம் ரொம்ப அதுக்குமேல பெரிசா யூகம் ஒண்ணும் தேவையிருக்கலை."

ஜேகப் பெருமூச்சுடன் சுதாரித்துக்கொண்டார். "ஆமாம். எனக்கு சூதாட்டப் பழக்கம் இருக்குதான். அதனால உங்களுக்கென்ன. அது என் தனிவிஷயம். இந்தப் பழக்கத்துனாலதான் நியூயார்க்லயும் அந்தக் கிராதகன்கிட்ட கடன் வாங்கி, உள்வர்த்தக ஊழலிலயும் மாட்டிக்கிட்டேன். ஆனா அதுக்கும் குட்டன்பயோர்க் பிரச்சனைக்கும் எதாவது சம்பந்தப்படுத்தி சந்தேகப்பட்டா உங்களுக்கு நிச்சயம் பைத்தியந்தான் இருக்கணும். போங்க வெளியில. நான் ரொம்ப ஆடிப் போயிருக்கேன். கொஞ்சம் தனியா இருக்கணும்" என்று கூறிய ஜேகப், எதையோ சொல்ல வாய்திறந்த அகஸ்டாவைக் கையுயர்த்திக் காட்டித் தடுத்தார். "ப்ளீஸ் அகஸ்டா என்னைப் போட்டு புரட்டி எடுத்தது போதும். கொஞ்சம் தனியா விடுங்க. அப்புறம் பேசலாம்." என்று நாற்காலியில் மீண்டும் தொப்பென விழுந்து முகத்தைக் கைகளில் புதைத்துக் கொண்டார்.

அகஸ்டா பெருமூச்சுடன் நம் துப்பறியும் மூவருடன் அறையிலிருந்து வெளியேறினாள். அடுத்து யாரைச் சந்திக்க வைக்கலாம் என்று அவளுக்கு திகைப்பாகிப் போனது....

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline