Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
கவிதைப்பந்தல் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
புதினம்
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 23)
- சந்திரமௌலி|மார்ச் 2016|
Share:
Click Here Enlargeதெளிவு பிறந்தது

"என்ன ஆச்சு கேந்திரா? ஏன் இவ்வளவு லேட்? ஃபோன் பண்ணினாலும் நாட் ரீச்சபிள்னு மெசேஜ் வருது? நம்மச் சுத்தி எவ்வளவு ஆபத்து இருக்குனு தெரிஞ்சும் ஏன் இப்படி பொறுப்பில்லாம இருக்கே?" அறையினுள் நுழைந்த கேந்திராவைப் பார்த்து இரைந்தார் விஸ்வனாத். அவர் அவ்வளவு மன அழுத்தத்தோடு இவ்வளவு ஆத்திரப்பட்டு இதற்குமுன் கேந்திரா பார்த்ததில்லை. அந்த அதிர்ச்சியின் பிடியிலிருந்து சில நொடிகளில் விடுபட்டு, சக்கரவர்த்தியின் சதித்திட்டம், வழியில் தன் செல்ஃபோன் பிடுங்கப்பட்டு அதைப் பிடுங்கிய ஆள் பலியானது என எல்லாவற்றையும் அவரிடம் சொல்லிமுடித்தாள்.

விஸ்வனாத் அந்த நிகழ்வுகளைத் தான் ஏற்கமுடியவில்லை என்பதை அனிச்சையாகத் தன் வேகமான தலையாட்டலில் தெரிவித்து, "கம் மை சைல்ட். சாரி ஃபார் யெல்லிங் அட் யூ" என்று மகளை அருகே அழைத்து ஆதரவாக அணைத்துக்கொண்டு, "ஐ நோ சக்கி இஸ் எ ஸ்கீமர். ஆனா அவன் இவ்வளவு கீழ எறங்கி, இல்லீகலா போவான்னு நெனைக்கவேயில்லை. ஐ மேட் எ ஜட்ஜ்மெண்டல் எரர் அபவுட் தட் ஸ்கவுண்ட்ரல். இப்ப அவனை லீகலா மாட்டவெக்க நம்மகிட்ட எந்த ஆதாரமும் இல்லை. உன் செல்ஃபோன் போயிடுச்சு. இப்ப அவனை போர்டுலேருந்து விலக்கணும்னா, மத்த போர்டு மெம்பர்ஸோட ஒத்துழைப்பு வேணும். அதுல நாம நேரத்தை வீணடிச்சா புது ப்ராடக்டை சொன்ன நாள்ல லாஞ்ச் பண்ணமுடியாது. அதனால, நாம புது ப்ராடக்டை கொண்டுவரதுல இன்னும் முனைப்பா இப்ப இருக்கணும்" என்றார்.

"அப்ப சக்கரவர்த்திய இப்படியே விட்டுடப்போறீங்களா? அவர் இதுக்குமேல டிரபிள் பண்ணமாட்டார்னு என்ன நிச்சயம்?"

"நோ நோ.. நான் அப்படி சொல்லலை. சக்கரவர்த்திய நிச்சயம் நாம போர்டை விட்டுத் தூக்கணும். அவனைச் சட்டப்படி ஃப்ரேம் பண்ணி, நம்ம கம்பெனிக்கு பண்ணின துரோகத்துக்கெல்லாம் தண்டனை வாங்கித் தரணும். ஆனா, அவசரப்படக் கூடாது. புது எஞ்சினை வெற்றிகரமா கொண்டுவந்துட்டா, போர்டு மெம்பர்ஸ் என் சொல்படி எதுவும் கேப்பாங்க. அப்ப சக்கரவர்த்திய கவனிச்சுக்கலாம்"

"புது ப்ராடக்ட் வெளிவராம இருக்க அவர் என்ன வேணும்னா பண்ணத் துணிஞ்சுட்டாரு டாடி. தன்னை யாரும் எதுவும் செய்யமுடியாதுனு நெனைக்கறாரு."

"யெஸ், யூ ஆர் ரைட். இனிமே நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். செக்யூரிட்டி அதிகம் பண்ணியிருக்கேன். புது ப்ராடக்ட் லாஞ்ச் பண்றவரை நீ என்கூடவே இரு. தனியா எங்கேயும் போகாதே. எனக்கு நிறைய வேலை இருக்கு. லெட் மீ கெட் பேக் டு மை வொர்க்."

"நானும் வரேன் டாடி" என்று வாய் சொன்னாலும், இந்த பிரச்சனையால் தன் சுதந்திரம் பறிபோனதை நினைத்து வருந்துவதை அவள் கண்கள் தெரிவித்தன. பரத்துக்கு நான் அனுப்பின செய்தி கிடைச்சிருக்குமா? அது கிடைச்சும் அவன் ஏன் திரும்பக் கூப்பிடலை? ஒருவேளை பரத் உண்மையாக நம்மைக் காதலிக்கவில்லையோ? இல்லை அவனும் வேறு ஏதாவது ஆபத்தில் மாட்டியிருப்பானோ? என்றெல்லாம் பல யோசனைகள் தேர்தல் நேரத்துப் புதிய கட்சிகள் போல சம்பந்தா சம்பந்தமில்லாமல் கேந்திராவின் மனதில் குழப்பமாகத் தோன்றின.

"புது செல்ஃபோன் நாளைக்கு அதே பழைய நம்பரோட வாங்கிடலாம்" என்று விஸ்வனாத் சொல்லவும், கேந்திராவுக்கு அப்போதுதான் தன் செல்ஃபோன் தன்னிடம் இல்லாதது மறுபடி நினைவுக்கு வந்தது. பரத் ஒருவேளை தன்னைத் தொடர்புகொள்ள நினைத்திருந்தாலும், இப்போது அது முடியாது என்பது உரைத்தது. அப்படி பரத் தன்மீது உண்மையான அக்கறை உள்ளவனாயிருந்தால், நம்மைத் தொடர்புகொள்ள முடியாமல் போனதும், பதறி அடித்து உடனே நம்மைப் பார்க்க வரவேண்டும். இந்த எண்ணம் அவளுக்கு சமாதானத்தை அளித்ததோடு, பரத் தன்மேல் வைத்திருப்பது உண்மையான அன்பா இல்லையா என்பதைச் சோதிப்பதற்கான கருவியாகவும் பட்டது. "நாளைக்குள் எப்படியாவது என்னைப் பார்க்க வந்துவிடு பரத். நம் காதல் உண்மையானது என்று நிரூபி பரத்" என்று மனசு பதறிப் பிரார்த்தித்தது.

மறுநாள் அதிகாலையில் திருவல்லிக்கேணி அக்பர் சாகிபு தெருவில் மற்ற வீடுகளுக்கெல்லாம் பொழுது வழக்கம்போலவே புலர்ந்தது. அதே பால், பேப்பர் லேட் என்ற சலிப்பு, தண்ணீர் பிடிக்க அடிதடி, ஒண்டுக் குடுத்தனங்களுள் பாத்ரூம்பிடி யுத்தம், அள்ளி அடைத்துக்கொண்டு இளசுகளிலிருந்து பெருசுவரை அதனதன் வேலைக்கு அலறிப்புடைத்து ஓடல். மனோகரின் வீடு இதற்கு வித்தியாசமாக இருந்தது. ஆம், பரத் வீடு திரும்பிவிட்டான். அவன் மட்டுமல்லாமல் கூடவே வள்ளியம்மாளையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டான். சென்னை வந்து இறங்கியதுமே பரத் கதிரேசனிடம், "அண்ணே நீங்க வீட்டுக்குப் போங்க. நான் இப்படியே ஒரு ஆட்டோ வச்சுக்கிட்டு பாட்டியோட என் வீட்டுக்கு போயிடறேன். வீட்ல கொஞ்சம் பிரச்சனையாகும். அப்ப நீங்க இருக்கவேணாம். பதினோரு மணி வாக்குல நீங்க வீட்டுக்கு வாங்க. நானும், நீங்களும் சேந்தே ஆஃபீஸ் போகலாம். சரியா?" என்றான்.

கதிரேசன் அதை ஏற்றுக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினார். பரத் தன் வீட்டுக்கு வந்ததும் முதலில் தன் போர்ஷனுக்குள் நுழையாமல், நேரே மனோகரைப் பார்க்க மாடிக்கு வள்ளியம்மாளோடு போனான். வள்ளியம்மாளை மனோகரின் அம்மாவுக்கு அறிமுகப்படுத்திவிட்டு மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டிருந்த மனோகரைப் பார்க்கப்போனான். லுங்கியோடு பாய் தலையணையில் இளவெயில் முகத்தில் படுவதும் தெரியாமல் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த மனோகரைத் தட்டி எழுப்பினான். விருட்டென்று எதிர்பாராத அந்த உலுக்கலில் விழித்த மனோகர் பரத்தைப் பார்த்ததும் கனவோ என்று மிரண்டான். பின் சுதாரித்துக்கொண்டு, அவனை அருகில் இருந்த தலையணையால் மொத்தியவாறே, "எங்கடா போய் தொலைஞ்ச? ஒரு காண்டாக்ட் இல்லை. எங்க இருக்கன்னு ஒரு வெவரமும் இல்லை. மண்டை காயவெச்சுட்ட. ஏண்டா இப்படி பண்ண?" என்று கோபித்துக்கொண்டான்.
"எல்லா விவரமும் சொல்றேன். மொதல்ல எழுந்திருச்சு வா. பெரிய கதையே இருக்கு. அது மட்டுமில்லை, உங்க அப்பா, என் அங்கிள் கனகராஜை யாரு காலிபண்ணக் காரணமாயிருந்தாங்கங்கற உண்மையும் ஆதாரத்தோட தெரிஞ்சிருச்சு. எனக்கு அதிகம் நேரமில்லை. நிறைய வேலையிருக்கு. வா, ரெடியாயிகிட்டே பேசுவோம்."

"என் அப்பாவைக் கொன்னது யாருன்னு தெரியுமா? மொதல்ல அந்த வெவரத்தை சொல்லு" பதறினான் மனோகர்.

"அவசரப்படாதேடா. கெளம்பு, முகத்தை அலம்பிட்டு வா. போய் நம்ம நாயர் கடைல டீ சாப்பிட்டுட்டே பேசுவோம். நான் இன்னும் என் வீட்டுக்குக்கூட போகலை."

மனோகர் பாய், தலையனணையை பரபரப்பாக சுருட்டிவிட்டு, தயாராகி பரத்தோடு டீக்கடைக்குப் போனான். பரத்தின் வீட்டுவாசல் இன்னும் சாத்தியே இருந்தது அவர்களுக்கு நல்லதாய்ப் போயிற்று. டீக்கடையில் அவ்வளவு கூட்டமில்லை. இரண்டொரு பழகிய முகங்களின்"நல்லாயிருகீங்களா தம்பி, பாத்து ரொம்ப நாளாச்சு" விசாரிப்புகள், பழகாத ஆனால் பரிச்சயமான முகங்களின் "அட இங்க எங்க" என்று வெளிச்சம்போட்ட கண்கள், இதைத்தவிர நண்பர்கள் சம்பாஷணைக்கு அதிகத் தொந்தரவில்லை. நாயர் எந்தச் சலனமும் காட்டாமல் அவர்களை வரவேற்று, "ஒன் பை டூ தானே. டேய் தம்பி பட்டர் பிஸ்கட் ரெண்டு குடு" என்று அவர்கள் ஆறுமாதம்முன் அவரை விட்ட இடத்திலிருந்து முகமலர்ச்சியோடு தொடர்ந்தார். பரத்துக்கு மனோகரோடு மறுபடி அந்த டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து அதிகாலையில் டீ அருந்துவது, டைம் மெஷினில் கடந்தகாலத்துக்குப் போனதைப்போல ஒரு ஆறுதலைத் தந்தது. சே எவ்வளவு நடந்துருச்சு இந்த ஆறுமாசத்துக்குள்ள? கவலையில்லாம சுதந்திரமா இருந்தோம். இப்ப ஒரு பெரிய கடமை, பொறுப்பு அதோட இதையெல்லாம் சரியா நிறவேத்தணும்ங்கிற கவலை.

"ஏட்டா டீ, பிஸ்கட்" டீக்கடை பையனின் உபசரிப்பு அவன் எண்ணத்தைக் கலைத்தது.

பரத் சுருக்கமாகத் தான் சென்றதிலிருந்து தன் பாட்டி வள்ளியம்மையின் பின்னணிக்கதை, கேந்திரா தனக்கு அனுப்பிய செய்தி, அவளுக்கு வந்திருக்கும் ஆபத்து எல்லாவற்றையும் மனோகரிடம் சொன்னான். "என்னடா சொல்ற? அப்ப உன்னைக் கொல்ல ஆள் அனுப்பினது என்மேல பிரியமா இருக்கிற என் மொதலாளி சக்கரவர்த்தியா? என்னால நம்பமுடியலை பரத்" என்றான் மனோகர்.

"அந்த சக்கரவர்த்தி எதுக்கும் துணிஞ்சவன். அதுலயும் பணம், ஆள் பலம் உள்ளவன். என்னை மடக்கறதுக்காகவே உன்னைத் தனக்குப் பக்கத்துல வெச்சிருக்கலாம். உன்மேல இல்லைன்னா அவன் ஏன் பாசமாயிருக்கணும்? ட்ரான்ஸ்ஃபர் குடுக்கணும்? இன்னும் நம்பிக்கையில்லனா, இதோ இந்த வீடியோவைப் பாரு" என்று கேந்திரா தனக்கு அனுப்பியிருந்த வீடியோவைப் போட்டுக்காட்டினான்.

"ஓ நோ.. என்கிட்ட எப்படியெல்லாம் நடிச்சிட்டான் இந்த ராஸ்கல். இவனை இப்பவே நேரா போயி என் கையாலயே கொல்லணும்" என்று ஆவேசப்பட்ட மனோகரை ஆசுவாசப்படுத்தினான் பரத்.

"அவசரப்படியானா காரியமே கெட்டுரும். நீ இனிமே அவன் இருக்கிற திசைப்பக்கமே போகக்கூடாது. நீ தனியா போனா உன்னை என்ன வேணும்னாலும் பண்ணுவான். அவன் சுதாரிக்கிறதுக்குள்ள, நாம இந்த ஆதாரத்தை வச்சு போலிசுக்குப்போயிடணும். நீ இனிமே அந்த ஆபீசுக்குப் போயிடாதே."

முழுதும் சமாதானமாகாவிட்டாலும், பரத்தின் யோசனையில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு மனோகர் அதற்குச் சம்மதித்தான். டீகிளாசை திரும்பக்கொடுக்கும்போது, டீக்கடை முகப்பில் தொங்கிகொண்டிருந்த தலைப்புச்செய்திகள் பரத்தின் கவனத்தை ஈர்த்தது. "உயிர்பலியில் முடிந்த வழிப்பறி. மெரீனா சாலை பயங்கரம்" என்ற அறிவிப்போடு வெல்டிங் மணியின் சடலம் எட்டுகாலத்துக்கு ரத்தவெள்ளத்தில் இருப்பதை படமாகவும் போட்டிருந்தார்கள்.

"அண்ணே ஒரு பேப்பர் எடுத்துக்கறேன்" என்று காசைக்கொடுத்துவிட்டு, விறுவிறுப்பாக அங்கேயே அந்த செய்தியைப் படித்தான். கேந்திராவின் கைபேசிப் பறிப்பில் இந்த விபத்து நடந்ததை அந்தச் செய்தி தெரிவித்தது. இப்போது பரத்துக்கு எல்லாம் விளங்கிவிட்டது. கேந்திரா, சக்கரவர்த்தியின் பேச்சை வீடியோ எடுத்த விஷயம் சக்கரவர்த்திக்குத் தெரிந்து, கேந்திராவிடமிருந்து ஆதாரத்தைப் பிடுங்கத் தன் ஆளை அனுப்பியிருக்கிறார். அதில் அவன் பலியாகிவிட்டான் என்பது புரிந்தது.

ஒருவிதத்தில் கனகராஜைப் பலிகொண்ட அந்த மிருகம் இறந்ததில் ஒரு நிறைவு இருந்தாலும், கேந்திராவின் கைப்பேசியைப் பறிக்கும் முயற்சியில் இவன் அவளை எதுவும் செய்யத் துணிந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியபோது அவன் உடல் பதறியது. சக்கரவர்த்தியை இனி விட்டுவைக்கக்கூடாது, உடனே சட்டப்படி நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று தீர்மானித்தான்.

"அப்படி என்ன நியூஸ் ஆழ்ந்து படிக்கிறே? வழக்கமா சிட்டில நடக்கற விபத்துதானே" என்றான் மனோகர். "இல்லை மனோ, இந்த விபத்துல இறந்து கெடக்கறானே இவர் பேரு மணி. இவந்தான் என்னைக் கொல்லவந்து, அந்த முயற்சில அங்கிள் கனகராஜை கொன்னவன். கடவுளே இவனுக்கு தண்டனை குடுத்துட்டாரு" என்றான்.

டீக்கடையிலிருந்து வீட்டுக்கு ஒரு இறுக்கமான அமைதியோடே அந்த நண்பர்கள் நடந்தார்கள். இப்போது பரத்தின் வீட்டுக்கதவு திறந்திருந்தது. அவன் அப்பா மோகன் தண்ணீர் பிடிக்கத் தயாராகிக்கொண்டிருந்தது தெரிந்தது. மோகன் பரத்தை தூரத்திலேயே பார்த்துவிட்டு, குடத்தை தொப்பென்று போட்டுவிட்டு ஓடிவந்தார், "கஸ்தூரி, யார் வந்துருக்கா பாரு. சீக்கிரம் வா."

கஸ்தூரியும் என்னவோ ஏதோவென்று போட்டது போட்டபடி அடுக்களையிலிருந்து ஓடிவந்தாள். ஒரு விவரமும் சொல்லாமல், எந்தத் தொடர்பும் இல்லாமல் இவ்வளவு நாள் இருந்ததால், கோபமும், அதோடு இப்பவாவது வந்தானே என்ற மகிழ்ச்சியும் கலந்து ஓடியது. "நான் திரும்பி வர்றதாவே இல்லை. எனக்கு லைஃபே வெறுத்துப்போயி எதுலயும் இன்டரஸ்ட் இல்லாம, தன்னம்பிக்கை குலைஞ்சு ஒரு கிராமத்துல போயி இருந்தேன். ஆனா, அங்க என்னைவிட கஷ்டத்தையும் சோகத்தையும் அனுபவிச்ச ஒரு அம்மாவைப் பார்த்தேன். அவங்க கதையைக் கேட்டதும் என் கஷ்டமெல்லாம் ஒண்ணுமில்லைனு தெரிஞ்சது மட்டுமில்லை, நம்ம ஆசை, சுகபோகங்களை அனுபவிக்கிறது இதெல்லாம் ரெண்டாம் பட்சம்தான். எல்லாருக்கும் வாழ்க்கைல ஒரு பெரிய லட்சியம் இருக்கனும். அந்த லட்சியம் சுயலாபத்துக்காக இல்லாம, பொதுவா எல்லாருக்கும் உபயோகமாகிறமாதிரி இருக்கணும். அதுக்காக நாம எவ்வளவு சோதனை வந்தாலும், அதை சமாளிச்சா, அது கஷ்டமாவே தெரியாது, எல்லாமே சந்தோஷமாவே இருக்கும்னு எனக்கு புதுப் பாடத்தையே கத்துக்குடுத்தாங்க அந்த அம்மா. அவங்கனாலேதான் நான் இப்ப திரும்பி வந்தேன். இன்னிலேருந்து வேலைக்குப் போகப்போறேன். என் கம்பெனியோட புது எஞ்சினை சக்ஸஸ்ஃபுல்லா கொண்டுவந்து அந்த பெரிய லட்சியத்தை நிறைவேத்துவேன்" என்று ஒரே மூச்சில் சொல்லிமுடித்தான்.

பையனின் இந்த புதிய தீர்மானமும் உற்சாகமும், கஸ்தூரியையும் மோகனையும் பெருமிதம் கொள்ளவைத்தன. "நானும் நம்ம வேலை உண்டு நாம உண்டுனு, கெடைக்கறவேலை சொகுசா இருந்தா போதும்னு எண்ணம் வச்சிருந்தேன். எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாரு, ஒரு லட்சியத்தை தேடிக்க, உன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கெடைக்கும்னு. நான் கேக்கலை. இனிமே நானும் என் எண்ணத்தை மாத்திக்கிட்டேன்" என்றான் மனோகர்.

"ரொம்ப பெருமையாயிருக்கு. நீங்க ரெண்டுபேரும் நிச்சயம் நல்லா வருவீங்கப்பா. கெடச்ச வேலைய பண்ணிக்கிட்டு என் வீடு, என் குடும்பம்னு இருந்த நான், என் கடமைய செஞ்சுட்டதா நெனச்சேன். ஆனா, வயசு ஆக ஆக ஒரு எந்திரம்போல வாழ்க்கையை கழிச்சிட்டமே, ஒரு அற்புதமான ஜென்மத்தை அஞ்சுக்கும் பத்துக்கும் அல்பதினத் தேவைகளுக்கும் வீணடிச்சிட்டமேனு ஒரு வெறுமை மனசுக்குள்ள தோணுது. எங்க ஆத்தா இப்படி நான் வேதனைப்படக்கூடாதுனுதான், போராடினா. இதோ இவ பேச்சைக் கேட்டு அவ சொன்னதை உதாசீனப்படுத்தினேன்" என்றார் மோகன்.

பேச்சைமாற்றும் வண்ணம், "எது எப்படியோ என் பையன் மறுபடி தெம்பா, நம்பிக்கையோட பேசுறான். வாப்பா, காஃபி தரேன். உன் மனசை மாத்தின புண்ணியவதி யாருன்னு நெதானமா சொல்லு. என் பிள்ளைய எனக்கு மீட்டுக்குடுத்த அவ கால்ல விழுந்து கும்பிடணும்" என்றாள் கஸ்தூரி.

"நெதானமாவெல்லாம் வேணாம். அவங்க இங்கியே வந்துருக்காங்க. இப்பவே கூப்பிடுறேன். கும்பிடுறது மட்டுமில்ல, அவங்க இங்கியே இருக்கணும்னு சொல்வியா?"

"இங்க வந்துருக்காங்களா? யாரு? கூப்பிட்டு வா, நிச்சயம் அந்தப் புண்ணியவதி யாராயிருந்தாலும் இங்க இருக்கச் சொல்றேன்" என்று ஆவல் மிகுதியில் சொல்லிவிட்டாள்.

"சத்தியம் பண்ணிக்குடு, பேச்சு மாறமாட்டேனு."

"என்னப்பா பெரிய வார்த்தையெல்லாம் பேசுற? அம்மா வார்த்தைல நம்பிக்கை இல்லியா? சரி. இதோ சத்தியம் செய்யிறேன், உன்மேல ஆணை அந்த அம்மாவை கூட்டி வா" மோகனுக்குமட்டும் மகன் எதையோ உள்ளர்த்தம் வைத்துக்கொண்டு அவளைச் சிக்கவைக்கிறான் என்று புரிந்ததால் மவுனம் சாதித்தார்.

ஒரே எட்டில் மாடிக்குப்போய் வள்ளியம்மையை பரத் அழைத்து வந்தான். "இதோ இவங்கதான் என் மனசைமாத்தி என் வாழ்க்கைக்குப் புது அர்த்தம் குடுத்தவங்க. இப்ப சொல்லு இவங்கள ஏத்துக்க சம்மதமா?" மறைவில் இருந்த வள்ளியம்மையை அலுங்காமல் பற்றி இழுத்து மோகனுக்கும், கஸ்தூரிக்கும் நன்கு தெரியும் வண்ணம் இப்போது நிறுத்தினான் பரத்.

"ஆத்தா! நீங்களா?" அதிர்ச்சியில் ஆழ்ந்தார்கள் மோகனும் கஸ்தூரியும்.

(தொடரும்)

சந்திரமௌலி,
ஹூஸ்டன்
Share: 




© Copyright 2020 Tamilonline