|
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் |
|
- சீதா துரைராஜ்|மார்ச் 2016| |
|
|
|
|
தமிழ்நாட்டில், ஈரோட்டிலிருந்து 18.கி.மீ. தொலைவில் உள்ளது திருச்செங்கோடு. ரயில் அல்லது சாலை வழியே ஈரோடு சென்று அங்கிருந்து சாலைவழியே இத்தலத்தை அடையலாம்.
தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 208வது தலம் இது. திருச்செங்கோடு என்பதற்கு இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை என்பதே ஊருக்கும் பெயராக அமைந்துவிட்டது. பிருங்கி முனிவர் கயிலை வரும்போதெல்லாம் சிவபெருமானை மட்டுமே வழிபடுவார். சிவன் பார்வதி இருவரும் இணைந்து ஒன்றாக அமர்ந்திருந்தால்கூட வண்டு உருவமெடுத்து ஈசனைமட்டுமே வலம்வருவார். இதனால் சினந்த அன்னை உமை, "முனிவரே, சக்தியான என்னை அவமதித்ததால் சக்தியிழந்து போவீர்!" என்று சாபமிட, சிவன், "நானும் சக்தியும் ஒன்றுதான்; சக்தியில்லையேல் சிவமில்லை" என்று கூறி உமைக்குத் தன் இடப்பாகம் கொடுத்தார். இருவரும் ஓருருவாய்க் காட்சியருளிய தலம் திருச்செங்கோடு.
சிவன் சுயம்புவாகக் காட்சி அளிக்கிறார். மலைதோன்றிய பின்னணியில் ஒரு புராணக்கதை உள்ளது. ஆதிசேஷனுக்கும் வாயுபகவானுக்கும் யார் பெரியவர் எனப் போட்டி எழுந்தது. ஆதிசேஷன் மேருமலையை அழுத்திப் பிடித்துக்கொள்ள, வாயுபகவான் விடுவிக்க வேண்டும் என்பதே போட்டி. அதற்காக வாயு வேகமாக வீச, மலையின் முகட்டுப் பகுதிகள் பறந்து பூமியின் பல இடங்களிலும் விழுந்தன. அப்படி விழுந்த ஒரு பகுதிதான் திருசெங்கோட்டு மலை. ஆதிசேஷன் மலையை அழுத்திப் பிடித்தபோது ஏற்பட்ட காயத்திலிருந்து ரத்தம் கசிந்ததால் மலை செந்நிறமானதாகவும் அதனால் இப்பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மலையைப் பௌர்ணமியன்று வலம்வந்தால் வைகுண்டத்தையும் கைலாயத்தையும் சுற்றிய பலன் கிடைக்குமாம்.
650 அடி உயரமுள்ள மலையின் உச்சியை ஆயிரத்து இருநூறு படிகள் ஏறிப் போனால் ஐந்துநிலைகள் கொண்ட அழகிய ராஜகோபுரத்தை அடையலாம். வாகனத்தில் சாலை வழியாகவும் ஆலயத்தை அடையலாம். நடைபாதையில் நாகர்மலை என அழைக்கப்படும் பகுதியில் படிகளுக்கு இடதுபுறம் ஐந்து தலைகளை விரித்துப் படமெடுத்த நிலையில் லிங்க உருவினைச் சுமந்திருக்கும் ஆதிசேஷனின் திருவுருவம் 60 அடி நீளச் சிற்பமாகக் காணப்படுகிறது. இவரை வழிபட்டால் ராகுதோஷம், காலசர்ப்ப தோஷம், நாகதோஷம், களத்திரதோஷம் நீங்குவதால் மக்கள் இங்கு இவருக்குக் குங்குமம் தூவி வழிபடுகின்றனர். ஆதிசேஷன் உள்ளேயும், படமெடுக்கும் நாகர் உருவம் தனிச்சன்னிதியிலும் உள்ளன. |
|
|
ஆலயம் தெற்குவடக்காக 201 அடி நீளமும் கிழக்கு மேற்காக 262 அடி நீளமும் உள்ளது. மேற்குநோக்கி அர்த்தநாரீஸ்வரர் சன்னதி உள்ளது. மாதொருபாகர் ஆறடித் திருமேனியுடன் காட்சி தருகிறார். கருத்து வேறுபாடுகளால் பிரிந்த தம்பதிகள், இவரை வேண்டி வழிபட்டால் ஒன்றுகூடுவர் என்பதால் இக்கோயிலில் கேதாரகௌரி விரதம் புரட்டாசி வளர்பிறையில் அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. மலைக்கோயில் சிவபெருமானுக்குரியது என்றாலும் ஆதிகேசவப் பெருமாளுக்கும் இங்கு தனிச்சன்னிதி அமைந்துள்ளது.
கிழக்கு நோக்கிச் செங்கோட்டு வேலவர் சன்னிதி உள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழில் "சேந்தனைக் கந்தனை செங்கோட்டு வெற்பனை" இவ்வேலவரை விளித்துப் பாடியுள்ளார். திருப்புகழின் பெருமையை உலகெங்கும் பரப்பிய வள்ளிமலை சுவாமிகள் தோன்றிய இடமும் இவ்வூர்தான். எங்கும் காணாத அதிசயமாய் விநாயகர் மூஞ்சூறின் மீது அமர்ந்துள்ளார். இந்த விநாயகர் சிற்பம் ஆலயத்தூணில் காணப்படுகிறது. தூண்களில் குறவன், குறத்தி வேடம் தரித்த பரமேஸ்வரன், உமாதேவி, ரதி-மன்மதன் சிற்பங்கள் உள்ளன. சீதாதேவி, ராமன், லட்சுமணன், அனுமன் சிற்பத்தில் இங்கே ராமரும் அனுமனும் பணிவுடன் கரங்கூப்பிக் காட்சியளிக்கின்றனர்.
ஒரு சிவராத்திரியன்று புலிக்குப் பயந்து மரமேறிய வேடன் இரவுமுழுவதும் வில்வமரத்தின் இலைகளைப் பறித்துப்போட, அது சிவலிங்கத்தின் மீது விழுந்து ஈசனுக்கான ஆராதனையாய் அமைந்து, வேடனுக்கு முக்தி கிடைத்தது. அது இங்கே சிற்பவடிவில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்கள் சிவராத்திரியன்று பலன் வேண்டி இத்திருவுருவத்தை வணங்கி வருகின்றனர்.
சீதா துரைராஜ், சான் ஹோஸே |
|
|
|
|
|
|
|