உலக ஜூனியர் செஸ் சேம்பியன் - மகாலட்சுமி
|
|
முதல் திருநங்கை காவல்துறை அதிகாரி - ப்ரித்திகா யாஷினி |
|
- ஸ்ரீவித்யா ரமணன்|மார்ச் 2016| |
|
|
|
|
இந்தியாவிலேயே காவல்துறை அதிகாரி ஆன முதல் திருநங்கை ப்ரித்திகா யாஷினி. பிறந்தது சேலம் கந்தம்பட்டியில். பெற்றோர் கலையரசன் - சுமதி. திருநங்கைகள் பலரின் பால்யம்போல இவரது சிறுவயதும் பெண்களுடனேயே கழிந்தது. பெண்களைப்போல உடை உடுத்தி, வளையலணிந்து, மைதீட்டி, பொட்டிட்டுத் தன்னை ஒரு பெண்ணாகவே இவர் உணரத் தொடங்கியபோதுதான் குடும்பம் விபரீதமாகப் பார்த்தது. பெற்றோர்களின் கண்டிப்பு மற்றும் தண்டிப்பினால் தனக்குள் ஒடுங்கினார். பருவவயதில் சக மாணவர்களின் கிண்டல் + கேலி என இவர் எதிர்கொண்ட பிரச்சனைகளை எழுதில் வடிக்க இயலாது. மன உறுதியுடனும் சாதிக்கும் வேகத்துடனும் சேலம் அரசு கலைக்கல்லூரியில் பி.சி.ஏ. படிப்பை முடித்தார்.
உடலால் ஆண், உணர்வால் பெண் என்பதை அக்காலகட்டத்தில் வீட்டாரிடம் இவர் தெரிவிக்க, வீடு எதிர்த்தது. மந்திரம், மாயம் எல்லாம் நடந்தன. மனநோயாளியாகச் சந்தேகிக்கப்பட்டு சிகிச்சைக்கும் அழைத்துப் போயினர். மருத்துவர்களிடம் தன் நிலையைக் கூறினார். இறுதியில் வீட்டைவிட்டு வெளியேறிச் சென்னைக்குச் சென்றார்.
திருநங்கை பானுவின் உதவி கிடைத்தது. பெண்கள் விடுதியின் வார்டன், மருத்துவமனையில் மக்கள் தொடர்பாளர், இணையதள வடிவமைப்பாளர் எனப் பல பணிகள் செய்தார். அறுவைசிகிச்சையால் தன்னை முழுப்பெண்ணாக மாற்றிக்கொண்டவர், காவல்துறை பணித்தேர்வுத் தயாரிப்பில் ஈடுபட்டார். தேர்வு விதிமுறைகள் எழுத அனுமதிக்கவில்லை. பின்னர் நீதிமன்றத்தின் ஆணையுடன் தேர்வு எழுதினார். தேர்ச்சி பெற்றபொழுதும் நேர்காணலில் அதே பிரச்சனை. அப்போதும் நீதிமன்றமே உதவிக்கு வந்தது. பல்வேறு போராட்டங்களுக்குப் பின் காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். |
|
"புறக்கணிப்பும் இன்னல்களுமே நான் சாதிக்கக் காரணமானது" என்று கூறும் ப்ரித்திகா, "பொதுமக்களுக்குச் சிறந்த முறையில் சேவையாற்றுவேன். திருநங்கைகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கச் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பேன். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பெண்சிசுக் கொலை போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து, தடுக்க நடவடிக்கை எடுப்பேன்" என்கிறார். ஐ.பி.எஸ். ஆகவேண்டும் என்பது ப்ரித்திகாவின் கனவு. அவர் கனவுகள் நனவாக வாழ்த்துவோம்.
ஸ்ரீவித்யா ரமணன் |
|
|
More
உலக ஜூனியர் செஸ் சேம்பியன் - மகாலட்சுமி
|
|
|
|
|
|
|