|
சென்னை வெள்ளம்: அமெரிக்காவிலிருந்து பறந்த உதவி |
|
- தென்றல்|ஜனவரி 2016| |
|
|
|
|
|
சென்னையையும் கடலோர மாவட்டங்களையும் புரட்டிப் போட்டது நவம்பர்-டிசம்பரில் கொட்டிய பெருமழையும் அதனால் ஏற்பட்ட வெள்ளமும். செய்தியைக் கேட்ட கணமே அமெரிக்கா எங்கிலும் உறையும் தமிழ்
நெஞ்சங்கள் என்ன செய்யலாம் எனச் சிந்திக்கவும் செயல்படவும் தொடங்கிவிட்டனர். இன்னும் சிலர் தமிழகத்துக்கே பறந்துவந்து நேரடியாகப் பணிகளில் பங்கேற்கத் தொடங்கினர். இப்படிப்பட்ட தனிநபர், சேவை
அமைப்புகள் மேற்கொண்ட தன்னலமற்ற பணிகளால் சென்னையும் பாதிக்கப்பட்ட பிற நகரங்களும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. அதற்கென எடுக்கப்பட்ட முயற்சிகளின் ஒரு தொகுப்பு இதோ:
விரிகுடாப் பகுதி: 'சென்னை மீண்டெழ உதவுங்கள்' Help Chennai Get Back on its feet என்ற முயற்சியைத் தென்றலின் சென்ற இதழில் அறிவித்திருந்தோம்.
உடனடி விளைவாக சிலிக்கான் வேல்லி ஆர்வலர்களின் உதவியோடு சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சுமார் 600 பேர் மீட்கப்பட்டனர். உணவு, போர்வை, குடிநீர், பாய் போன்ற நிவாரணப்பொருள்
கொண்ட 10,000 பெட்டிகள் வழங்கப்பட்டன. உலகெங்கிலும் சுமார் 5,00,000 பேர் நமது முகநூல் மற்றும் வாட்ஸப் செய்திகளைப் பார்த்துவிட்டு 150 நிகழ்வுகளை நடத்தினர். இவற்றில் கராஜ் சேல்,
இசைநிகழ்ச்சி, விருந்து நிகழ்ச்சி, கலைப்பொருள் விற்பனை, Walkathon, சென்னைக்கு உதவ ஓட்டம், கார்ப்பொரேட் முயற்சிகள் எனப் பலவகை நிதி திரட்டும் நிகழ்வுகள் அடங்கும்.
டிசம்பர் 25 வரை சுமார் $230,0000 திரட்டப்பட்டது. பூமிகா ட்ரஸ்ட், AID USA/India, அரசுசாரா சேவை நிறுவனங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட இடத்தில் நேரடி உதவி எனத் திட்டமிட்ட வழிகளில் இவை
அளிக்கப்பட்டன. நமது முயற்சிகளில் RJ பாலாஜி, நடிகர் சித்தார்த் ஆகியோரும் தோள் கொடுத்தது பெரும் வலுவைக் கொடுத்தது.
*****
தமிழ்நாடு அறக்கட்டளை அமெரிக்கத் தமிழர்களும், அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் இந்திய அமைப்புகளும் தமிழ்நாடு அறக்கட்டளையுடன் இணைந்து இரண்டு கோடி ரூபாய்க்கு நிதி திரட்டியுள்ளனர். அமெரிக்காவின் பல நகரங்களில்
நடைபெற்ற வெள்ள நிவாரண நிகழ்ச்சிகளில் வழங்கப்பெற்ற நிதியில் 1.4 கோடி ரூபாய் ஏற்கனவே தமிழகத்திற்கு அனுப்பப் பெற்று நரிக்குறவர் முதல் நடுத்தரக் குடும்பத்தினர் வரை பல்லாயிரக்கணக்கான
பாதிக்கப்பட்டோர் பயன்பெறுவதாக அறக்கட்டளைத் தலைவர் திரு. சிவசைலம் அறிவித்துள்ளார்.
டிசம்பர் 6 அன்று மாலை நியூ ஜெர்சியில் $70,000 நிதியை வாரி வழங்கியது "நம்ம சென்னை". (விவரங்கள் கீழே).
ஆஸ்டின், ஹூஸ்டன், டாலஸ், லாஸ் ஏஞ்சலஸ், மில்வாக்கி, டெட்ராய்ட், லான்சிங், சிகாகோ, பாஸ்டன், ராலே, மயாமி, பிட்ஸ்பர்க் போன்ற நகரங்களில் இயங்கிவரும் தமிழ் அமைப்புகளும், தமிழ்நாடு
அறக்கட்டளையின் 22 கிளைகளும் முனைப்போடு செயல்பட்டு, இரண்டே வாரத்தில் இரண்டு கோடி ரூபாய் குவிந்ததாக அறக்கட்டளையின் நிவாரணப் பணி ஒருங்கிணைப்பாளர், துணைத்தலைவர் திரு. சோமலெ
சோமசுந்தரம் மகிழ்ச்சியோடு கூறுகிறார்.
இதில் பிட்ஸ்பர்க் வெங்கடேஸ்வரா ஆலயம் $50,000 வழங்கியதோடு, தமிழ்ச் சங்கமும், அறக்கட்டளையும் அங்கே டிசம்பர் 20ம் தேதி நடத்திய வெள்ள நிவாரண இசைநிகழ்ச்சிக்கு ஆலய அரங்கினையும் வழங்கி
உதவியது. தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. கிருஷ்ணசாமியும், அறக்கட்டளைக் கிளையின் தலைவர் திரு. முருகன் கண்ணனும் இதற்கு நன்றி பாராட்டினர்.
ஹூஸ்டன் மாநகரில் பாரதி கலைமன்றமும், அறக்கட்டளையும் டிசம்பர் 6ம் தேதி மீனாட்சி ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டின் மூலம் நிதி திரட்டியது. இது ஹூஸ்டன் தமிழ் மற்றும் இந்திய அமைப்புகளின்
ஒற்றுமைக்கும் மீனாட்சி ஆலயத்தின் சமூகப் பணிக்கும் சிறந்த எடுத்துக்காட்டு என்று ஹூஸ்டன் கிளையின் தலைவர் திரு. ராம் சிவராமன் கூறினார்.
தமிழகத்தில் அறக்கட்டளையின் சென்னை கீழ்ப்பாக்கம் அலுவலகத்தில் வெள்ள நிவாரணக்குழுவின் தலைமைப் பொறுப்பேற்றுள்ளார் ஓய்வுபெற்ற I.A.S. மூத்த அதிகாரி திரு. ராஜரத்தினம். டிசம்பர் முதல் தேதிமுதல்
அயராது அறக்கட்டளை பணியாளர்களும், அறக்கட்டளையோடு இணைந்து தொண்டாற்றி வரும் தன்னார்வ அமைப்புகளும் சென்னை, கடலூர், திருவாரூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் பம்பரம்போல்
செயல்படுவதாக அறக்கட்டளையின் சென்னை கிளையின் தலைவர் திரு. ரெகுராஜ் பெருமிதப்படுகிறார். வெள்ளத்தால் சிக்கித் தவித்தோருக்கு 11,000க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
வெள்ளம் தணிந்து வீடு திரும்பியோருக்கு சமைப்பதற்கு 11,500 பேருக்கு மளிகைப்பொருட்கள் கொடுக்கப்பட்டன என்று சென்னை நிர்வாக இயக்குநர் திருமதி. மன்மதா தேவி கூறினார். காலரா, மலேரியா,
எலிக்காய்ச்சல் போன்ற பல நோய்களைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் நடத்தப்பட்ட 16 மருத்துவ முகாம்களில் 4000க்கு மேற்பட்டோர் பயன்பெற்றனர். இன்னும் பல
மருத்துவ முகாம்கள் நடத்தத் திட்டமுள்ளதாகச் செயல் இயக்குநர் திருமதி. வசுமதி பென்னி கூறினார்.
அமெரிக்கத் தமிழர்களின் கடின உழைப்பினால் சேர்க்கப்பட்ட இந்த நிதியினை பாதிக்கப்பட்டோருக்கு நேரடியாகச் சென்றடையும் வகையில் மிகத் தேவையான திட்டங்கள் மூலம் பொறுப்போடு பயன்படுத்துவோம் என திரு.
ராஜரத்தினம் அறிவித்துள்ளார்.
முழு விவரங்களுக்கு வலைமனை: tnfusa.org/flood-relief முகநூல்: FB/tamilnadufoundationusa
குணச்சந்திரன் சண்முகம்
*****
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கம் அட்லாண்டாவின் GATS முதலாவதாக, tinyurl.com/GATSFloodRelief என்னும் இணையதளம்வழியாக, நிதி திரட்ட ஆரம்பித்தனர். டிசம்பர் 14, 2015 வரையில், சுமார் 35,000 டாலர் திரட்டப்பட்டுள்ளது.
இந்தத் தொகை சென்னையில் 'உதவும்கரங்கள்', கடலூரில் 'விபா கடலூர்' ஆகியவற்றுக்கு அளிக்கப்பட இருக்கிறது. அடுத்ததாக, அட்லாண்டாவின் தமிழ்ப்பள்ளிகளில் முகாம்களை அமைத்து பாதிக்கப்பட்டோருக்குத்
துணி சேகரிக்கும் பணியை நடத்தினர். இவற்றை வகைப்படுத்தி ஐம்பது பெட்டிகளில் கொண்டு சென்று வர்ஜீனியா மாநிலத்தில் சேர்த்தனர். அங்கிருந்து கடல்வழியாக இவை இந்தியாவைச் சென்றடையும். GATS
செயற்குழு உறுப்பினர்கள், தலைவர் பிரகாஷ், பொருளாளர் பழனி, தொண்டுக்குழு உறுப்பினர்கள் செல்வா, சுவாமி, ஜீவன் ஆகியோருடன் பாஸ்கர், விக்ரம், ராம்கி, கணேஷ், ஜோதி, குமரேஷ், மோகன்,
பிரதீப், கோபால், கீதா கார்த்திகேயன், நந்து மற்றும் அட்லாண்டா மக்கள் பங்குகொண்டனர்.
- சதீஷ் பாலசுப்ரமணியன், அட்லாண்டா
*****
சியாட்டில் தமிழ்ச்சங்கம் சியாட்டில் தமிழ்ச்சங்கம் இரண்டே நாட்களில் பூமிகா ட்ரஸ்ட்டுக்கு 4000 டாலர், விபா டிரஸ்ட்டுக்கு (Vibha trust) 4000 டாலர், உதவும் கரங்களுக்கு 2000 டாலர், கடலூர் மக்கள் நிவாரணத்திற்கு 2000
டாலர் என உடனடியாக அனுப்பி வைத்தது. தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் வாழ்வைப் புனரமைக்கும் முயற்சிக்கு இங்குள்ள உணவகங்கள் மற்றும் வியாபார நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் நிதி திரட்டி வருகிறது .
அதன் ஒருபகுதியாக அஞ்சப்பர் சியாட்டில் செட்டிநாடு உணவகத்தோடு கைகோர்த்து, "உணவருந்தி உதவுவோம்" என்ற நிகழ்ச்சியின் மூலம் $7000 திரட்டப்பட்டது. அதிலும் உணவகத்தின் CEO திரு. K.R.
ராஜகோபாலன் தாமே கரண்டி பிடித்தது அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அவர் அன்றைய தினத்தின் முழு வருமானத்தை தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. அருண் சுபாஷிடம் நன்கொடையாக வழங்கினார் .
- குணமொழி ஹரிஷங்கர், வாஷிங்டன் |
|
|
கலிஃபோர்னியா தமிழ் அகாடமி: 'Walkathon' வளைகுடாப்பகுதி தமிழ்மன்றமும், உலகத் தமிழ்க்கல்விக் கழகமும் இணைந்து 'ஒருமைல் நடைப்பயணம்' ஒன்றை நடத்தினர். இதை கூப்பர்டினோ துணைமேயர் திருமதி. சவிதா வைத்தியநாதன் துவக்கி வைத்தார்.
அவருடன் சாரடாகோ நகரசபை உறுப்பினர் திரு. ரிஷிகுமார், கூப்பர்டினோ நகர நூலக ஆணையர் திரு. கோபால் குமரப்பன் ஆகியோர் வந்திருந்து ஆதரவைத் தெரிவித்தனர். தொழிலதிபர்கள் திரு. சந்திரசேகர்,
திரு. இராசமாணிக்கம், தொண்டு நிறுவன ஆலோசகர் திரு. நரசிம்மன், அவகோ CIO திரு. ஆண்டி நல்லப்பன், தமிழ்மன்றத் தலைவர் திரு. ஆறுமுகம் பேச்சிமுத்து, உலகத் தமிழ்க்கல்விக் கழகத் தலைவர்
திருமதி. வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
"இந்த மழையிலும் எண்ணற்ற இளையோர் இங்கே வந்திருப்பது நெஞ்சைத் தொடுகிறது. சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நாங்கள் துணையிருக்கிறோம் என்று கூறி இவர்கள் கூடியுள்ளனர்" என்று
குறிப்பிட்டார் சவிதா வைத்யநாதன்.
நூற்றுக்கணக்கானோர் சாலை வழியே நடந்து சென்றது, மக்களை ஒருநிமிடம் நின்று, அட்டையிலிருந்த வாசகங்களைப் படிக்க வைத்தது. சிறு தூறலில் தொடங்கிய பயணம், பெருமழையில் முடிந்தது. குழந்தைகள்
அதை ஒரு பொருட்டாகக் கருதாமல் "சென்னை மக்களின் துன்பத்தை நினைத்தால் இதுவொன்றும் பெரிதல்ல" என்று சொன்னபோது, பெற்றோர்கள் கண்களில் ஆனந்தக்கண்ணீர்!
- நித்யவதி சுந்தரேஷ், கூப்பர்டினோ, கலிஃபோர்னியா
*****
நியூ ஜெர்சி: 'நம்ம சென்னை' நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கம், நாடகக் குழுக்களான ஸ்டேஜ் ஃபிரெண்ட்ஸ் மற்றும் யூ.எஸ்.ஐ.எ., இசைக் குழுக்களான சிம்ஃபொனி, வீ-ஷார்ப், பல நடனக் குழுக்கள் இணைந்த என்.எஸ்.என்.ஏ., தொண்டு
நிறுவனங்களான கிஃப்ட் எ ஃப்யூச்சர் மற்றும் ஐ.சி.ஆர்.ஃஎப். முதலிய தமிழ்க் குழுக்களின் ஆதரவோடு நியூ ஜெர்சியில் நிதி திரட்டும் முயற்சி தொடங்கியது. "நம்ம சென்னை" என்னும் நிதி திரட்டும் நிகழ்ச்சி
ஏற்பாடானது. தொண்டு நிறுவனமான தமிழ்நாடு அறக்கட்டளை வரிவிலக்கு வசதியுடன் நன்கொடைகளை வாங்கி உரிய இடத்தில் சேர்த்துவிடும் பொறுப்பை ஏற்றது.
டிசம்பர் 6, 2015 அன்று 'நம்ம சென்னை' அரங்கம் நிறைந்த நிகழ்வாக நடைபெற்றது. 'சென்னைத் தமிழில் கீதை' நகைச்சுவைக் குறுநாடகம் சிம்ஃபொனி மற்றும் வீ-ஷார்ப் குழுவின் மெல்லிசை ஆகியவை இதில்
இடம்பெற்றன. மாற்றுத் திறனாளியான 12 வயது குஜராத்திச் சிறுவன் ஸ்பர்ஷா சென்னைக்காக உருகிப் பேசி, பாடியது மற்றும் வெள்ளப் பேரிடர் குறித்த வீடியோ தொகுப்பு கண்களைக் கலங்க வைத்தது.
3 மணி நேர நிகழ்ச்சியில் $60,000 குவிந்தது. அடுத்தடுத்த நாட்களில் மேலும் $10,000 சேர்ந்து $70,000 ஆனது. தமிழ்நாடு ஃபவுண்டேஷன் இந்தத் தொகையை மூன்று முக்கிய வழிகளில் செலவழிக்க
இருக்கிறது: சென்னை மற்றும் கடலூரில் நிவாரணம் சென்றடையாத பகுதிகளில் உடனடித் தேவைகளான உணவு, உடை, மருத்துவம் போன்றவற்றை அனுப்பும், பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கைக்குத் தேவையான
இருப்பிடம், கல்வி, தொழில் போன்ற உதவிகளையும் புரிய உள்ளது. 350 அட்டைப்பெட்டிகளில் துணிமணிகள், படுக்கை விரிப்புகள் சென்னைக்கு அனுப்பப்பட்டன:
உதவ விரும்புவோர் காண்க: www.tnfusa.org மேலும் விபரங்களுக்கு: tnfusa.org/flood-relief முகநூல் பக்கம்: FB/TamilNaduFoundationUsa
- சுமித்ரா ராம்ஜி, எடிசன், நியூ ஜெர்சி
*****
சிகாகோ: 'சென்னைக்கென விருந்து' சிகாகோவாழ் தமிழர் மற்றும் பாடகி திருமதி ஜெயஸ்ரீ வெங்கடேஷ் சிகாகோவில் ஓர் நிர்வாகக் குழுவைக் கூட்டி #chicagoforchennai என்னும் முயற்சியில், #FeedForChennai என்னும் நிதி விருந்துத்
திட்டத்தை வகுத்தது. 25க்கும் மேற்பட்ட பெண்டிர் ஒரு ஞாயிறன்று ஒன்றுகூடி திருமண விருந்து சமைத்து 500க்கும் மேற்பட்டோருக்கு விருந்து பரிமாறினர். மேலும் மெஹந்தி, பரிசு ராஃபில், ஓவிய விற்பனை
போன்ற நடத்தி $15,000 தொகைக்கு மேல் வசூலித்தனர். ஷாம்பர்க் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் ஓடியாடி இதில் உழைத்தனர். இடவசதி தந்து உதவியது பாரிங்டன் லைப்ரரி. பல்வேறு அமைப்புகளும்
தோள்கொடுத்து உதவின. இதில் 500க்கும் மேற்பட்ட இந்தியர் மற்றும் அமெரிக்கர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிமூலம் திரட்டப்பட்ட நிதி AIDIndia அமைப்புக்கு நன்கொடையாகச் சென்றடைந்தது.
- ஜெயஸ்ரீ வெங்கடேஷ், சிகாகோ, இல்லினாய்ஸ்
*****
சிமி வேல்லி: கொடைக்கு நடை தென் கலிஃபோர்னியாவில் உள்ள சிமி வேல்லியின் அனு, வெங்கி மற்றும் அவர்களது மகளான அக்ஷயா ஆகியோர், சென்னை வெள்ள நிவாரணத்துக்கான "சென்னை மீண்டெழ உதவுங்கள்" செயல்பாட்டை ஆதரிக்க
டிசம்பர் 27 அன்று "கொடைக்கு நடை" நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். 85க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். பெருங்குளிரிலும் சின்னஞ்சிறு குழந்தைகள் உட்பட, சிமி வேல்லி மற்றும் சுற்றுப்புற நகரங்களில்
வசிக்கும் இந்தியர்கள் பலர் வந்திருந்தனர். திரட்டப்பட்ட நிதிக்கு இணையான தொகையை டாக்டர். சஞ்சீவ் ஜெயின் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதில் $5,500 நிதி திரட்டப்பட்டது. இதில் கண்ணன், டென்வர்
நகரத்தில் bake sale நிகழ்ச்சி நடத்திவந்த தொகையை வழங்கினார்.
- அனுபமா வெங்கடேஷ், தென் கலிஃபோர்னியா
*****
கண்ணீர் துடைக்கக் கலை வெள்ளச் செய்தி என் உள்ளத்தை வருத்தியது. தென்கலிஃபோர்னியாவில் இருந்த இந்திய உணவகங்களுக்குப் போய் நன்கொடை உண்டியல் வைக்கக் கோரினேன். உட்லாண்ட்ஸ், வேல்லி கஃபே, கர்மா, நமஸ்தே
ஸ்பைஸ்லாண்ட், ஸாஃப்ரன் ஆகிய உணவகங்கள் என் வேண்டுதலை ஏற்றதால் $350 திரட்ட முடிந்தது. "Help Chennai get back on its feet" முகநூல் பக்கத்தில் என் ஓவியம் ஒன்றை (படம் பார்க்க)
ஏலத்தில் விட்டேன். தவிர பிற ஓவியங்கள் விற்று வந்ததில் 50% நிவாரண நிதிக்குக் கொடுக்கிறேன். இன்னும் ஒரு மாதத்துக்கு FB/RamysPaintings என்ற முகநூல் பக்கத்தின் வழியே விற்பனையாகும் ஓவியங்களின் வருவாயில் பாதி நன்கொடையாக அளிக்கப்படும்.
- ரம்யா சர்வேஸ்வர், தென்கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|
|