Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | நூல் அறிமுகம் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
புதினம்
ஆத்ம சாந்தி
- சந்திரமௌலி|ஏப்ரல் 2014|
Share:
Click Here Enlargeஅத்தியாயம்-2:

முதல் நட்பு
பரத் சர்ட்டிஃபிகேட்டுகளைச் சரிபார்த்துக் கொண்டான். செகண்ட் கிளாசில் பாஸ் பண்ணியதற்கும், அரியர்ஸ் மேல் அரியர்ஸ் வைத்து மூன்று வருஷம் அதிகம் எடுத்து டிகிரி வாங்கியதற்கு என்ன காரணம் சொல்வது என்று தெரியவில்லை. ஆறடி உயரம். மாநிறத்துக்கு கொஞ்சம் தூக்கலான, தென்னிந்தியாவுக்குச் சற்று அபூர்வமான நிறம். ஜிம்முக்கெல்லாம் போகாவிட்டாலும், திருவல்லிக்கேணி தெரு கிரிக்கெட், பீச்சில் பட்டம், தண்ணீர் லாரியிலிருந்து தினமும் குடம்குடமாய் தூக்கிவரும் தண்ணீர் விளையாட்டு போன்றவற்றால் முறுக்கேறியிருந்த உடல். படிய வாரியிருந்தாலும் கச்சிதமாய், ஸ்டைலாகப் பொருந்திய அடர்த்தியான முடி, ஜில்லெட் உபயத்தில் மழுங்க ஷேவ் செய்த முகத்தில்,ஒரு சென்டிமீட்டருக்கு எப்போதும் சினேகமான ஒரு சிரிப்பு.

அவன் வயதையொத்த மற்ற நடுத்தரவர்க்க இளைஞர்களைவிடச் சற்று வித்தியாசப்படும் அளவு பரத் ஒரளவு வசீகரம் நிரம்பிய இளைஞன். பரிச்சயமில்லாதவர்கள் கூட அனிச்சையாகப் பார்த்துவிட்டு அவனைக் கடந்துபோகுமுன் 'அட' என்று ஒரு நொடி மறுபடி தங்கள் பார்வையை செலுத்தத் தோணும் ஈர்ப்பு அவனிடம் இருந்தது. நிறையச் சந்தர்ப்பங்களில் அவனுடைய தோற்றமும், சூழ்நிலைக்கேற்ப பதிலளிக்கும் சாமர்த்தியமும் அவனுடைய மற்ற குறைகளை நமத்துப்போக வைத்திருக்கின்றன. இப்போதும் அதை நம்பித்தான் பரத் இந்த இண்டர்வ்யூவுக்குப் போகிறான்.

எல்லாரையும் போல சப்வேயைச் சட்டை செய்யாமல் மெயின்ரோடை வாகன இரைச்சலுக்கிடையே கடந்து பீச் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான். திருவல்லிக்கேணியிலிருந்து பீச்வரை அவ்வளவு கும்பல் இல்லை. ஆனால், பீச் ஸ்டேஷனிலோ ஒரு பெரும் ஜனசமுத்திரம் ஸ்டேஷனுக்குள் நுழைந்து, வெளிவந்து கொண்டு இருந்தது. நடைபாதையில் இருந்து கார்ப்பரேஷனால் துலுக்காணத்தம்மன் சிலை அகற்றப்பட்டதுகூட கவனத்தில் இல்லாமல், பழக்கதோஷத்தில் அந்த இடத்தைக் கடக்கும்போது பலர் வெற்றிடத்தை நோக்கித் தாவாங்கட்டையில் இரு விரல்களால் கீபோர்ட் வாசித்தனர். அவர்கள் செய்கிறார்களே என்று, என்ன ஏது என்று தெரியாமலேயே இன்னும் பலர் குழப்பத்தோடே அதே செயலைச் செய்தவாறு தங்கள் வேலைக்குப்போய்க் கொண்டிருந்தனர். விதவிதமாய் பரக்கபரக்க என்ன செய்கிறோம் என்று யோசிக்கக்கூட நேரமில்லாமல் சாவி கொடுத்த பொம்மைகள் போல எல்லாரும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

சமுத்திரக்கரை ஓரம் நிற்கும் சிறுவனைப்போல, பரத் கடிகாரத்தால் ஓட்டப்படும் அந்த மனிதக்கும்பலைப் பார்த்து ஒரு நொடி திகைத்துத்தான் போனான். இந்த வேலை கிடைத்துவிட்டால், இதோ இந்தக் கும்பலில் இன்றுமுதல் நானும் ஐக்கியமாகி விடுவேன். பிறகு எதைப்பற்றியும் யோசிக்க நேரமில்லாமல் இந்த ஒட்டம் அறுபது வயதுவரை நீடிக்கும். இது ஒரு சாதுர்யமான அதே நேரம் ஈவு இரக்கமில்லாத ஆட்டம். முதலில் ஒரு ஆரம்ப நிலை வேலை, கொஞ்சம் தன்னிறைவு, அப்புறம் அலுவலகத்தில் போட்டி, கொஞ்சம் பாராட்டு, ப்ரமோஷன், அட நாம நினைச்ச அளவுக்கு மோசமில்லை என்று எண்ண ஆரம்பிக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் சூடுபிடிக்கும். தாழ்ப்பாள்கள் போடப்படும். பிறகு கல்யாணம், ஹவுசிங் லோன், வெஹிகிள் லோன், சின்னதாய் அபார்ட்மெண்ட், குழந்தைகள், குடும்பச் செலவு. இந்தக் கட்டம் வந்ததும் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லயோ குடும்பத்தை ஒழுங்காக நடத்த வேலைக்குப்போயே தீரவேண்டிய கட்டாயம் வந்துவிடும். பிறகு தப்பிக்க வாய்ப்பேயில்லை.

நடுத்தரவர்க்கம் என்பது கொஞ்சம் அப்க்ரேட் செய்யப்பட்ட அன்னாடங்காய்ச்சி வர்க்கம். மாச சம்பளத்துக்கு ஏதேனும் கேடு வந்தால் நிலைமை கோவிந்தாதான். அந்த மாச சம்பளத்தைப் பாதுகாத்துக் கொள்ள விருப்பு வெறுப்பையெல்லாம் ஒதுக்கிவிட்டு கிட்டத்தட்ட தன்னையே அடமானம் வைத்துக்கொள்ள வேண்டியதுதான் யதார்த்தம். பரத் சுதந்திரமாகவே எப்போதும் இருக்க ஆசைப்பட்டான். தனக்கு ஏதோ ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது, எங்கேயோ காத்திருக்கிறது என்று நம்பினான். அதுவரை தனக்குப்பிடித்த விஷயங்களை மட்டும் செய்துகொண்டு ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்துத்தான் கடந்த ஆறு மாதமாக ரொம்ப சிரமம் எடுத்துக்கொள்ளாமல் வேலை தேடிக்கொண்டிருந்தான். ஆனால் குடும்பச்சூழல், கனவுகளுக்குக் காத்திருக்க அவனுக்கு இதற்குமேல் நேரம் கொடுக்கவில்லை. இப்படி எலக்ட்ரிக் ட்ரெயின் ஏறி அதுவும் மறைமலை நகர் தாண்டி ஒரு கம்பெனியில் வேலைக்குப் போவோம் என்று அவன் கனவிலும் நினைத்தது இல்லை.

"மெட்ரோல பீச் ஸ்டேஷன் வரையும் போயிடு, அங்கேருந்து மறைமலை நகருக்கு எலக்ட்ரிக் ட்ரெயின் புடிச்சியானா உக்காந்துண்டே போயிடலாம். ஷேர் ஆட்டோல எல்லாம் இன்னிக்கு போகாதே, சட்டை பேண்டெல்லாம் கசங்கி இண்டர்வியூவுக்கு அன்ப்ரெசண்டபிலா போயி நிப்பே."

"உனக்கு இந்த வேலை நிச்சயம் கெடைக்கணும்னு அந்தப் பெருமாளுக்கும்,ஆஞ்சனேயருக்கும் வேண்டிண்டு வந்துடறேன். போகும்போது ஹனுமான் சாலிசா சொல்லிண்டே போ. ஆல் தி பெஸ்ட்."

அப்பாவும், அம்மாவும் தெருமுனைவரை கவலையோடு அதேநேரம் தங்கள் பிள்ளை வெளியுலகில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முதல் அடி எடுத்து வைப்பதைப் பெருமையோடு பார்த்தவாறு கொடுத்த பிரியாவிடை அவர்கள் தன்மீது எவ்வளவு எதிர்பார்ப்புக்களையும், நம்பிக்கையையும் வைத்திருக்கிறார்கள் என்று பரத்துக்கு நினைப்பூட்டின. திரும்ப வீட்டுக்குப் போய்விடலாம் என்று ஒரு நிமிடம் நினைத்து, பின் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு பீச் ஸ்டேஷனில் வண்டிக்குள் ஏறி உட்கார்த்தான். பரத்தின் மனமாற்றத்துக்கு இன்னொரு காரணம் அவன் நண்பன் மனோகர். பரத் சென்டிமென்டலாக யோசிப்பவனே இல்லை. சிரமப்படுவது, கவலைப்படுவது இதெல்லாம் அவனுக்கு அன்னியமான விஷயங்கள். ஆனால் போனவாரம் மனோகர் பேரிடியாகச் சொன்ன செய்திக்குப் பிறகு வேலை விஷயத்தில் தன் எண்ணத்தை பரத் மாற்றிக்கொண்டு விட்டான். மின்வண்டி புறப்பட்டதோடு, மனோகரை முதன்முதலில் சந்தித்த சிறுவயது நிகழ்ச்சிகளும், போன வாரம் மனோகரோடு நாயர் கடையில் பேசினபோது அவன் கொடுத்த பேரதிர்ச்சியைப் பற்றிய எண்ணங்களும் பரத்தின் மனதில் புறப்பட்டன.

*****


மனோகர் பரத்தின் சமவயதினன். ஏறத்தாழ இருவரும் ஒரே எண்ணங்களும், அலைவரிசையும் கொண்டிருந்ததால் பார்த்த நாள் முதல் சிம்கார்டும் செல்ஃபோனும் போல இணைபிரியாமல் இருந்தார்கள். இருபது, இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன் மனோகரைப் பார்த்த அந்த முதல்நாள் பரத்துக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. பரத்துக்கு அப்போது ஆறு அல்லது ஏழு வயது இருக்கலாம். அவனுக்கு நினைவு தெரிந்து அந்த பால்யப் பிராயத்துக்குள் மயிலாப்பூரில் நாலு வீடு மாறிவிட்டார்கள். அதாவது மோகனும், கஸ்தூரியும் மாற்றிவிட்டார்கள். குடித்தனக்காரர்களுக்கே உரித்தான சாபக்கேடு அவர்களை அந்தச் சமயம் பெரிதாக வாட்டியெடுத்தது. வீட்டு ஓனரே மெட்ராசுல இந்த வீட்ல இருக்கப்போறார், வாடகை இன்னும் ஆயிரம் ரூபாய் கூடத்தர ரெடியா இருக்காங்க, சொந்தக்காரங்க வராங்க, வீட்டை இடிச்சு ஃப்ளாட் கட்டப்போறோம்-ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு காரணம் சொல்லி வீட்டைக் காலி செய்யச்சொன்னார்கள். பரத் ஒவ்வொரு முறை வீடு மாறும்போதும் தரையில் புரண்டு புரண்டு அழுவான். வீடு மாறினால் புது அக்கம்பக்கத்தினர், புது நண்பர்கள், மொத்தத்தில் புதிய சூழ்நிலை என்பது பெரியவர்களுக்கு எளிதான மாற்றமாயிருக்கலாம். ஆனால் அன்று சின்னப்பையனாக இருந்த பரத்துக்கு நரகவேதனையாக இருந்தது. பழைய நண்பர்களையும்,தெரிந்தவர்களையும் ஒவ்வொரு முறையும் தொலைப்பது அவனுக்குக் கஷ்டமாயிருந்தது. எந்த வீட்டில் குழந்தைகளின் கஷ்ட நஷ்டத்தைக்கேட்டு வீடு மாற்றுகிறார்கள்? பரத் வீட்டில் கேட்பதற்கு!

மோகன் அன்று உற்சாகமாக வீட்டுக்கு வந்தார். "கஸ்தூரி உடனே புறப்படு. ட்ரிப்ளிகேன்ல ஒரு நல்ல வீடு வாடகைக்குக் கிடைச்சாச்சு. நான் நேத்து ஏ.ஓ. சம்பத்தோட போயி பாத்துட்டு வந்துட்டேன். சின்னதாயிருந்தாலும் இங்கத்து வீட்டவிட வசதியாயிருக்கு. உனக்கும் பிடிச்சிடுச்சின்னா, தை மாசமே பால் காய்ச்சிட்டு குடி போயிறலாம்."

"ட்ரிப்ளிகேனா? ஏன் மயிலாப்பூரை விட்டுட்டு அங்க பாத்தீங்க?"

"மூணு வருஷமா எடம் எடமா குடிதூக்கியும் உனக்கு புத்தி வல்லியா? இங்க எல்லா ஓனரும் இப்ப வீட்டுக்கு ஜாஸ்தி வாடகை எதிர்பார்க்கறாங்க, இல்லைனா வீட்டை பில்டருக்கு விக்கறாங்க. மயிலாப்பூரை விட்டு வெளில பாக்கறதைத் தவிர வேற வழியில்லை."

"ட்ரிப்ளிகேன்ல மட்டும் தொரத்தமாட்டாங்களா? ஒரு சொந்த வீடு நமக்குன்னு இருந்திருந்தா இந்த எழவெல்லாம் இல்லாம நிம்மதியா இருந்திருக்கலாம். இதுக்குத்தான் தலை தலையா முட்டிண்டேன். அண்ணா நகர்ல ஹவுசிங் போர்ட் ஃப்ளாட் உங்க அப்பாவோட தியாகிகள் கோட்டாவுல உங்க அம்மாவுக்கு அலாட் பண்ணினாங்க. அதை அவங்களுக்கு வேணாம்னா எடுத்துக்க வேணாம். நாம இப்படி வாடகை வீட்ல கெடந்து அல்லாடறோமேனு இரக்கப்பட்டு நமக்காவது குடுத்துருக்கலாம். வேணாம்னு எழுதிக் குடுத்து நம்ம வயத்துல அடிச்சிட்டா" கஸ்தூரி விரல்களை நெறித்துக் கோபத்தைப் பொழிந்தாள்.

"ஆத்தாவைப் பத்திப் பேசாதே. அவங்களை முழுசா புரிஞ்சிக்க ஒனக்கு இந்த ஆயுசு போதாது." சற்றே தழைந்து "ஓனர் கனகராஜ் ரொம்ப நல்ல மனுஷன். தவிர ட்ரிப்ளிக்கேன் என் ஆபீசுக்கும் ரொம்ப பக்கம். ட்ரான்ஸ்போர்ட்ல மாசம் இருனூறு ரூபாய் மிச்சம் பிடிக்கலாம்.கேபிள் டிவி கேட்டுண்டே இருந்தியே, அங்க போனதும் மிச்சம் பிடிக்கிற பணத்துல கேபிள் டிவி போட்டுக்கலாம்."

எந்த அஸ்திரத்தை வீசினால் கஸ்தூரி மடங்குவாள், அதுவும் ஆத்தாவைப் பற்றிய கோபத்தில் இருக்கும்போது, என்பதை மோகன் நன்றாகவே தெரிந்தவர். அவர் வீசிய அஸ்திரம் நன்றாகவே வேலை செய்தது.

*****
அந்தத் தெருவில் ஏன் பேட்டையிலேயே பில்டர்களின் ஃப்ளாட் கட்டும் அசுரப் பசிக்குத் தப்பிப் பிழைத்த ஒரு சில பழையகால வீடுகளில் அந்தக் குறுகலான கட்டிடமும் ஒன்று. ஆறு குடித்தனங்கள் சின்னதும் பெரிதுமாக இடைவெளி இல்லாமல் நெருக்கமாக அந்த ஒரு கட்டிடத்துக்குள் இருந்தன. இதில் காலியாயிருந்த ஒரு போர்ஷனுக்குத்தான் மோகனின் குடும்பம் குடிபோக இருந்தது. ஓனர் கனகராஜ் அவருடைய மனைவி மணிமேகலை, மகள் மலர்விழி, பையன் மனோகர் இவர்களோடு மாடி போர்ஷனில் குடியிருந்தார். கொஞ்சம் பசையுள்ள குடும்பம். தூத்துக்குடியிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர், கடும் உழைப்பாளி, பட்டணத்துக்கு கையில் காலணா இல்லாமல் வந்து, கொஞ்சம் கொஞ்சமாக அங்கும் இங்குமாய் தொழில் கற்றுக்கொண்டு, பிறகு சொந்தமாகக் கடை வைத்து முன்னுக்கு வந்தவர். பனிரெண்டு வருஷம் முன் மலர்விழி பிறந்தபோது இந்த வீட்டை வாங்கினார். அதற்கு, ஐந்து வருஷம் கழித்து மனோகர் பிறந்தபோது ரிச்சி ஸ்ட்ரீட்டில், இப்போது உலகில் நம்பர் ஒன்னாக இருக்கும் ஜெர்மன் கம்பெனியான கே.டி.கே.யின், மோட்டார் வாகன உதிரிபாகம் வாங்கி விற்கும் டீலர்ஷிப் எடுத்து தன் வியாபாரத்தை இன்னும் பெருக்கிக் கொண்டிருந்தார். அன்று குடியரசு தினமானதால், கடைக்கு விடுமுறை. மதியம் வீட்டில் இருந்தார்.

"வாங்க, வாங்க, என்ன வீடெல்லாம் பிடிச்சிருந்ததா? தண்ணி மட்டும் கொஞ்சம் கஷ்டம். தெருமுனைல டாங்கர் லாரி வருது, பிடிச்சிக்கலாம். மத்தபடி சவுகரியமா இருக்கும். எனக்கும் உங்களை மாதிரி ஒளுங்கா வாடகை குடுத்துட்டு கவுரவமா குடித்தனம் இருக்கிறவங்க இங்கிட்டு குடிவரது ரெம்ப சந்தோஷம். டேய் குட்டிப்பையா? வா வா. நமக்கும் ஒரு பையன். ஏய் மனோகர் இங்கிட்டு வா."

"தோ வண்டேம்பா" என்றவாறு, துறுதுறுவென்று, பக்பக் என்று கூவிய ஒரு புறாவைக் கைகளால் தடவியவாறே ஒரு பையன் ஓடிவந்தான்.

"மனோகர் உனக்கு புது ஃப்ரெண்டு வந்திருக்கான் பாரு. இனிமே இங்க நம்ம வீட்டு கீளதான் இருக்கப் போறாங்க. உன் மத்த ஃப்ரெண்டுங்களையெல்லாம் அறிமுகம் செய்துவை. போயி வெளையாடுங்க. நாங்க பெரியவங்க பேசிட்டு வர்றோம்."

"உன் பேர் என்ன?" மனோகர் மிரண்டவாறு நின்ற பரத்திடம் கேட்டான்.

"அட, நான் கேக்க மறந்தனே!" கனகராஜ் வியந்தார்.

"என் பேர் பரத்வாஜ். பரத்னு கூப்பிடுவாங்க."

"என் பேர் மனோகர், மனோன்னு கூப்பிடுவாங்க, வா கீள போயி வெளையாடலாம்" மனோகரைவிட அவன் கையில் இருந்த புறா பரத்தை அதிகம் ஈர்த்தது. சின்ன வயதில் கோழி வளர்க்க ஆசையாயிருக்கு என்று அம்மாவிடம் சொல்லி, அதெல்லாம் இந்த வீட்ல சேக்கக்கூடாது என்று திட்டும் அடியும் வாங்கியது பரத்துக்கு நினைவுக்கு வந்தது.

"அந்தப் புறாவை நான் கொஞ்சம் பிடிச்சிக்கவா?"

"இந்தா, இதோ இப்படிப் பிடிச்சுக்க. கழுத்தைப் பிடிக்காதே" குறுகுறுவென்றிருந்தது, சரியாகப் பிடிக்காததால் விருட்டென்று இறக்கை அடித்துப் புறா பறந்துவிட்டது. "அய்யய்யோ பறந்து போயிடுத்து. ரொம்ப சாரி. எனக்குப் பிடிச்சுக்கத் தெரியலை. உன்னோட புறாவைத் தொலச்சுட்டேன்" பரத் அழத்தொடங்கினான்.

"ஏய் ஏய் பரத் அளுவாதே. அதை புடிச்சிக்கலாம். தோ பாரு. பக் பக் பக்" என்று வாயை அழகுகாட்டுவது போல் வைத்துக்கொண்டு வினோதமான ஒலி எழுப்பினான் மனோகர். ஐந்தே வினாடிகளில் பறந்துபோன புறா அவன் தோள்மீது வந்து ஒய்யாரமாக உட்கார்ந்தது. இப்போது மனோகரையும் பிடித்துவிட்டது.

குடிவந்த நாளிலிருந்து, இன்னும் வேறுபாடுகள் மனதில் கலக்காததால் அந்தச் சிறுவர்கள் இருவரும் எந்த ஏற்றத்தாழ்வோ, வேற்றுமையோ அறியாமல் ஒன்றாய்ப் பழகினார்கள். கனகராஜ், சிபாரிசில் பரத் மனோகர் படித்த அதே பள்ளியில் சேர்த்துவிட்டான். ஒரே ஒரு விஷயத்தைத் தவிர, இருவரும் ஒரே மாதிரி சேட்டைகள், படிப்பில் கவனமில்லாமல் இருத்தல், ஒரே விளையாட்டு என்று பழகிய சில வாரங்களிலேயே ஒன்றிணைந்து விட்டார்கள். மலர்விழி மூலம் பரத்துக்கும் அக்கா கிடைத்த மாதிரி இருந்தது. அவள் மனோவுக்கும், பரத்துக்கும் பாடம் சொல்லிக் கொடுப்பாள். கர்சீப்பில் அவர்கள் பெயரின் இனிஷியல், பூ காய் எல்லாம் போட்டு எம்ப்ராய்டரி செய்து தருவாள். பரத் வீட்டில் ஏதாவது பண்டிகை, விசேஷம் என்றால் மனோகர் வீட்டுக்கும், மனோகர் வீட்டு விசேஷப் பலகாரங்கள், அதிலும் அவன் அம்மா செய்யும் மக்ரூன் போன்ற ஸ்பெஷல் இனிப்புகள் பரத் வீட்டுக்கும் பரிமாற்றம் ஆயின. அக்கம்பக்கத்தில் மற்ற குடித்தனக்காரர்களும் நல்ல மாதிரியாக இருக்கவே கஸ்தூரிக்கும் திருவல்லிக்கேணி பிடித்துப்போய், மயிலாப்பூரைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்தே போனாள்.

பரத்துக்கு சொந்தமாகக் கடை வைத்து எல்லாரையும் ஆளுமை செய்தவாறு கனகராஜ் நல்ல வசதி வாய்ப்போடு இருப்பதும் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் அப்பா மாதக்கடைசியில் காசில்லாமல் கஷ்டப்படுவதும் பெரிதாகத் தெரிந்தது. செக்குமாடு மாதிரி மாச சம்பள வேலைக்குப் போவதை அவன் இழிவாக நினைக்க ஆரம்பித்தான். மனோகரின் வீட்டில் எல்லா புதுமாடல் எலக்ட்ரானிக் சாமான்களும், ஏன் ஒரு ரூமில் ஏர்கண்டிஷன், அப்போது புதிதாக சந்தைக்கு வந்து புழங்கிக்கொண்டிருந்த வீடியோ கேம்ஸ் எல்லாம் இருந்தன. இதையெல்லாம் விட கனகராஜ் டீலர்ஷிப் கடைக்குப் போகவர பளபளவென துடைத்து வைத்த எக்ஸ்ப்ளோரர் பைக் பரத்தை வெகுவாகக் கவர்ந்தது. அவரே அதை அக்குவேறு ஆணி வேராகக் கழட்டிப்போட்டு, ரிப்பேர் பார்த்து கழட்டிய சுவடே தெரியாமல் ஒன்று சேர்த்து மாட்டிவிடுவார். அப்படிச் செய்யும்போது மனோகருக்கு ஒவ்வொரு பகுதியையும் காட்டி, அது எப்படி வேலை செய்கிறது என்று விளக்கம் கொடுப்பார். மனோகருக்கு இதிலெல்லாம் துளியும் ஆர்வம் கிடையாது. கையெல்லாம் ஒரே க்ரீஸ்,ஆயில் அளுக்காவுது, எனக்குப் பிடிக்கலைப்பா என்று தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பான்.

பரத்துக்குக் கண்ணெதிரே ஒரு தங்கச் சுரங்கத்தைத் திறந்து வைத்தது போல இருக்கும். கொஞ்ச நாளிலேயே கனகராஜே ஆச்சரியப்படும் அளவுக்கு அந்த மோட்டார் பைக்கின் செயல்பாடுகளையும், பாகங்களையும் முழுக்கத் தெரிந்துகொண்டான். கனகராஜ் மோகனிடமும் கஸ்தூரியிடமும் ரொம்பப் பெருமையாக "மனோகருக்கு இந்த டெக்னிகல் சமாசாரமெல்லாம் சொல்லித் தந்தா, பிற்காலத்துல எனக்குப் பொறவு என் கடை, பிசினசை பெரிசா எடுத்து வளக்க சவுகரியமா இருக்கும்னு பாத்தேன். அவனுக்கு இதுலேயெல்லாம் சுத்தமா பிடிமானமே இல்லை. ஆனா பரத்துக்கு கற்பூர புத்தி. அத்தனையும் சுளுவா கத்துக்கிட்டான். நீங்க வேணா பாருங்க அவன் பெரிய எஞ்சினீயரா வரப்போறான். எளுதி வெச்சுக்கங்க, படு சுட்டி" என்றார்.

"எஞ்சினீயராலாம் ஆவறதுக்கு நல்லா படிக்கணும் அப்பத்தான் காலேஜுல சீட் கிடைக்கும். படிப்புல ஆர்வமே இல்லாம இருக்கான், எங்க எஞ்சினீயரா ஆகுறது" என்று மோகன் கொஞ்சம் பெருமை கலந்த குரலிலேயே அலுத்துக்கொள்வார்.

கனகராஜுக்குக் கிடைத்த ஒரு அபூர்வமான ஓய்வுநாளில், பரத்தையும் மனோகரையும் பைக்கில் உட்காரவைத்து, இரவு நேரத்தில் கடற்கரை சாலையில் வேகமாகப் போனபோது பரத்துக்குக் கனவுலகத்தில் பறப்பதுபோல இருந்தது. அவனுடைய பணக்காரன் ஆகும் கனவும், படிப்பை இரண்டாம் பட்சமாக நினைக்கத் தொடங்கியதும் கனகராஜை அவன் மானசீக ஹீரோவாக நினைக்க ஆரம்பித்த அந்த நாளிலிருந்துதான் துளிர் விட்டிருக்க வேண்டும். மனோகர் இந்த ஒரு விஷயத்தில் பரத்திடமிருந்து வித்தியாசப்பட்டான்.

"டேய் மனோ உங்க அப்பா சூப்பர்டா, என்னா ஸ்டைலா ஒரு கைல பைக் ஓட்டறாரு. எல்லாரையும் மெரட்டறாரு. ஒரே அவர்ல மொத்த பைக்கையும் கழட்டி, மாட்டிடறாரு. எனக்கும் இந்த சம்மர் லீவுல பைக் ஓட்டக் கத்துத் தரேனிருக்காரு. நீ ஏண்டா இதுலேயெல்லாம் இன்ட்ரஸ்டே காட்ட மாட்டேங்கிற?"

"பரத், இந்த ஸ்பேர் பார்ட்ஸ், மோட்டார் க்ளீன் பண்றது எதுவுமே பிடிக்கலைடா. எப்பவும் ஒரு சிக்கு வேர்வை நாத்தம், ஆயில், அளுக்குக் கறை. இதெல்லாம் எதுவும் வேணாம்டா. எப்ப போவார், வருவாருனே தெரியாம என்னேரமும் அதை இங்க அனுப்பியாச்சா, இதை இங்க அனுப்பியாச்சானு ஃபோன்லியே இருப்பாரு. ஏதாவது தப்பாகி, நஷ்டம் ஆச்சின்னா எங்க அப்பா என்னமா டென்ஷனாகி குதிப்பாரு தெரியுமா? நீ சும்மா அவரு எப்பயாச்சும் சிரிச்சிக்கிட்டு பீச் ரோட்ல பைக்ல கூட்டிக்கிட்டு போறத வெச்சு எல்லாம் ஜாலியா இருக்கிறதா நெனைக்காதே. சினிமா, கிஷ்கிந்தா, கிரிக்கெட் மேட்ச் எதுக்குமே நான் எங்க அப்பாகூட போனதில்லைடா. அவருக்கு எதுக்கும் என்கூட வரதுக்கு நேரமில்லை, எப்பயும் பிசினஸ் மட்டும்தான் முக்கியம்."

"இது பரவாயில்லைடா. நீ நெனச்சா மலர் அக்காகூடவும், உங்க அம்மாவோடவும் இதுக்கெல்லாம் போகலாம். எங்க அப்பாவுக்கு நேரம் இருந்தாலும், நீ சொன்ன சினிமா, கிஷ்கிந்தா, கிரிக்கெட் மேட்செல்லாம் போனா காசு செலவாகும்னு இதுக்கெல்லாம் கூட்டிக்கிட்டு போகமாட்டாரு."

"அது பரவாயில்லைடா பரத். பீச்சுக்கு, கோயிலுக்கெல்லாம் நீங்க சேந்து போறீங்களேடா. எங்க அப்பாவும் உன் அப்பா மாதிரி நல்லா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு, காலைல போயிட்டு சாயந்திரம் வராமாதிரி ஆபீஸ் வேலைல இருந்தா நல்லா இருந்திருக்கும். நான் பெரியவனா ஆனா, இந்தக் கடை, பிசினசெல்லாம் ஒதுக்கிட்டு, உங்க அப்பா மாதிரி ஆபீஸ் உத்தியோகம்தான் போவேன்."

"டேய் மனோ, நான் உங்க அப்பா மாதிரி பிசினஸ்தான் பண்ணப் போறேன். ஆபீஸ் போற வேலைக்கெல்லாம் போகமாட்டேன்."

மின்வண்டி கிண்டி ஸ்டேஷனைத் தாண்டி வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. பரத் தன் கையிலிருந்த ஃபைலைத் திருப்பி இன்டர்வியூ லெட்டரை மறுபடி ஒருமுறை பெருமூச்சோடு படித்துவிட்டு மூடிவைத்தான்.

(தொடரும்)

சந்திரமௌலி
Share: 




© Copyright 2020 Tamilonline