Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | நூல் அறிமுகம் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
விடை தெரிந்தால் சொல்லலாம்
- ஹரி கிருஷ்ணன்|ஏப்ரல் 2014||(1 Comment)
Share:
நாம் சென்ற இதழில் முடித்திருந்த இறுதி வாக்கியத்தைப் பார்க்கும் போது, மகாபாரதத்தில் அப்படியென்ன மூத்த பிள்ளைச் சிக்கல் என்று கேட்கத் தோன்றலாம். நம்மில் மிகப் பலருக்கு, பொதுவாக நிலவிவரும் அபிப்பிராயம் ஒன்று உண்டு. திருதிராஷ்டிரன், பிறவியிலேயே கண் தெரியாதவனாகப் பிறந்துவிட்ட காரணத்தால், அரசு பாண்டுவிடம் தரப்பட்டது. பாண்டு ஒருநாள் காட்டில் வேட்டையாடச் செல்லும்போது, தவறுதலாக, புணர்ந்துகொண்டிருந்த மான்களில் ஆண்மானைக் கொன்றுவிட்டான். உண்மையில் அந்த மான் ஒரு ரிஷி என்பது அவனுக்குத் தெரியாது. இறக்கும்போது அந்த முனிவர், "நாங்கள் இருந்த நிலையில் நீயும் உன் மனைவியும் இருக்க நேர்ந்தால், அக்கணமே நீ இறப்பாய்" என்று சபித்துவிட்டு இறந்து விட்டதால், பாண்டு அரசைத் துறந்து காட்டுக்குத் தன் மனைவியரான குந்தியுடனும் மாத்ரியுடனும் சென்றான். சென்றபோது அரசை திருதிராஷ்டிரன் பெற்றான். எனவே, அரசு மீண்டும் மூத்த பிள்ளைவசம் வந்துவிட்டது.

இப்போது, இளைய மகனான பாண்டுவின் புத்திரர்களுக்கு எவ்வாறு அரசில் உரிமை கிடைக்கும்? அவர்களுக்கு அரசுரிமை என்ற பேச்சுக்கே இடமில்லையே! அதுதான் அரசு மீண்டும் திருதிராஷ்டிரனிடம் ஒப்புவிக்கப்பட்டு விட்டதே! இனிமேல் அவனுடைய வாரிசுக்குத்தானே அரசுரிமை வந்தாக வேண்டும்? இதில் எங்கிருந்து தருமபுத்திரனுக்குப் பாதி அரசு என்ற பேச்சு? ஒருவேளை, திருதிராஷ்டிரன் மக்களுடைய கருத்துக்கு பயந்து கொண்டு தருமனுக்குப் பாதி அரசைக் கொடுத்திருப்பானோ? அதையுந்தான் இவன் சூதாடித் தோற்றுவிட்டானே! "சூதிலே வல்லான் சகுனி தொழில் வலியால் மாதரசே நின்னுடைய மன்னவனை வீழ்த்திவிட்டான்" என்றுதானே பாரதிகூடப் பாஞ்சாலி சபதத்தில் எழுதுகிறான்! அப்படியிருக்கும் போது, மூத்த மகனான திருதிராஷ்டிரனின் மூத்த மகன் என்ற முறையிலும், சூதிலே வென்றவன் என்ற முறையிலும், இரண்டு விதங்களிலும் துரியோதனனுக்குத்தானே அரசுரிமை? இதில் தர்மபுத்திரனுக்கு உரிமை என்ற பேச்சே எழ இடமில்லையே!

இப்படியெல்லாம் பலர் பேசி நானே கேட்டிருக்கிறேன். பலர் என்ன பலர். வெளிப்படையாகச் சொன்னால், தற்காலத்தில் மகாபாரத தொலைக்காட்சி ஒளிபரப்புகளும், கதை சொல்வோரும் இப்படித்தான் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். கதைத்து என்ற சொல்லைத் தமிழ்நாட்டு முறைப்படி சொல்கிறேனேயன்றி, உங்கள் நாட்டில் பரவலாகப் பேசப்படும் பொருளிலன்று! விஷயம் என்னவென்றால், தற்காலத்தில் உபன்யாச மரபும் முறைப்படி ஓதி உணர்ந்து, மனனம் செய்து அதன்பிறகு கதை சொல்ல வரும் மரபும் அறவே அற்றுப் போய்விட்டன. 'மகாபாரதத்தை ஒருமுறை முழுமையாகக் கற்க வேண்டுமானால், ஏழு வருஷம் பிடிக்கும்' என்று அறுபதுகளின் உபன்யாச சக்ரவர்த்தியான சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் சொல்லியிருப்பது. தற்போது அவருடைய மகாபாரத உபன்யாச சி.டி. பதிவாகக் கிடைக்கிறது. ஏழு வருடங்கள் ஓதி உணர்ந்த பிறகே உபன்யாச மேடையில் ஏறமுடியும். அப்படியும், தொடக்கத்தில், தனக்குக் கற்பித்தவருக்குப் பின்பாட்டுப் பாடுபவராகப் பல வருடங்கள் கழிந்த பிறகே சொற்பொழிவாற்ற முடியும்.

தற்கால நிலையை நான் எழுத வேண்டிய அவசியமே இல்லை. இங்கொன்றும் அங்கொன்றும் பார்த்ததையும் கேள்விப்பட்டதையும் கொண்டுவந்து கொட்டுகிற சண்டமாருதங்கள் அனேகர் இருப்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். பதடியிலிருந்து நெல்லைப் பிரித்து எடுப்பது பார்ப்பவன், கேட்பவன் வேலை என்றாகி விட்டது. ஆனால், பார்ப்பவர், கேட்பவருக்கு அதற்கான தேவையோ, உந்துதலோ, மிக முக்கியமாகப் பொழுதோ இல்லாமல் போய்விடுவதன் காரணமாக, கண்டது கற்றவனே பண்டிதன். கண்டது கற்கப் பண்டிதனாவான் என்று பழமொழியே இருக்கிறதே. பழமொழியின் ஒப்புதல் கிடைத்தாகி விட்டதல்லவா! மன்னிக்கவும். இவை அனைத்தையும் கண்டும் கேட்டும் மனம் பொறாமல் எழுத நேர்ந்த சொற்கள் இவை. மக்களுக்கு உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொல்வார் அருகிவிட்டார்களே என்ற ஆதங்க மிகுதியால் சொல்ல நேர்ந்தது. அம்மட்டே.

இப்போது, நமக்குச் சொல்லப்பட்டும், காட்டப்பட்டும், மீண்டும் மீண்டும் எடுத்தோதப்பட்டும் வரும் மேற்படி முதற் பத்திச் சுருக்கவுரையில் சில அடிப்படைக் கேள்விகளைக் கேட்டுப் பார்ப்போமா? கேள்வி கேட்டால் அல்லவோ உள்ளதும் அல்லதும் சரிவரப் புலப்படும்? இப்போது, இந்தப் பொதுவான அபிப்பிராயத்தின் அடிப்படையைக் குறித்துச் சில கேள்விகளை எழுப்பிப் பார்ப்போம். விடை எங்கேனும் ஒரு மூலையிலாவது பளிச்சிடுகிறதா என்று தேடுவோம்.
முதல் கேள்வி: திருதிராஷ்டிரன், பிறவியிலேயே பார்வையற்றவனாக இருந்த காரணத்தால், பாண்டுவிடம் அரசு தரப்பட்டதென்றால், அரசு ஒப்படைக்கப்பட்டதா? அல்லது, ஒரு மாற்று அரசனாகத் தாற்காலிகப் பொறுப்பில் பாண்டு அரசேற்றானா? அல்லது, பாண்டுவின் நிலை வேறெதுவுமா? கேள்வி இரண்டு: அரியணையில் அமர்ந்த பாண்டு எப்போது வேட்டைக்குச் சென்றான்? அவன் அரசாண்டானா அல்லது வேட்டை மட்டுந்தான் ஆடினானா? ஆட்சிக்கு வந்த அவன், தன் பங்காக, நாட்டை விரிவுபடுத்த ஏதேனும் செய்தானா அல்லது சும்மா ஒப்புக்கு அரியணையில் அண்ணனுக்கு மாற்றாக அமர்ந்திருந்தானா? முனிவரால் சபிக்கப்பட்டு, கானகம் செல்வதாக முடிவெடுத்த பாண்டு, திருதிராஷ்டிரனிடம் அரசை ஒப்படைத்தான் என்று சொல்லப்படுகிறது. இப்போது கேள்வி மூன்று: தொடக்கத்தில், மூத்த பிள்ளையான திருதிராஷ்டிரன் அரசனாகப் பதவியேற்க முடியாமற் போனது அவன் பிறவியிலேயே பார்வையற்றவன் என்ற காரணத்தால் என்றால், இப்போது, பாண்டு எப்படி திருதிராஷ்டிரனிடம் அரசை ஒப்படைக்க முடியும்? அவனுக்கு இப்போது பார்வை வந்துவிட்டதா? அல்லது வேறேதேனும் சிறப்புக் காரணம் அல்லது விதி விலக்கால் இவ்வாறு பாண்டு அவனிடம் அரசைத் திரும்பக் கொடுத்தான் என்றால், அதே காரணம் அல்லது விதி விலக்கால், திருதிராஷ்டிரன் தொடக்கத்திலேயே அரசேற்றிருந்திருக்க முடியுமே! Status quo ante என்று சொல்வார்களல்லவா, அந்த முன்னிலைப்பாடு இன்னமும் மாறவில்லையே!

அதிலே எந்த மாற்றமுமில்லாதபோது, பாண்டுவால் எப்படி திருதிராஷ்டிரனிடம் அரசை ஒப்படைக்கவோ, அரியணையில் அமர்த்தவோ முடியும்? சரி. அப்படியே இருந்தாலும், பாண்டு திருதிராஷ்டிரனிடம் அரசை ஒப்படைத்தான் என்றால் என்ன பொருள்? மகுடம் சூட்டினானா? அப்படியானால், மூத்தவனுக்கு இளையவன் திருமுடி சூட்டல் என்ற பட்டாபிஷேகத்தைச் செய்விக்க முடியுமா? திருதிராஷ்டிரனுக்கு மகுடம் சூட்டப்பட்டது என்றால் எப்போது, யாரால் சூட்டப்பட்டது? பீஷ்மரோ, பிடிவாதமாக அரசேற்கவே மாட்டேன் என்று மறுத்தபடி இருக்கும் நிலையில் அவர் எப்படி இவனுக்கு முடிசூட்டியிருக்க முடியும்? அவருக்கு அடுத்த பெரியவர் என்றால், குரு என்ற நிலையில் துரோணரோ கிருபரோ செய்திருக்க முடியுமா?

சரி போகட்டும். இந்தக் கேள்விகள் ஒருபுறம் இருக்கட்டும். இப்போது நான்காவது கேள்வியை எழுப்புகிறேன். துரியோதனன் இளவரசன் என்றால், அவனுக்கு எப்போது இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது? முதலில், திருதிராஷ்டிரன் அரசனாகவோ, சக்கரவர்த்தியாகவோ இருந்திருந்தால்தானே துரியோதனன் இளவரசனாவதற்கு! என்ன? அதிர்ச்சிகளை எழுப்புகிறேனோ? ஒன்றே ஒன்றை மட்டும் மிக நிச்சயமாகச் சொல்வேன். நான் எழுப்பியிருக்கிற, எழுப்பப் போகிற ஒவ்வொரு கேள்விக்கும், வியாச பாரதத்திலிருந்து உரிய மேற்கோள்களைக் காட்டி-அதாவது அவுட் ஆஃப் கான்டெக்ஸ்ட் உருவி எடுக்காமல், மிக உண்மையான, நேர்மையான மேற்கோள்களை முழுமையாகக் காட்டி-நான் அடையவிருக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் என்ன அடிப்படை என்பதைச் சொல்லுவேன். இதில் ஐயங்கொள்ளத் தேவையே இல்லை.

ஆனால், கேள்விகள் அதிர்ச்சிகரமாக இருக்கலாம்-மிகப் பலருக்கு அப்படித்தான் இருக்கும். அவ்வளவு ஏன், நானேகூட இவற்றுக்கான மூலங்களைப் படித்தபோது அதிர்ந்துதான் போனேன். உண்மை அதிர்ச்சிகரமாக இருந்தாலும், உண்மை உண்மைதான். சகுனி சூதாட்டத்தில் வெற்றிபெற்று, அரசை துரியோதனனுடைய கைக்கு மாற்றித் தராதவரையில் துரியோதனன், இளவரசுப் பட்டம்கூடச் சூட்டப்படாதவன். சூதாட்ட நிகழ்வுக்குப் பிறகுகூட, முறைப்படி பட்டாபிஷேகம் செய்து கொண்டு அரசாண்டவன் அல்லன். அவன் மன்னனாக வந்தது வாரிசுரிமையாலா அல்லது வஞ்சத்தின் வெறுமையாலா? பாண்டவர்களுடைய வனவாச சமயத்தில், கந்தர்வர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட துரியோதனனை பீமார்ஜுனர்கள் மீட்டுவந்த சமயத்தில்-அவமானத்தால் அவன் உயிர்விடத் துணிந்த சமயத்தில், கர்ணன் எத்தனையோ ஆறுதல் மொழிகளைச் சொல்லி-களத்தையும் துரியோதனனையும் ஒன்றாகக் கைவிட்டு முதலில் ஓடியவன் இவன்தான்-துரியோதனன் மேற்கொண்ட பிரயோபவேச (தற்கொலை) முயற்சியைக் கைவிடச் செய்தாலும், அந்தச் சமயத்தில் 'நாம் ஒரு ராஜசூய யாகம் செய்யலாமா' என்று கேட்ட துரியோதனைக் கர்ணன் 'உன்னால் அந்த யாகத்தைச் செய்ய முடியாது' என்று சொல்லி, அதற்கு மாறாக வைஷ்ணவப் பெருவேள்வியைச் செய்யலாம் என்று ஆலோசனை கூறினான்? துரியோதன் ராஜசூய யாகத்தைச் செய்ய முடியாது என்று கர்ணனே சொல்லித் தடுத்த அந்தக் காரணங்கள் யாவை? இதை என் ஐந்தாவது கேள்வியாக வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போதுதானே கேள்விகளைத் தொடங்கியிருக்கிறேன். பொறுங்கள். தொடரலாம்.

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline