Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | சிறப்புப் பார்வை | அஞ்சலி | சமயம்
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | அமெரிக்க அனுபவம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
புதினம்
ஆத்ம சாந்தி
- சந்திரமௌலி|மார்ச் 2014||(2 Comments)
Share:
Click Here Enlargeஅத்தியாயம்-1:

புறப்பாடு
அதிகாலைப் பனிமூட்டமா இல்லை அதிக பொல்யூஷனால் வந்த புகைமூட்டமா என்று தெரியாத வானம். "பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை" என்று வீரமணி சத்தம்போட்டுச் சத்தியம் பண்ண, பக்கத்திலேயே டி.எம்.எஸ். புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களை புருஷோத்தமன் புகழ்பாட லவுட் ஸ்பீக்கரில் கெஞ்சிக் கொண்டிருந்தார். முந்தின தினம் டிவி சீரியலில் புருஷன் சாப்பாட்டில் விஷம் வைக்கப்போன பத்தினி மனைவியின் நினைப்பை மனதிலிருந்து கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, அதிகாலையில் மேக்சியோடு வீதி நிறைய கோலம்போடப் பெண்கள் வாசல் தெளித்துக் கொண்டிருந்தனர். பலவண்ண ரங்கோலிகளின் மத்தியில். மற்ற நேரத்தில் அசிங்கம் என்று தள்ளப்படும் சாணம் அரியாசனம் போட்டுத் தலையில் மஞ்சள் நிறப் பூசணிப்பூ கிரீடத்தை சுமந்து இருந்தது. அந்தப் பெண்கள் வாசல் தெளித்த நீரின் திவலைகள் மேலே பட்டதைப் பொருட்படுத்தாமல் அடுத்த ஜென்ம சொர்க்கத்துக்காக சிலரும், வைகுண்ட பரமபதத்துக்காக சிலரும், பார்த்தசாரதி கோவில் பொங்கலுக்காக சிலரும் திருப்பாவை சொல்லிக்கொண்டு ஒரு கோஷ்டியாக வீதி ஊர்வலம் போய்க்கொண்டிருந்தார்கள். இந்தியாவின் பொருளாதாரத்தையே நிமிர்த்திவிட்டாற் போல், நைட் ஷிஃப்ட் முடித்து கம்பெனி காரில் உடம்பை முறித்தவாறு இறங்கி 'தம்' பற்ற வைத்துக்கொண்டு ஒரு பிபீஓ கும்பல் தெரு ஓரத்தில் தங்கள் டீம் லீடை ஆங்கிலக் கெட்ட வார்த்தையில் வைது கொண்டிருந்தது.

செல்ஃபோன் சிக்னல்களின் உபயத்தில் சமீபத்தில் ஒழிந்துபோன, ஒரு காலத்தில் அந்த அதிகாலையில் சென்னையில் கீச்கீச்சென்று ஊரெங்கும் உற்சாகமாகப் பறந்து திரிந்து கொண்டிருந்த சிட்டுக்குருவிகளை ஞாபகப்படுத்துவது போல் பேப்பர் போடும் பையன் குரங்கு பெடல் போட்டுக்கொண்டு வீடெங்கும் சர்சர்ரென்று சூடான சம்பவங்களை வீசிக்கொண்டு சைக்கிளில் பறந்தான். தெருமுனையில் நாயர் இதற்குள் 30 கிளாஸ் டீ விற்றுத் தீர்த்து, 30 ரன் அடித்த விராட் கோலிபோல அடுத்த கியரில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார். அவர் கடையின் அரதப்பழைய ஃபிலிப்ஸ் ரேடியோவில் ஒரு ஜலதோஷக் குரல்காரர் நேற்று பாரளுமன்றத்தில் நடந்த கலாட்டாவையும், இந்தியா கிரிக்கெட்டில் உதைபட்டதையும் உணர்ச்சியே இல்லாமல் அறிவித்துக்கொண்டிருந்தார்.

இத்தனையும் நடந்துகொண்டிருந்த, திருவல்லிக்கேணி அக்பர் சாகிப் தெருவில் புறாக்கூண்டு வீடுகளில் ஏழாம் நம்பர் வீட்டில் மூன்றாவது போர்ஷன் ஒண்டிக்குடுத்தன ஹாலில் (ஹால் என்று சொல்லமுடியாது, ஹல் என்று சொல்லலாம்போல் அவ்வளவு சின்ன சைஸ்) மார்கழி மாதக் குளிருக்கு இதமாக இழுத்துப்போர்த்தித் தன் கனவுலகில் ஓவர்டைமில் சஞ்சாரித்துக் கொண்டிருந்தான் பரத் என்கிற எம். பரத்வாஜ். வழக்கமான வெளி நாட்டுக் கனவுதான். ராயர் கேஃபில் அடுக்கி வைக்கப்பட்ட மைசூர்பாகு கோபுரம்போல கண்ணாடியில் பளபளக்கும் அடுக்குமாடிக் கட்டிடங்கள், பாலிஷ் போட்ட கார்கள். கோட் சூட்டில் பரத், அவனுக்கு சலாம் அடித்து மரியாதை செலுத்தும் வெளிநாட்டவர்கள். ட்யூலிப்புகளும், டஃபோடில்களும் நிறம்பிய ஒரு பூந்தோட்டப் பின்னணியில் அவன் புன்முறுவலோடு நடக்கிறான். தேவதைபோல ஒரு பைங்கிளி, எந்த ஹீரோயின் ஜாடை என்று சரியாகத் தெரியவில்லை, அவனை அணைக்க வருகிறாள். அவனும் அவளை நெருங்கி கையைப் பிடித்து இழுத்து….. "அய்யோ காபியை கொட்டிட்டான் கடங்காரன். எழுந்திருடா, குதிருக்கு ஆகிறா மாதிரி இருபத்தெட்டு வயசாச்சு. மணி ஏழரைக்கு மேல ஆயிடுத்து, இன்னிக்கு இண்டர்வ்யூ இருக்கு, லேட்டாயிடுத்துனு சொரணைகூட இல்லாம இழுத்து போத்திண்டு தூங்கறதே தப்பு. இதுல காலங்காத்தால இந்த ஆஸ்துமா எழவோட மன்னாடிண்டு காபி போட்டுண்டு வந்தா கையைத் தட்டிவிட்டு அத்தனையும் வேஸ்ட்" கஸ்தூரி திருப்பள்ளி எழுச்சி பாடினாள்.

நம் பரத்துக்கு தினமும் இப்படி அருமையான கனவு, ஆண்டி க்ளைமாக்சில், இல்லை இல்லை, அம்மா க்ளைமாக்சில் முடிவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அவன் அன்று வழக்கத்தைவிட அதிகமான கடுப்பில் இருந்ததால், ட்ராஃபிக் கான்ஸ்டபிளை மதிக்காமல் அனாயசமாக ஜங்‌ஷனைக் கடக்கும் ஆட்டோக்காரர் போல, கஸ்தூரியின் புலம்பலை பைபாஸ் செய்து பாத்ரூமுக்குள் நுழைந்து விட்டான். "காதுல வாங்காதது மாதிரி போயிட்டா சரியாப் போயிடுத்தா. நான் ஒருத்தி கெடந்து அல்லாடிண்டிருக்கேன் காலம்பறலேருந்து. இங்க ஒண்ணுமே நடக்காதது மாதிரி பேப்பர் படிச்சுண்டு இருக்கீங்களே. கொஞ்சம் என்னனு கேக்கக்கூடாதா? கொஞ்சம் கூட பொறுப்பில்லாம திரியறான்."

பரத் நின்று ஏதாவது எதிர்த்துப் பேசி வாக்குவாதம் செய்திருந்தாலாவது அதிகாலை காபி பிரச்சனை அத்தோடு ஓய்ந்திருக்கும். சட்டையே செய்யாமல் போனது கஸ்தூரிக்கு மிகப்பெரிய அவமானமாகிவிடவே, தன் வழக்கைக் கணவனிடம் தாக்கல் செய்துவிட்டாள். சிந்துபாத்தை ஆபத்தில் அப்படியே விட்டுவிட்டு, தினத்தந்தியில் கன்னித்தீவு நிம்மதியாக படித்துக்கொண்டிருந்த மோகன் தன்னை நோக்கி வந்த ஆபத்தை எதிர்கொண்டார். முப்பத்தைந்து வருடம் அரசாங்க உத்தியோகத்தில் இருந்து ரிடையர் ஆனவர். சென்னை கார்ப்பரேஷனில் வேலை பார்த்ததால், நிஜமாகவே உத்தியோகத்தில் 'குப்பை' கொட்டியவர். கொஞ்ச வருஷம் 'மக்கள் குறை கேட்கும் பிரிவில்' வேலை பார்த்தவர் ஆனதால், இந்த வீட்டுப் பிரச்சனைகளைக் கையாளுவது அவருக்கு ஸ்வீடெக்ஸ் சாப்பிடுவது போல (சாருக்கு டயாபிடீஸ், சர்க்கரை ஆகாது). அவர் வேலையில் இருக்கும்போது சொல்வார் "இந்த டிபார்ட்மெண்ட் பேரே மக்கள் குறை கேட்கும் பிரிவு, குறை தீர்க்கும் பிரிவு இல்லை. பிரச்சனையை தீர்க்காட்டி போனாலும் பரவாயில்லை, நாம அதை கேக்குறோம்னு தெரிஞ்சா அதுவே பிரச்சனையைக் கொண்டு வரவனுக்குப் பெரிய ஆறுதல்".

"கஸ்தூரி, அவன் ஏதோ தூக்கக் கலக்கத்துல தட்டிவிட்டுட்டான். அவனை இன்னிக்கு எதுவும் சொல்லாதே. அவனுக்கு இன்னிக்கு வெல்காட் கம்பெனி இண்டர்வியூ. இருந்து இருந்து ஆறு மாசம் கழிச்சு வந்திருக்கு அவனை டென்ஷன் ஆக்காதே. நீயும் டென்ஷன் ஆகாதே. நான் அவன்கிட்ட பேசிக்கிறேன். முட்டிக்கால் வலியோட நீ அந்த கொட்டின காபியை துடைக்கறேன் பேர்வழின்னு குனியாதே. நான் பார்த்துக்கறேன். நீ உள்ளே போயி வேற வேலையை பாரு."

அவ்வளவுதான், கஸ்தூரியின் குரலில் வழக்கமான குழைவும், அனுசரணையும் வந்துவிட்டது. "சரி நீங்க பேப்பர் படிக்கிறதை கெடுத்துட்டேன். பரத் குளிச்சிட்டு வந்துருவான். இண்டர்வ்யூ கிளம்பறதுக்குள்ள டிஃபன் குடுக்கணும். உங்ககிட்ட பேசிண்டிருந்தா அவன் பட்டினியா கிளம்பிப் போயிடுவான்" என்று அரக்கப்பரக்க அடுக்களைக்குள் ஓடினாள். திடீரென்று கிளம்பிய அதிகாலைக் களேபரம் சந்தடியில்லாமல் ஓய்ந்தது.

பரத் பாத்ரூமிலிருந்து வருவதற்குள் அவனைப் பற்றியும், இந்தக் குடும்பத்தைப் பற்றியும் சின்ன அறிமுகம். கொஞ்சம் தவறினால் வறுமைக் கோட்டுக்குக் கீழே விழுந்துவிடக்கூடிய, மாத சம்பளத்தையும், இப்போது பென்ஷனையும் நம்பிவாழும் ஒரு மத்தியவர்க்கக் குடும்பம். கையில் காசு இல்லாவிட்டாலும், அக்கம்பக்கத்தாரின் அழுத்தம் காரணமாக எல்லாப் பண்டிகைகளையும் கஷ்டப்பட்டுக் கொண்டாடியே ஆகவேண்டிய வர்க்கம். ஒரு காலத்தில் ஆடம்பரமாகக் கருதப்பட்ட டிவி, ஃப்ரிட்ஜ், கிரைண்டர் எல்லாம் அத்தியாவசியமாகி இன்ஸ்டால்மெண்டிலும், ஆடித்தள்ளுபடியிலும் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி வாங்கி வைத்துக்கொள்ளும் வர்க்கம். நம் கஷ்டமெல்லாம் நம்மோடு போய்விடும், நம் அடுத்த தலைமுறை நன்றாகப் படித்து, பெரிய உத்தியோகம் பார்த்து, கார், பங்களா என்று ஆடம்பரமாக வாழும் என்று பகல் கனவும், பிரார்த்தனையும் எப்போதும் இருக்கும் வர்க்கம்.

இந்த வர்க்கத்தின் பலகோடிப் பிரதிநிதிகளின் செராக்ஸ் காபி பரத்தின் அப்பா மோகன். வயது அறுபதை அண்மையில் கடந்தவர். ரிடையராகி இரண்டு வருஷமாகிவிட்டது. பெயரளவில் பிராமண ஜாதி, மனதளவில் எந்த வித்தியாசமும் இல்லாத மிடில் க்ளாஸ் ஜாதி. மத்தியவர்க்கத்துக்கே உரிய தயக்கம், பயந்த சுபாவம், தார்மீகம் நிரம்பிய, உலகத்தார் பார்வையில் "பிழைக்கத்தெரியாத" மனிதர். கூட வேலைபார்த்தவர்கள் எல்லாம் அப்படி இப்படி என்று காண்ட்ராக்டர்களிடமும், மஸ்டர் ரோல் மழுப்பல்களிலும் வளைந்து நெளிந்து கொடுத்து சம்பாதித்த லஞ்சப்பணத்தில் வெள்ளைவேளேரென "ஸ்னோசம்" அடித்த பெரிய விடுகள் கட்டிக்கொண்டு வசதியைப் பெருக்கிக்கொண்டார்கள். இவர் மட்டும் நேர்மையாக உழைத்து, ரிடையராகி இன்னும் இந்தக் குறுகலான ஒண்டுக்குடித்தனத்தில் வாடகைக்கு இருக்கிறார்.

கஸ்தூரியைக் கல்யாணம் செய்துகொண்டு முப்பது வருஷம் ஆகிறது. அவளும் வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி எப்படியோ காலத்தைத் தள்ளிவிட்டாள். கொசுக்கடியிலும், ராப்படுத்தால் நிம்மதியாகத் தூக்கம், பார்டர் லைன் சுகர், ரத்தக்கொதிப்பு, கொஞ்சமே கொஞ்சம் ஆர்த்ரைடிஸ், சர்க்கார் தரும் பென்ஷன், அப்புறம் பையன் பரத். இவ்வளவுதான் இந்த முப்பது வருஷ தாம்பத்தியத்தில் மோகனுக்கும் கஸ்தூரிக்கும் மிச்சம். ஒரே ஒரு பெரிய கடன் மோகனுக்கு தஞ்சாவூரில் திருக்காட்டுப்பள்ளியில் இருக்கிறது. அது... அது... கஸ்தூரி இருக்கும்போது அதைப்பற்றிப் பேசவேண்டாமே. அப்புறம் பார்க்கலாமே.

பரத் இவர்களுக்கு ஒரே பையன். இன்னும் பெற்றுக்கொள்ள இருவருக்கும் ஆசைதான், ஆனால் அன்று பொருளாதாரம் இன்னொன்றுக்கு இடம் கொடுக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சுதாரித்து கௌரவமாகக் குடும்பம் நடத்தமுடியும் என்ற நம்பிக்கை வந்தபோது, கஸ்தூரியின் உடல்நிலை இரண்டாவது குழந்தைக்கு இடம் கொடுக்கவில்லை. அதனால் இரண்டு பேருடைய ஆசை, கனவு, அடி, உதை எல்லாம் தாங்கிக்கொண்டு ஒரே பையனாக பரத் வளர்ந்தான். வசதி இல்லாத காரணத்தால் சுமாரான பள்ளிக்கூடங்களில்தான் சேர்க்கமுடிந்தது. பரத்தின் அதிர்ஷ்டம், பள்ளிக்கூடம்தான் சுமார், அதில் வாத்தியார்கள் மகா மட்டம். ஏனோ சுபாவத்திலேயே அவனுக்குப் படிப்பில் ரொம்ப ஆர்வமும் இல்லை. எல்லாரோடும் வாக்குவாதம் செய்வது, புதுபுதுசாக விஷம விளையாட்டுக்களில் ஈடுபடுவது, எல்லாவற்றையும் அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்துப் பார்த்து ஆராய்வது என்று ஒரு தினுசாக இருந்ததால், எங்கும் நிலையாக இல்லாமல், நாளொரு ஸ்கூலும், பொழுதொரு வாத்தியாருமாக மாறிக்கொண்டே வளர்ந்தான்.

கஸ்தூரி பிரதி சனிக்கிழமை பார்த்தசாரதி கோவிலில் பெருமாளுக்கு வேண்டிக்கொண்டது வீண்போகவில்லை. அவள் வேண்டுதலோ இல்லை, யார் செய்த புண்ணியமோ தப்பித்தவறி +2 வரை தட்டுத்தடுமாறி பாஸ் பண்ணிவிட்டான். ஆர்ட்ஸ் காலேஜில்கூட இடம் கிடைக்காமல் கடைசியில் ஏதோ வட நாட்டுக் கலெக்டர் ஒருவரின் சிபாரிசில் (மோகன் நடையாய் நடந்து கையில் காலில் விழுந்ததால்) பி.எல். படிக்க சீட் கிடைத்து, அரியர்ஸ் மேல் அரியர்ஸ் வைத்து கடைசியில் டிகிரி வாங்கி முடித்தபோது மோகனும், கஸ்தூரியும் ஏதோ இமயமலை ஏறி சாதனை பண்ணினதுபோலக் கொண்டாடினார்கள். அடுத்த போராட்டமான வேலை தேடும் படலமும் இதே இழுபறி முறையில் ஆறு மாதம் ஓடியது. இந்த மத்தியில் மோகன் ரிடையர் வேறு ஆகிவிட்டதால், சிபாரிசும் எதுவும் எடுபடவில்லை. போனவாரம், மறைமலை நகர் தாண்டி ஏதோ ஒரு பாக்கத்தில் உப்புக்காகிதம், சாணைக்கல்லுக்கான அப்ரசிவ் தயாரிக்கும் தொழிற்சாலையில் லீகல் டிபார்ட்மெண்டில் ட்ரெய்னீ உத்தியோகத்துக்கு இண்டர்வியூ கார்டு வந்தது. அதற்குத்தான் பரத் அவசர அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தான்.
குளிக்கும் போதே ஃபாக்டரீஸ் ஆக்ட், வொர்க்மென் காம்பன்சேஷன் ஆக்ட், கம்பெனிஸ் ஆக்ட் என்று பரீட்சையில் சாய்சில் விட்ட விஷயத்தையெல்லாம் கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பார்த்தான். எப்படியாவது இந்த இண்டர்வ்யூவில் தேறி, வேலைக்குச் சேர்ந்துவிட வேண்டும். தன்னுடைய ராசி சட்டையையும், பனியனையும் அணியும்போது மறுபடி கலர்க்கனவுகள் மனதில் ஓடின. பெரிய பளபளக்கும் ஆபீஸ், கை நிறைய சம்பளம், சுற்றிலும் நிறைய பெண்கள், எல்லாருக்கும் இவனிடம் வந்து தான் சந்தேகம் தீர்த்துக் கொள்கிறார்கள். ஒரு மாசத்திலேயே பைக், அப்புறம் கார். திடீரென கம்பெனியின் எம்.டி. இவனை வெளிநாட்டு பிராஞ்சுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்கிறார். விமானம் பெரும் ஓசையோடு கிளம்புகிறது. விஸ்…..ஸ்..ஸ்ஸ்...

"டேய் பரத் சாமி கும்பிட்டது போதும், வா அப்பாகிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்க. அதுக்குள்ள குக்கரை எறக்கிடறேன், சாப்பிட்டுட்டு கெளம்பு."

"அப்பா எப்படியும் இந்த வேலை கிடைச்சுடும். அப்புறம் நீங்க இந்த கணக்கு எழுதற பார்ட் டைம் உத்தியோகத்தை எல்லாம் மூட்டை கட்டிடணும். உங்க பென்ஷன், என் சம்பளம் இது போதும்."

"நீ இப்படி சொன்னதே ரொம்ப தெம்பாயிருக்கு. எங்களுக்கு நீ ஒண்ணும் பண்ணவேணாம்பா. நீ ஒரு நல்லவேலைல செட்டில் ஆயிட்டா, உனக்குன்னு ஒரு குடும்பம்னு ஆகி சந்தோஷமா இருக்கலாம். அதை நாங்க பாத்துட்டாப் போதும். இவ்வளவு நாள் பட்ட கஷ்டமெல்லாம் அத்தோட போயிடும். இப்படி வா, என் ஆத்தா, அதான் உன் பாட்டி படத்துக்கும் அப்படியே ஒரு நமஸ்காரம் பண்ணிக்க. அவளோட ஆசீர்வாதம் வேணும்" மூடியிருந்த ஒரு பெட்டியிலிருந்து ஒரு வயதான பெண்மணியின் ஃபோட்டோவை எடுத்து வெளியே வைத்தவாறே மோகன் பரத்தை ஆசீர்வதித்தார்.

பரத் அந்த ஃபோட்டோவைக் குழம்பியவாறே கும்பிட்டு முடிக்கவும், கஸ்தூரி ஒரு வித குரோதத்தோடு "என் கோபத்தை எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் ஏன் இப்படி அதை கிளர்றாப்போலே காரியம் பண்றீங்க? இன்னிக்கு அவன் நிம்மதியா இண்டர்வ்யூ போக வேணாமா? இப்பப் போயி இந்த ஃபோட்டோவை எடுத்து அதுவும் ஆசீர்வாதம் ரொம்ப முக்கியமா? எதுலயும் முன்னேற முடியாம நீங்களும் நானும் அன்னாடங்காச்சியா இருக்கறதுக்கே இந்தப் பெரிய மனுஷிதானே காரணம். இன்னோரு தடவை இந்தம்மாவோட படத்தை இந்த வீட்ல பாத்தேன்னா நான் மனுஷியாவே இருக்கமாட்டேங்க. ஆசீர்வாதமாம் ஆசீர்வாதம், பரத் உள்ளே வாடா சாப்பிடலாம்."

மோகன் படத்தைப் பெட்டியில் வைத்துப் பூட்டினார். அவருக்கு கஸ்தூரியின் கோபமும், அதன் உக்கிரமும் நன்றாகத் தெரியும். மற்றபடி அன்யோன்னியமான அவர்கள் தாம்பத்தியத்தில் இந்த ஒரு விஷயம்-வள்ளியம்மாள் ஆத்தா மட்டுமே-ஒரு நெருடல். பரத்துக்கு அரசல் புரசலாகப் பாட்டியோடு இருந்த நினைவுகள் மனதில் உள்ளன. ஆனால் அதெல்லாம் எப்போதோ, போன ஜென்மத்தில் நடந்ததுபோல் எதுவும் பளிச்சென்று நினைவில் இல்லை. ஆனால் அவளைப்பற்றி இந்த வீட்டில் பேச்சு எதுவும் வருவதில்லை. அப்படி வந்தால் இப்படித்தான் ஒரு பெரும் சண்டை ஏற்படும்.

பரத் வளர்ந்து வாலிபன் ஆனதும் சில தடவை அவன் அப்பாவிடம் இதைப்பற்றித் தனியாகக் கேட்டிருக்கிறான். மோகன் அவனிடம் எல்லாம் சமயம் வரும்போது சொல்றேன் என்ற வழக்கமான பதிலையே தந்து கொண்டிருந்தார். தினப்படி வாழ்க்கை நடத்துவதே போராட்டமாயிருக்கிற அந்த நடுத்தரக் குடும்பம் வள்ளியம்மாளைப் பற்றிய பிரச்சனையை காஷ்மீர் பிரச்சனை போலப் பேசாமலும், தீர்க்காமலும் அத்தோடு வாழப் பழகிக்கொண்டு விட்டது.

அப்பா ஏன் பாட்டியை அம்மா என்று சொல்லாமல் ஆத்தானு சொல்றார்? வள்ளியம்மாள்ங்கிற பேர் நம்ம குடும்பத்துல வெச்சுக்க மாட்டாங்களே? அம்மா ஏன் இத்தனை கோபத்தைக் காட்டறாங்க? கண்டுபிடிக்கணும், சீக்கிரம் கண்டுபிடிக்கணும். மொதல்ல இந்த இண்டர்வ்யூவை பாஸ் பண்ணுவோம்-இந்த நினைவுகளோடும், கலர் கனவுகளோடும் பரத் மின்வண்டியில் அவசர அவசரமாக ஏறி இண்டர்வியூவுக்குப் புறப்பட்டான்.

(தொடரும்)

ஹூஸ்டன் சந்திரமௌலி
Share: 




© Copyright 2020 Tamilonline