Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | நூல் அறிமுகம் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
சுயம்வரம்
விளைநிலம்
- ராதா விஸ்வநாதன்|ஏப்ரல் 2014||(1 Comment)
Share:
வேகமாக ஓட்டிக்கொண்டு வந்த சைக்கிளை வீட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு, வாசலில் நின்றபடி "வாத்தியார் ஐயா" என்று கூப்பிட்டபடி உள்ளே எட்டிப் பார்த்தான் சிறுவன் பாண்டியன்.

குரல் கேட்டதும் முந்தானையில் கைகளைத் துடைத்தபடி வெளியே வந்தாள் மீனாள் ஆச்சி. அந்தக் கிராமத்தில் ஆச்சியைப் பற்றித் தெரியாதவர்களே இருக்கமுடியாது. ஊரில் அனைவரிடமும் பாசமாக இருப்பாள். "வாத்தியார் ஐயா" என்பது ஆச்சியின் ஒரே மகன் ராமலிங்கம். ஆசிரியராக மதுரையில் வேலை பார்த்துவருகிறான்.

வெளியில் நிற்கும் பாண்டியைக் கண்டதும், "அட பாண்டி தம்பியா... எப்படி இருக்கே? என்ன காலையிலே வந்திருக்கே. என்ன விஷயம்?" என்றாள்.

"வணக்கம் ஆச்சி. வாத்தியார் ஐயா இல்லீங்களா?"

"அவரு பக்கத்து ஊருல ஒரு கேதத்துக்குப் போயிருக்காப்ல. என்ன விஷயம்.. ஊர்ல எல்லாம் நல்லாத்தானே இருக்காக?"

"ஊம் எல்லாம் நல்லாத்தான் இருக்காக. வேலு தாத்தாதான் வாத்தியா ஐயாவைக் கூட்டியாரச் சொல்லுச்சு."

"ம்ம்ம். அவரு பொஞ்சாதி முனியம்மா மருதை ஆசுபத்திரிக்குப் போச்சே. இப்ப எப்படி இருக்கு?"

"ஆஸ்பத்திரியிலே இருந்து வந்திருச்சி. இன்னும் மருந்து சாப்பிடுது. ஐயா வந்தா சொல்லிருங்க ஆச்சி" என்றபடி பறந்தான் பாண்டி.

வீட்டுக்குள் சென்ற ஆச்சியின் மனது அடித்துக்கொண்டது. முனியம்மா அடிக்கடி காய்ச்சல்னு படுத்துவிடுகிறாள். வேலுச்சாமி, அவன் மனைவி முனியம்மா இருவரைப் போல நம்பிக்கையான உழைப்பாளிகளைப் பார்க்கவே முடியாது. ஆச்சியின் வீட்டு நிலம், தோப்பு, மாடு, கழனி எல்லாவற்றையும் பராமரித்துக் காவல் காத்து வருகிறார்கள். மீனாள் ஆச்சியின் கணவர் ஏகாம்பரம் ஊரில் ஒரு பணக்காரர். நல்ல தாராள மனம். முதலாளி, தொழிலாளி என்று பாகுபாடு பார்க்காமல் பாசத்துடன் இருந்து வந்தார். வேலுச்சாமிக்கும் முனியம்மாவிற்கும் தானே நின்று திருமணம் நடத்தி, அவர்களுக்கு வயல் அருகேயே ஒரு குடிசை போட்டுக் கொடுத்து, அவர்களுக்கு வேண்டிய வீட்டுச் சாமான்கள், கறவை மாடு, ஆடுகள் கொடுத்து உதவினார். வேலுவும் முனியம்மாவும் ஏகாம்பரத்திடம் விசுவாசமாக இருந்தனர். அந்த விசுவாசத்தைக் கண்டு அவருக்குச் சொந்தமான ’பொட்டக் காடு’ என்று ஒதுக்கப்பட்ட நிலத்தை இவர்களின் பெயருக்கு எழுதியும் கொடுத்தார். அந்த இடத்தைப் பாடுபட்டு சோலைபோல மாற்றி விட்டனர் வேலுவும், முனியம்மாவும்.

வேலுவுக்கு ஆண்குழந்தை பிறக்கும் சமயம் மகப்பேறு செலவு முழுவதையும் ஏகாம்பரமே பார்த்துக் கொண்டார். பிள்ளைதாச்சி என்பதால் கழனியில் வேலை செய்யவேண்டாம் என்று வீட்டுவேலை செய்வதற்கு மட்டும் ஆச்சி தன் வீட்டிலேயே முனியம்மாவை வைத்துக்கொண்டாள். ஏகாம்பரம் தங்கள் மகன் ராமலிங்கம் படிக்கும் பள்ளியிலேயே வேலுவின் பிள்ளையைப் படிக்க வைக்கத் தீர்மானித்திருந்தார். அவ்வாறே வேலுவின் மகன் சாமிக்கண்ணு பெரியவன் ஆனதும் ஏகாம்பரத்தின் மகன் ராமலிங்கம் படிக்கும் பள்ளியிலேயே சாமிக்கண்ணுவைச் சேர்த்தார். ஊரே இதைக் கண்டு அதிசயித்தது. ஏகாம்பரம் சாமிக்கண்ணுவைப் பார்க்கும் போதெல்லாம் "நீ நல்லாப் படிச்சா உன்னை பெரிய படிப்பு படிக்க மெட்ராஸூக்கு அனுப்பறேன்" என்று அடிக்கடி சொல்லிவந்தார்.

சாமிக்கண்ணுவும் நன்றாகப் படித்தான். உயர்நிலைப் பள்ளிக்கு வந்ததும் "ஐயா, எனக்கு இஞ்சினியரீங் படிக்க ஆசையாக இருக்குது. நீங்க உதவி செஞ்சா அந்தப் பணத்தைப் பின்னாடி சம்பாதிச்சு திருப்பித் தந்துர்றேன்" என்றான்.

அவன் சொன்னபடி பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க ஏகாம்பரம் சாமிக்கண்ணுவை சென்னையில் இஞ்சினியரீங் கல்லூரியில் சேர்த்துவிட்டார். மகன் ராமலிங்கத்தை அவன் விருப்பப்படி ஆசிரியர் பயிற்சிக்குப் படிக்க வைத்தார். ஆனால் இரு பிள்ளைகளும் படித்து முடிக்கும் முன்னரே ஏகாம்பரம் இறைவனடி சேர்ந்து விட்டார்.

சென்னையிலிருந்து விடுமுறையில் சாமிக்கண்ணு கிராமத்திற்கு வருவான். அப்போதே பெரிய கனவு காணத் தொடங்கிவிட்டான். அப்பா வேலுச்சாமியுடன் கழனிக்குப் போவதோ, வீட்டு வேலை செய்வதோ குறைந்துவிட்டது. வேலுவும் பையன் பெரிய படிப்புப் படிக்கிறான். அவனுக்கு ஏன் இந்த வேலை என்று இருந்தான்.

ஒரு தடவை விடுமுறையில் வந்தவன் ராமலிங்கத்திடம் என் கனவு எல்லாம் இங்கு இந்தியாவில் நிறைவேறாது. வெளிநாட்டுக்குப் போகணும் என்றான். சொன்னபடியே பொறியியல் பட்டம் பெற்றதும் அமெரிக்கா சென்றுவிட்டான். இரண்டு வருடங்களும் ஓடிவிட்டன.

இதையெல்லாம் நினைத்தபின்னர் ஆச்சி தன் மகன் ராமலிங்கத்தை நினைத்துப் பெருமையும் நிம்மதியும் அடைந்தாள். "நல்லவேளை சாமிக்கண்ணு போல இவனும் வெளிநாட்டுக்குப் போகாமல் நம் பக்கத்திலேயே இருக்கான். இவனும் ஊரைவிட்டுப் போயிருந்தால் நானும் முனியம்மாபோல் பிள்ளைப் பாசத்தில் பாயில் விழுந்திருப்பேனோ என்னவோ?" எண்ணச் சுழலில் சிக்கியவாறு வீட்டு வேலைகளை முடித்தாள். ராமலிங்கம் வீடு திரும்பினான். மாலை ஐந்துமணி ஆகியிருந்தது. முதலில் வீட்டின் பின்புறம் சென்று கிணற்றில் நீர் இறைத்துக் குளித்துவிட்டு வீட்டினுள் சென்றான். இது கிராமத்துச் சம்பிரதாயம்.

குளித்து வந்தவுடன் சூடான காபியை நீட்டியவாறே துக்கத்தைப் பற்றி விசாரித்தாள். "என்ன செய்ய முடியும்? எல்லாரும் ஒருநாள் போய்த்தானே ஆக வேண்டும். ஏதோ கஷ்டப்படாமல் போய்ச் சேர்ந்தாரு" மேலும் தொடர்ந்தாள். "நீ அந்தப் பக்கம் போனதும் குச்சம்பட்டியிலிருந்து பாண்டி வந்தாப்ல..."

"என்ன விஷயமாம்?"

"அதுதான் நம்ம வேலுச்சாமி பொஞ்சாதிக்கு உடம்பு நல்லாயில்லயாம். உன்னைக் கையோடு கூட்டிக்கிட்டு வரச் சொல்லிச்சாம், நம்ம வேலு"

காபி டம்ளரை கீழே வைத்தவாறு "அப்போ நான் இப்பவே போறேன்" என்று கிளம்பினான் ராமலிங்கம்.

"அட நாளைக்கு போகலாம்லே"

"இல்லம்மா.. முனியம்மாவுக்கு உடம்பு நல்லாயில்ல. போய் பார்த்துட்டு சாமிக்கண்ணுவுக்கு மெயில் அனுப்பணும்" என்றவாறு தனது இரு சக்கர வண்டியில் கிளம்பினான் ராமலிங்கம்.

வண்டியில் சென்றால் அரைமணி நேரம். அந்த மாலைப்பொழுதில் கதிரவன் மஞ்சள் கலந்த சிகப்பு வண்ணத்தை மேற்கே பூசிக் கொண்டிருந்தான். விதவிதமான பறவைகளின் ஒலி. அவை தங்கள் கூடுகளை நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. உள்ளூர்வாசிகள் வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வழி நெடுக இருபுறமும் பச்சைப்பசேல் என்ற வயல் வெளிகள். இந்த வயல்களில் பாதி ராமலிங்கத்திற்குச் சொந்தமானவை.

இதோ வேலுவின் வீடு தெரிகிறது. அப்பா முதன்முதலில் குடிசை போட்டுக் கொடுத்திருந்தார். அப்போது இங்கு இவ்வளவு மரங்களில்லை. வேலுவும், முனியம்மாவும் சேர்ந்து பல மரங்களை நட்டு, வெகு தூரத்திலிருந்து கண்மாயிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து மரங்களுக்கு ஊற்றித் தன் மக்களைப் போல வளர்த்தனர். அதனால் ஊர் குளுமையாகவும் பச்சையாகவும் இருக்கிறது. முன்பைவிட மழையும் பெய்கிறது. ஏகாம்பரம் கொடுத்த பொட்டைக் காட்டுப் பகுதியை வெட்டி, கற்களை நீக்கி பனை, கருவேலம், புளிய மரம் என்று வேறு நட்டு வைத்தனர் தம்பதிகள். பொட்டைக்காடு இன்று பசுஞ்சோலையாகி நிற்கிறது.
இக்காட்டில் வேலை செய்யும் போது, "ஏ புள்ளே, நமக்கு சாமி யாரு தெரியுமா? நம்ம ஏகாம்பரம் ஐயாதான்" என்பான் வேலு. "ஆமா, சரியா சொன்ன" என்பாள் முனியம்மாவும். தனக்குக் கல்யாணம் செய்து இந்தக் காட்டையும் கொடுத்து தன் பேரிலேயே எழுதி தன் மகனை பெரிய படிப்பு படிக்க வைத்த தெய்வம் ஏகாம்பரம்தானே. வீட்டின் எதிரே அவர்கள் வைத்த வேப்ப மரங்களில் பல பறவைகள் கூடுகட்டி வாழ்கின்றன. இந்த மாதிரி அமைதி, பசுமை, இயற்கை அழகை நகரத்தில் பார்க்கவே முடியாது. இதனாலேயே ராமலிங்கம் மதுரையிலிருந்து வார விடுமுறை நாட்களில் கிராமத்திற்கு வந்து அம்மாவின் கைமணத்தில் சமைத்ததை உண்ணவும் நல்ல சுத்தமான காற்றை சுவாசிக்கவும் வந்து விடுவான்.

அதேசமயம், வேலுவின் மகன் சாமிக்கண்ணு இங்கில்லாமல் போனது சிறிது துக்கமாகவுமிருக்கும். அவன் அமெரிக்கா சென்று இரண்டு வருடம் கழித்து ஒருமுறை மட்டுமே வந்தான். அவன் தங்கியது நான்கு நாட்களேதான். பிறந்து வளர்ந்த இடம் பிடிக்காமல் போய்விட்டது. வந்ததுமே ராமலிங்கத்திடம் குமுறினான். "அப்பப்பா என்ன சூடு. இன்னும் மின்சாரம் சரியாக வருவதில்லை. நல்ல ரோடு இல்லை. குளியலறை, கழிப்பறை ஒன்றும் இல்லை. இந்த ஜனங்கதான் படிக்காதவங்க. நீ படிச்சவன்தானே. நீயும் சேர்ந்துகொண்டு இவர்களுடன் எப்படிக் குப்பை கொட்டறே!" குழறிக் கொட்டினான்.

எப்படி இவனுக்குப் புரிய வைப்பது... "என்ன இருந்தாலும் பெத்த தாயையும், என்னை வளர்த்த இந்த பூமியையும் எப்படிடா தூக்கி எறிய முடியும்?" என்றான் ராமலிங்கம்.

"எல்லாம் சென்டிமென்டல். சரி, நாளைக்கு நாம எல்லாரும் மதுரைக்குப் போகணும்."

"எல்லாரும்னா ..."

"நான், நீ, எங்க அப்பா, அம்மா. மதுரைக்குப் போய் அப்பா, அம்மா பேர்ல ஜாயிண்ட் அக்கௌண்ட் பேங்க்ல ஆரம்பிக்கணும். அமெரிக்காவிலிருந்து பணம் ட்ரான்ஸ்ஃபர் செய்கிறேன். நீ கொஞ்சம் உதவி செய். இப்போ அப்பா இருக்கிற இடத்திலே நல்ல ஃப்ளாட் கட்டணும். வீட்டிற்கு வேண்டிய கேஸ், கட்டில், பீரோ, ஃப்ரிட்ஜ், டி.வி. எல்லாம் வாங்கணும். நான் பணம் போட்டுட்டு போறேன். நீ மேற்பார்வை மட்டும் செய்தால் போதும்" என்று அடுக்கிக்கொண்டே போனான் சாமிக்கண்ணு. இதன் நடுவில் அவனுக்கு செல்லில் அழைப்பு வந்தது. "சாம் ஸ்பீக்கிங்" என்று தொடர்ந்தான்.

"ஓ! சாமிக்கண்ணு குணம்தான் மாறிட்டான்னு நினைத்தோம். பெயரே மாறிவிட்டதே!" வியந்தான் ராமலிங்கம்.

"பரவாயில்லை. இவ்வளவு மாறினாலும் அப்பா, அம்மாவை மறக்காமல் நன்றாக வைத்துக்கொள்ள நினைக்கிறானே!" என்று மகிழ்ந்தான்.

சாமிக்கண்ணு தொடர்ந்தான் "என்ன வீட்டுல பொண்ணு ஏதும் பாக்கலையா? இல்ல நீயே பாத்து வச்சிரிக்கியா?"

"ஓ அதுவா. ஆச்சிக்குத் தெரிந்த குடும்பம். ஒப்பு தாம்பலம் ஆகியிருக்கு. நிச்சயதார்த்தம் ஆனா உனக்குச் சொல்லாமலா இருப்பேன்." என்றவன், அவனைப்பற்றிக் கேட்டால் என்ன என்று தோன்றவே, "அங்கே எப்படி..." என்றவாறு குறும்பாகப் பார்த்தான்.

"நீ நினைப்பது சரிதான். எனக்குப் பிடித்த அமெரிக்கப் பெண். பெயர் டெய்சி. படித்தவள். மிகத் திறமைசாலி. நாங்கள் இருவரும் திருமணம் செய்ய தீர்மானித்துள்ளோம். திருமணத்திற்குப் பிறகு அவளுக்கு இந்தியாவிற்கு வந்து, அதுவும் இந்த மாதிரி கிராமத்தில் வந்து தங்க வேண்டுமாம். நீயே சொல், எப்படி அவளை இங்கே அழைத்து வருவது... டாய்லெட், தண்ணீர், குளியலறை, படுக்கையறை எதுவுமே இல்லை" ஆத்திரத்தோடு பொரிந்தான்.

யாரோ மண்டையில் சம்மட்டியால் அடிப்பது போலிருந்தது ராமலிங்கத்துக்கு. "ஓஹோ... தன் மனைவி இங்கு வருவதற்கு சகல நாகரிக வசதிகளோடு வீடு தேவைப்படுகிறதோ! ஏதோ பெத்தவங்களுக்கு வசதி செய்து கொடுக்கப் போகிறான் என்றல்லவா நினைத்தோம்." உள்ளூற வேதனை அடைந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

மதுரைக்கு வந்து அப்பா, அம்மா புகைப்படம் எடுத்து வங்கியில் கணக்கை ஆரம்பித்து வைத்துவிட்டு, இருவருக்கும் புது மாடலாக செல்பேசி வாங்கிக் கொடுத்தான் சாமிக்கண்ணு. பேசும்போது முகத்தையும் பார்க்கலாம் என்றதும் வேலு, முனியம்மா அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. முனியம்மாதான் சொன்னாள், "காசு போட்டு ஏன் இரண்டு வாங்கினே. ஒண்ணு போதுமில்ல?"

"அப்பாவும் நீயும் எப்போதும் ஒரே இடத்திலேயா இருப்பீங்க. உனக்கு பேசணும்னு இருந்தா நீ பேசலாமில்ல."

"நீ நல்லா இருடா ராசா..." எனக் கன்னத்தை வழித்தாள். ஏனோ இந்த மேனரிசம் அமெரிக்க "சாம்"க்குப் பிடிக்காமல் போய்விட்டதை அவன் முகச் சுளிப்பே காட்டிக்கொடுத்தது.

அடுத்த நாள் ஆச்சி வீட்டில் சாப்பாடு. அன்று இரவே ராமலிங்கம், சாமிக்கண்ணு இருவரும் மதுரைக்குப் புறப்பட்டனர். வேலுவும், முனியம்மாவும் கண்ணீர் வழிய வழியனுப்பினர்.

மறுமாதமே அமெரிக்காவில் டெய்சியை மணந்து கொண்டான் சாமிக்கண்ணு. அதற்குப் பிறகு அவன் இந்தியாவுக்கு வரவே இல்லை. அவ்வப்போது செல்பேசியில் பெற்றவர்களுடன் ஓரிரு வார்த்தைகள் பேசியதோடு சரி.

ராமலிங்கத்திற்குத் திருமணமாகி மதுரையில் குடும்பத்துடன் வாழ்க்கை தொடங்கி ஐந்து வயதில் ஒரு பையன் இருக்கிறான். சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள், பண்டிகைக்கு கிராமத்திற்கு குடும்பத்துடன் வந்து ஆச்சியுடன் இருந்துவிட்டுப் போவான்.

ஆச்சி எப்படி தன் வீடு, வயல், மாடுகளை விட்டுப்போவது என்று கிராமத்திலேயே தங்கிவிட்டாள். ராமலிங்கம் குடும்பத்துடன் வந்தால் ரொம்ப சந்தோஷப்படுவது வேலுவும், முனியம்மாவும்தான்.

இவ்விதமாகக் காலச்சக்கரம் உருண்டது. இக்காலகட்டத்தில்தான் வேலுவும் முனியம்மாவிற்கும் பிள்ளையின் பாசம் வாட்டி எடுத்தது. முதுமையும் சேர்ந்து தனிமை கொத்தித் தின்றது. முன்போல் வேலையும் செய்ய முடிவதில்லை. அடிக்கடி காய்ச்சல் என்று படுத்து விடுகிறாள் முனியம்மா. மகன் என்றாவது வருவான் என நினைத்து குடிசைவீட்டை இடித்து வசதியான வீட்டைக் கட்டி அதில் எல்லா சாமான்களையும் வாங்கிப் போட்டார்களே தவிர எதையும் அவர்கள் உபயோகிப்பதில்லை.

பழகிய பாதையானதால் பழைய நினைவுகள் உள்ளே ஓடினாலும், வண்டியைச் சரியாக ஓட்டி வேலுவின் வீட்டை அடைந்தான் ராமலிங்கம். உள்ளே நுழைந்ததும் "வாங்க தம்பி" என்று வரவேற்றார் வேலு. கட்டிலில் கிழிந்த நார்போலப் படுத்திருந்தாள் முனியம்மா. அருகில் மாத்திரைகள், ரொட்டி, தண்ணீர், செல்பேசி இருந்தன. சப்தம் கேட்டு லேசாக கண்களைத் திறந்தாள்.

வேலுதான், ஏதோ பீடிகைபோட்டு ஆரம்பித்தார். "தம்பி உங்ககிட்டே ஒரு சேதி சொல்லணும்."

"சொல்லுங்க வேலுசாமி. ஒரு வாரம் லீவில்தான் வந்திருக்கேன்."

"அப்பா புண்ணியத்துல நாங்க நல்லா பிழைச்சிட்டோம். சாமிக்கண்ணும் பெரிய படிப்பு படிச்சு பெரிய ஆளாயிட்டான். எங்க ரெண்டு பேருக்கும் வயசாயிடுச்சி. முன்பு மாதிரி வேலை செய்ய முடியல. அப்பா எங்களுக்கு எழுதிக்கொடுத்த இந்தப் பொட்டல் காடு நல்ல நிலமாயிருச்சு. அவனவன் விலைக்குக் கேட்குறான். இனி எங்களுக்குப் பிறகு யாரு இத வச்சு ஆளப்போறாங்க. வித்துட்டா மறுபடியும் தரிசாக்கி விளைநிலத்தை வீடுகட்ட ப்ளாட் போட்டுக் கொடுத்துடுவாங்க. அப்பாவும் நானும் கஷ்டப்பட்டு பயிர் வச்சு வந்தோம்" நிறுத்தியவர் முகத்தைக் கூர்ந்து பார்த்தான் ராமலிங்கம்.

"நீங்க வக்கீல் அய்யாவை கூட்டியாந்து அப்பா கொடுத்த இந்த இடம், நிலம், எல்லாத்தையும் உங்க பேர்லயே எழுதிக்கங்க. நானும் முனியம்மாவும் கைநாட்டு போட்டுவிடுகிறோம். சாமிக்கண்ணு இங்கு வராது. இதைப் பற்றி அதுக்குக் கவலையுமில்லை."

ராமலிங்கத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படியும் இன்னும் மனிதர்கள் இந்த மண்ணில் இருக்கிறார்களா, என்ன தொலைநோக்குப் பார்வை, இவனுக்கு. பயிர் செய்ய சோம்பல்பட்டு விளைநிலத்தை தரிசாக்கி வீடு கட்ட விற்கும் கும்பலில், தரிசை விளைநிலமாக்கி அதை அப்படியே காப்பாற்ற வேண்டும் என்று கெஞ்சுகிறானே!

"சரி... வேலுச்சாமி அப்படியே செய்கிறேன்" என்றவுடன் இருவரும் மகிழ்ந்தனர். "நீங்க எனக்கு இதை எழுதிக் கொடுத்தாலும் நீங்க ரெண்டு பேரும் எங்களை விட்டு எங்கும் போகக்கூடாது. சாமிக்கண்ணுதான் உங்க பிள்ளையா என்ன? நிலத்தில் பயிர்செய்து சோறு போடும் நீங்களும் எனக்கு அம்மா, அப்பா போலத்தான்" என்றதும், பிள்ளைப் பாசத்தை அடக்க முடியாமல் இருவரும் கண்ணீர் விட்டனர்.

மறுநாள் ராமலிங்கம் வக்கீலை அழைத்துக் கொண்டு வேலுவின் வீட்டிற்குச் சென்று அவன் கூறியபடியே பத்திரம் எழுதப்பட்டது. பத்திரத்தில் வேலுவும், முனியம்மாவும் கைநாட்டுப் போட்டனர்.

"இந்தா.. ஐஸ் பெட்டியிலிருந்து சர்பத் கொண்டுபோய் கொடு" என்றாள் முனியம்மா, வேலுவிடம்.

ஃப்ரிட்ஜை அவள் அப்படித்தான் சொல்வாள். வேலுச்சாமி கொடுத்த கூல் ட்ரிங்கை குடித்துவிட்டு வக்கீல், சாட்சிக் கையெழுத்துப் போட வந்தவர்கள் என எல்லாரும் சென்றனர். அவர்களை வழியனுப்ப ராமலிங்கமும் கூடவே வாசல்வரை சென்றான்.

இதற்காகவே காத்திருந்ததுபோல முனியம்மாவின் தலை சாய்ந்தது. "அடியே முனியம்மா, போயிட்டியா" என்ற கதறல் அந்தப் பிராந்தியத்தையே உலுக்கியது.

ராமலிங்கம் உள்ளே சென்று பார்க்க, கடமையைச் சரியாக முடித்த திருப்தியில் முனியம்மா இவ்வுலகை விட்டுச் சென்றிருந்தாள். அவளைத் தொடர்ந்து செல்வதுபோல் அவள் வளர்த்த மரங்களில் கூடுகட்டி வாழ்ந்து கொண்டிருந்த பறவைகள் தங்கள் இறக்கைகளைப் படபடவென அடித்த வண்ணம் நாலாபக்கமும் பறந்தன.

ராதா விஸ்வநாதன்,
பெங்களூரு
More

சுயம்வரம்
Share: 




© Copyright 2020 Tamilonline