Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | நூல் அறிமுகம் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
ப்ரியதர்ஷினி கோவிந்த்
- அரவிந்த்|ஏப்ரல் 2014|
Share:
அத்தனை வெயிலிலும் அந்த இடம் குளுகுளுவென்று இருக்கிறது. குயில்கள் மாறிமாறிக் கூவிக் கொண்டிருக்க அவற்றோடு போட்டி போட்டுக் கொண்டு காற்றில் தவழ்ந்து வருகிறது இசைப்பாடல் ஒன்று. கூடவே ஜதிகளின் ஒலி. சூழலில் நாம் நம்மை மறக்கத் துவங்க, "சற்று நேரத்தில் அழைக்கிறேன் ப்ளீஸ்" என்கிறார் அவர். மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகப் பணியாளர்கள், பயிற்றுநர்கள், இசை, நாட்டியக் கலைஞர்கள் எனப் பலரும் அவரைச் சந்திக்க வந்து போகிறார்கள். சிறிது நேரத்துக்குப் பின் அவரே வெளியில் வந்து அழைக்கிறார், "உங்களை ரொம்ப நேரம் காக்க வைத்ததற்காக மன்னிக்க வேண்டும்" என்றவாறே உரையாடத் துவங்குகிறார். அவர், பிரபல நாட்டியக் கலைஞரும் கலாக்ஷேத்ராவின் இயக்குநருமான ப்ரியதர்ஷினி கோவிந்த். வணிகவியலில் பட்டமும், மாஸ் கம்யூனிகேஷனில் பட்டயமும் பெற்றிருக்கும் ப்ரியதர்ஷினி உலகெங்கும் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். பல நாடுகளில் தேசியத் திருவிழாக்களில் பங்கேற்று இந்தியக் கலைக்குப் பெருமை சேர்த்தவர். சங்கீத நாடக அகாடமி விருது, வசந்தலக்ஷ்மி நரசிம்மாச்சாரி விருது, யுவகலா பாரதி, நிருத்ய சூடாமணி, கலைமாமணி உட்படப் பல விருதுகள் பெற்றவர். இசை, நடனம், நட்டுவாங்கம் ஆகியவற்றில் விற்பன்னர். அவருடன் உரையாடியதில் இருந்து....

கே: பரதக்கலை மீது ஆர்வம் வந்தது எப்போது, எப்படி?
ப: என் அம்மா நான் பள்ளிப் பாடங்களோடு, பரதமும் கற்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். நடனசிகாமணி திருமதி. உஷா எனது வீட்டுக்கு வந்து நாட்டியம் சொல்லிக் கொடுத்தார். அப்போது எனக்கு ஆறு வயது. அவரது முதல் மாணவி நான்தான். முதல் அரங்கேற்றமும் என்னுடையதுதான். அவர் அதற்கு மேலும் நான் நிறையக் கற்கவேண்டும் என்று ஆசைப்பட்டு, வேறொரு குருவிடம் பயிலச் சொன்னார். ஒன்பதாவது வயதில் நடந்த என் அரங்கேற்றத்திற்கு மேதை Y.G. துரைஸ்வாமி அவர்கள் வந்திருந்தார். அவர் Y.G. பார்த்தசாரதியின் அண்ணா. அவர் என்னைக் கலாநிதி நாராயணன் அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அவர் பாவங்களை வெளிப்படுத்துவதில் மிகச் சிறந்தவர். அவரது மாணவியாகச் சேர்ந்தேன். ஆறு வருடங்கள் அவரிடம் பயின்றபின் என்னை ராஜரத்தினம் சாருக்கு அறிமுகப்படுத்தினார். அவரிடம் பரத நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். நடனத்தோடு கர்நாடக இசையையும் கற்றுக் கொண்டேன். அப்படித்தான் ஆரம்பித்தது.

கே: உங்கள் அரங்கேற்றம் பற்றிச் சொல்லுங்கள்...
ப: ஒன்பது வயதில் மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் என் அரங்கேற்றம் நடந்தது. மேடையில் காலடி வைத்தபோது ஏற்பட்ட உணர்வு எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. பார்வையாளர் வரிசையில் நீதிபதி கோகுலகிருஷ்ணன் இருந்தார். என் கணவர் குடும்பமும் அப்போது பார்வையாளர் வரிசையில் இருந்ததென்பது எனக்குத் திருமணம் ஆன பின்னர், அந்த அரங்கேற்ற போட்டோக்களைப் பார்த்தபோது தெரிந்தது. ரொம்பவும் சுவாரஸ்யமான விஷயம் அது.



கே: பரதம்தான் உங்கள் வாழ்க்கை என்று எப்போது முடிவு செய்தீர்கள்?
ப: பரதம் பயில வேண்டும் என்று ஆசையாக ஆரம்பித்து ஒரு பற்றாக மாறி 15, 16 வயதில் 'இதுதான் நான் செய்யவேண்டியது' என்று தோன்றியது. கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயின்றேன். படிப்பை முடித்த பின்புதான் I wanted to take it up this as a career. என் குடும்பத்தில் இதற்குச் சற்று அச்சமும் தயக்கமும் இருந்தது. நன்றாகப் படித்தபின் நல்ல வேலைக்குப் போகாமல் இருந்தால் எப்படி, இதை ஹாபியாக வைத்துக் கொள்ளாமல் இதையே தொழிலாகக் கொண்டால் இதில் என்ன வருமானம் வரும் என்றெல்லாம் கவலைப்பட்டார்கள். இயல்புதானே? இன்றைக்கும் நிலைமை அப்படித்தானே இருக்கிறது! ஆனாலும் என்னுடைய குருவின் ஆசிர்வாதத்தாலும், என்னுடைய அம்மா உறுதியாக இதற்கு ஆதரவு கொடுத்ததாலும் குடும்பத்தில் எல்லாரும் ஒத்துக் கொண்டார்கள். பின் எனது திருமணத்திற்குப் பின் கணவர் மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் அளித்த ஊக்கமும் ஒரு முக்கிய காரணம். இப்போது நினைத்துப் பார்த்தாலும் எப்படி நிகழ்ந்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாம் கடவுளின் க்ருபை.

கே: உங்கள் குருநாதர்களிடமிருந்து நீங்கள் கற்றதும், பெற்றதும் என்ன?
ப: கலாநிதி மாமி, ராஜரத்னம் சார் இந்த இரண்டு பேரும் குருவாக அமைந்தது என் பாக்யம். பரதநாட்டியம் என்ற மேஜிகல் உலகை எனக்கு அறிமுகப்படுத்தியவர்கள் அவர்கள். குரு காண்பிப்பதுதானே எல்லாமே. இருவருமே கலையை கலையாக மட்டுமே பார்த்தவர்கள். இரண்டு குருநாதர்களுமே சொன்னது 'கலை என்பது உன்னைவிடப் பெரியது; 'நான்', 'நான்' என்ற வார்த்தை எந்தச் சூழ்நிலையிலும் முன்னால் வரக்கூடாது; கலைதான் நமக்கு முன்னால் இருக்க வேண்டும்; அதற்கு நாம் தலை வணங்கியே ஆக வேண்டும்' என்பதுதான். அவர்கள் அடுத்தவர் பற்றிய தேவையில்லாத விமர்சனம், சண்டை சச்சரவில் ஈடுபட மாட்டார்கள். சஞ்சலமில்லாத மனோநிலையில் இருந்தார்கள். இருவருமே கலை தவிர வேறு எதைப்பற்றியுமே யோசிக்க மாட்டார்கள். These are important lessons for me. Because we are not an island. We live in a community. But for us to live honest lives, we need to have honest goals.

கே: பரதத்துடன் கேரளத்தின் பாரம்பரியமான களரியும் கற்றுள்ளீர்கள் அல்லவா?
ப: ஆம். அப்போது என் இருபதுகளில் இருந்தேன். குழந்தைகள் பிறந்த பின்னர் நான் கொஞ்சம் குண்டாகி விட்டிருந்தேன். அப்போது வகுப்பில் ஒருவர் களரி பயில்வதாகச் சொன்னார். அதைக் கேட்டதும் எனக்கும் ஆர்வம் வந்தது. அது என்ன என்றுதான் பார்த்து விடுவோமே என்றுதான் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அதைக் கற்க ஆரம்பித்த பின்தான் எனது உடலைப் பற்றி, அதன் தசைகளைப் பற்றிய அழகு புரிந்தது. Very Artistic and artistic way of stretching the body. Lightness, vigor and power. ஆனால் நாம் செய்யும் களரியைக் கேரளாவில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். இது நடனக் கோணத்தில் செய்யப்படுவது. அவர்களின் களரிக்கு அருகேகூட நாம் போகமுடியாது.

கே: அபங்கம், துளசிதாசர் பாடல்கள், தியாகராஜர் கீர்த்தனை, புறநானூறு, திருக்குறள், நாச்சியார் திருமொழி என்றெல்லாம் புதிய களங்களில் நாட்டிய நிகழ்வுகள் நடத்தியிருக்கிறீர்கள். அது எப்படி சாத்தியமாகிறது என்பது பற்றிச் சொல்லுங்கள்...
ப: எதையுமே ஒரே இரவில் செய்தது கிடையாது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒவ்வொரு மாதிரி. ஆகவே அதை அமைப்பதற்கு முன்னால் நிறையத் திட்டமிடலும் உழைப்பும் வேண்டியிருக்கிறது. ஒரு வர்ணம் பண்ண வேண்டுமென்றால் நான் வெவ்வேறு ராகங்களைப் பார்ப்பதில்லை. நல்ல, அர்த்தமுள்ள, தரமான, நமது பாரம்பரியத்தைப் பேசும் பாடல்கள் எனப் பல விஷயங்களை கவனிக்க வேண்டும். அப்படித் திட்டமிட்ட பின்பு ஜதிக்கு விஜயராகவன், எனக்கு நட்டுவாங்கம் செய்யும் பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் கலந்தாலோசிப்பேன். எதுவாக இருந்தாலும் அது ஒரு குழு முயற்சிதான். ராஜ்குமார் பாரதி எனக்கு நிறைய இசை வடிவமைத்துக் கொடுப்பார். தமிழ்ப் பாடல்கள் என்றால் ரகுராமன் சாரிடமோ, தெலுங்கு என்றால் வீ.கே. அனந்தராமனிடமோ கேட்போம். ஜெயச்சந்திரன் மாதிரி நல்ல அறிஞர்களிடம் என்ன மாதிரிப் பண்ணலாம் என்று கலந்து பேசித்தான் முடிவு செய்வோம். எல்லாவற்றுக்கும் நேரம் எடுக்கும்.
கே: உங்கள் நாட்டியப் பயணத்தில் 'அங்கோர்' நாட்டிய நாடகத்திற்கு மிக முக்கியப் பங்குண்டு அல்லவா?
ப: ஆம். சிங்கப்பூரில் இருக்கும் அரவிந்த் குமாரசாமி, அப்சரா ஆர்ட்ஸ் அகாடமி, நீலா சத்தியலிங்கம் மற்றும் எஸ்பிளனேட் தியேடர் என எல்லாரும் இணைந்து தயாரித்த ஒரு நாட்டிய நாடகம் 'அங்கோர்'. அது அங்கோர்வாட் ஆலயம் பற்றிய கற்பனை கலந்த நாட்டிய நிகழ்ச்சி. அங்கோர்வாட் பற்றி வரலாற்று ஆதாரங்கள் மிகக் குறைவு. ஊகங்களும் கற்பனைகளும்தான் அதிகம். தஞ்சையிலிருந்து சென்ற சூரியவர்மன் என்ற சோழ மன்னன் கம்போடியாவை வென்று அதன்பின் எழுப்பிய கோயில் அது என்பதாக ஒரு வரலாறு இருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய இந்து ஆலயம் அது. தஞ்சாவூரிலிருந்து காம்போஜத்திற்கு மிக நீண்ட பயணம் சென்று அதை வென்று அப்படிப்பட்ட பிரமாண்டமான ஒரு ஆலயத்தைக் கட்டுவது என்றால் அது சாதாரண விஷயமில்லை. அதற்கு எத்தனை உழைப்பு, எத்தனை கற்பனை வேண்டியிருந்திருக்கும்! எத்தனை நபர்கள் அதில் பங்கு கொண்டிருப்பார்கள்! The concept itself is too big. So it had to be done in a Grand Manner.

பரதத்திற்கு இந்தியாவிலிருந்தும் ஸ்ரீலங்காவிருந்தும் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து, பின் கேரளாவிலிருந்தும், கம்போடிய நாட்டியத்திற்காக கம்போடியாவிலிருந்தும் என இப்படிப் பல நாட்டுக் கலைஞர்களை வரவழைத்து, படைக்கப்பட்ட நிகழ்ச்சி அது. அதில் இசை மிக முக்கியம். சில சமயங்களில் ட்ராக் முடித்தவுடன் லைவ் வர வேண்டும். சில சமயங்களில் ட்ராக்குக்கு லைவ் பாட வேண்டி வரும். ஏ.ஆர். ரஹ்மானிடம் ஒலிப்பதிவாளராகப் பணியாற்றிய சாய் ஷ்ரவணம், ராஜ்குமார் பாரதி, பாடலாசிரியர் கீபோர்ட் சுப்பு என எல்லாரும் இணைந்து பணியாற்றினோம். தூண்கள் நகரும், திரைகள் நகரும், மேடையே நகருமாறு மிகப் பிரமாண்டமாக செட்டிங்ஸ் போட்டிருந்தார்கள். அது ஒரு அற்புதமான அனுபவம். திரும்பப் பண்ணினாலும் கூட அந்தச் சுவை வராது. ஏனென்றால் அந்த பிரமாண்டத்தை அனுபவிப்பது very special. ஆறு மாதகாலம் அதற்காக சிங்கப்பூருக்கே சென்று தங்கி திட்டமிட்டு, பயிற்சி செய்து, உழைத்தோம். எஸ்பிளனேடில் இரண்டு காட்சிகள் நடந்தன.

(பார்க்க: Facebook.com; youtube.com)

கே: உங்களைக் கவர்ந்த நாட்டியக் கலைஞர்கள்?
ப: முதல் மரியாதை திருமதி ருக்மிணிதேவி அவர்களுக்குத்தான். அடுத்தது என்னுடைய குருநாதர்கள். அப்புறம் டாக்டர் பத்மா சுப்பிரமணியம், சி.வி. சந்திரசேகர், சித்ரா விஸ்வேஸ்வரன், வைஜயந்திமாலா பாலி என்று பலர் இருக்கிறார்கள்.

கே: உங்களுடைய ஸ்பெஷாலிடி 'அபிநயம்' என்று சொல்லலாமா?
ப: அபிநயமும், ரிதமும். முதலிடம் அபிநயத்துக்குத்தான்.

கே: இந்தத் துறையில் ஆண்கள் வெற்றிகரமாக இல்லாததற்கு உடற்கூறுதான் காரணம் என்று சொல்லலாமா?
ப: உடற்கூறு ஒரு முக்கிய காரணம். நளினமும் அழகும் பெண்களிடம் இயற்கையாவே அமைந்துள்ளன. ஆண் ஆடினாலும் அவை வெளிப்படுகின்றனதான். ஆனாலும் பெண் உடல் நடனத்துக்கு இயைகிறது.

கே: நடனமணிகள் தங்கள் உடல்வாகை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு முன்னுதாரணம். இது எப்படி சாத்தியமாகிறது?
ப: நம்முடைய யோகப் பயிற்சி, களரிப்பயட்டு இதற்குப் பயன்படும். உணவுக்கட்டுப்பாடு உதவும். ஆனால் பயிற்சி மிக முக்கியம். நாட்டியம் ஆடுகிறோம் என்றால் அதற்கேற்ப தசைகளை இயக்க, உடற்பயிற்சி செய்துதான் ஆக வேண்டும். விடாமல் நடனப் பயிற்சியும் செய்ய வேண்டும். நம்முடைய பாரம்பரிய நடன முறைகளில் நடனம் ஆரம்பிப்பதற்கு முன்னால் warm up செய்வதும், முடிந்த பின்னால் cool down செய்வதும் ரொம்பவே முக்கியம். அவசியம். ஏனென்றால் இப்போது எங்கு பார்த்தாலும் கலப்படம், பொல்யூஷன் இருக்கிறது. அதனால் கவனமாக இருக்க வேண்டியதாகிறது.

கே: கலாக்ஷேத்ராவின் இயக்குநர் ஆனது பற்றிச் சொல்லுங்கள்...
ப: ருக்மிணிதேவி அவர்களின் விசாலமான நோக்கு என்னை வியக்க வைக்கிறது. இந்த இடத்தில் காலடி எடுத்து வைத்ததும் இந்த பிரமாண்டமான பார்வைக்கேற்ப நான் இயங்கமுடியும் என்று தோன்றியது. கலாக்ஷேத்ரா என்பது வெறும் இசை, நாட்டியப் பள்ளி மட்டும் அல்ல. கைவினைப் பொருள் மையம் இருக்கிறது, Visual Arts Department இருக்கிறது. ஸ்டேட் போர்ட், சி.பி.எஸ்.இ. என்று இரண்டு பள்ளிகள் இருக்கின்றன. கலாக்ஷேத்ரா என்பது இவற்றையெல்லாம் தாண்டிய வாழ்முறை. இங்கே இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்லித் தரப்படுகிறது. கலைப் பிரக்ஞையுடன், எந்த உயிரினத்துக்கும் தீங்கு நினைக்காமல், அவற்றின்மீது அன்புடன், இயற்கையோடு ஒன்றி, இயற்கையை மதித்து, கலையை மதித்து, மக்களை மதித்து, நமக்குள் இருக்கும் நல்ல எண்ணங்களை மதித்து வாழும் ஒரு க்ஷேத்திரம் இது. இதற்குத் தலைமை ஏற்கக் கிடைத்ததே ஒரு பெரிய பொறுப்பு. மிகவும் நிறைவைத் தருவது. கலாக்ஷேத்ராவை நான் வேலை பார்க்குமிடமாக நினைக்கவில்லை. இது என் வீடு.

கே: இதன் பாரம்பரியத்தை மேலே கொண்டுசெல்லும் அதே நேரத்தில் நீங்கள் செய்யக் கருதும் புதுமை என்னவாக இருக்கும்?
ப: கலாக்ஷேத்ராவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான். வேறெதுவும் என் நினைவில் இல்லை. எனது நாட்டியம், மற்ற விஷயங்கள் எல்லாம்கூட எனக்கு இரண்டாம் பட்சம்தான். கலாக்ஷேத்ராவுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். அதில் ஒவ்வொரு நாளுமே சவால்தான். அந்தச் சவாலை எப்படி அறிவு பூர்வமாக, அனுபவ பூர்வமாக எதிர்கொள்வது என்பதைத்தான் நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். சிறந்த கல்வியை அளித்து மாணவர்களைச் சிறந்த மனிதர்களாக, சிறந்த கலைஞர்களாக ஆக்கவேண்டும்; அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதுதான் எனது சிந்தனையில் ஓடுகிறது. இங்கு சிறந்த ஆசிரியர்கள் உள்ளனர். சிறந்த கட்டமைப்பு உள்ளது. இதை வைத்துக்கொண்டு எதையெதையெல்லாம் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியுமோ அவற்றை எல்லாம் செய்ய வேண்டும். அதுவே ஒரு சவால்தான்.

கே: கலாக்ஷேத்ராவில் என்னென்ன பாடப் பிரிவுகள் தற்போது இருக்கின்றன, அவற்றில் சேர என்னென்ன தகுதிகள், வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு ஏதேனும் சலுகைகள் உள்ளனவா?
ப: பத்தாம் வகுப்பை நிறைவு செய்த பிறகு, இங்கே 15 வயதில் சேரலாம். இசை, நாட்டியம் எது வேண்டுமானாலும் பயிலலாம். நான்கு வருட பட்ட வகுப்பு, இரண்டு வருட முதுகலைப் பட்டய வகுப்பு (PG Diploma) இருக்கிறது. Visual Arts படிக்கலாம். கைவினை மற்றும் நெசவு இருக்கிறது. கைத்தறிப் பட்டு, பருத்தி, கலமகாரி ஓவியம் என்று நிறையக் கற்க முடியும். ICCR கலாசாரப் பரிமாற்ற மாணவர்கள் வரலாம். அவர்களுக்கு ICCR நிதியுதவி கிடைக்கும். நாங்களும் இங்கே சில ஸ்காலர்ஷிப்ஸ் தருகிறோம். வெளிநாட்டு மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் உள்நாட்டு மாணவர்களுக்கும் அவை கிடைக்கும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களும் இங்கே படிக்க வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நிதியுதவி அளிக்கிறோம். மாணவர்களுக்கு இங்கேயே ஹாஸ்டல் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் இங்கேயே தங்கிதான் கற்றுக் கொள்கின்றனர். இங்கேயே தங்கிப் படிப்பதால் எப்போது வேண்டுமானாலும் பயிற்சி செய்வது, கூட்டுப் பயிற்சி, ஆசிரியர்கள் உடனிருப்பது போன்ற அனுகூலங்கள் உண்டு. (மேல் விவரங்களைப் பார்க்க: www.kalakshetra.net)



கே: உங்கள் குடும்பம் பற்றி....
ப: அப்பா சார்டர்ட் அக்கவுண்டண்ட். சகோதரி வழக்குரைஞர். கணவர் படத்தயாரிப்பாளர். எனது மாமனார் குடும்பமும் திரைத்துறை சார்ந்ததுதான். என்னுடைய அப்பா, அம்மா குடும்பம் எல்லாமே லாயர்கள்தான். என்னுடைய குடும்பத்திலேயே நாட்டியத்துறைக்கு வந்த முதல் நபர் நான்தான். எனக்கு ஒரு பெண், ஒரு பையன். பெண் படத்தொகுப்பில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாள். பையன் சட்டம் படிக்கிறார். அவர்கள் நாட்டியத்தைப் பயிலவில்லையே தவிர, நிறைய விஷயம் தெரியும். நல்ல ரசிகர்கள்.

கே: இளம் நாட்டியக் கலைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
ப: பரதம் ஒரு அழகான கலை. அது கலாசாரம், வரலாறு, புராணம் எல்லாவற்றையும் கற்றுத் தருகிறது. உன் உடலைப் பற்றிச் சொல்லித் தருகிறது. ஒத்திசைவு, லட்சியம், லட்சியத்தை அமைத்துக் கொள்வது, கட்டுப்பாடு எல்லாம் வருகிறது. உன் பெர்சனாலிடியை மேம்படுத்துகிறது. இதை முறைப்படியா, முழு மனசோட, ஆர்வத்தோட, அர்ப்பணிப்போட கற்றுக் கொண்டீர்கள் என்றால் வேறெதுவும் தரமுடியாத உயர்ந்த நிலையை அது தரும். அதற்கு சிரத்தையோடு இருக்கவேண்டும்.

கே: பரதத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
ப: முன்பைவிட இப்போது நன்றாகத்தான் இருக்கிறது. உலகளாவிய வரவேற்பு இதற்கு இருக்கிறது. ஒரு சாதாரண கொசுவர்த்தி விளம்பரத்தில் கூட பரதம் இடம்பெறுகிறது. பரத நாட்டியம் தற்போது நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கிறது. என்னைப் பொருத்தவரை பரதநாட்டியம் என்பது பாலிவுட் மாதிரியோ, கோலிவுட் மாதிரியோ கிடையாது. அது ஒரு கிளாசிகல் ஆர்ட். அதை உணர்ந்து பாதுகாக்க வேண்டியது மக்கள் மற்றும் அரசின் கடமை. இது உடலையும், அறிவையும் ஒருசேர புத்திபூர்வமாகப் பயன்படுத்தும் ஒரு கலை. ஆகவே நமது கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இந்த உன்னதக் கலையின் அருமையைப் புரிந்து கொண்டு சிறுவயது முதலேயே நமது குழந்தைகளுக்குக் கற்றுத்தர அரசும், ஆர்வமுள்ள பிற அமைப்புகளும், பெற்றோரும் முன்வர வேண்டும். அப்படி வளர்த்தால்தான் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இது போய்ச் சேரும். இல்லையென்றால் இழப்பு நமக்குத்தான். எதையும் மேலோட்டமாகக் கற்றுக்கொண்டு, எதையாவது பேசிக் கொண்டிருந்தால் அது அந்தக் கலைக்கும் சரி, நமது கலாசாரத்திற்கும் சரி நல்லதல்ல. அரசும், மக்களும் இந்தக் கலைக்கு இன்னமும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

(இடையறாத பணிகளுக்கிடையே தென்றலுக்கு நேரம் ஒதுக்கியமைக்காக நன்றி கூறி விடைபெற்றோம்.)

சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்

*****


புறநானூற்றுத் தாயும் மகனும்
ஒரு தாயும் குழந்தையும் குறித்த சக்திவாய்ந்த ஒரு தயாரிப்பைச் செய்ய நான் ஆசைப்பட்டேன். ரகுராமன் சார் என்னிடம் அப்படி ஒரு புறநானூற்றுப் பாடலைப் பற்றி முன்னமே சொல்லியிருந்தார். தன் மகன் கையில் வேலைக் கொடுத்துப் போருக்கு அனுப்பும் தாயைப் பற்றிய பாடல் அது. நாட்டியத்துக்காக எழுதப்பட்ட பாடலல்ல அது. அதை நாட்டியத்துக்காக மாற்றி அமைப்பது ஒரு பெரிய சவால். தாய் தன் மகனைப் போருக்கு அனுப்புகிறாள். அவன் போரில் இறந்து விடுகிறான். அவன் புறமுதுகு காட்டி இறந்தான் என்று சிலர் வந்து அவளிடம் சொல்கின்றனர். அந்தப் பழிச்சொல் பொறுக்காமல் அவன் மார்பில் வேல் பாய்ந்து இறந்தானா அல்லது முதுகில் பாய்ந்து இறந்தானா என்று அறிவதற்காக கையில் வாளுடன் அவள் அந்த போர் நடந்த பகுதிக்குச் செல்கிறாள். தன் மகனைத் தேடுகிறாள். இறுதியில் அவன் மார்பில்தான் வேல் தாக்குண்டு இறந்திருக்கிறான் என்பதை அறிந்தவுடன் அவள், அவனைப் பெற்றபோது பெற்ற இன்பத்தை விடக் கூடுதல் இன்பம் அடைகிறாள். இதுதான் அந்தப் பாடலின் கருத்து.

நாங்கள் இதை அப்படியே வைத்துக் கொண்டு மேலும் சிலவற்றைச் சேர்த்து ஒரு நாட்டிய வடிவிற்குக் கொண்டு வந்தோம். எப்படி அந்தத் தாய் தன் மகனை அலங்கரித்தாள், அவனுக்கு வீர வார்த்தைகள் கூறினாள், அவனை ஊக்குவித்து வேல் கொடுத்து போருக்கு அனுப்பினாள் என்பது ஒரு காட்சி. அதன் பிறகு மகன் போரில் இறந்து விட்டான் என்பது தெரிந்ததும், அவன் மரணத்தைச் சிலர் பழித்துக் கூறியது கண்டு பொறுக்காமல் கையில் வாளை எடுத்துக் கொண்டு ஆவேசமாக போர்க்களத்திற்கு ஓடுகிறாள். மகனின் உடலைத் தேடுகிறாள். அவன் தன் மார்பில்தான் வேல் தாக்குண்டு இறந்திருக்கிறான் என்பது தெரிந்தவுடன் அவளுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி, தன் மகனுக்கு இப்படி ஒரு வீரச் சாவு கிடைத்திருக்கிறதே என்பதாக. அவனை அணைத்துக் கொள்கிறாள். அதற்கப்புறம்தான் அவளுக்கு தாய் என்ற உணர்வு வருகிறது.

அவள் உள்ளத்திலிருந்து உணர்வுகள் கிளம்புகின்றன. அது தாலாட்டாக வெளிப்படுகிறது. அந்தக் குழந்தையின் ஒவ்வொரு அங்கத்தைக் குறித்தும் அவள் ஒரு தாலாட்டுப் பாடல் பாடுகிறாள். உன் கண்களால் என்னைத் திரும்பிப் பார்க்க மாட்டாயா? உன் வாயால் என்னை அம்மா என்றழைக்க மாட்டாயா? கைகளால் என்னை அணைக்க மாட்டாயா? கால்களால் துள்ளித்துள்ளி ஓடிவர மாட்டாயா? இப்படி விழுந்து கிடக்கிறாயே என்று அணைத்து அவள் மனம் கலங்கிப் பாடுகிறாள். இதெல்லாம் எங்கள் கற்பனை. சங்கப் பாடலோடு இதையும் இணைத்து அந்த நாட்டியத்தை வடிவமைத்தோம். இப்போது அது ஒரு முழுமையைக் கொடுக்கிறது. எல்லாப் பாடல்களுக்கும் இப்படித்தான் வேலை செய்வோம். கவிஞர் என்ன சொல்ல நினைக்கிறார் என்பதற்கு கற்பனையில் முழுவடிவம் தருவோம். திருக்குறள், நாச்சியார் திருமொழி, தஞ்சை நால்வர் பாடல்கள், பாலமுரளி கிருஷ்ணா சாரின் தில்லானா, லால்குடி சாரின் பாடல் என எதுவானாலும் முதலில் அவருடைய படைப்புக்கு உண்மையாக இருக்க வேண்டும். அவருடைய வரிகளை ஆதாரமாகக் கொண்டு, பின்னர் அதிலுள்ள ரசானுபவத்தை வெளிக்கொணர வேண்டும்.

ப்ரியதர்ஷினி கோவிந்த்

*****


கலாக்ஷேத்ரா
கலைகளின் ஆலயமான கலாக்ஷேத்ரா, திருவான்மியூரில் சுமார் 100 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து இருக்கிறது. நகரச் சந்தடியை விட்டு விலகி மிக ரம்மியமான இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது. ஆங்காங்கே சிறிய கூடங்கள், இசையரங்குகள், பயிலரங்குகள் உள்ளன. திறந்தவெளி ஆடலரங்கு மனதைக் கவரும் ஒன்று. இசை, நடனத்துடன் நமது கலாசாரம், வரலாறு பற்றியும் இங்கே சொல்லித்தரப்படுகிறது. கலைகளுடன் தொடர்பு கொண்ட மாமல்லபுரம், காஞ்சிபுரம், பூம்புகார், சிதம்பரம், தஞ்சாவூர், தாராசுரம், திருபுவனம், கங்கைகொண்ட சோழபுரம் போன்ற இடங்களுக்கு நேரடியாகச் சென்று மாணவர்கள் நமது கலைப் பாரம்பரியத்தை அறிகிறார்கள். அதுபற்றி அவர்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம் மாணவர்களுக்குச் சொல்லித்தரப்படுகிறது. பயிற்சி முழுமை பெற்று வெளியே செல்லும் மாணவர்கள் இசைக் கலைஞர்களாகவோ, நாட்டியக் கலைஞர்களாகவோ மட்டுமல்லாமல் நம் பண்பாடு, கலாசாரம், வரலாறு பற்றி அறிந்த வரலாற்றுக் கலைஞர்களாக வெளிச் செல்கிறார்கள். பலர் இங்கே பயின்று, இங்கேயே ஆசிரியராகவும் பணி புரிகிறார்கள். இவை தவிர நெசவு மற்றும் கலமகாரி புடவை, சித்திர பிரிண்டிங், பெயிண்டிங், ஓவியம் உள்ளிட்ட கைவினைப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் இங்கே செயல்படுகிறது. தனது எண்பதாம் ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் கலாக்ஷேத்ரா அதிக விளம்பரமில்லாமல் ஒரு மௌனப் புரட்சி செய்து கொண்டிருக்கிறது.

*****


சிறு வயதில் அரங்கேற்றம்
இந்தியாவில் மூணு வருஷம், நாலு வருஷம் கற்றுக் கொண்டாலும் வாரத்துக்கு மூணு, நாலு க்ளாஸ் போகலாம். வெளிநாடுகளில் வாரத்துக்கு ஒன்றிரண்டோ அல்லது மாதத்துக்கு ஐந்து, ஆறோதான். அதற்குமேல் நேரம் இல்லை. ஆனால் நாம் எவ்வளவு வருஷம் கற்றுக்கொண்டோம் என்பதைவிட, நாம் எப்படிக் கற்றுக்கொண்டோம், எவ்வளவு நன்றாகக் கற்றுக்கொண்டோம் என்பதுதான் முக்கியம். மற்றபடி ஒரு குழந்தை அரங்கேற்றத்துக்கு ரெடியா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது குருதான். அது குருவின் கடமை. அதில் வெளி மனிதர்களோ, பெற்றவர்களோ, மற்றவர்களோ ஃபோர்ஸ் செய்யக்கூடாது.

முந்தைய காலத்தில் குருமார்கள் எல்லாம் பாரம்பரியமாக வந்தவர்கள். சில விஷயங்களை எல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமே அவர்களுக்குக் கிடையாது. நாம் கற்றுக் கொண்டதெல்லாம் அவர்களிடமிருந்துதான். அப்போது இருந்த சூழ்நிலை வேறு. இப்போதெல்லாம் நிறைய விஷயங்கள் நமக்குத் தெரியும். நிறைய விஷயங்கள் தெரியாது. தெரியாத விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அது மாணவராக இருந்தாலும் சரி; ஆசிரியராக இருந்தாலும் சரி. நமக்கு எல்லாம் தெரியும் என்ற மனப்பான்மை கூடாது. நமக்குத் தெரியாததை வெளியில் கற்றுக்கொண்டு அதை மாணவர்களுக்கு சொல்லித் தரலாம். தெரியாததைக் கற்றுக் கொண்டு நாம் தெளிவாகி, நம் மாணவர்களையும் தெளிவாக்க வேண்டியது ஒரு ஆசிரியரின் கடமை.

ப்ரியதர்ஷினி கோவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline