|
|
|
|
தமிழில் முழுநேர எழுத்தாளராக இல்லாமல், பிற பணிகளினூடே எழுத்திலும் அபிமானம் வைத்து நல்ல பங்களிப்புகளைத் தந்து கொண்டிருப்பவர்கள் உள்ளனர். அவர்களில் சமூக சேவை ஆர்வமும் கொண்டு, தமிழ், சமுதாயம் என இரண்டிலும் பணியாற்றி வருபவர் என்.சி. மோகன்தாஸ். இவர், திருச்சி லால்குடியை அடுத்த நம்புக்குறிச்சி கிராமத்தில் ஜூலை 23, 1959 அன்று பிறந்தார். தந்தை சின்னசாமி, தாயார் பத்மாவதி. சகோதரர்கள் பிரசன்னம், ஜெயகுமார் வாங்கிவந்த ஆனந்தவிகடன், துக்ளக் இதழ்கள் இவரது வாசிப்பார்வத்தைத் தூண்டின. தமிழ்வாணன், ரா.கி.ரங்கராஜன், சுஜாதா ஆகியோரின் எழுத்துக்களும் இவரது எழுத்தார்வத்தைத் தூண்டின. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலை வேதியியல் (பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி) படிக்கும் போது கல்லூரி ஆண்டு மலரில் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைக்கு நல்ல வரவேற்புக் கிட்டவே தொடர்ந்து கல்லூரி இதழில் கட்டுரைகளை எழுதினார். கல்லூரியில் சீனியரான எழுத்தாளர் பட்டுகோட்டை பிரபாகர் மூலம் பத்திரிகைகளுக்கு எப்படி எழுதுவது என்ற நுணுக்கம் கைவந்தது. 1980 முதல் தேவி வார இதழில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தார். 1981ல் கொச்சினில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பணி கிடைத்தது. டி.வி.எஸ்ஸில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த பி. வெங்கட்ராமன் நிறுவனத்தின் செய்தி மடலுக்கும் ஆசிரியராக இருந்தார். அவரது ஊக்குவிப்பால் கதை, கட்டுரை, துணுக்குகளை எழுத ஆரம்பித்தார். சாவி, தேவி இதழ்களில் அவை வெளியாகின.
கொச்சின் தமிழ்ச் சங்கத்துடன் தொடர்பை வளர்த்துக் கொண்டதுடன், அப்பகுதிக்கு தமிழகத்திலிருந்து யாரேனும் பிரபலங்கள் வந்தால் அவர்களைச் சந்தித்து உரையாடி, அவர்களது நிகழ்ச்சிகள், பணிகள் குறித்து இதழ்களுக்குக் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். எழுத்தாளர் கே.ஜி. ஜவஹர் மூலம் கொச்சினில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாட்டுக்கு வருகை தந்த சாவியின் அறிமுகம் ஏற்பட்டது. அந்நிகழ்ச்சி பற்றிய கட்டுரையை மோகன்தாஸ், சாவிக்கு எழுதி அனுப்ப அது பிரசுரமானது. அதுதான் என்.சி. மோகன்தாஸ் என்னும் பெயரில் பத்திரிகையில் வெளியான முதல் கட்டுரை. தொடர்ந்து சாவியில் சிறுகதை, நாவல், கட்டுரை, பேட்டிகள் என்று எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. தினமலர் - வாரமலரில் 'இனியவளே' என்ற தொடர் எழுதினார். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மாலைமதி, குமுதம், இதயம் பேசுகிறது, குங்குமம், தினமணி, கல்கண்டு, பாக்கெட் நாவல் எனப் பலவற்றிலும் எழுதினார்.
தொழிற்சாலை விபத்து ஒன்றால் நடுவில் சில காலம் மோகன்தாஸுக்குக் கண்பார்வை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. அப்போதும் எழுத்தின் தாகம் அடங்காமல், தனது நண்பர் மனோகரனிடம் டிக்டேட் செய்து சில கதைகளை, தொடர்களை எழுதினார். சென்னைக் கம்பெனி ஒன்றில் சிலகாலம் பணியாற்றிய நிலையில் குவைத் நேஷனல் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணி கிடைத்தது. குவைத்தில் எழுத்துப் பணியோடு சமூகப் பணியிலும் ஈடுபாடு காட்டினார். 1988ல் Frontliners என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர், அதே பெயரில் ஒரு பத்திரிகை தொடங்கி, அங்கே வெற்றிகரமாய்ச் செயல்பட்டு வரும் இந்தியர்களைப் பற்றி எழுத ஆரம்பித்தார். இந்தியாவின் பிரபலங்களை வரவழைத்து நிகழ்ச்சிகள் நடத்தி அதன்மூலம் நிதி திரட்டி, இந்தியாவில் பல்வேறு சேவை அமைப்பினருக்கும், நலிந்தோருக்கும் நலத்திட்ட உதவியாக வழங்கினார். இதுவரை 1 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுனாமி நிவாரணத்திற்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதி உதவி அளித்ததும், கார்கில் நிவாரண நிதி மற்றும் குஜராத் பூகம்ப நிதிக்குப் பெருமளவு பணம் திரட்டி அனுப்பியதும் குறிப்பிடத் தகுந்தவை. தவிர உதவும் கரங்கள், அன்பு பாலம், அமர்சேவா சங்கம், ஞானதீபம், சேவாதளம், உஷாஞ்சலி போன்ற அறக்கட்டளை நிறுவனங்களுக்கும் இந்த அமைப்பு உதவியுள்ளது. |
|
போலி ஏஜெண்ட்கள் மூலம் ஏமாற்றப்பட்டு குவைத்திற்கு சென்று கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு இந்தியத் தூதரகத்துடன் சேர்ந்து Frontliners உதவுகிறது. குவைத்தில் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் இந்தியர்கள் மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண்களின் பிரச்சனைகளைப் போக்கவும் தேவையான உதவிகளைச் செய்து வருகிறது. அதுபோல் எதிர்பாராதவிதமாக வெளிநாட்டில் வேலை செய்யும் போது ஒருவர் இறக்க நேரிட்டால், அவருடைய குடும்பத்தினருக்கு உதவித்தொகை மற்றும் மற்ற நிதிகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்தாருடன் பேசி இவ்வமைப்பு பெற்றுத் தருகிறது.
முன்னூறுக்கும் மேல் சிறுகதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், 3,000க்கும் மேற்பட்ட கட்டுரைகள், தொலைக்காட்சி நாடகங்கள் எழுதியிருக்கும் மோகன்தாஸின் நூல்களைத் தமிழகத்தின் முன்னோடிப் பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. பல்துறைச் சாதனையாளர்கள் பற்றி, 'ஜெயிப்போம் வாருங்கள்', 'தன்னம்பிக்கை தமிழர்கள்', 'கண்டதும் கேட்டதும்' எனப் பல நூல்களை எழுதியிருக்கிறார். குவைத்தைப் பின்புலமாக வைத்து 'அம்மாவைக் காப்பாற்றுங்கள்', 'அரபிக் காற்று', 'அழகே உன்னை வஞ்சிக்கிறேன்' போன்ற கதைகளை எழுதியுள்ளார். அலங்கார எழுத்துக்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறும் மோகன்தாஸ், எழுதுவதை மட்டுமல்ல, எழுதுவதைக் கடைப்பிடிப்பதும் வாழ்க்கையில் மிக முக்கியம் என்கிறார். தனது வளர்ச்சிக்கு பி. வெங்கட்ராமன், சாவி, மணியன், தினமலர் அந்துமணி, தூர்தர்ஷன் மேனாள் இயக்குநர் ஏ. நடராஜன், லேனா தமிழ்வாணன், ரவி தமிழ்வாணன், பாக்கெட் நாவல் அசோகன், எஸ்.வி.சேகர், நண்பன் மனோகர் ஆகியோரே ஊக்கசக்தி என்கிறார். மனைவி அருள்மொழி, மகள் வினு ஆகியோர் தனது வெற்றிக்குப் பின்புலம் என்கிறார். இலக்கியம், சமூகம் என இரு தளங்களிலும் சேவையாற்றி வரும் மோகன்தாஸின் பணி போற்றத்தக்கது.
அரவிந்த் |
|
|
|
|
|
|
|
|