|
|
|
|
வெகுஜனப் பத்திரிகைகளிலும் இலக்கியத்தரத்துடன் கூடிய நல்ல படைப்புகளைத் தர இயலும் என்று நிரூபித்த எழுத்தாளர்களுள் கார்த்திகா ராஜ்குமார் ஒருவர். ராஜ்குமார் என்ற இயற்பெயர் கொண்ட இவர் ஜூன் 20, 1955ல் ஊட்டியில் பிறந்தார். இளவயதிலேயே இலக்கிய ஆர்வம் அதிகம் இருந்தது. கல்லூரிக் காலத்தில் கவிதைகள் நிறைய எழுதினார். கல்லூரி சீனியரான கார்த்திகா இவரது எழுத்தார்வத்தைத் தூண்டி ஊக்குவிக்கவே அவரது பெயரை தனது பெயருடன் இணைத்துக் கொண்டு 'கார்த்திகா ராஜ்குமார்' என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார். 1978 முதல் இவரது சிறுகதைகள் பிரபல இதழ்களில் வெளியாக ஆரம்பித்தன. தொடர்ந்து பல சிறுகதைகளை எழுதினார். கவிதை மொழியோடு வடிவச் செம்மையும் கொண்ட இவரது எழுத்து பலரைக் கவர்ந்தது. வாசகர்களால் மட்டுமல்லாது சக எழுத்தாளர்களாலும் வரவேற்கப் பெற்றது. சிறந்த சிறுகதைகளுக்காக இலக்கியச் சிந்தனை மற்றும் இலக்கிய வீதி அமைப்பின் பரிசுகள் கிடைத்தது. 'இதயம் பேசுகிறது' சிறுகதைப் போட்டியில் இவரது கதை பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மாலன் ஆசிரியராக இருந்த 'திசைகள்' இதழின் ஆசிரியர் குழுவிலும் சிலகாலம் பணியாற்றினார்.
தனக்கென்று ஒரு தனித்துவ நடை, கவிதை போன்ற மொழி, வடிவச் செம்மை இவற்றோடு காத்திரமான பல சிறுகதைகளைத் தர ஆரம்பித்தார். கிறித்துவத்தை அடியொற்றி இவர் படைத்த பல சிறுகதைகள் இவருக்கு நற்பெயரைத் தேடிக் கொடுத்தன. குறிப்பாக, 'மனிதம்' சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 'குடில்' என்னும் சிறுகதையில் சமூக ஏற்றத்தாழ்வையும், மனித நேயத்தையும், அதனால் ஏற்படும் மனமாற்றத்தையும் மிகச் சிறப்பாக இவர் காட்சிப்படுத்தியுள்ளார். கதையில், சிறுவன் ஜோ, இயேசுவின் பிறப்பைக் கொண்டாடத் தனது வீட்டில் 'குடில்' (கிறிஸ்து மரம்) அமைக்க விரும்புகிறான். அவனும் அவன் தங்கையும் சேர்ந்து தங்களுக்குக் கிடைக்கும் தின்பண்டங்களுக்கான காசை குடில் அமைப்பதற்காகச் சேர்த்து வைக்கின்றனர். அவ்வூர் ஆலய போதகர், "குடில் விஷயத்தில் ஆடம்பரம் தேவையில்லை. இயேசு மாட்டுத் தொழுவத்தில்தான் பிறந்தார். எளிமையான கோலத்தை விரும்பி ஏற்றுக்கொண்டார். அவரைக் கந்தைத் துணியில் சுற்றி வைத்தார்கள். ஆனால் நாம் அவர் பிறந்த கோலத்தை அலங்காரப்படுத்தி வைக்கிறோம். அலங்காரமான இடத்தில் இயேசு பிறப்பாரா?" என்ற சந்தேகத்தை எழுப்ப, அது ஜோ மனதில் சிந்தனையை விதைத்தது என்றாலும் அவன் குடில் அமைக்கும் எண்ணத்தைக் கைவிட்டு விடவில்லை. தனது நண்பன் 'ராபி'யையும் உதவிக்கு வைத்துக் கொண்டு குடில் அமைக்கத் திட்டமிடுகிறான். தனது சேமிப்புப் பணத்துடன் ராபி வீட்டுக்குச் செல்கிறான். ஆனால் அங்கே ராபியின் அம்மாவுக்கு உடல் நலமில்லை. மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை வாங்க அவனிடம் பணம் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் ராபி அழுது கொண்டிருந்தான். அதைக் கண்ட ஜோவுக்கு கண் கலங்குகிறது. உடனே தன்னிடமிருந்த சேமிப்புப் பணத்தை மருந்து வாங்குவதற்காக ராபியிடம் கொடுத்துவிட்டு தன் வீடு திரும்புகிறான். மறுநாள் போதகர் ஜோவிடம் குடில் பற்றிக் கேட்க, ஜோ, தான் குடில் அமைக்கவில்லை என்பதைச் சொல்லி நடந்த விஷயங்களைச் சொல்கிறான். உடனே போதகர், "இயேசு பிறக்கப் போவது உன் வீட்டில்தான். ஏனென்றால் அவருக்குப் பிடித்தமானதைச் செய்தது நீதான்" என்று கூறி அவனை ஆசிர்வதிக்கிறார். ஜோ மகிழ்ச்சியுடன் தன் வீட்டுக்குத் திரும்புகிறான். "எப்பொழுதும் இல்லாத மகிழ்வு அந்த வருடக் கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்தது" எனக் கதையை முடிக்கிறார் கார்த்திகா ராஜ்குமார். இந்தக் கதையில் ஜோவின் இரக்கமும் அன்பும், மனித நேயமும் மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. |
|
குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய ராஜ்குமாரின் 'பூக்களைப் பறிப்பது வருந்தத்தக்கது' என்று சிறுகதையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். நன்றாகப் படிக்கும் எபி என்ற சிறுவனின் தந்தை கட்டிடத் தொழிலாளி. திடீரென அவர் ஒரு விபத்தில் படுத்த படுக்கையாகி விடுகிறார். ஆதரவின்றிக் குடும்பம் தத்தளிக்கிறது. எபியின் படிப்பு நின்று போகிறது. குடும்பத்தை உழைத்துக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவன்மீது சுமத்தப்படுகிறது. அவன் கூலி வேலைக்குச் செல்ல நேர்கிறது. நன்கு படிக்கக் கூடியவனாக இருந்தாலும் அவன் படிப்பை விடுத்துத் தனது குடும்பத்திற்காக குழந்தைத் தொழிலாளி ஆகிறான். குழந்தைத் தொழிலாளிகளின் அவலத்தை, ஏழைகளின் வாழ்வில் எப்படியெல்லாம் பிரச்சனைகள் வருகிறது, அதற்கு ஏற்படும் முடிவுகள் என்ன என்பதைக் கார்த்திகா ராஜ்குமார் இச்சிறுகதையில் திறம்பட எடுத்துக் காட்டியுள்ளார், கவிதை, சிறுகதை, நாவல், குறுநாவல், நாடகம், மொழிபெயர்ப்பு என்று படைப்பின் சகல தளங்களிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கும் இவர், சுப்ரபாரதி மணியன், நந்தலாலா, பிரியதர்ஷன் ஆகியோருடன் 'நாலு பேரும் பதினைந்து கதைகளும்' என்ற தலைப்பில் தொகுப்பு நூல் கொண்டு வந்துள்ளார். 'இது முதல் அத்தியாயம்' நாவல், 'அவன், அவள், அவர்கள்' குறுநாவல்களின் தொகுப்பு, ஐந்து சிறுகதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. இருமுறை இவரது சிறுகதைகளுக்கு 'இலக்கியச் சிந்தனை பரிசு' கிடைத்துள்ளது. சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான ஸ்டேப் பேங்க் ஆஃப் இண்டியா விருதையும் இவர் பெற்றுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பையும், ஒரு நாடகத்தையும் படைத்துள்ளார். 'ஒரு கிறிஸ்துமதஸ் தூதன்' என்னும் நாடகம் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றிருக்கிறது. ஆராய்ச்சி நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். பேரா. காலின் ஹ்மப்ரீஸின் 'Star of Bethlehem' என்னும் நூலை, 'பெத்லஹேமின் நட்சத்திரம்' என்னும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
இவரது சிறுகதைகள் ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. ஹிந்துஸ்தான் நிழற்படத் தொழிற்சாலையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ராஜ்குமார், தற்போது ஊட்டியில் உள்ள Smyrna Home என்ற குழந்தைகள் சேவை அமைப்பின் நிர்வாகக் குழுவில் பொறுப்பாளராக இருந்து சேவை ஆற்றி வருகிறார். இந்த மையம் கைவிடப்பட்ட, ஆதரவற்ற சிறார்களுக்கும், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கும் உணவு, உடை, கல்வி தருதல் போன்ற நற்பணிகளைச் செய்து வருகிறது. சமூகப் பணிக்கும், கிறிஸ்து ஊழியத்திற்கும் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள ராஜ்குமார், கிறித்துவ மதப் பிரச்சாரகராகவும், மதநூல் எழுத்தாளராகவும் பணிபுரிந்து வருகிறார். 'Secrets of the Pyramid', 'Miracles of the Exodus' என்ற தலைப்பில் இரண்டு ஒளிப்படத் தொகுப்புகளைத் (VCD) தந்துள்ளார். தன்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளராக சி.எஸ். லூயிஸ் மற்றும் லாயிட் சி. டக்ளஸைக் குறிப்பிடும் ராஜ்குமார், உன்னதச் சிறகுகள், ஏணி, மகிமா போன்ற கிறித்துவ இதழ்களின் ஆலோசகராகவும் ஆசிரியர் பொறுப்பிலும் பணியாற்றி வருகிறார். தற்போது 'எட்வினா ஜோனாஸ்' என்ற புனைபெயரில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி வருகிறார். தனது கவித்துவமான நடையாலும் மொழி ஆளுமையாலும் வாசகர்களின் மனதில் இடம்பெற்ற கார்த்திகா ராஜ்குமார், மீண்டும் வெகுஜன இதழ்களில் முன்புபோல் நிறைய எழுத வேண்டும் என்பதுதான் அவரது வாசகர்களின் விருப்பம்.
அரவிந்த் |
|
|
|
|
|
|
|