Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அன்புள்ள சிநேகிதியே
நேரத்தின் கனத்தைக் குறையுங்கள்
- சித்ரா வைத்தீஸ்வரன்|நவம்பர் 2011||(2 Comments)
Share:
அன்புள்ள சிநேகிதியே,

ஒரு தென்றல் வாசகி சில வருடங்களுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்; எப்படி தன்னால் தன் பெற்றோர்களைப் பார்த்துக் கொள்ள முடியாமல் இருக்கிறது என்று வேதனைப் பட்டுக் கொண்டார். அப்போது நான் நினைத்துக் கொண்டேன் - 'சொந்த அப்பா, அம்மாவைப் பார்த்துக் கொள்ள முடியாமல் என்ன பிள்ளைகள், பெண்கள் இந்தச் சமூகத்தில், என் குடும்பத்தில் அந்த நிலை வராது. நல்ல காலம்' என்று. அப்போது என் அப்பா நல்ல பதவியில் இருந்து ரிடயர் ஆகி சென்னையில் சின்ன இடம் வாங்கி வீடு கட்டிக்கொண்டு நிம்மதியாக இருந்தார். என் அப்பா, அம்மா இருவருமே நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்து நன்றாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்ந்தவர்கள். எனக்கு ஒரு அக்கா, ஒரு அண்ணா. மிகவும் பாசமான குடும்பம். சண்டை, சச்சரவு எதையுமே அதிகம் நான் பார்த்ததில்லை.

நான் திருமணம் ஆகி இங்கு வந்த 2-3 வருடங்களில் என் மாமனார்-மாமியார் கிரீன் கார்ட் கிடைத்து எங்களுடனேயே நிறைய வருடம் இருந்தார்கள். வருடத்தில் 2 மாதம் என் நாத்தனார் வீட்டிற்கு (அவர்கள் இருக்கும் இடம் வருடத்தில் 9 மாதமும் குளிர்) போய்விடுவார்கள். இப்போது 2 பேரும் காலமாகி விட்டார்கள். நம்ப மாட்டீர்கள். நான் வந்து 20 வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால் 4-5 வருடமாகத்தான் வேலை பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். குழந்தைகள், வயதானவர்கள் என்று பார்த்துக் கொள்வதிலேயே காலம் போய்விட்டது. என் கணவருக்கு அடிக்கடி பிஸினஸ் ட்ரிப் இருக்கும். இப்போது பெரியவர்களும் இல்லை. குழந்தைகளும் பெரியவர்களாகி விட்டார்கள். கிடைத்த வேலையில் புகுந்துவிட்டேன்.

என் அண்ணா இங்கேதான் இருக்கிறான். என் அக்கா இந்தியாவில். பாவம், அவளுக்கு எத்தனையோ பிரச்சனைகள். கணவர் சரியில்லை. பிறக்கும்போதே குறையுடன் பிறந்த பையன். திருமணம் ஆகாத வயதான நாத்தனார், படுத்த படுக்கையாக இருக்கும் மாமியார். என் அண்ணாவின் திருமணத்திற்குக்கூட அவளால் இங்கே வர முடியவில்லை. அவன் இங்கேயே தன் க்ளாஸ்மேட்டைக் காதலித்து (She is white) கல்யாணம் பண்ணிக் கொண்டான். என் பெற்றோர்கள் அவ்வளவு பெருந்தன்மையானவர்கள். இங்கே வந்து நடத்திக் கொடுத்துவிட்டுப் போனார்கள். அவர்களுக்கும் க்ரீன் கார்ட் கிடைத்தபோது அடிக்கடி வந்து போகமாட்டார்கள். அதைப் புதுப்பிக்க மட்டும் வருவார்கள். ஒரு மாதத்தில் கிளம்பிப் போய்விடுவார்கள். "நாம் யாருக்கும் தொந்தரவாக இருக்கக்கூடாது. இன்னும் 2 நாள் தங்கிவிட்டுப் போகவில்லையே என்ற ஆசை குழந்தைகளுக்குள் இருக்க வேண்டும். எப்போது கிளம்புவார்கள் என்ற எண்ணம் வரக்கூடாது” என்று என் அப்பா சொல்லுவார். கடைசிவரை அந்த மதிப்போடுதான் வாழ்ந்தார். என் அம்மாவை அவ்வளவு மதிப்போடும் ஆசையுடனும் நடத்தினார். அப்பாதான் என் அம்மாவுக்கு தெய்வம். "எல்லாம் அவர் சொல்லிக் கொடுத்ததுதான். ஆனால் தனியாக வாழ எனக்குச் சொல்லிக் கொடுக்கவில்லையே. அவர் மட்டும் தனியாகக் கிளம்பி விட்டாரே!” என்று சொல்லி இன்னமும் அம்மா அழுகிறாள். அப்பா போய் 3 வருடம் ஆகப் போகிறது. திடீரென்று மறைந்து விட்டார். என் அண்ணா, அம்மாவை அழைத்துக்கொண்டு வந்துவிட்டான். அவ்வப்போது 'போரடிக்கிறது' என்று சஎன்னுடன் கொஞ்சநாள் தங்கிவிட்டுப் போவாள் அம்மா.

ஆறு மாதத்திற்கு முன்னால் திடீரென்று என்னைக் கூப்பிட்டு என் அண்ணா, 'கொஞ்சம் வந்து விட்டுப் போகிறாயா' என்று கேட்டான். இவர் அப்போது பிஸின்ஸ விஷயமாக டூர் போயிருந்தார். என் அண்ணா அப்படிக் கூப்பிடுகிறவன் அல்ல. எல்லாவற்றையும் போட்டபடி போட்டுவிட்டு அவன் இடத்திற்குப் போனேன். அப்போதுதான் தெரிந்தது - அவனுடைய திருமண வாழ்க்கை முறியும் கட்டத்தில் இருந்தது. அவன் மனைவிக்கு அம்மா சதா கூடவே இருப்பது பிடிக்கவில்லை. Indian community அவர்களுக்கு அதிகம் சிநேகிதம் இல்லை. "அம்மா நம் மனிதர்களுக்கு ஏங்குகிறாள். வீட்டில் தமிழ் பேசுவதற்குக்கூட ஆள் இல்லை. நான் வேலையில் மூழ்கிவிடுகிறேன். இப்போது விரிசல் இன்னும் அதிகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. அடிக்கடி இவள் hysterical ஆகக் கத்துகிறாள். எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. அம்மா உள்ளுக்குள் வாடிப் போய்க் கொண்டிருக்கிறாள். நீ கொஞ்சம் கொண்டுபோய் வைத்துக் கொள். நிலைமை சரியானவுடன் திருப்பி அழைத்துக் கொள்கிறேன்” என்று வேண்டிக்கொண்டான். நான் உடனே அம்மாவை அழைத்து வந்து விட்டேன். இவர் ஊரிலிருந்து வந்தபோது, இதைப் பற்றிப் பேசவேண்டும் என்று நினைத்தேன். அவருக்கு வேற work stress. அதனால் என்ன அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அவரும் ஏதோ அம்மாவுடைய வழக்கமான ட்ரிப் என்று பேசாமல் இருந்துவிட்டார். இருந்தாலும் வளவளவென்று பேசும் டைப்பும் இல்லை. போன மாதம்தான் casual ஆக அம்மாவைப் பற்றிப் பேச்சு எடுத்தார். அதுவும் குழந்தைகளுடன் டிசம்பர் விடுமுறைக் காலத்துக்குத் திட்டமிட ஆரம்பித்தபோது. நான் எல்லாவற்றையும் சொல்லி முடித்த பின், அம்மா எங்களுடன் நிறைய நாள் தங்க வேண்டிய நிலைமையைப் பற்றிக் கேள்விப்பட்ட போது he was not happy.

என் அண்ணா அப்படி அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கக் கூடாது என்று பல வருஷம் முன்னால் தனக்கு இருந்த அபிப்பிராயத்தைப் பற்றிப் பேசினார். இந்தியாவில் முதியோர் இல்லத்தில் கொண்டு விடுவதைப் பற்றிப் பேசினார். குழந்தைகளின் விடுமுறை spoil ஆவதைப் பற்றிக் குறைப்பட்டார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாகி விட்டது. 'எந்த வெகேஷனும் அம்மா, அப்பாவைப் பார்த்துக் கொள்வதற்குப் பிறகுதானே' என்று நான் சொன்னேன். 'அவர் பெற்றோர்களை நாங்கள் பார்த்துக் கொண்டது போலத்தான் இதுவும்' என்று நானும் பதிலுக்குச் சொன்னேன். "அப்போது உன்னையும் குழந்தைகளையும் எங்கும் அழைத்துப் போக முடியவில்லை. பண வசதியும் அதிகம் இல்லை. எனக்கு அந்தக் குற்ற உணர்ச்சி எப்போதும் உண்டு. ஏற்கனவே ஒருவன் காலேஜ் போய் விட்டான். சின்னவனும் அடுத்த வருடம் போய்விடுவான். நாம் குடும்பமாக எங்கேயாவது போய்விட்டு வருவது எப்போதுதான் முடியும்? இப்போதெல்லாம் இந்தியாவிலேயே பிள்ளைகள் பெற்றோர்களை நல்ல முதியோர் இல்லமாகப் பார்த்துச் சேர்த்து விடுகிறார்கள். இது ஒன்றும் தப்பு இல்லை” என்று நியாயம் பேசுகிறார்.

இப்போது 2, 3 வாரமாக அவ்வப்போது யாருடைய பெற்றோர்கள் எந்தெந்த முதியோர் இல்லத்தில் இருக்கிறார்கள் என்று அவ்வப்போது அறிக்கை வேறு வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார். என்னையும் 'அந்த இடத்தைப் போனில் கேட்டு விசாரி. இந்த நண்பரைக் கேட்டு வசதி எப்படி என்று கேட்டுப் பார்' என்றெல்லாம் அறிவுரைகள். எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்து கொண்டே இருக்கிறது. என்னை நம்பி வந்திருக்கும் என் அம்மாவை எப்படி நான் ஒரு சீனியர் சிடிசன் ஹோமில் சேர்ப்பது? எங்களையெல்லாம் எப்படி அருமையாக வளர்த்திருக்கிறாள்! அதுவும் எங்கப்பாவுடன் சேர்ந்து வாழ்ந்து, எங்கம்மாவுக்கு தேவைகள் அதிகம் கிடையாது. பிற மனிதர்களிடம் மிக மிக ஜாக்கிரதையாகப் பழகுவார். யாரிடமும் எந்த வாக்குவாதமும் கிடையாது. குரல் என்றுமே ஓங்கி இருந்ததில்லை. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார். ஏற்கனவே என் அப்பாவைப் பிரிந்து உள்ளுக்குள்ளேயே உருகிக் கொண்டிருக்கும் அந்த அம்மாவுக்கு தன்னால்தான் பிள்ளைக்கும் மருமகளுக்கும் மனமுறிவு என்று யூகித்து இன்னும் அதிர்ந்து போய்விட்டது. இதற்கிடையில் 'உங்களால், எங்களுக்கும் சிரமம். இந்தியாவில் ஒரு ஹோமில் சேர்த்து விடுகிறோம்' என்று எப்படிச் சொல்வது? ரொம்ப, ரொம்ப மனதுக்கு வேதனையாக இருக்கிறது. என் அக்காவாலும் பார்த்துக்கொள்ள முடியாத நிலை. வழி இருந்தால் சொல்லுங்கள்.

இப்படிக்கு
..............
அன்புள்ள சிநேகிதியே

எல்லோரையும் திருப்திப்படுத்துவது போல வழி தெரியவில்லையே அம்மா! அவரவர் பார்வையில் ஏதோ நியாயம் கற்பித்துக் கொள்கிறோம். சில சமயம் மிகவும் எமோஷனாலாகப் போய் விடுகிறோம். சில சமயம் ப்ராக்டிகல் ஆக இருக்க முயற்சி செய்கிறோம். சில சமயம் சிந்திக்காமல் கூட. ஒரு வேகத்தில், ஆவேசத்தில், தடாலடி முடிவு எடுத்துவிடுகிறோம்.

உங்கள் அம்மாவை நீங்கள் விவரித்த விதம் - அவருக்கும் உங்கள் விடுமுறைப் பயணத் திட்டத்தில் ஒரு இடம் செய்தால் நன்றாக இருக்கும். உங்கள் கணவரிடம் உங்கள் அம்மா தங்கியிருப்பது தற்காலிக நடவடிக்கை என்று சொன்னீர்களா, இல்லை நிரந்தரம் என்று சொன்னீர்களா என்பது தெரியவில்லை. எதற்கு இந்தக் கேள்வி என்றால் தற்காலிகம் என்று சொல்லி எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கிவிடலாம். ஆனால் நிரந்தரம் என்று சொல்லி 2 வாரம் இருந்தால் கூட, அந்த மூளை வேறுவிதமாகத் தான் சிந்திக்கும். ஒரு வருடம் என்று சொன்னால் பெரிதாகத் தெரியும். சில மாதங்கள் என்று சொல்லும்போது நேரத்தின் கனம், நாட்களின் எண்ணிக்கை குறைவது போலத் தெரியும். எல்லாமே உங்கள் கணவரின் நோக்கையும், நடவடிக்கையையும் பொறுத்தது. உங்கள் இருவருக்கும் உள்ள உறவு, நட்பு, மதிப்பைப் பொறுத்தது.

உங்கள் கணவர் உங்கள் தாயைப்பற்றி இப்படிச் சிந்தித்து விட்டாரே என்ற வேதனைதான் உங்களுக்கு அதிகம் பாதிப்பைக் கொடுக்கிறது. This is an Emotional Phase. உங்கள் அம்மாவின் மேல் நீங்கள் வைத்திருக்கும் பாசத்தை, உங்கள் கணவர் வைப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பது நியாயம். Empathy, perception இரண்டும் எனக்கு மிக மிகப் பிடித்தமான வார்த்தைகள். உங்கள் கணவருக்கு அந்த empathy இருந்தால், உங்கள் நிலைமையிலிருந்து புரிந்துகொண்டு, உங்கள் அம்மாவுக்கு ஆதரவு கொடுத்து உங்களுக்கு அனுசரணையாக இருப்பார் என்று தோன்றுகிறது. எப்படியிருந்தாலும் ஒரு 6-7 மாதம், நேரம் கேட்டுப் பாருங்கள். அதற்குள் நீங்கள் Practical Phaseக்கு வருவீர்கள். ஒருவரிடம் நம்முடைய உண்மையான அன்பைக் காட்டுவது என்பது, அவருக்கு அன்பான மனிதர்களுக்கும், உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுதான் என்பது என் கருத்து. Otherwise, 'love becomes a possession'.

உங்களுக்கு ஏற்படும் வாதங்களும், எதிர்வாதங்களும் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கிறது. அம்மாவின் அருகாமையைப் பாசத்துடன் ரசியுங்கள், ஒவ்வொரு நாளும். அது மாதங்களாக விரியும். உங்கள் கணவரின் போக்கு மாறலாம். இல்லை, உங்கள் அண்ணன் திருப்பி அழைத்துக் கொள்ளலாம். அல்லது உங்கள் அக்கா பொறுப்பை ஏற்க ஆசைப்படலாம். முதியோர் இல்லம் கடைசியில் இருக்கவே இருக்கிறது. இந்த நாளை விட்டுக்கொடுத்து விடாதீர்கள்.

வாழ்த்துகள்
சித்ரா வைத்தீஸ்வரன்
Share: 




© Copyright 2020 Tamilonline