|
|
|
|
சண்டமாருதம், ஹனுமான், லோகோபகாரி, பிரசண்ட விகடன், ஆனந்த மோகினி, ஜகன்மோகினி என்றெல்லாம் விதவிதமான பெயர்களில் பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டத்தில் வித்தியாசமாகத் தன் பத்திரிகைக்கு 'காதல்' என்று பெயர் சூட்டினார் ஒருவர். அதனால் பல்வேறு எதிர்ப்புகளையும் சம்பாதித்தார். ஆனாலும் அயராமல் ஒரு வேள்விபோல் அந்த இதழைத் தொடர்ந்து நடத்தினார். அவர்தான் அரு. ராமநாதன். அன்றைய ராமநாதபுரம் (இன்றைய சிவகங்கை) மாவட்டம், கண்டனூரில், வயி.ராம. அருணாசலம் செட்டியார், வள்ளியம்மை ஆச்சி தம்பதியினருக்கு, ஜூலை 7, 1924 அன்று மகவாகத் தோன்றினார் ராமநாதன். திருச்சி நேஷனல் ஹைஸ்கூலில் பள்ளிப்படிப்பு. இன்டர்மீடியட் சென்னை பச்சையப்பன் கல்லூரியில். கல்லூரியில் படிக்கும்போதே சிறுசிறு நாடகங்களும் கதைகளும் எழுதினார். 1944ல் டி.கே.எஸ். சகோதரர்கள் நாடகப் போட்டி ஒன்றை நடத்தினர். வரலாற்றின் மீது பெருவிருப்பம் கொண்டிருந்த ராமநாதன், 'ராஜராஜ சோழன்' என்ற நாடகத்தை எழுதி அனுப்பினார். அந்நாடகத்திற்கு முதல் பரிசு கிடைத்தது. அது அவருக்கு எழுதுவதற்கான ஊக்கத்தைத் தந்தது.
அக்கால நகரத்தார்களின் முக்கியத் தொழிலாக தனவணிகமும், பத்திரிகைத் தொழிலும் இருந்தன. ராமநாதனுக்கும் பத்திரிகைகள் மீது "காதல்" உண்டானது. முதலில் அச்சகம் ஒன்றில் பங்குதாரராகச் சேர்ந்து அச்சு வேலைகளின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். பின்னர் 'காதல்' பத்திரிகையை திருச்சியில், 1947ல் ஆரம்பித்தார். சமூகக் கதைகள், வரலாற்றுக் கதைகள், நாடகங்கள், கட்டுரை, கவிதை, பொன்மொழி, கேலிச்சித்திரம் போன்றன காதலில் இடம்பெற்றன. 'காதல்' என்ற பெயரினால் ஆரம்பத்தில் பத்திரிகையை உதாசீனம் செய்தவர்கள்கூடப் பிற்காலத்தில் அதன் உள்ளடக்கத்தால் கவரப்பட்டு வாங்கினர். காரணம், காதலில் சோமலே, டாக்டர் மு. வரதராசன், தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி, அகிலன், வல்லிக்கண்ணன், மா. ராசமாணிக்கனார், பாஸ்கரத் தொண்டமான், தஞ்சை ராமையாதாஸ் உட்படப் பலர் எழுதியதுதான். 'காதல்' எல்லோர் மனதிலும் இடம்பிடித்தது. மக்கள் மனம் கவர்ந்த ஜனரஞ்சக இதழாக முத்திரை பதித்தது. முதலில் திருச்சியிலிருந்து வெளிவந்த இதழ், சிலகாலம் தஞ்சையிலிருந்து வெளியானது. பின் 1949முதல் சென்னையிலிருந்து வெளியானது.
'காதல்' இதழில் அரு.ராமநாதன் எழுதிய 'வீரபாண்டியன் மனைவி' என்னும் வரலாற்றுத் தொடர், அவருக்குப் பெரும்புகழைத் தேடித்தந்தது. கல்கி, ஜெகசிற்பியன் போன்ற வரலாற்றுக் கதை எழுத்தாளர்கள் வரிசையில் அரு. ராமநாதனும் இடம்பிடித்தார். 1953லிருந்து ஆறு வருடங்கள் தொடராக வெளிவந்த இந்த நாவல் பல்லாயிரக்கணக்கான மக்களால் வாசிக்கப்பட்டது. மூன்று பாகங்களாக அது பின்னர் நூலாக வெளிவந்தும் சாதனை படைத்தது. தொடர்ந்து ராஜராஜன் சோழன் நாடகமும் அச்சில் வெளிவந்து ராமநாதனுக்குப் புகழைத் தந்தது. அதனை டி.கே.எஸ். சகோதரர்கள் நாடகமாக நடித்துப் பெரும்புகழ் பெற்றனர்.
ராமநாதன் பிற இதழ்களுக்கும் கதைகள் எழுதினார். 'கோழிப்பந்தயம்' என்னும் சிறுகதை கல்கியில் வெளியானது. சில புனைபெயர்களில் வேறு சில இதழ்களிலும் எழுதினார். சினிமா செய்திகளை வெளியிடுவதற்காக 'ரசிகன்' என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். அத்தோடு அக்காலத்தில் வரவேற்புப் பெற்றிருந்த மர்மக்கதை எழுத்தாளர்களான சிரஞ்சீவி, மேதாவி, பி.டி. சாமி ஆகியோரின் கதைகளை வெளியிட 'மர்மக்கதை' என்ற இதழையும் நடத்தினார். சிலகாலம் வெளிவந்தபின் நின்று போயின. நூல்கள் குறைந்த செலவில் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது அரு.ராமநாதனின் ஆசையாக இருந்தது. அதற்காக 1952ல் அவர் தொடங்கியதுதான் பிரேமா பிரசுரம். தான் குடியிருந்த வீட்டின் ஒரு பகுதியையே அலுவலமாக மாற்றிய ராமநாதன், அதன்மூலம் நல்ல பல நூல்களைக் குறைந்த விலையில் வெளியிட்டார். பிளேட்டோ, அரிஸ்டாட்டில், இங்கர்சால், சிக்மண்ட் ஃப்ராய்ட் என வெளிநாட்டு அறிஞர்கள், உலக விஞ்ஞானிகள், சாதனையாளர்கள் பற்றிய நூல்களை வெளியிட்டார். |
|
திரைப்படத் துறையிலும் ராமநாதனுக்கு ஆர்வம் இருந்தது. ஜெமினி கணேசன், அஞ்சலி தேவி நடித்த 'பூலோகரம்பை' படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து 1959ல் வெளியான 'அமுதவல்லி' என்ற படத்தின் கதை வசனத்தை ராமநாதன் எழுதினார். அதே ஆண்டு இவர் வசனத்தில் வெளியான சிவாஜி, பத்மினி நடித்த 'தங்கப்பதுமை' படமும் இவருக்கு நிலைத்த புகழைத் தேடிக் கொடுத்தது. தொடர்ந்து 'கல்யாணிக்கு கல்யாணம்' என்னும் திரைப்படத்திற்கும் அவர் வசனம் எழுதினார். 1973ல் இவரது நாடகமான 'ராஜ ராஜசோழன்' திரைப்படமானது. தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் 70 எம்.எம். திரைப்படமான அதில் சிவாஜி கணேசன், டி.ஆர். மகாலிங்கம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதன்பின் சினிமாவிலிருந்து கவனத்தைத் திருப்பிய அரு. ராமநாதன் பத்திரிகை மற்றும் பிரசுரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். குறைந்த விலையில் தரமான நூல்களை வெளியிட ஆரம்பித்தார். விநாயக புராணம், விஷ்ணு புராணம், கந்த புராணம், தேவிபாகவதம், புத்தர் ஜாதகக் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், மதனகாமராஜன் கதைகள், பெரிய புராணம் என வரலாறு, புராணம் சார்ந்த பல நூல்களையும், சிந்தனையாளர் வரிசை, பொன்மொழிகள் வரிசை, ஆராய்ச்சி நூல் வரிசை என்று பல தொகுப்புகளையும் பிரேமா பிரசுரம் மூலம் வெளியிட்டார்.
'அசோகன் காதலி', 'வானவில்', 'சுந்தரர்' போன்றவை அவர் எழுதிய பிற நாடகங்கள். 'நாயனம் சௌந்தரவடிவு', 'குண்டுமல்லிகை' 'வெற்றிவேல் வீரத்தேவன்', 'அம்பிகாபதி', 'பழையனூர் நீலி', 'கதாநாயகி' போன்றவை நாவல்கள். இதுதவிரப் பல சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். அவருக்கு மிகுந்த புகழைத் தேடித்தந்த 'வீரபாண்டியன் மனைவி' பிற்காலத்தில் 'தேவி' வார இதழில் மீண்டும் வெளியாகிப் புதிய தலைமுறை வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. ராமநாதன் வரலாறோ, சமூகமோ தனது படைப்பு எதுவாக இருந்தாலும் அதில் காதலுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்திருக்கிறார். நாயனம் சௌந்தரவடிவு, அசோகன் காதலி, பழையனூர் நீலி, வீரபாண்டியன் மனைவி போன்ற படைப்புகளில் காதற்சுவை சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. காதல்பற்றி ராமநாதன், "ஒவ்வொரு ஆத்மாவின் பாதியும் தன்னிடமிருந்து பிரிக்கப்பட்ட மற்றொரு சரிபாதியைத் தேடி யுகங்கள்தோறும் அலைகிறது. தனக்குப் பொருத்தமான அந்தச் சரிபாதியைக் கண்டதும் அப்படியே இணை சேர வேண்டும் என்று தவிக்கிறது. அந்த உன்னதமான உணர்ச்சியின் தவிப்புதான் காதல்" என்கிறார்.
"அரு.ராமநாதன் ஓர் அகத்தியர். அது அவர் உருவத்தை மட்டும் குறிப்பிட அன்று. அறிவின் திறத்தையும் தமிழ்ப் புலமையையும் இணைத்துக் கூறியதாகும்" என்று டி.கே.எஸ். சகோதரர்கள் இவரது திறமையைப் புகழ்ந்துரைத்தனர். 1967ல் அரு.ராமநாதன் ஆற்றிய இலக்கியப் பணிக்காக அவருக்குத் தமிழக அரசின் கலைமாமணி விருதளிக்கப்பட்டது. தன்னை அதிகம் வெளிப்படுத்திக்கொள்ளாமல், புகழாசை இல்லாமல் இலக்கியப்பணி ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்த அரு. ராமநாதன், அக்டோபர் 19, 1974 அன்று காலமானார். ராமநாதனின் மனைவி பெயர் ரங்கநாயகி. இவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். ராமநாதனின் ஒரு புதல்வரான ரவி ராமநாதனின் தலைமையில் 60 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் பிரேமா பிரசுரம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் இன்றும் அரு. ராமநாதனின் புகழைப் பரப்பிக் கொண்டிருக்கிறது.
அரவிந்த் |
|
|
|
|
|
|
|
|