|
|
|
|
தமிழ்ச் சிறுகதை உலகில் பல துறைகளில் இருந்தும் தமது படைப்பூக்கத்தால் எழுத்தாளர்களாகப் பரிணமித்தவர்கள் உண்டு. அவர்களில் ஆசிரியப் பணியோடு எழுத்துப் பணியையும் செய்தவர்கள் பலர். அ.சீ.ரா., டாக்டர் மு.வ., இந்திரா பார்த்தசாரதி எனப் பலரை இதற்கு உதாரணமாகச் சுட்டலாம். இந்த வரிசையில் குறிப்பிடத் தகுந்தவர் அய்க்கண். அய்க்கண்ணின் இயற்பெயர் எம். அய்யாக்கண்ணு. நகரத்தார் கோட்டை கட்டி வாழ்ந்த கோட்டையூரில் செப்டம்பர் 1, 1935 அன்று இவர் பிறந்தார். பள்ளிக் கல்வி கோட்டையூரில். உயர்நிலைக் கல்வி பள்ளத்தூர் அருணாசலம் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில். பட்டப்படிப்பை அழகப்பா கல்லூரியில் தொடர்ந்தார். இளம்வயது முதலே படைப்பார்வம் கொண்டு திகழ்ந்த அய்க்கணின் கவனம் சிறுகதை மற்றும் கவிதையின்பால் திரும்பியது. முதற் சிறுகதையான 'வள்ளியின் திருமணம்' ஆனந்த விகடனில் வெளியானது. அதற்கு நல்ல வரவேற்பு கிட்டவே தொடர்ந்து எழுதினார். இலக்கியம், கதை, நாவல், நாடகம் என்று ஆர்வம் விரிவடைந்தது. எம்.ஏ., பி.டி. முடித்தவுடன் கல்லூரி ஆசிரியர் பணியில் சேர்ந்தார். திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் பேராசிரியர் பொறுப்பேற்றார். தமிழ்த் துறைத் தலைவராக உயர்ந்தார். ஓய்வு நேரத்தில் கதை, கட்டுரை, நாடகம், இலக்கிய வரலாறு என்று எழுதிக் குவித்தார். கலைமகள், அமுதசுரபி குறுநாவல் போட்டி, தினமணி கதிர் வரலாற்று நாவல் போட்டி, கல்கி சிறுதைப் போட்டி ஆகியவற்றில் இவரது கதைகளுக்கு முதல் பரிசு கிடைத்தது. உயிர் (1972), இளவெயினி (1977), வேர் (1978), நீயும் நானும் வேறல்ல (1979), என் மகன் (1989) போன்ற படைப்புகள் இவரது எழுத்துத் திறமையை உலகுக்குப் பறைசாற்றின.
'மண்ணின் மலர்கள்', 'தவம்', 'விடிவெள்ளி', 'ஊர்மிளை', 'வெள்ளைத்தாமரை', 'நெல்லிக்கனி', 'பரிமாணங்கள்', 'கரிகாலன் கனவு', 'சக்தி', 'மறுபக்கம்', 'நிழலில் நிற்கும் நிஜங்கள்', 'தீர்க்க சுமங்கலி', 'சாதிகள் மாறுதடி பாப்பா', 'மாரீச மான்கள்' போன்றவை குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளாகும். 'அவனுக்காக மழை பெய்கிறது' என்பது நாவல். 'பெண் என்றாலே...', 'கண்' போன்றவை நாடகங்கள். 'கண்' ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 'அதியமான் காதலி' வரலாற்று நாவல். 'விடிவெள்ளி' சிறுவர் நாவல். அண்ணாமலை அரசர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரின் வாழ்க்கை வரலாற்றையும் ஆவணப்படுத்தியுள்ளார். இலக்கியத்தில் குறிப்பிடப்படும் வரலாற்றுச் சம்பவங்களை ஆராய்ந்து நாவல், கட்டுரைகள் படைப்பதில் மிகத் தேர்ந்தவர் அய்க்கண். இவரது கதைகள் மண்ணின் மனத்தோடு மனிதநேயமும் பேசுபவை. அவை சமூகக் கதையோ, நாடகமோ, சிறுவர் கதையோ எதுவாக இருந்தாலும் அவற்றில் ஒரு கருத்தோ செய்தியோ நிச்சயம் இருக்கும். இதுகுறித்து அய்க்கண், “என்னுடைய 'வள்ளியின் திருமணம்' என்கிற சிறுகதை முதன்முதலாக விகடனில் என் புகைப்படத்துடன் பிறந்தது. அந்தக் கதைக்கான சன்மானத்துடன் ஒரு அழகான பேனாவும் பரிசாக அனுப்பியிருந்தார் ஆசிரியர். அது ஒரு முக்கோணக் காதல் கதைதான் என்றாலும், 'கான முயல் எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது' என்ற திருக்குறளை மையக் கருத்தாக வைத்து எழுதியிருந்தேன். அன்றிலிருந்து இன்றுவரை ஏதாவது ஒரு கருத்து அல்லது செய்தி இல்லாத கதையே நான் எழுதியதில்லை என்ற மனநிறைவு எனக்கு உண்டு” என்கிறார். இவரது “இரண்டாவது ஆகஸ்ட் 15, ” என்னும் நாவல் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இதயம் கிராமங்களில்தான் இருக்கிறது என்னும் மகாத்மா காந்தியின் கருத்தினை மையமாக வைத்து, அரசியல்வாதிகள், அதிகாரிகள் இருவரும் சமுதாயப் பொறுப்புணர்வோடு செயல்பட்டால் கிராமங்கள் வளர்ந்து, இந்தியா உயர்வுறும் என்ற கருத்தை அவர் அந்நாவலில் வெளியிட்டிருந்தார். இந்நாவலுக்கு இலக்கிய பீடப் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. |
|
கதை, கட்டுரை, திறனாய்வோடு நாடக வளர்ச்சிக்கும் இவர் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். இவரது நாடகங்கள் பலமுறை வானொலிகளில் ஒலிபரப்பப்பட்டதுடன் பரிசுகளையும் வென்றுள்ளன. அகில இந்திய வானொலி நிலையம் நடத்திய நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்ற இவரது நாடகம், 19 தேசிய மொழிகளில் பெயர்க்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பானது. தமிழக அரசு ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளில் பெயர்த்து வெளியிட்டுள்ள சிறந்த சிறுகதைகளில் புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, ஜெயகாந்தன், ஆர் சூடாமணி, சுஜாதா ஆகியோருடைய கதைகளோடு இவரது சிறுகதையும் இடம்பெற்றது. சாகித்திய அகாதெமி தமிழில் வெளியான சிறந்த 30 கதைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டது. அவற்றில் இவரது கதை இடம் பெற்றது. 2005ல் மலேசியாவில் உலகத தமிழ்மறை ஆராய்ச்சி மாநாடு நடந்தபோது உலகத் தமிழ் எழுத்தாளர்களிடையே நடைபெற்ற சிறுகதைப் போட்டியில் இவரது கதை முதல் பரிசு பெற்றது. பாரிஸ் தமிழ்ச் சங்கம் 2007ல் பாரதியாரின் 125ஆம் ஆண்டு விழாவை ஒட்டி நடத்திய அனைத்துலகச் சிறுகதைப் போட்டியிலும் இவரது சிறுகதைக்கே முதல் பரிசு கிடைத்தது. உத்தரப் பிரதேச மாநில அரசு தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய நான்கு மாநில எழுத்தாளரிடையே நடத்திய சிறுகதைப் போட்டியிலும் முதல் பரிசு இவரது சிறுகதைக்கே.
சிறுகதை பற்றி அய்க்கண், "சிந்திக்கத் தெரிந்தவனே படைப்பாளியாகிறான். எல்லா கற்பனைகளுக்கும் அடிப்படையாக ஒரு உண்மை உண்டு. அந்த உண்மை இல்லாமல் கற்பனை வராது" என்கிறார். இவரது எழுத்துச் சேவையைப் பாராட்டி குன்றக்குடி அடிகளார் "நற்கதை நம்பி" என்ற பட்டத்தை அளித்துள்ளார். ராஜா சர். அண்ணாமலை செட்டியார் பொற்கிழி விருதையும், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றமும் அழகப்பா பல்கலைக் கழகமும் இணைந்து வழங்கிய "புதிய இலக்கியச் செல்வர்" பட்டத்தையும் பெற்றுள்ளார். வி.ஜி.பி. இலக்கியப் பரிசு, ஸ்ரீ ஜெயேந்திரர் இலக்கியப் பரிசு போன்றவற்றுடன் 'எழுத்து வேந்தர்' என்ற சிறப்புப் பட்டத்தையும் பெற்றுள்ளார். தமிழக அரசின் முதற் பரிசை இவரது படைப்புகள் மூன்று முறை பெற்றுள்ளன.
பல நூறுக்கு மேற்பட்ட சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், சிறுவர் கதைகள், இலக்கியக் கட்டுரைகள் என இவரது படைப்புகள் நூல்களாக வெளிவந்துள்ளன. ஆங்கிலம், இந்தி, வங்காளி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியா போன்ற பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 'அய்க்கண் கதைகள்' என்ற பெயரில் நான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவருடைய புத்தகங்கள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி பல்கலைக் கழகங்களிலும், தன்னாட்சிக் கல்லூரிகளிலும் சிங்கப்பூர்ப் பள்ளிகளிலும் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மேல்நிலை வகுப்புத் துணைப்பாட நூல்களிலும் இவரது சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. பல்கலைக்கழக மாணவர்களும் இவரது படைப்புகளை M.Phil, Ph.D. பட்டங்களுக்கு ஆய்வு செய்துள்ளனர். இவரது எழுத்து மற்றும் இலக்கியச் சேவையைப் பாராட்டி அமெரிக்காவின் World Academy of Arts & Culture டி.லிட் பட்டம் அளித்துச் சிறப்பித்துள்ளது. மலேசியா, சிங்கப்பூர் உட்படப் பல நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில், சொற்பொழிவுகளில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியுள்ளார் அய்க்கண். காரைக்குடியில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற முக்கிய காரணமாய் அமைந்ததும் இவரே! பணி ஓய்வு பெற்ற பின்னும் அயராது ஆர்வத்துடன் கல்வி இலக்கியப் பணிகளை மேற்கொண்டு வரும் இவர், அகில இந்திய எழுத்தாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். அய்க்கண்ணின் கதைகள் வணிக எழுத்துக்கும், தீவிர எழுத்துக்குமான இடைநிலை எழுத்தாக இருந்து வாசகர்களை முன் நகர்த்துபவை என்று கூறின் அது மிகையல்ல.
அரவிந்த் |
|
|
|
|
|
|
|
|