Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
கவிதைப்பந்தல் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
கொட்டலங்கோ லியோன்
ஓவியர் இளையராஜா
- அரவிந்த் சுவாமிநாதன்|மார்ச் 2016|
Share:
இறைவனை வணங்கியபடி, தூணில் சாய்ந்தபடி, சமைத்தபடி, பூத்தொடுத்தபடி, நிலைப்படியில் அமர்ந்தபடி, குளத்தங்கரையில், பூக்கூடையுடன்... என அந்த அறை முழுக்கப் பெண்கள். இல்லையில்லை, பெண்களின் ஓவியங்கள். ஓவியம்தானா அல்லது புகைப்படமா என்று சந்தேகம் தோன்றுகிறது. அருகில் சென்று பார்த்தால் ஓவியம்தான் என்று தெளிவாகிறது. அத்தனை தத்ரூபம்! வரைந்தவர் இளையராஜா. இந்திய கலாசார அமைச்சகத்தின் தேசிய ஃபெல்லோஷிப், சிறந்த ஓவியருக்கான தமிழக அரசின் விருது, புதிய தலைமுறை ஓவியர் விருது, லலித்கலா அகாதமி விருது, விஜய் டி.வி. வழங்கிய சிறந்த பத்திரிகை ஓவியர் விருது உட்படப் பல்வேறு கௌரவங்களைப் பெற்றிருப்பவர். தமிழகம், புதுச்சேரி, பெங்களூரு, ஹைதராபாத், கல்கத்தா, டெல்லி, விசாகப்பட்டினம் என இந்தியாவிலும், சிங்கப்பூர், மலேசியா, லாஸ் ஏஞ்சலஸ், நியூயார்க் என உலக அளவிலும், தனியாகவும், குழுவில் இணைந்தும் பல கண்காட்சிகளை நடத்தியிருப்பவர். தமிழகத்தில் தத்ரூப பாணி ஓவியங்கள் வரைவதில் இன்று முன்னணியில் இருப்பவர். உலகத்தமிழர்கள் பலரது இல்லங்களை இவரது ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. இடையறாது படைக்கும் இவரை ஒரு பின்மாலைப் பொழுதில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பிலிருந்து....

தென்றல்: உங்களுக்குள் இருக்கும் ஓவியரை அடையாளம் கண்டு கொண்டது எப்போது?
இளையராஜா: நான் பிறந்து வளர்ந்தது கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் கிராமம். அப்பா தச்சர். மாட்டுவண்டி, அச்சாணி, இருசுச்சக்கரம் எல்லாம் செய்வார். எனக்கு ஐந்தாறு வயதாக இருக்கும்போதே அப்பாவுக்கு வேலையில் உதவியிருக்கிறேன். மரத்தச்சுக் கருவிகளை எல்லாம் அப்போதே கையில் பிடித்தாகிவிட்டது. சின்னச்சின்ன கார்விங் வேலைகளைச் செய்திருக்கிறேன். அதில் வந்ததுதான் ஓவிய ஆர்வம். பள்ளியில் படிக்கும்போது ஓவியப் போட்டிகளில் பரிசுகள் வாங்கினேன். அப்போதுதான் நமக்குள்ளும் ஒரு திறமை இருக்கிறது, பலர் பங்கேற்ற போட்டியில் நாம் ஜெயித்திருக்கிறோம் என்பதை உணர ஆரம்பித்தேன். ஓவிய ஈடுபாடு அதிகமானது. எனது பள்ளியாசிரியர் துரைசாமி சார் என் ஓவியத்திறனை ஊக்குவித்தார். போட்டிகளில் பங்கேற்க உற்சாகப்படுத்தினார். ஓவியம் மட்டுமல்லாமல், துப்பாக்கி சுடுதலில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டும் பரிசுகள் பெற்றிருக்கிறேன். என்.சி.சி.யில் இருந்திருக்கிறேன்.

என் ஆசிரியர்தான் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படிக்க எனக்கு வழிகாட்டினார். "நம் ஊரிலேயே ஓவியக்கல்லூரி இருக்கிறது, சேர்ந்து படி; நான் வெறும் டிப்ளமோ படித்துவிட்டு இந்த வேலைக்கு வந்துவிட்டேன். உன்னிடம் திறமை இருக்கிறது. நீ படி" என்றார். அப்படித்தான் தொடங்கியது.

தென்றல்: உங்கள் ஓவிய ஆர்வத்தைக் குடும்பத்தினர் ஆதரித்தனரா?
இளையராஜா: இல்லை. காரணம், மிகப்பெரிய குடும்பம். ஐந்து அண்ணன்கள், ஐந்து அக்காமார்கள். நான் கடைசிப் பையன். சின்ன அண்ணன் பழனிசாமி என்னைப் படிக்க வைத்தார். எல்லாரும் நான் எஞ்சினியர் ஆகவேண்டும் என்று நினைத்தார்களே தவிர, ஓவியனாவதை விரும்பவில்லை. பள்ளியிறுதி வகுப்பு முடித்ததும் வீட்டிலுள்ளவர்கள் தொடர்ந்து வற்புறுத்தல் தாங்காமல் வீட்டைவிட்டு துரைசார் வீட்டுக்குப் போய்விட்டேன்.

தென்றல்: ஓ... அதன் பின் என்ன ஆனது?
இளையராஜா: அப்போது கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் மனோகரன்சார் வண்ணக்கலைத் துறை ஆசிரியராக இருந்தார். அவரிடம் என்னை, "திறமை உள்ள இளைஞன். உங்கள் பையன் மாதிரிப் பார்த்துக் கொள்ளுங்கள்." என்று சொல்லி துரைசார் அறிமுகப்படுத்தி வைத்தார். மனோகரன்சார், மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பில் சேர்த்துப் படிக்கவைத்தார். கிட்டத்தட்ட மூன்றுமாதம் பயிற்சி எடுத்துக்கொண்டேன். பின்னர் ஓவியக் கல்லூரியில் சேர்ந்தேன். குடும்பத்தினரும் சிலநாட்கள் சென்றதும் சமாதானமாகி விட்டார்கள். அவர்கள் அனுமதித்ததால்தான் இன்றைக்கு வளர்ந்து நான் ஓர் ஓவியனாகி இருக்கிறேன். அதற்கு என் குடும்பத்தாருக்கு நன்றி சொல்லவேண்டும்.

தென்றல்: ஓவியக் கல்லூரி அனுபவங்கள் எப்படி இருந்தன?
இளையராஜா: ஓவியக் கல்லூரியில் சேர்ந்த பின்தான் ஓவியம் என்றால் என்னவென்பதை முறையாக அறிந்துகொண்டேன். அதுவரை நான் டி.வி. சேனலில் செய்தி வாசிப்பவர்களை வரைந்திருக்கிறேன்; சாமி படங்களைப் பார்த்து வரைந்திருக்கிறேன்; வீட்டிலுள்ளவர்களை வரைந்திருக்கிறேன்; ஆனால், கல்லூரியில் உடன் படித்த மாணவர்கள் பலவித ஆர்வங்களும், திறமைகளும் கொண்டவர்களாக இருந்தார்கள். எனக்கு ஒரே பிரமிப்பாக இருந்தது. இருந்தாலும் ஒரே மாதத்தில் நானும் அந்த நுணுக்கங்களைக் கற்று, வகுப்பில் முதல்மாணவனாக உயர்ந்தேன்.

என்மீது அக்கறை காட்டி எனக்குக் கற்றுத்தந்தவர் திரு. சிவபாலன். இன்றைக்கு அவர் டெல்லியில் மிகப்பிரபலம். அவர் நீர்வண்ண ஓவியராக இருக்கிறார். மற்றொருவர் அகமத் பாஷா. அவர் இன்றைக்கு கலிஃபோர்னியாவில் அனிமேஷன் துறையில் பிரபலமாக இருக்கிறார். எனக்கு ஆசிரியராக இருந்த மனோகரன், அதே கல்லூரியின் முதல்வராகித் தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்டார். இன்றைக்கும் இவர்கள் அனைவரும் என்மீது அக்கறை காட்டி வழிநடத்துகின்றனர். அதுபோல கும்பகோணம் கலைக் கல்லூரியில் பிரின்சிபலாக இருந்த ஆர்.டி. பாஸ்கர் மிக முக்கியமானவர். நான் சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்தபோது அவர்தான் முதல்வர். பின்னர் தேசிய லலித்கலா அகாதமியின் இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். என்னை ஓவியனாக்கியதில் இவர்கள் அனைவருக்கும் முக்கியப் பங்குண்டு.

அதுபோல வரலாறு குறித்த ஆலோசனைகள் வழங்கிவருபவர் திரு. ரஞ்சித். இவர் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் பேராசிரியர். கும்பகோணத்தில் நண்பர் சதீஷ்கண்ணா என்னுடன் இருந்தார். அவரையும் சென்னை ஓவியக் கல்லூரியில் என்னுடன் படிக்க வைத்தேன். இருவரும் ஒன்றாக மெரிட்டில் பாஸ் செய்தோம். தற்போது அவரும் நிறைய வரைந்து கொண்டிருக்கிறார்.



தென்றல்: தத்ரூப பாணி ஓவியங்களின்மீது உங்கள் கவனம் சென்றது எப்படி?
இளையராஜா: ஆரம்ப காலகட்டத்தில் நான் நீர்வண்ண ஓவியங்கள் அதிகம் வரைந்து கொண்டிருந்தேன். என் குருநாதர்கள் சிவபாலன், மனோகரன், பாஷா போன்றோரின் பாதிப்பு என்னிடம் இருந்தது. அதிலிருந்து மாறுபட்டு, தனித்துவமாக என் ஓவியங்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்று நினைத்தேன். அப்படித்தான் தத்ரூப ஓவியங்களின் பக்கம் கவனம் திரும்பியது. அப்போது அந்தோணி தாஸ் ஒருவர்தான் அப்படி வரைவார். சிறுவயதிலிருந்தே நான் அதிகம் வரைந்த தத்ரூப ஓவியங்களுக்குத்தான் பாராட்டுக்களும் பரிசுகளும் கிடைத்திருக்கின்றன என்பதும் ஒரு காரணம்.

என் ஓவியம் எல்லாரையும் கவரவேண்டும்; நமது கலாசாரத்தை, பண்பாட்டைப் பிரதிபலிக்க வேண்டும்; பார்ப்பவர்களின் மனதில் சிந்தனையைத் தோற்றுவிக்க வேண்டும்; நமது வாழ்க்கையைச் சொல்லவேண்டும்; அதே சமயத்தில் அது நமக்கு வருமானம் தருவதாகவும் அமையவேண்டும். இவ்வளவும் யோசித்து தத்ரூப பாணி ஓவியங்களை வரைவதில் கவனம் செலுத்தினேன்.

தென்றல்: அதற்கு வரவேற்பு கிடைத்ததா?
இளையராஜா: மிகநல்ல வரவேற்பு கிடைத்தது. என்னுடைய முதல் கண்காட்சி செப்டம்பர் 2003ல் நடந்தது. அதற்கு ஆர்ட் கேலரிகளிலிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. சென்னையின் புகழ்பெற்ற, பழமையான அப்பாராவ் கேலரியினர் என்னை ஊக்குவித்தனர். பல கண்காட்சிகளில் என் ஓவியங்களை வைத்தனர். அது நவீன பாணி ஓங்கியிருந்த காலம். ரியலிஸ பாணியில் இருந்த எனது நீர்வண்ண ஓவியங்களுக்கு மிகநல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து அப்பாராவ் காலரியினர் சென்னை மற்றும் டெல்லியில் என் கண்காட்சிகளை ஏற்பாடு செய்தனர். கிண்கிணி ஆர்ட் காலரியினர் பெங்களூரில் நடத்தினர். அதற்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து, அங்கிருந்த புகழ்பெற்ற அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட் காலரி என்னை அழைத்தது. பல அமைப்புகளிடமிருந்தும் எனக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்தது.

தென்றல்: நீங்கள் நடத்திய 'திராவிடப் பெண்கள் ஓவியக் கண்காட்சி'யைப் பற்றிச் சொல்லுங்கள்..
இளையராஜா: எனக்கு பெரிய பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்தது அந்தக் கண்காட்சி. தனலக்ஷ்மி ஃபோர்டிஸ் என்பவர் ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர். 70க்குமேல் வயதான அவருக்கு என் ஓவியங்கள்மீது மிகுந்த ஆர்வம். என் ஓவியங்களைத் தன் சேகரிப்புக்காக வாங்கியிருந்தார். பின் அவற்றையெல்லாம் ஒரு தனிநபர் கண்காட்சியாக நடத்த ஏற்பாடு செய்தார். அதுதான் 'திராவிடப் பெண்கள் கண்காட்சி'. 2009ல் பெங்களூரில், யாசின் அவர்களின் அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட் காலரியில் நடந்தது. பூக்கட்டும் பெண், சமைத்துக் கொண்டிருக்கும் பெண், வீட்டினுள் இருந்து ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்கும் பெண், குழந்தையைத் தோளில் வைத்திருக்கும் பெண் என்று கிராமத்துப் பெண்களின் வாழ்க்கையை, அவர்களது வாழ்வின் சிறுசிறு கணங்களை அதில் பதிவு செய்திருந்தேன். முப்பதுக்கும் மேற்பட்டஓவியங்கள். பல பிரபலங்கள் கண்காட்சிக்கு வந்திருந்தனர். பத்திரிகைகள், மீடியா பாராட்டின. தொடர்ந்து ஆனந்த விகடன் என்னுடைய ஓவியங்களை வாங்கி ஒவ்வோர் இதழிலும் பயன்படுத்தியது. விகடன் என்னை அதுவரை அறிமுகம் ஆகியிராத, வெளிநாடுகள் முதல் தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை அறிமுகம் செய்துவைத்தது. அதற்கு விகடனுக்கு நன்றி சொல்லவேண்டும். அம்மாதிரி ஓவியங்கள் வேண்டுமென்று உலகின் பல இடங்களிலிருந்தும் அழைப்புகள் வர ஆரம்பித்தன. இன்றுவரை வந்துகொண்டேதான் இருக்கின்றன.

தென்றல்: திரைப்படத்துறையிலும் பணியாற்றி இருக்கிறீர்கள் அல்லவா?
இளையராஜா: அது யதேச்சையாக நடந்த விஷயம். நான் அப்போது முதுகலை முதலாம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்தேன். ஒருசமயம் லொகேஷன் பார்ப்பதற்காக கலை இயக்குநர் ஜே.கே. சாருடன் இயக்குநர் பார்த்திபன் வந்திருந்தார். அப்போது ஸ்பாட் போர்ட்ரெய்ட்டை நான் மிகவும் தத்ரூபமாக ஐந்து நிமிடத்தில் வரைந்து விடுவேன் என்பதாக எனது முதல்வர் பார்த்திபனிடம் எடுத்துரைத்தார். அதைக் கண்டு வியந்த பார்த்திபன், "ஐந்து நிமிடத்தில் என்னை வரைந்து விடுவீர்களா, நிஜமாவா?" என்று கேட்டார். நான் "ஆமாம் சார். ஐந்து நிமிடத்திலும் வரையலாம்; பத்து நிமிடத்திலும் வரையலாம்" என்றேன். உடனே வகுப்பில் ஓரிடத்தில் உட்கார்ந்து பார்த்திபன் போஸ் கொடுத்தார். ஏழு நிமிடத்தில் வரைந்தேன்.

வியந்து பாராட்டியவர், பின்னர் சில நாட்கள் கழித்து என்னை அழைத்தார். 'இவன்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றும் வாய்ப்புக் கொடுத்தார். அதில் சிறுவயது பார்த்திபனாகவும் நான் நடித்தேன். 'எதிர்கால இயக்குநர்கள்' என்று டைட்டிலில் என் பெயரும் வந்தது. ஆனால் திரைப்படத் துறையில் என் கவனம் செல்லவில்லை. ஓவியமே என்னை முழுமையாக ஆக்கிரமித்திருந்ததால் நான் பார்த்திபன் சாரிடம் சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றேன். அவரும் "உங்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்பதால்தான் அழைத்தேன். அது உங்கள் லட்சியத்திற்கு இடையூறாகி விடக்கூடாது. உங்கள் பயணத்தைத் தொடருங்கள். எந்த உதவி வேண்டுமானாலும் என்னிடம் தயங்காமல் கேளுங்கள்" என்று சொல்லி அனுப்பிவைத்தார். மீண்டும் ஓவிய வாழ்க்கையைத் தொடர்ந்தேன்.

என்னுடைய மாணவர்கள் பலர் திரைத்துறையில் இருக்கின்றனர். அட்டகத்தி படத்தின் இயக்குநர் ரஞ்சித், தற்போது 'கபாலி' படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறாரே அவர், சிஎஸ்கே படத்தை இயக்கிய சத்தியமூர்த்தி ஆகியோர் என் ஓவியப் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர்கள், சென்னை ஓவியக் கல்லூரி மாணவர்கள். அக்கல்லூரியில் படித்த மாணவர்களில் பலர் தற்போது ஆர்ட் டைரக்டராகவும், இயக்குநராகவும் வந்து கொண்டிருக்கின்றனர். நேரமின்மை காரணமாக நான் அந்த முகாமை இப்போதெல்லாம் நடத்துவதில்லை. ஆனால், ஏழாண்டு முன்புவரை அதைச் செய்து கொண்டிருந்தேன். சினிமாத்துறை சார்ந்த நண்பர்கள் ஏதாவது உதவி கேட்டால் அதைச் செய்து தருவதுண்டு.



தென்றல்: உங்களைக் கவர்ந்த சமகால ஓவியர்கள்யார், யார்?
இளையராஜா: மாதவன், நட்ராஜ், கோபுலு சார் முதல் ம.செ., மாருதி, ஷ்யாம், ஹிந்துவின் கேசவ் எனப் பலரது ஓவிய பாணிகளை வியப்பதுண்டு. அவர்கள் அதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள், உழைத்திருப்பார்கள், பயிற்சி எடுத்திருப்பார்கள் என்பது ஓர் ஓவியனாக, படைப்பாளியாக எனக்கு நன்கு தெரியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். நாம் செய்யாதவற்றைப் பிறர் செய்யும்போது அதை நான் கவனித்துப் பார்ப்பதுண்டு. பெயிண்டிங் என்று எடுத்துக் கொண்டால் ரவிவர்மா அவர்களை மிகவும் பிடிக்கும். அதுபோல கல்கத்தாவின் சஞ்சய் பட்டாச்சார்யா, பிகாஸ் பட்டாசார்ஜி, மும்பையின் வசுதேவ் காமத் எனப் பலரின் பெயிண்டிங்குகள் என்னைக் கவர்ந்தவை.

தென்றல்: தத்ரூப பாணி என்பதை நீங்கள் எப்படி வரையறுக்கிறீர்கள்?
இளையராஜா: தத்ரூபம் என்றால் நிஜம். ஆக, அதில் உண்மை இருக்க வேண்டும். கற்பனைக்கும் இடமுண்டுதான். ஆனால் அதுவும் உண்மையைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். ஒன்றைப் பார்த்து அதுபோலவே வரைவதுதான் தத்ரூப பாணி. இதில் லைட்டிங் செட் செய்வதுதான் மிகவும் கடினம். மேல்நாடுகளில் ஓவியங்களை அவர்கள் மாடல்களை வைத்துத்தான் வரைவார்கள். ரெம்ப்ராண்ட், ரஃபேல், கரவாஜியோ போன்றோர் ஓவியங்களைப் பார்த்தால் அப்படியே ஓர் ஆள் நிற்பது போலவே இருக்கும். காரணம், அவர்கள் ஆட்களை மாடலாக வைத்து வரைந்ததுதான். அந்தப் படங்களிடம் மட்டும்தான் நாம் நேரில் நின்று பேசக்கூடிய உணர்வு வரும். அதைத்தான் நானும் செய்கிறேன். லைவ் ஆக ஒரு விஷயத்தை கேப்சர் செய்ய வேண்டும். அதில் என்ன உணர்ந்தோமோ அதை ஓவியம் மூலமாக வெளிப்படுத்த வேண்டும். இதற்கு நான் மாடலாகப் பயன்படுத்தியதெல்லாம் என் அக்கா, அக்கா பெண்கள், நான் போகுமிடத்தில் காண்பவர்கள், கிராமத்தில் உள்ளவர்கள் என உயிருள்ள மாடல்கள்தாம்.

ஆனால், நான் அவர்களை அப்படியே ஓவியத்தில் கொண்டுவருவது கிடையாது. என் மகளையும் மகனையும் தவிர வேறு யாரையும் நான் அப்படியே படமாக இதுவரை வரைந்ததில்லை. அவர்கள் முகம் ஓவியத்தில் வராது. அவர்கள் அணியும் ஆபரணங்கள், ஆடைகள், நிறம் என அனைத்தையும் நான்தான் க்ரியேட் செய்வேன். ஓவியத்தில் கடவுளின் உருவத்தில் காலடியில் பூ இருக்கிறது, விளக்கு எரிகிறது என்பதையெல்லாம் நாம்தான் க்ரியேட் செய்ய வேண்டும். ஒரு ஓவியத்தின் ஃப்ரேமை சதுரத்தில் வரைவதா, செவ்வகத்தில் வரைந்தால் நன்றாக இருக்குமா என்பதையெல்லாம் ஓவியரான நாம்தான் முடிவு செய்யவேண்டும். அந்த மூடை, ஒரு பெண் இருக்கிறாள் என்றால் அவளது ஃபீலிங்கை, நான்தான் கொண்டு வருவேன். எனக்கு அவர் மாடல்தானே தவிர என் ஓவியத்தில் வரும் பெண் அவரல்ல. என் ஓவியத்தை நான் கடவுளுக்கு நிகராகப் பார்க்கிறேன். கோயிலுக்குச் சென்று கடவுளைப் பார்க்கும்போது என்ன உணர்வு வருகிறதோ அதே உணர்வு என் ஓவியத்தைப் பார்த்தாலும் வரவேண்டும் என்று நினைக்கிறேன்
தென்றல்: உங்களது பெரும்பாலான ஓவியங்களில் பெண்களே இருக்கிறார்களே?
இளையராஜா: நான் வளர்ந்த சூழல். எனது ரசனை இரண்டும் காரணமாக இருக்கலாம். பெண்களின் அழகு, நளினம், பொறுமை போன்றவை என்னைக் கவர்ந்ததாலும் இருக்கலாம். இளம்பருவத்தில் என் ஐந்து அக்காள்கள், ஐந்து அண்ணிகள், அவர்களின் குழந்தைகள் என்று என்னைச் சுற்றிலும் நிறையப் பெண்கள். அண்ணன்கள் எல்லாம் வெளிநாட்டில் வேலை பார்த்தார்கள். இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒருமுறை இரண்டு மாத லீவில் வருவார்கள். அதுதான் அண்ணிகள் மகிழ்ச்சியாக இருக்கும் காலம். மற்றக் காலங்களில் அவர்கள் வேலை செய்வார்கள், பேசுவார்கள், இருப்பார்கள். ஆனால் இந்த இரண்டு மாதக் கனவிலேயே, கற்பனையிலேயே அவர்கள் வாழ்க்கை கழியும். இதை அருகிலிருந்து பார்த்தவன். மேலும் கிராமத்திலும் பல அக்காள்களை, தங்கைகளைப் பார்த்தவன். அவர்களது கனவை, கற்பனைகளை, சந்தோஷத்தை, துக்கத்தை, அவற்றை வெளிக்காட்டாத அவர்கள் மௌனத்தை என் ஓவியத்தில் கொண்டுவர ஆரம்பித்தேன். அவர்கள் ஆழ்மனதில் ஒன்று ஓடும், செயல் ஒன்றாக இருக்கும். காய்கறி நறுக்கிக் கொண்டிருப்பார்கள், சிந்தனை வேறெங்கோ இருக்கும்.

ஓர் ஓவியத்தில் ஒரு பெண் இருந்தால் நீங்கள் பார்ப்பது அந்தப் பெண்ணின் முகத்தைத்தான். ஆனால், அந்த முகத்திற்குப் பின்னால் நான் நான்கைந்து முகங்களை வரைந்து பார்த்திருப்பேன். நான்கைந்து உதடுகள், மூக்குகள், கண்கள், காதுகள் என்றெல்லாம் மாற்றி மாற்றி வரைந்து பார்த்து இறுதியில்தான் அது ஒரு முடிவுக்கு வரும். அப்போது நானும் அதுவும் ஒன்றாகி இருப்போம். அப்படி உருவானவைதான் நீங்கள் பார்க்கும் எல்லா ஓவியங்களும்.

தென்றல்: ஆண்களை வரைந்திருக்கிறீர்களா?
இளையராஜா: வரைந்திருக்கிறேன். போர்ட்ரெயிட் செய்து கொடுத்திருக்கிறேன். மற்றபடி என்னுடைய படைப்புக்குள் பெண்களை வரைந்ததுபோல ஆண்களை இன்னும் நான் கொண்டுவரவில்லை. அதற்கான சூழல் வரவில்லை. எதிர்காலத்தில் வரக்கூடும்.

தென்றல்: உங்கள் ஓவியங்களில் வண்ணங்கள் நிஜத்தை அப்படியே பிரதிபலிக்கின்றன. அலுமினியப் பானை ஆகட்டும், மண்பானை ஆகட்டும், அதுபோல சூரிய ஒளி-நிழல் ஆகட்டும், உடைகளின் நிறங்கள் ஆகட்டும், இவையெல்லாம் நிஜம்போலவே காட்சி அளிக்கின்றன. உடைகள் ஜொலிக்கின்றன. இது எப்படிச் சாத்தியமாகிறது?
இளையராஜா: ஆம். நிறையப்பேர் என்னிடம் இதைச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு ஓவியராக இதை விளக்குகிறேன்: நீங்கள் அதைப் பானையாகப் பார்க்கிறீர்கள். நாங்கள் வண்ணமாகத்தான் பார்ப்போம். அதாவது அந்த நிறத்தைக் கொண்டுவர எந்த வண்ணத்தை எப்படிப் பயன்படுத்தினால் வரும் என்று பார்ப்போம். அதுதான் எங்கள் தேடல். அந்தக் கலவையைத் தேடிக் கண்டுபிடித்து அதனைப் பயன்படுத்தி ஓவியம் தீட்டி, ஒரு பார்வையாளனாக வெளியே நின்று பார்க்கும்போதுதான் அது அப்படியே வந்திருக்கிறது என்ற உணர்வை எனக்குள் உண்டாக்கும். இது எல்லாவற்றுக்குமே பொருந்தும். ஒரு நண்பர் கேட்டார், "எப்படி சார் கோல்டு கலரைக் கொண்டு வந்திருக்கிறீர்கள், அது அப்படியே மின்னுகின்றதே! இதற்காக ஏதேனும் ஸ்பெஷல் கலரைப் பயன்படுத்துகிறீர்களா?" என்றார். அப்படியெல்லாம் இல்லை. லெமன் யெல்லோ, க்ரோம் யெல்லோ, வெர்மிலியன் ரெட், கான்டாக்ட் ப்ரௌன் என்று பல வண்ணங்கள் அதில் கலந்திருக்கின்றன. எல்லாம் சேர்ந்து கலந்து தங்கமாக ஜொலிக்கிறது. சொல்லப்போனால் லைட், மீடியம், டார்க் என்னும் மூன்று விஷயங்களை எப்படி ஒரு ஓவியர் கேப்சர் செய்கிறார், என்ன செய்தால் அந்த ரிசல்ட் வரும் என்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது.



தென்றல்: ஒரு தத்ரூப ஓவியத்திற்கு எப்படி அவதானிக்கிறீர்கள்?
இளையராஜா: ஒரு உதாரணம் சொல்கிறேன். ஊரில் என் வீட்டிற்குப் பக்கத்தில் ஆடு மாடுகளை ஓட்டிச் செல்லப் பயன்படும் சிறிய சந்து ஒன்று இருக்கிறது. அதில் காலைமுதல் மாலைவரை எப்படி வெளிச்சம் விழுகிறது என்று பார்ப்பேன். அதில் ஒரு பெண் நின்றால், ஒரு ஆடு போனால் எப்படி இருக்கும் என்று யோசிப்பேன். பெண்ணை வைத்துப் படம் எடுத்துவிடுவேன். ஓவியத்தில் ஆடு போன்றவையெல்லாம் நான் க்ரியேட் செய்து கொள்வேன். ஓரிடத்திற்குப் போகிறோம். அங்கே வீட்டின் கொல்லைப்புறம் மிக அழகாக இருக்கிறது. 11 மணி அளவில் மிக அழகாக வெளிச்சம் விழுகிறதென்றால் அவர்களிடம் அனுமதி பெற்று மாடல்கள் கிடைத்தால் அவர்களையும் சேர்த்து அந்த இடத்தைப் படம் எடுத்துவிடுவேன். மாடல் கிடைக்காவிட்டால் இடத்தை மட்டும் தனியாக எடுப்பேன். அதைத் தனியாகவோ இல்லை ஒரு பெண் அங்கே நிற்பது போன்றோ ஓவியமாக்குவேன்.

விநாயகரை ஒரு பெண் பூஜை செய்வதாக ஓவியம். விநாயகர் சிலை தினசரி எண்ணெய் அபிஷேகத்தால் நிறம் மாறியிருக்கும். சந்தனம், விபூதியால் நிறம் மங்கியிருக்கும். இவையெல்லாம் ஓவியத்தில் தெரியவேண்டும். புகைப்படம் எடுக்கும்போது எல்லா இடத்திலும் லைட்டிங் இருக்கும். ஆனால், ஓவியத்தில் தேவையான இடத்தில் மட்டுமே லைட்டிங்கைக் கொண்டு வரவேண்டும். ஒரு கிராமத்துச் சமையலறை என்றால் அது அப்படியே வரவேண்டும். அடுப்பு, அடுப்பைப் பற்றவைக்கும் பெண், தீப்பெட்டி, விறகு, தீ, பாத்திரம் என எல்லாவற்றையும் கொண்டு வரவேண்டும். இதற்குக் கற்பனையும் வேண்டும். அதேசமயம் அது யதார்த்தமாகவும் இருக்க வேண்டும். நான் எதைத் தேர்வு செய்கிறேனோ அது மக்களைச் சென்று சேர, என்னுடைய ரசனை மக்களின் ரசனையாக மாறவேண்டும். பார்வையாளனுக்கும் படைப்பிற்கும் இடையே ஒரு பரிமாற்றம் நடக்கவேண்டும். அதில் நான் அதிகக் கவனம் செலுத்துகிறேன்.

பாத்திரங்களுக்கு மட்டுமல்லாமல் பின்புலக் காட்சிக்கும் நான் கவனம் கொடுப்பேன். கிராமங்களை, தெருக்களை, வீடுகளை, வயல்களை, கோயில்களை என் ஓவியத்தில் பார்க்கலாம். என் பூர்வீக வீடு இன்று நிஜத்தில் இல்லை. இடிந்து போய்விட்டது. ஆனால் என் ஓவியத்தில் இருக்கிறது. அந்த ஓவியங்களில் இருக்கும் உண்மை, ரியலிஸம் எல்லாரையும் கவர்கிறது. இப்படிப்பட்ட வாழ்வியல் சார்ந்த, வரலாறு சார்ந்த ஓவியங்கள் அதிகம் விரும்பப்படுகின்றன. சில ஓவியங்களை எனது இணையதளத்தில் பதிவேற்றியிருக்கிறேன்.

தென்றல்: பத்திரிகை ஒவியம் பற்றிய உங்கள் பார்வை என்ன?
இளையராஜா: நான் சுதந்திர ஓவியன். குறிப்பிட்ட நேரத்திற்குள் பத்திரிகை, புத்தகங்களுக்கு வரைந்து கொடுக்க இயலாது. ம.செ., ஷ்யாம் எல்லாம் இதில் தேர்ந்தவர்கள். அதற்கு நிறையப் பயிற்சி வேண்டும், பொறுமையும் வேண்டும். என்னுடைய பயிற்சியே வேறானது. சொல்லப்போனால் நான் தோன்றும்போது வரையக் கூடியவன். ஒரு ஓவியத்தை முடிக்க ஒரு மாதம்கூட ஆகும். எந்தவித கமிட்மெண்ட்டும் இல்லாமல் சுதந்திரமாக இதுவரை வரைந்து வந்திருக்கிறேன். என்னுடைய படங்களை பத்திரிகைகளில் பயன்படுத்திக் கொண்டதுபோல புத்தகங்களின் அட்டைப் படமாகவும் சிலர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வரையச் சொல்லிக் கேட்டாலும் என்னால் முடிவதில்லை. அதில் சிலருக்கு வருத்தம் உண்டு என்பதை அறிவேன். ஆனால் எனக்கு என் அனுபவங்களை வரைவதற்கே நேரம் சரியாக உள்ளதால் மற்றவகை ஓவியங்களில் கவனம் செலுத்த முடிவதில்லை.



தென்றல்: மறக்க முடியாத பாராட்டு என்று எதைச் சொல்வீர்கள்?
இளையராஜா: ஒருமுறை இரண்டு பெரியவர்கள் என்னைத் தேடிவந்தனர். எண்பது வயதாவது இருக்கும். திருநெல்வேலியிருந்து வந்தனர். அவர்களில் ஒருவர் ரிடயர்டு தாசில்தார். "நீங்கள் இவ்வளவு வயதானவர்கள் என்பது எனக்குத் தெரியாது. தெரிந்தால் நானே உங்களைத் தேடி வந்திருப்பேன். அல்லது உங்களை அழைத்துக்கொண்டு வந்திருப்பேனே!" என்று சொல்லி, அவர்கள் காலில் விழுந்து ஆசிபெற்றேன். என்னை ஆசிர்வதித்த தாசில்தார், "இல்லை ஓவியம் வரையும் உங்களுடைய அந்தக் கையைக் கைகுலுக்கிவிட்டுச் செல்லவேண்டும் என்பதற்காகத்தான் வந்தேன்" என்று சொன்னார். அவரும் ஒரு நல்ல ஓவியர். அவர் வரைந்த சில ஓவியங்களைக் காட்டியபோது எனக்கு பிரமிப்பாக இருந்தது. எல்லாமே மினியேச்சர், கையளவு ஓவியங்கள்தான். அவற்றில் அவ்வளவு துல்லியம், நுணுக்கங்கள் இருந்தன. "நீங்கள் இதை எக்ஸிபிட் பண்ணினால் எங்கேயோ போய்விடுவீர்களே சார்!" என்று சொன்னேன். "எனக்கு அதில் ஆர்வம் இல்லை. பெருமையெல்லாம் எனக்கு வேண்டாம். நான் என் சந்தோஷத்திற்காக, ஆத்ம திருப்திக்காக மட்டுமே வரைகிறேன்" என்று சொன்னார். "என் படைப்பில் ஒன்றை உங்களுக்குக் கொடுக்க ஆசைப்படுகிறேன்" என்று சொல்லி ஓவியம் ஒன்றை என்னிடம் கொடுத்தார். அவர்களது பாராட்டையும் ஆசியையும் என்றும் என்னால் மறக்க முடியாது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தொலைபேசி மூலமும் நேரில் வந்தும் பாராட்டியிருக்கின்றனர். எதையெல்லாம் துறந்து அவர்கள் வெளிநாட்டிற்குச் சென்று வசிக்கின்றார்களோ அதையெல்லாம் எனது ஓவியம் அவர்களுக்கு நினைவூட்டுகிறது. அவர்கள் இழந்ததை, ஏக்கத்தை எனது ஓவியங்கள் தீர்க்கின்றன என்பதால் ரசிக்கின்றனர். பாராட்டுகின்றனர். உலகத் தமிழர்களின் ரசனை உணர்வு என்னை வாழவைத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

தென்றல்: எதிர்காலத் திட்டங்கள் என்ன?
இளையராஜா: இப்போது நான் தத்ரூப பாணியில் வரைந்து கொண்டிருக்கிறேன். செமை-அப்ஸ்ட்ராக்டாகச் செய்யும் எண்ணம் உள்ளது. காட்சிகள் விரிந்து கிடக்கின்றன. இதுவரை நான் செய்தது குறைவுதான். 150 படங்கள்தான் வரைந்திருக்கிறேன். நான் சின்ன ஃப்ரேமில்தான் அதிகம் வரைந்திருக்கிறேன். இன்னும் பெரிய ஃப்ரேமில் வரைய வேண்டும். அதாவது ஒரு வீடு என்று எடுத்துக்கொண்டால் வீடு முழுவதையும் காண்பித்து, அங்கு நடக்கும் செயல்களைக் காண்பிக்கும் எண்ணம் உள்ளது. அதுபோல தெருக்காட்சி முழுமையும் காண்பிக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணம் இருக்கிறது. மற்றபடி பெரிய திட்டம் எதுவும் கையில் இல்லை. அந்தந்த நேரத்தில் எதைச் செய்யத் தோன்றுகிறதோ அதைச் செய்கிறேன். அதை ஒழுங்காகச் செய்தால் போதும் என்றே நினைக்கிறேன்.

"இது என்னுடைய தனி ஸ்டூடியோ. இங்கு நான் மட்டுமே இருப்பேன். இரவு நேரத்தில்தான் வரைவேன். ஒருபக்கம் இளையராஜாவின் இசை ஒலித்துக்கொண்டிருக்க நான் வரைந்து கொண்டிருப்பேன். தூக்கம் வந்தால் கொஞ்சநேரம் போய் தூங்கிவிட்டு மீண்டும் எழுந்து வரைவேன். இத்தனை நாளில் முடிக்கவேண்டும் என்கிற அவசரமில்லாமல் நிதானமாக வரைவேன். இரவு நேரத்தில் வேலை செய்யும்போது என் மனைவி டீ போட்டுக் கொண்டு வருவார். மனைவி, குடும்பம் எல்லாரும் நல்ல ஆதரவு தருவதால் என்னால் சுதந்திரமாகச் செயல்பட முடிகிறது. எனக்கு ஒரு பையன், ஒரு பெண். அவர்களுக்கும் ஓவிய ஆர்வம் இருக்கிறது"

மன நிறைவுடன் பேசுகிறார் ஓவியர் இளையராஜா. அவரது முயற்சிகளுக்கு வாழ்த்துச்சொல்லி விடைபெற்றோம்.

சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்

*****


மறக்கமுடியாத அமெரிக்க விருந்தோம்பல்
பிரான்க்ஸ்வில் (Bronxville) கான்கார்டியா கல்லூரியின் டீன் திரு. ஜார்ஜ் சென்னை வரும்போதெல்லாம் எங்கள் கல்லூரிக்கு வருவார். கல்லூரி முதல்வர் மனோகர் என்னை ஜார்ஜுக்கு அறிமுகப்படுத்தினார். வரும்போதெல்லாம் என் ஓவியங்களை வாங்கிச் செல்வார். இந்த ஓவியங்களை அமெரிக்காவில் கண்காட்சியாக நடத்தலாமே என்று அழைத்தார். நாங்கள் அமெரிக்கா சென்று 22 நாட்கள் அந்தக் கண்காட்சியை நடத்தினோம். கண்காட்சிக்கு வந்தவர்களுக்கு, பஜாரில், மக்கள் நடந்து சென்று கொண்டிருக்கும் இடத்தில் நாங்கள் வரைந்து காண்பித்தோம். அங்குள்ள தமிழ் மக்கள் நெருங்கிய உறவினர்களைப் போல எங்களை நடத்தினர். ஓவியங்களை வாங்கினர். நாங்கள் கொண்டுசென்ற அனைத்து ஓவியங்களும் விற்பனை ஆகிவிட்டன. அமெரிக்கத் தமிழர்களின் அன்பும் விருந்தோம்பலும் என்னால் மறக்கவே முடியாது.

இளையராஜா

*****


மாயம் செய்த ஓவியம்
அவர்கள் வெளிநாட்டு தம்பதிகள். அவர்கள் பையனுக்கு எட்டு வயது. அவன் ஒரு சிறப்புக் குழந்தை. தனிப்பள்ளி, தனி ஆசிரியர் என்று வளர்க்கிறார்கள். சிரிப்பு, சந்தோஷம், பேச்சு என்று எந்த உணர்ச்சி வெளிப்பாடும் அவனிடம் இல்லை. ஒரு ஜடப்பொருள் மாதிரி இருந்து வந்திருக்கிறான். இவர்கள் அவனது முன்னேற்றத்திற்காகப் பலவித பயிற்சிகள், மருத்துவர்கள் என்று செலவழித்திருக்கிறார்கள். ஒன்றும் பயனில்லை. ஒருநாள் ஐபேடில் அவர்கள் அவனுக்கு பல காட்சிகளைக் காண்பித்து வரும்போது யதேச்சையாக என்னுடைய ஓவியம் ஒன்றைக் காண்பித்திருக்கிறார்கள். அவன் அதையே பார்த்துக் கொண்டிருந்தானாம். தொடர்ந்து எனது சைட்டில் உள்ள ஓவியங்கள் ஒவ்வொன்றாகக் காட்டக்காட்ட அவன் முகத்தில் ஏதோ மாறுபாடு. அதையே திரும்பத்திரும்பப் பார்த்திருக்கிறான். உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கிறான். அவர்களுக்கு ஒரே ஆச்சரியம். எத்தனையோ சினிமா படங்கள், வால்ட் டிஸ்னி கார்ட்டூன்கள் என்றெல்லாம் காண்பித்தும் சட்டைசெய்யாத பையன் இந்தப் படங்களைத் திரும்பத் திரும்பத் பார்ப்பது அவர்களுக்கு வியப்பைத் தந்தது.

அவனே ஐபேடை எடுத்து எனது சைட்டுக்குப் போய் ஓவியங்களைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறான். அவற்றைப் பார்த்து எதையோ பேச, சைகை செய்ய ஆரம்பித்திருக்கிறான். பெற்றோர் என்னைத் தொடர்புகொண்டு எனது ஓவியம் வேண்டும் என்று கேட்டார்கள். நான் சொன்னதும் அவர்கள் மேற்கண்ட விஷயத்தை என்னிடம் விளக்கினர். "சார், ஏழெட்டு வருடமாக எந்த உணர்ச்சியும் காட்டாத எங்கள் பையன் இப்போதுதான் சின்னச்சின்ன உணர்வுகளை வெளிப்படுத்துகிறான். காரணம் உங்கள் ஓவியம். இன்னும் மாற்றம் வரும் என்றுதான் இந்த ஓவியத்தை வாங்குகிறோம். எங்கள் குடும்பத்தில் ஒரு வெளிச்சத்தைக் கொடுத்தது உங்கள் ஓவியம்தான்" என்று சொன்னார்கள்.

அந்தப் பையனுடைய முன்னேற்றத்தை அவ்வப்போது வீடியோ பிடித்து அனுப்புவார்கள். "இப்போ கொஞ்சம் கொஞ்சம் சிரிக்கிறான்; சோஃபா மேல் ஏறி உங்கள் பெயிண்டிங்கைத் தடவுகிறான். தள்ளி நின்று அதைப் பார்த்துச் சிரிக்கிறான். அதனிடம் ஏதோ சொல்கிறான். பேசுகிறான். நாங்கள் அவனுடன் பேசுகிறோம், எங்களைச் சட்டை செய்யாமல் ஓவியத்துடன் பேசிக் கொண்டிருக்கிறான்" என்றெல்லாம் சொன்னார்கள். நாளடைவில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதால், இம்மாதிரிக் குழந்தைகளுக்கு உதவலாமே என்று நினைத்திருக்கின்றனர். அங்குள்ள சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் அனுமதி பெற்று, அவர்களுக்கு என் ஓவியங்களை ஸ்லைடுகளாகக் காட்டி இருக்கின்றனர். அவற்றைப் பார்த்த ஒவ்வொரு குழந்தையும் ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷன்களைக் கொடுத்திருக்கின்றனர். அந்தப் பள்ளி ஆசிரியர், பிரின்சிபல் எல்லாருக்கும் வியப்பு. இதை அந்த தம்பதிகள் என்னிடம் போனில் தெரிவித்தனர். இந்த ஓவியத் துறையை நம்பி வாழ்க்கையாக எடுத்துக் கொண்டதன் பிரதிபலனை அன்று அடைந்துவிட்டதாக மகிழ்ந்தேன்.

இளையராஜா

*****


இதழ் அட்டையிலும் இந்தக் கட்டுரையுடனும் வெளியாகியுள்ள ஓவியங்கள் ஓவியர் இளையராஜாவின் அனுமதியோடு வெளியிடப்படுகிறது.
Copyright: Artist S.Elayaraja
ஓவியங்கள் நன்றி: www.elayarajaartgallery.com
More

கொட்டலங்கோ லியோன்
Share: 




© Copyright 2020 Tamilonline