Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
முன்னோடி
டி.எஸ். சொக்கலிங்கம்
- மதுசூதனன் தெ.|மே 2007|
Share:
Click Here Enlargeஅக்காலத்தில் வெடிகுண்டு வழக்குகள், சதியாலோசனைகள், வழக்குகள் இவைதான் பெரிய தேசியச் செய்திகளாய் இருக்கும்... தேச சேவை செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசை தோன்றியது ஆனால் எப்படிச் செய்வது? அதற்கு வழிதான் ஒன்றும் இல்லை. இச்சமயத்தில் ஆமதாபாத்தில் சத்தியாக்கிரக ஆச்சிரமம் ஒன்றை மகாத்மா ஆரம்பித்ததைப் பத்திரிகையில் படித்தேன். அதில் போய்ச் சேருவது என்று முடிவு செய்தேன்... திருநெல்வேலி சதியாலோசனை வழக்கில்|சம்பந்தப்பட்டு என் சகோதரர் இரண்டு வருடம் ஜெயிலில் இருந்து விட்டு வெளியே வந்தார். அதுமுதல் நான் படிக்கிறவைகளையும் எனக்குத் தபாலில் வரும் கடிதங்களையும் கவனமாய் என் வீட்டார் கண்ணோட்டம் போட்டு வந்தார்கள்'

இவ்வாறு தமக்கு ஏற்பட்ட அரசியல் ஆர்வம் குறித்துக் கூறுபவர் டி.எஸ். சொக்கலிங்கம். தமிழ் இதழியல் துறையில் இந்த பெயர் ஒரு வரலாறாகவே பரிணமித்துவிட்டது. அரசியல் இதழியல், அரசியல் ஆகிய இருதுறைகளிலும் டி.எஸ். சொக்கலிங்கத்தின் வகிபாகம் ஆழமானது, அகலமானது. விரிவும் ஆழமும் மிக்க தொடர்ச்சியின் பரிமாணமாகவும் இவரைப் புரிந்து கொள்ளலாம். இதழியல் துறையில் ஈடுபாடுள்ள யாவருக்கும் அரசியல் ஈடுபாடும் இருக்கும். குறிப்பாகச் சொக்க லிங்கம் போன்றவர்கள் இதழியல் துறையில் நுழைந்து பணி செய்வதற்கு அக்காலகட்ட அரசியல் எழுச்சியும் ஒரு காரணமாக அமைந்திருந்தது. அரசியல் கண்ணோட்டம் கொண்டவர்கள் தாம் இதழியல் துறையில் நின்று நீடித்து சாதனைகள் புரிய முடிந்தது.

அதனைத் தெளிவாக உணர்ந்து அதில் குறுக்கீடு செய்யும் ஆற்றலும் வேகமும் திறனும் பெற்ற சொக்கலிங்கத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இந்த அறிதல் தமிழ் இதழியல் வளர்ச்சிப்போக்கின் சில கட்டங்களை ஆழமாக உணர்ந்து கொள்ள உதவும். இப்பின்னணியில் டி.எஸ். சொக்க லிங்கத்தின் இதழியல் பணிகளில் மட்டுமே இக்கட்டுரை கவனம் குவிக்கிறது.

சொக்கலிங்கம் 1899 மே 3 இல் திருநெல்வேலி அருகிலுள்ள தென்காசியில் பிறந்தார். இவரது காலம் பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டங்கள் முனைப்புற்ற காலம் எனலாம். 1906-08 காலப்பகுதியில் வ.உ.சி.யின் தலைமையில் தென் தமிழகத்தில் சுதேசி இயக்கம் வலுப்பெற்றது. சுதேசிக் கப்பல் கம்பனியின் செயற்பாடுகள் இதற்குப் பின்புலமாய் அமைந்திருந்தன. 1908 மார்ச் 12 அன்று வ.உ.சி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதன் விளைவாக மறுநாளே திருநெல்வேலியில் ஒரு மக்கள் எழுச்சி உருவாயிற்று.

சுதேசி இயக்கத்தின் உச்சக் கட்டமாக 1911 ஜூன் 17 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர் ஆஷ் கொலை செய்யப்பட்டார். இக் கொலை தொடர்பாகச் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சொக்கலிங்கத்தின் தமையனார் தெ.ச. சிதம்பரம் பிள்ளையும் ஒருவர். இவர் மீதான வழக்குக்காக மற்றொரு தமையனாரான வேலாயுதபிள்ளை சென்னை சென்றார். இவர்களது தந்தையார் சங்கர லிங்கம் பிள்ளை 1910களிலே மறைந்து விட்டார். கைது, வழக்கு போன்ற காரணங்களால் சொக்கலிங்கம் பள்ளிப் படிப்பை விட்டு வணிகத்தை மேற்பார்வையிட நேர்ந்தது. இருப்பினும் ஆசிரியர்களை அமர்த்தி வீட்டிலேயே கல்வி கற்று வந்தார். இவரது தமையனார் சிதம்பரம் பிள்ளைக்கு 1912 ஜூன் 15 அன்று இரண்டாண்டுச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

1917களில் சொக்கலிங்கம் காந்தியின் அரசியல் சிந்தனைகக்கும் அதன் இயக்கச் செயல்பாடுக்கும் உட்பட்டவரானார். தீவிர காந்தியவாதியாக மலர்ந்தார். விடுதலைப் போராட்டச் சூழலில் வளர்ந்த சொக்கலிங்கம் பத்திரிகையாளராக விரும்பி 'தமிழ்நாடு' இதழின் துணையாசிரியராக 1923ல் இணைந்தார். செக்கலிங்கத்தின் குடும்பத்துக் கும் 'சுதேசமித்திரன்' இதழுக்கும் நெடுநாள் தொடர்புண்டு. சுதேசமித்திரன் வெள்ளி விழாவுக்கு அவர்கள் காணிக்கை அனுப்பி யிருந்தார்கள். தென்காசியில் இருந்தபோது பத்திரிகைகள் மீது சொக்கலிங்கத்திற்கு ஈடுபாடு இருந்தது. அவற்றில் வெளிவரும் தலைவர்களின் பேச்சுக்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

புதுச்சேரியிலிருந்தது பாரதியார் எழுதிய கதை, கவிதை, கட்டுரைகள் போன்றவற்றைச் சிறுவயதில் படித்து வந்துள்ளார். மேலும் 'இந்தியா' பத்திரிகையில் வெளிவந்த பாரதியின் கார்ட்டூன்களில் மனதைப் பறிகொடுத்ததாகவும் சொக்கலிங்கம் எழுதியுள்ளார். விடுதலைப் போராட்டக் கருத்துக்களைப் பரப்பும் நோக்கில் 'சுதேசமித்திரன்' இதழின் விற்பனை முகவராகவும் இருந்திருக்கின்றார். அதில் கட்டுரைகளும் எழுதியுள்ளார். 1916ல் ஆனந்த போதினியில் எழுதிய கட்டுரை அவரது முதல் கட்டுரையாகத் கருதப்படுகிறது.

பத்திரிகையில் சேரத் தனக்கு ஏற்பட்ட ஆர்வம் குறித்து சொக்கலிங்கம் இவ்வாறு குறிப்பிடுகின்றார்: 'அக்காலத்தில் கவர்ச்சிகர மாய் தமிழில் எழுதக் கூடியவர்கள் மூன்றே பேர்தான். ஒன்று பாரதியார், மற்றொருவர் வ.ரா. மூன்றாமவர் டாக்டர் வரதராஜுலு நாயுடு. இவர்கள் முறையே சுதேசமித்திரன், வர்த்தகமித்திரன், பிரபஞ்சமித்திரன் ஆகிய பத்திரிகைகளில் எழுதி வந்துள்ளார்கள். மற்றவர்கள் எழுதுபவையெல்லாம் வழவழா கொழகொழா என்றுதான் இருக்கும். இந்த மூவர் எழுதும் கட்டுரைகளை விடாமல் விருப்பத்தோடு நான் படிப்பதுண்டு. அதன் பலனாக நானும் பத்திரிகை நடத்த வேண்டும் என்ற விருப்பம் எனக்குத் தோன்றியது.'

இதன் மூலம் பத்திரிகைத்துறை, எழுத்து மீது சொக்கலிங்கத்துக்கு இருந்த ஈடுபாடு தெளிவாகிறது. அப்போது சேலத்திலிருந்து வெளிவந்த வரதராஜுலு நாயுடுவின் 'தமிழ்நாடு' இதழின் துணையாசிரியராக 1923ல் பணியில் சேர்ந்தார். நாயிடுவிடம் பயின்றார். இது (1923-1925) சொக்க லிங்கத்தின் இதழியல் பயிற்சிக் கால கட்டமாகும். 1925ல் 'தமிழ்நாடு' அலுவலகம் சேலத்திலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டது. எஸ். சதானந்தம், கு. சீனிவாசன், வ.ரா. முதலியோருடன் தொடர்பு கொண்டு சொக்கலிங்கம் தம் இதழியல் அறிவைச் செழுமைப்படுத்திக் கொண்டார். இதழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டார். இது (1925-1930) இவர் இதழியலாளராக வளர்ந்த கால கட்டமாகும். சீனிவாசன், வ.ரா., சொக்க லிங்கம் ஆகிய மூவரும் அடிக்கடி சந்தித்துப் பேசும் பழக்கத்தைக் கைக்கொண்டார்கள். இதனால் பிற்காலத்தில் (1933) உருவானது தான் 'மணிக்கொடி'. இதுபற்றி இன்றுவரை பலரும் மௌனம் காப்பதையும் சுட்ட வேண்டும்.

சொக்கலிங்கம் 'தமிழ்நாடு' இதழில் எட்டு ஆண்டுகள் வரை பணியாற்றி விட்டு கொள்கை, வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகினார். இது குறித்து நாயுடு அவர்கள் பிற்காலத்தில் (1955) பின்வருமாறு நினைவு கூர்ந்தார்: 'எனது 'தமிழ்நாடு' பத்திரிகைக்கு எட்டு ஆண்டுகள் ஆசிரியராக இருந்து அக்காலத்தில் இவர் செய்த அரிய சேவையை நான் மறந்துவிடவில்லை. 'தமிழ்நாடு' பத்திரிகை அக்காலத்தில் வல்லமை பெற்றிருந்ததற்குச் சொக்கலிங்கப்பிள்ளை முக்கியமானவர். பலதடவை நான் சிறைப்பட நேர்ந்த போதெலலாம் பத்திரிகையைத் திறம்பட நடத்திய பெருமை பிள்ளை அவர்களுக்கே சார்ந்ததாகும்' இதன் மூலம் சொக்கலிங்கம் அவர்களது ஆளுமை எவ்வாறு வெளிப்பட்டு வந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.

சொக்கலிங்கம் 1931 எப்ரல் 14ம் நாள் தாமே 'காந்தி' எனும் வாரமிருமுறை இதழைத் தொடங்கினார். பின்னர் வாரம் மும்முறை ஆக்கினார்.

உலகெலாம் புகழும் நலனெலாம் அமைந்த
காந்திமா முனிவன் ஏந்திய கொள்கையை
நிலனெலாம் பரப்புதற் கவனற் பெயரால்
பத்திரிக்கை யொன்றை எத்திசையும் செலுத்தும்
சொக்க லிங்கத் தூயோய்....
வ.உ. சிதம்பரனார் செய்யுள் வடிவிலான தம் சுயசரிதையின் இரண்டாம் பாகத்தை 'காந்தி' இதழில் எழுதிய போது அதன் ஆசிரியர் சொக்கலிங்கத்தை மேற்கண்டவாறு போற்றித் தொடங்கினார்.

1931 ஏப்ரல் 14 செவ்வாய்க் கிழமை அன்று 'காந்தி'யின் முதல் இதழ் வெளியாயிற்று. 17ஆம் நாள் வெள்ளியன்று இரண்டாவது இதழ் வெளிவந்தது. பின்பு வாரம் தோறும் திங்கள், வியாழக் கிழமைகளில் வாரம் இரு முறையாகத் தொடர்ந்தது. 1931 செப்டம்பர் 12 சனிக்கிழமை முதல் வாரம் மும்முறையாகத் திங்கள், வியாழன், சனிக் கிழமைகளில் வெளிவந்தது. 1932 சனவரி 4 திங்கட்கிழமை அன்று காந்தியடிகள் சிறைப்பட்டார். எனவே மறுநாள் முதல், அதாவது செவ்வாயன்றும் வியாழனன்றும் என்று வெளிவந்தது. இவ்விதழில் இந்திய தேசிய காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் இடம் பெற்றதோடு, உயிர் போனாலும் உடமைகளை எல்லாம் இழந்தாலும் காரியக் கமிட்டி தீர்மானங்களை அப்படியே நிறைவேற்றி வைக்க வேண்டியது என்பது மகாத்மாவின் கட்டளை என சட்ட மறுப்பியக்கம் தூண்டப்பட்டது.

சட்டத்துக்கு முரணான செய்தி வெளியிட்ட தற்காக ஐந்து ரூபா காப்புத் தொகையும் ஐம்பது ரூபாய் தண்டத்தொகையும் செலுத்த வேண்டுமென காந்தி உரிமையாளர் சொக்கலிங்கத்துக்கு ஆணையிடப்பட்டது. மறுத்தால் ஏழு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

ஒரு பத்திரிகை சமுதாய நோக்குடன், காலத்தின் தேவை கருதி எப்படிச் செயற் படுவது, பத்திரிகையாளர் தாம் கொண்ட கொள்கைக்காக அடிபணியாது கருத்துச் சொல்லும் பாங்கு, கருத்துக்காகச் சிறை செல்லவும் தயங்காமை, போன்ற உயரிய பண்புகளை இது அடையாளம் காட்டியது; இதழியலாளருக்கு இருக்கவேண்டிய அற விழுமியங்கள் குறித்த உரத்த சிந்தனை களையும் நடத்தை மரபுகளையும் தெளிவாக உணர்த்திற்று.

14.4.1931 முதல் 7.1.1932 முடியவுள்ள காலத்தை காந்தி இதழின் முதற்கால கட்டமாகக் கொள்ளலாம். சொக்கலிங்கம் விடுதலையான பின்பு காப்புத் தொகையாக ரூ. 500 செலுத்தி மீண்டும் காந்தி இதழ் நடத்த இசைவு பெற்றார். 1932 அக்டோபர் 9 முதல் 1933 ஆகஸ்ட் 4 முடிய ஞாயிறு, புதன், வெள்ளிக்கிழமைகளில் வாரம் மும்முறையாக காந்தி வெளிவந்தது. 1933 ஆகஸ்ட் 1ல் காந்தியடிகள் சிறைப்பட்டதால் ஆகஸ்ட் 4ஆம் நாள் இதழுடன் 'காந்தி' நிறுத்தப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் 23ஆம் நாள் காந்தியடிகள் விடுதலை செய்யப்பட்டதால் 1933 ஆகஸ்ட் 27 முதல் ஞாயிறு, வியாழக் கிழமைகளில் வெளிவரத் தொடங்கியது. எனினும் ஐந்து இதழ்களோடு காந்தி நிறுத்தப்பட்டுவிட்டது.

காந்தி எனும் பெயரைத் தாங்கி இதழ் வெளிவந்தால், அந்தப் பெயருக்குரியவரின் அரசியல் நோக்கங்களுக்குப் பொருத்தமாக இதழை நடத்தி வந்த பெருமை சொக்க லிங்கத்துக்கு இருந்தது. இதில் இவர் நிதானமாகவும் உறுதியாகவும் இருந்து தொழிற்பட்டுள்ளார்.

1934ல் 'தினமணி' இதழின் ஆசிரியரானார். 1943ல் துணையாசிரியர்களின் ஊதிய உயர்வை மறுத்த முதலாளிக்கு எதிராகத் துணையாசிரியர் பலருடன் 'தினமணி' யிலிருந்து விலகினார். தமிழ் இதழியல் வரலாற்றில் உழைக்கும் பத்திரிகையாளர் ஒன்று திரண்டு போராடிய முதல் நிகழ்ச்சி இதுவேயாகும்.

1944ல் சொக்கலிங்கம் 'தினசரி' எனும் நாளேட்டைத் தொடங்கினார். 1952வரை அதன் ஆசிரியராகவும் உரிமையாளராகவும் இருந்து நடத்தினார். 'தினமணி', 'தினசரி' ஏடுகளில் பணியாற்றிய துணையாசிரியர் பலர் அவரிடம் பயின்று தமிழ் இதழியலாள ராகப் பின்னர் புகழ் பெற்றனர். இவ்வாறு பலர் உருவாவதற்கு ஆற்றலும் திறனும் கொடுத்த பேராசிரியராகவும் இவர் விளங்கினார். இவருடைய எளிய நேரடியான ஆற்றல் வாய்ந்த தலையங்கங்கள் செல்வாக்குப் பெற்றிருந்தன. தமிழ் இதழியல் வரலாற்றில் புதுப்போக்கு உருவாகத் தொடங்கிற்று. 1931-1952 காலப்பகுதி சொக்கலிங்கத்தின் சாதனைக் காலகட்டமாகும்.

1950களில் இதழியல் பெருமுதலீட்டுடன் கூடிய லாப நோக்கமுள்ள தொழிலாக வளர்ந்து விட்டது. சொக்கலிங்கம் கூலி பெறும் மூளையுழைப்பாளியாகவோ பத்திரிகை நிறுவன முதலாளியாகவோ முற்றிலும் தம்மை மாற்றிக் கொள்ள இயலவில்லை. இது ஒருபுறம் இவர் பெருமைக்கு அணி சேர்ப்பதாகவும், மறுபுறம் பத்திரிகையியல் வாழ்வில் ஒரு சரிவை ஏற்படுத்துவதாகவும் ஆயிற்று. ஆக, தொடர்ந்து நிலைத்து நிற்க வேண்டுமாயின் அரசியல் கட்சி பத்திரிகையா சிரியராக (நவசக்தி ஆசிரியர்) பணியாற்றுவது தவிர்க்க இயலாததாயிற்று.

சொக்கலிங்கத்தின் ஐம்பதாண்டு கால பத்திரிகைப் பணி யாவற்றையும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் அடிப்படையில் இவர் ஓர் 'அரசியல்-இதழியலாளர்' என்பது தெளிவாகிறது. அவ்வாறு உருவாகி வளர்ந்து வருவதற்கான காலமும் கருத்தும் சாதகமாக அமைந்ததோடு அவற்றினூடு தனக்கான தனித்துவ அடையாளங்களுடன் வாழ்ந்து செயற்பட்ட ஒருவராகவும் இருந்துள்ளார். தமிழ் இதழியல் வரலாற்றில் டி.எஸ். சொக்கலிங்கம் ஒரு முன்னோடியாகவே நிலைத்து நிற்கின்றார். அத்தகைய பெருமகனார் 1966 ஜனவரி 9ஆம் நாள் மறைந்தார். ஆனால் தனித்ததொரு ஆளுமை யாக இருந்த காரணத்தால் தமிழ் இதழியல் வரலாற்றில் தவிர்க்க இயலாத இடத்தைப் பெற்றுள்ளார். இவரது இதழியல் நுட்பங்கள் தனித்து ஆராயப்பட வேண்டியவை. மேலும் இவரது ஏனைய பணிகள் குறித்தும் பார்க்கும் பொழுது தான் 'சொக்கலிங்கம்' குறித்த முழுமையான பார்வை நமக்கு கிடைக்கும்.

தெ. மதுசூதனன்
Share: 




© Copyright 2020 Tamilonline