Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
இலக்கியம்
மாரியோ பனியோ
- பெரியண்ணன் சந்திரசேகரன்|மே 2007|
Share:
Click Here Enlargeஅமெரிக்காவின் அஞ்சற்சேவகத்தின் (U.S. Postal Service) நியூயார்க் நகர்த் தலைமை அலுவலகத்தின் வெளிப்புறத்தில் பொறித்துள்ள வாசகம் மிகவும் பிரபலமானது: 'பனியோ மழையோ வெயிலோ இரவின் இருளோ இந்தத் தூதர்களைத் தங்களுக்கு இட்ட கடமையை ஆற்றுவதிலிருந்து தடுப்பதில்லை'. இது கிரேக்க வரலாற்றாள ரான ஏரோறோறுசு (Herodotus) என்பவரின் சொல்; அவர் காலத்தில் நிகழ்ந்த கிரேக்கப் பாரசீகப் போரில் (கி.மு. 431) பாரசீகர்களின் தூதர்களைக் கண்டு இவ்வாறு வியந்து பாராட்டினார்.

இதுபோலவே ஈராயிரம் ஆண்டுகள் முன்பு சேரமன்னன் ஒருவனைக் கண்ட சங்கக் கவிஞர் ஒருவரும் அவன் ஊக்கத்தைக் கண்டு பாடியுள்ளார். அந்தப் பாட்டுச் சங்கக் கவிதைத்தொகுப்புகளில் ஒன்றான பதிற்றுப் பத்து என்னும் நூலில் உள்ளது. பத்துப் பத்தான பாட்டாகப் பத்துப்புலவர்கள் பாடியதன் தொகுப்பு. அவற்றுள் இடையில் உள்ள எட்டுப்பத்துக்களான எண்பதே முழுதாகக் கிட்டியுள்ளன.

கிடைத்துள்ள அந்த எண்பது பாடல் களிலிருந்தே சங்கக்கால மன்னர்கள் உயர்ந்த புலவர்களுக்கு மிகப்பெரும் பரிசுகள் வழங்கியதை அறிகிறோம். அரிசில் கிழாருக்குத் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை தன் கோயிலை (அரண்மனை யென்பதற்குச் சங்கக்காலத்தில் வழங்கிய சொல்) விட்டுத் தன்னரசியோடு வெளிவந்து அரிசில்கிழாரைப் பார்த்துக் 'கோயிலில் உள்ளனவெல்லாம் கொள்க' என்று சொல்லித் தன் அரசபதவியையே வழங்கினான் (ஆனால் அதை மறுத்து அவனை மீண்டும் ஆள வேண்டி அமைச்சராகப் பணிபுரிந்தார்). நாம் குறித்துள்ள பாட்டு அவற்றில் அடங்காதது. எனவே முதற்பத்திலோ கடைசிப்பத்திலோ அடங்கும்; அது புறத்திரட்டு என்னும் இடைக்கால உதிரிப் பாடல்களின் தொகுப்பில் நம் பெரும்பேற்றினால் கோத்துக் கிடைத்துள்ளது.

மாரி என்னாய்! பனியென மடியாய்!
பகைவெம்மையின் நசையா ஊக்கலை
(பதிற்றுப்பத்து: உதிரிப்பாட்டு: 5)
[மாரி = மழை; மடிதல் = மடங்குதல்; வெம்மை = சூடு, கடுமை; நசை = நசிதல்; ஊக்கல் = ஊக்கம்]

அதாவது 'மழை என்று சாக்குச் சொல்ல மாட்டாய்! பனியென்று மடங்கிச் சோம்பி இருக்கமாட்டாய்! பகைவர் காட்டும் வெம்மையினால் நசுங்காத ஊக்கம் உடையவன் நீ!' என்று அவனுடைய மடங்காத ஊக்கத்தைப் போற்றுகின்றார்.

இது இன்றைய தமிழர்கள் மிகவும் கவனிக்க வேண்டியது. இக்காலத்திலே பனி மழைக்கு மட்டுமன்றி எதற்கெடுத்தாலும் அது உண்டால் சளி, இது தின்றால் சூடு என்றும் அறிவியலுக்குப் பொருந்தாத அச்சங்களால் மடங்கியிருப்பது குடும்பமும் சமுதாயமும் முன்னேறத் தடையே என்பதை நினைவூட்டு கிறது. மேலைநாடுகளில் கடும்பனிக் காலத்திலேயே பனிக்கூழைப் (ஐசுக்கிரீம்) பருகுவது காண்கிறோம். ஆனால் நாமோ இளநீரை இந்தியக்குளிரில் குடிப்பதற்குக் கூடப் பனிபனி சளிசளி யென்று பதறுவது தகுமா என்பதை நினைக்கவேண்டும்! அந்த அளவுக்குப் பனிக்கு அஞ்சி நடந்தால் குளிர் நாடுகள் எல்லாம் பனிக்காலத்தில் முற்றிலும் செயலற்று நிற்கவேண்டும் வெயில் மீளும் வரை! ஆனால் அவர்களோ அப்படியின்றி ஊக்கத்தோடு செயலாற்றி உலகையே மிஞ்சுகிறார்கள்!
மேலே சேரனைப் போற்றிய ஊக்கத்தைக் குமரகுருபர சுவாமிகள் (17-ஆம் நூற்றாண்டு) தமது நீதிநெறிவிளக்கம் என்னும் நூலில்
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ஆயி னார்.
(நீதிநெறிவிளக்கம்:52)
என்று பாடுகிறார்.

அதாவது 'மேற்கொண்ட காரியமே கண்ணாக இருப்பவர் உடல்வருத்தம் பாரார்; பசிநோக்கார்; கண்மூடித் தூங்கார்; எவருடைய தீமையும் மேற்கொள்ளார்; பொழுதின் அருமையும் பாரார்; பிறர் அவமதிப்பையும் மதிக்கமாட்டார்' என்கிறார்.

அதில் மெய்வருத்தம் பாரார் என்பதும் செவ்வி அருமையும் பாரார் என்பதுவும் அந்தப் பதிற்றுப்பத்துப் பாட்டுச் சொல்லும் ஊக்கமுடைமைக்குப் பொருந்தும். செவ்வி என்பது நேரம் அதாவது தக்கநேரம்; செவ்வியருமை பார்த்தல் என்பது சோதிடம், சகுனம் போன்றவை கணித்தோ மற்றபடி தானே பலகுழப்பங்களால் நினைத்தோ கிடைத்தற்கரிய நல்ல செவ்விப்பொழுது வரைக்கும் கடமையை ஆற்றாமல் தள்ளிப் போடுவதாகும். எனவே அதுபோன்ற ஊக்கமின்மையை விலக்கிச் செயலாற்றுவது செவ்வியருமை பாராமை. சேரனும் மழை பொழியும் மாரிக்காலமென்றோ நடுங்கும் குளிர்காலமென்றோ மடங்காமல் அரசாள் வதை அந்தக்கவிதை பாடுகிறது. திருஞான சம்பந்தரும் அதனாலேயே கோளறுபதிகம் பாடினார் நம்மக்களுக்கு ஊக்கத்தின் உயர்வை உணர்த்த.

பெரியண்ணன் சந்திரசேகரன்
Share: 




© Copyright 2020 Tamilonline