|
தென்றல் பேசுகிறது... |
|
- |செப்டம்பர் 2016||(2 Comments) |
|
|
|
|
ஒபாமா நிர்வாகம் முக்கியமான தீர்மானமொன்றை அறிவித்துள்ளது. லாபநோக்கில் நடத்தப்படும் தனியார் சிறைச்சாலைகளுக்குக் கைதிகளை அனுப்புவது இனிவரும் நாட்களில் குறைக்கப்படும் என நீதித்துறை முடிவெடுத்துள்ளது. இந்தத் தீர்மானம் ஃபெடரல் கைதிகளைப் பொறுத்தமட்டில்தான் அமலுக்கு வரும். 2013ம் ஆண்டுதொடங்கி கைதிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதும், தனியார் சிறைகளில் பாதுகாப்பு, கல்வி மற்றும் பிறவசதிகள் அரசுச் சிறைகளைவிடக் குறைவாக இருப்பதும் இந்த முடிவுக்கான காரணங்கள். தனியார் சிறைச்சாலைகளால் அரசின் செலவும் குறிப்பிடத்தக்க அளவு குறையவில்லை என்பது மற்றொரு காரணம். போதைமருந்து வைத்திருத்தல் போன்றவற்றைக் கடுங்குற்றங்கமாகப் பார்க்க 1997ம் ஆண்டுவாக்கில் அரசு தீர்மானித்தபோது, கைதிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. அப்போதுதான் தனியார் சிறைகளில் அவர்களை வைக்க அரசு முடிவெடுத்தது. அரசுச் சிறைகளைவிடத் தனியார் சிறைகளில் கைதிகள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வதும், கைதிகள் அதிகாரிகளை மரணம் சம்பவிக்கும் வகையில் தாக்குவதும் அதிகரித்துள்ளன எனக் கண்டறியப்பட்டுள்ளது. 2012 மே மாதம் ஆடம்ஸ் கௌண்டி சிறைச்சாலையில் 250 கைதிகள் அங்கு கொடுக்கப்படும் தரந்தாழ்ந்த உணவு மற்றும் மருத்துவத்தை எதிர்த்துக் கலவரத்தில் ஈடுபட்டதில் 20 பேர் காயமுற்றனர், ஓர் அதிகாரி கொல்லப்பட்டார். 'திருத்தும் வசதி' (Correctional facility) என்றறியப்படும் இவற்றில் கைதிகள் திருந்தவேண்டுமென்றால் அதற்கான கல்வி மற்றும் சிந்தனை மேம்பாட்டுப் பயிற்சிகள் அவசியம். அவையும் சரிவரத் தரப்படுவதில்லை என்று அறிக்கை கூறுகிறது. மொத்தத்தில், சிறைச்சாலைகளை லாபநோக்கத்துடன் நடத்தும் தனியார் வசமிருந்து மெல்ல, மெல்ல அரசு எடுத்துக்கொள்வது சரியான நடவடிக்கைதான் என்பதில் சந்தேகமில்லை.
*****
சரக்கு கொண்டுசெல்லும் ட்ரக்குகள், பள்ளிப் பேருந்துகள், குப்பை லாரிகள், நெடுந்தொலைவு செல்லும் ட்ராக்டர்-ட்ரெய்லர்கள் போன்ற கனரக, நடுத்தர ரக வாகனங்களுக்கு ஒரு புதிய எரிபொருள் சிக்கனத் தரத்தை ஒபாமா அரசு நிர்ணயம் செய்துள்ளது வரவேற்கத்தக்கது. நெடுஞ்சாலை வாகனங்களில் இவற்றின் சதவீதம் 5தான் என்றாலும், எரிபொருள் நுகர்வு மற்றும் கரிம மாசுபடுத்தலில் (Carbon pollution) இவை 20 சதவீதத்தை ஆக்கிரமிக்கின்றன. இந்தப் புதிய தரப்படுத்தல் விதிகள் முழுமையாக அமல்படுத்தப்படும்போது ஒரு பில்லியன் டன் கரிம மாசு சூழலை அடைவதிலிருந்து தடுக்கப்படும் என்றும், எரிபொருள் செலவில் $170 பில்லியன் மிச்சப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மிக அதிகமாக இவ்வகை வாகனங்களைப் பயன்படுத்தும் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
*****
தமிழ் வேர்களைக் கொண்ட இந்திய வம்சாவளி வேட்பாளர்களான ப்ரமீளா ஜெயபால், ராஜா கிருஷ்ணமூர்த்தி, கமலா ஹாரிஸ் போன்றோர் தமது பிரைமரிகளை வென்று காங்கிரஸை அடையத் தயார்நிலையில் இருக்கிறார்கள். பொது அரங்கில் தமிழர் அடையாளத்தை வலுவாகப் பதிப்பது இனி உங்கள் கையில் இருக்கிறதென்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள். வையத்தலைமை கைக்கெட்டும் தூரத்தில்தான்!
***** |
|
அன்றாட வாழ்க்கையில் சமையல் அத்தியாவசியச் செயல்பாடு என்றபோதும் அது ஒரு கலையும்கூட. அதிலும் தமிழர் எவருக்கும் குறைந்தவரல்ல என்பதை 'Chopped' போட்டியில் முதல்பரிசை வென்றுள்ள இளம் செஃப் ஆர்த்தி சம்பத் நிரூபித்துள்ளார். ஆணாதிக்கமிக்க சமையல்கலைத் துறையில் தியாகங்களுக்கும் சோகங்களுக்கும் அஞ்சாமல் திடமான மனவுறுதி மற்றும் தளராத ஆர்வத்தோடு உழைத்து, எட்டுதற்கரிய இடத்தை அவர் பிடித்துள்ளார். அவரது நேர்காணல் உங்கள் நெஞ்சை நெகிழ்த்தும். கிராமப்புற ஏழை எளியோருக்கு இலவசமாகக் கண்ணொளி வழங்குவதில் உலக அளவில் முதன்மை வகிக்கும் சென்னை சங்கர நேத்ராலயாவின் டாக்டர் S.S. பத்ரிநாத் அவர்களின் குறுநேர்காணலும் உங்களைச் சேவையில் ஈடுபடத் தூண்டுவதாக இருக்கும். தென்றல் தனக்கேயுரிய நிகரில்லாத அம்சங்களோடு மீண்டும் உங்கள் கரங்களில் தவழ்கிறது....
தென்றல் வாசகர்களுக்கு பிள்ளையார் சதுர்த்தி, பக்ரீத் மற்றும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்.
தென்றல் குழு
செப்டம்பர் 2016 |
|
|
|
|
|
|
|