Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
ஆர்த்தி சம்பத்
டாக்டர். S.S. பத்ரிநாத்
- வெங்கட்ராமன் சி.கே.|செப்டம்பர் 2016|
Share:
இந்திய அரசின் 'பத்மஸ்ரீ', 'பத்மபூஷண்' விருதுகள், டாக்டர். பி.சி. ராய் விருது, 'சேவாரத்னா' எனப் பல கௌரவங்களுக்குச் சொந்தக்காரர் டாக்டர் S.S. பத்ரிநாத். விழித்திரை அறுவைசிகிச்சை முன்னோடியான Dr. Charles Schepens இவரது குரு. அவருக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி இந்தியாவில் கண்மருத்துவ சேவை செய்யவெனச் சென்னை திரும்பினார். 1974ல் காஞ்சி காமகோடி மகாபெரியவருக்குக் கண்சிகிச்சை செய்தார். காஞ்சி காமகோடி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் விருப்பத்துக்கிணங்க சேவை நோக்கத்துடன் ஸ்ரீ சங்கர நேத்ராலயாவை 1978ம் ஆண்டில் செப்டம்பர் 6 விநாயக சதுர்த்தியன்று தொடங்கினார். இன்றைக்கு 1500 பணியாளர்களுடன் உலகின் மிகச்சிறந்த கண்மருத்துவ நிலையங்களில் ஒன்றாகக் கொடிகட்டிப் பறக்கிறது. வாருங்கள் டாக்டரைச் சந்திக்கலாம்...

*****


தென்றல்: சங்கர நேத்ராலயாவின் குறிப்பிடத்தக்க சாதனைகள் என்ன?
பத்ரிநாத்: முதலாவது, உலகத்தரத்தில் கண் மருத்துவ சேவையை அனைவருக்கும் வழங்குவது. அதற்கான அங்கீகாரம்தான் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற ஆசியாவின் முதல் கண் மருத்துவமனை என்ற சிறப்பு, மற்றும் பல்வேறு அமைப்புகள் வழங்கிய அங்கீகாரங்கள். இரண்டாவது, கண் மருத்துவத்துறையில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (Research and Development). இந்தியாவில் கண்மருத்துவ ஆராய்ச்சியைக் கருத்தில்கொண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரசுரிக்கப்பட்ட ஆராய்ச்சிக்கட்டுரைகளில் மூன்றில் ஒருபங்கு சங்கர நேத்ராலயாவின் பங்களிப்பே ஆகும். பல்வேறு நாடுகளிலும் சங்கர நேத்ராலயாவில் பயிற்சிபெற்றோர் தம் சேவையைச் சிறப்பாகச் செய்துவருகின்றனர். மூன்றாவது, 21ம் நூற்றாண்டின் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஒவ்வொரு கடைக்கோடி இந்தியனுக்கும் கிடைக்க வேண்டும் என்பது. அந்த மனிதநேயமிக்க உள்ளங்களின் ஆதரவுடன் சிறப்பாக நிறைவேறி வருகிறது. இன்று புறநோயாளிகளில் 50% பேருக்கும், உள்நோயாளிகளில் சுமார் 40% பேருக்கும் அனைத்து அறுவை சிகிச்சைகளையும் இலவசமாகச் சங்கர நேத்ராலயா வழங்கி வருகிறது.

தென்றல்: இங்குள்ள இந்திய வம்சாவளியினருக்கு இந்தியாவிலிருந்து என்ன கொண்டு வந்திருக்கின்றீர்கள்?
பத்ரிநாத்: தமது ஒப்பற்ற இசையை பாரதத்தின் வளர்ச்சிக்கென அர்ப்பணித்த மாபெரும் மேதை, இசையரசி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி. நமது தேசப்பிதா ஸ்தாபித்த கஸ்தூரிபாய் காந்தி அறக்கட்டளையின் சமூகப்பணிகளுக்கென, அந்த காலத்திலேயே தமது இசை நிகழ்ச்சிகளின் மூலம் 5 கோடி ரூபாய்க்குமேல் சேகரித்து வழங்கியவர் அவர். அவரது நூற்றாண்டில் அவரது சேவையைப் புதிய தலைமுறையினரும் தொடரவேண்டும் என்ற வேண்டுகோளோடு வந்திருக்கிறேன்.

மிக இளவயதிலேயே தமது திறமையினால், இசையுலகைத் தன்பக்கம் திருப்பிப் பல பெருமைகளைப் பெற்றுள்ள ஏ.ஆர். ரஹ்மான், சுதா ரகுநாதன் ஆகியோரையும் இங்குள்ள சங்கர நேத்ராலயா ஆப்தால்மிக் மிஷன் டிரஸ்ட் நண்பர்களின் துணையோடு அழைத்து வந்திருக்கிறேன்.



தென்றல்: உங்களுடைய இந்த அமெரிக்க விஜயத்தின் நோக்கம் என்ன?
பத்ரிநாத்: பார்வையிழப்பு என்னும் பெரும் சுமையை உலக அளவில் மிக அதிகமாகச் சுமந்திருக்கிறது பாரதம். வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கும் எளியமக்களில் குறைந்தபட்சம் 3000 பேருக்காவது, முற்றிலும் இலவசமாக மீண்டும் பார்வை வழங்கும் கண்புரை (cataract) ஆபரேஷன் செய்வதற்கான நிதிவசதியை மேம்படுத்திக்கொள்வதே இந்த அமெரிக்க விஜயத்தின் நோக்கம். எம்.எஸ். அம்மாவின் பிறந்தநாள் நூற்றாண்டில் அவரது நினைவுக்கு இந்தச் சேவையை அர்ப்பணிக்க விரும்புகிறோம்.

தென்றல்: உங்கள் அண்மைக்கால முயற்சிகள் பற்றிச் சொல்லமுடியுமா?
பத்ரிநாத்: சென்னை, இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் சென்னை சங்கர நேத்ராலயா இணைந்து உருவாக்கிய ஒரு மாபெரும் சேவைத்திட்டம், ஆசியாவிலேயே முதல்முறையாக ஆரம்பிக்கப்பட்ட திட்டம், Mobile Eye Surgical Unit (MESU). இதில் இரண்டு பேருந்துகள். ஒன்று, அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் கொண்ட ஒரு ஆபரேஷன் தியேட்டராக இருக்கும். மற்றொன்று நோயாளியை ஆபரேஷனுக்கு தயார்படுத்தும் வசதி, டாக்டர் மற்றும் ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர்கள் அறை கொண்டது. இரண்டு பேருந்துகளும் இணைக்கப்பட்டிருக்கும். இவை சுயச்சார்பு கொண்டவை. மின்சார ஜெனரேட்டர், தூய தண்ணீர், காற்று, நுண்கிருமிகள் புகும் வாய்ப்பற்ற சுற்றுச்சூழல் எல்லாம் உண்டு. இவற்றின்மூலம் சாலை வசதியற்ற, மருத்துவ வசதியற்ற மலைவாசி, பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உலகத்தரம் வாய்ந்த கண்மருத்துவ அறுவை சிகிச்சையை வழங்குகிறோம். அதிலும் phacoemulsification எனப்படும் மிகச்சிறந்த மிகநவீன, செலவுமிக்க கண்புரை ஆபரேஷன், ஏழை நோயாளிகளுக்கு இலவசமாகவே தொலைதூர வசிப்பிடங்களில் அளிக்கப்படுகிறது.

MESU-வின் மூலம் தமிழக எல்லைப்பகுதி கிராமங்களில் 29 கண் அறுவைசிகிச்சை முகாம்களில் 3326 ஆபரேஷன்களை வெற்றிகரமாகச் செய்துள்ளோம்.

2015 ஆண்டில் எமது இந்தச் சேவையைத் தேசிய அளவில் செயல்படுத்த அனுமதி கிட்டியது. தென்னகத்திற்கு வெளியே முதன்முறையாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூரில் ஜூலை 31, 2016 அன்று அந்த மாநில முதலமைச்சர் ஸ்ரீரகுபர்தாஸ் டாடா மெமோரியல் மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிவைத்தார்.
தென்றல்: சங்கர நேத்ராலயாவில் எங்கள் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் தன்னார்வ சேவை வாய்ப்பு அல்லது முறைசார்ந்த அல்லது முறைசாரா பயிற்சி வாய்ப்புகள் இருக்கின்றனவா? யாருடன் தொடர்புகொள்ள வேண்டும்?
பத்ரிநாத்: Sankara Nethralaya Women Auxiliary அமைப்பில் இருபாலாரும் மிகச்சிறந்த சேவையை வழங்கலாம். குழந்தைகளையும் இளைஞர்களையும் வரவேற்கிறேன்.

தொடர்புக்கு:
திருமதி. ஜி.ஜி. மாலதி,
துணைப் பொதுமேலாளர் (நிகழ்ச்சிகள் நிர்வாகம்)
தொலைபேசி: 91 44 42271848;
மின்னஞ்சல்: revathi@snmail.org

இன்டெர்ன் வாய்ப்புகளுக்கு:
திருமதி சுதா மோகன்,
மேல்நிலை மேலாளர் (மனிதவள மேம்பாடு)
தொலைபேசி: 91 44 4227 1606.
மின்னஞ்சல்: sudham@snmail.org

அமெரிக்க அமைப்பில் இணைந்து சேவை செய்ய:
S.V. Acharya,
President, Sankara Nethralaya OM Trust Inc.,
9710 Traville Gateway Drive, No.392, Rockville, MD 20850,
Phone Number: (855) 4NETHRA - Toll Free;
E-mail: acharya@sangkaranethralayausa.org.
சுதா மோஹன் - sudham@snmail.org.
கிருஷ் வாசன்- drksv@snmail.org



தென்றல்: எப்படிப்பட்ட ஆதரவை இங்கேயுள்ள இந்திய சமுதாயத்தினரிடம் எதிர்பார்க்கின்றீர்கள்?
பத்ரிநாத்: யாகத்தில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியாத ஒருவர், அதற்கென ஒரே ஒரு சமித்தினை தானமாக அளித்தால்கூட அந்த யாகத்தைச் செய்த பலனை அடைகிறார் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதுபோல உங்களுடைய பங்களிப்பு எப்படி இருந்தாலும் நீங்கள் பயனடையலாம்.

அமரர் நானி பால்கிவாலா சுட்டிக் காட்டியதைப் போல, எங்களுக்கு வழங்கப்படும் அனைத்துமே சரியாக நிர்வகிக்கப்பட்டு, சரியாகப் பயன்படுத்தப்படுகின்றன.

எங்களுடைய தேவைகளை 'உடனடித் தேவை', 'நீண்டகாலத் திட்டங்களுக்கான தேவை' என்று பிரித்துக் கூறலாம். நேத்ராலயாவின் சேவை கொல்கத்தாவிலும், சென்னையிலும் விரிவாக்கப்பட்டு வருகின்றன. கட்டமைப்பு (infrastructure) தேவைகளுக்கு உங்கள் ஆலோசனை மற்றும் உதவி தேவைப்படுகிறது.

முன்னர் கூறியபடி எம்.எஸ். நூற்றாண்டு விழா ஆண்டில் 3000 ஏழைகளுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை வழங்கவுள்ளோம். ஓர் அறுவை சிகிச்சைக்கு $65 வீதம் தேவைப்படுகின்றது. இதற்கென மனமுவந்து நன்கொடை வழங்கிட வேண்டிக்கொள்கிறோம்.

தென்றல்: எங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்பும் செய்தி என்ன?
பத்ரிநாத்: இங்கே உள்ள நண்பர்கள் இந்தியாவிற்கு வரும் போது சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயாவுக்கு. எனது செயலாளர் திரு. செந்தில்நாதனை msn@snmail.org என்ற மின்னஞ்சல் முகவரியில் அல்லது 91 44 28254177 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, முன்கூட்டியே தெரிவித்துவிட்டு வாருங்கள். நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வரவேற்கக் காத்திருக்கிறோம்.

உரையாடல்: சி.கே. வெங்கட்ராமன்

*****


நன்கொடை வழங்க
சங்கர நேத்ராலயா ஆப்தால்மிக் மிஷன் டிரஸ்ட்டுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு 501 (c) (3) IRS பிரிவின்கீழ் வரிவிலக்கு உண்டு.

நன்கொடைகளை "SN OM Trust Inc" என்ற பெயரில் காசோலையாகவும், www.sankaranethralayausa.org என்ற வலைதளத்தில் ஆன்லைன் மூலமாகவும் வழங்கலாம்.
More

ஆர்த்தி சம்பத்
Share: 




© Copyright 2020 Tamilonline