Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
TNF இன்டர்ன்ஷிப்: தலைமுறைப் பாலம்
- பிரேமா நாராயணன்|செப்டம்பர் 2016||(1 Comment)
Share:
கோடை விடுமுறையில் பொதுவாக பள்ளி மாணவர்கள் சுற்றுப்பயணம் செல்வார்கள்; நீச்சல், நடனம், கராத்தே, ஓவியம் கற்பார்கள். ஆனால், அண்மையில் அமெரிக்காவிலிருந்து தமிழகத்துக்கு வந்த மாணவ, மாணவியர் சிலர் தங்கள் விடுமுறையைக் கழித்த விதம் வித்தியாசமானது; மற்ற மாணவர்களும் பின்பற்றத் தகுந்தது.

அமெரிக்காவின் 14 மாநிலங்களிலிருந்து 30 தமிழ் இளையோர் தமது முன்னோர் மண்ணான தமிழகத்தில் ஒன்று முதல் இரு வாரம்வரை இன்டர்ன்ஷிப் செய்து, விடுமுறையைப் பயனுள்ள வகையில் கழித்தனர். இதைச் சேவை மற்றும் கல்வி என்ற மையக்கருத்தில் தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) ஏற்பாடு செய்ததைப் பாராட்டி மகிழ்கிறார்கள் ஆஸ்டினிலிருந்து சென்றிருந்த சீதா நடேசனின் பெற்றோர்கள் சின்ன நடேசனும், சிவகாமியும்.

"அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும், இவர்களின் வேர் தமிழகம்தான். நம் கலாசாரம், பண்பாடு, வாழ்முறை, கல்விமுறை போன்றவற்றை அறிவதால், அறிவும் மனமும் விசாலமாகும். மொழியும் வளப்படும்"" என்கிறார்கள் இத்திட்டத்துக்கு வித்திட்ட சோமலெ சோமசுந்தரமும் ஒருங்கிணைப்பாளர் உஷா சந்திராவும். சென்னைக்கு வந்ததும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் TNF அலுவலகத்தில் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. TNF அறங்காவலர் ராஜரெத்தினமும் செயல் இயக்குநர்கள் வசுமதி பென்னி மற்றும் மன்மதாதேவியும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் எப்படிப் பயன்தரும் என்பதைக் கூறி உற்சாகப்படுத்தினர். வந்த எல்லோருக்குமே முதல் அனுபவம் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு அவர்கள் முகங்களில் தெரிந்தது. தமது சேவையை முடித்து வந்தபோது அது பரவசமாக மாறியிருந்தது.



ஃபிலடெல்பியாவிலிருந்து வந்திருந்த அனன்யா ராமநாதன், பெசன்ட் அருண்டேல் பள்ளிக்கும், பெசன்ட் தியாசஃபிகல் பள்ளிக்கும் சென்று வந்தபின், "நான் யு.எஸ்.ஸில் யோகா கோர்ஸ் போயிருக்கேன். அதனால இந்த ஸ்கூல் பிள்ளைகளுக்கு யோகாசனப் பயிற்சியால கிடைக்கும் நன்மைகள் பற்றியும் சொன்னேன். அதில் முக்கியமான சில ஆசனங்களைச் செய்து காண்பிச்சேன். யோகா, மெடிடேஷன் ரெண்டும் நம் வாழ்க்கைக்கு எவ்வளவு உபயோகமா இருக்கும்னு புரிஞ்சுக்கிட்டாங்க. இங்கிலீஷில் வேர்டு பில்டிங் விளையாடி, அவங்களோட வகாபுலரியை இம்ப்ரூவ் பண்ணிக்க ஹெல்ப் பண்ணினேன். அடுத்த வருஷம் நிறைய நிதி கலெக்ட் பண்ணிட்டு வந்து, டேபிள், சேர் இல்லாத பள்ளிகளுக்கு வாங்கித் தர முடிவு பண்ணியிருக்கேன்," என்கிறார் உற்சாகத்தோடு. அவருடைய தாயார் அருணா ராம், "அனன்யாவுக்கு டிரெஸ் வாங்குறதுக்காக பாட்டி கொடுத்த பணத்தில் ஜெல் பேனாக்களும், பென்சில் ஷார்ப்னர்களும் வாங்கி மாணவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தா. முக்கியமான விஷயம், என் பொண்ணு தமிழில் சரளமாகப் பேச ஆரம்பிச்சதுதான். அதனால, மாணவர்கள் சகஜமாகப் பேசிப் பழகினாங்க" என்றார்.

சென்னையில் உள்ள பள்ளிகளுக்குச் சென்ற ஆகாஷ் குருராஜா (அயோவா), ஜனனி சூரியநாராயணன் (நியூ ஜெர்சி), ஷில்பா சத்யநாதன் (இல்லினாய்ஸ்), ராகேஷ் ரவி (பிட்ஸ்பர்க்), ஆர்த்தி தியாகராஜன் (மேரிலாண்ட்), அகிலன் மற்றும் அஞ்சன் நாராயணசாமி (ஜார்ஜியா) போன்ற எல்லோருக்குமே நிறையப் புது நண்பர்கள் கிடைத்த சந்தோஷம். "பொருளாதாரம் மற்றும் கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் பலரைச் சந்தித்தோம். இது எங்கள் கண்ணைத் திறந்தது. அவங்க முன்னால கூச்சம் இல்லாம தமிழில் பேசக் கத்துக்கிட்டோம். யு.எஸ். கல்வி முறைக்கும் இந்தியக்கல்வி முறைக்கும் உள்ள வித்தியாசம் புரிஞ்சுது. யு.எஸ்.ஸ்ஸில் மத்த நண்பர்களுக்கும் TNF இன்டர்ன்ஷிப்பை ரெகமண்ட் பண்ணப் போறோம்" என்கிறார்கள்.

வேதாரண்யம் கஸ்தூரிபா காந்தி கன்யாகுருகுலம் பள்ளியில் ஒருவாரம் தங்கிய அரவிந்த், ஆஷ்னா, சஹானா, கீர்த்தனா (அனைவரும் நியூ ஜெர்சி) ஊர்வி (அட்லாண்டா) ஆகியோருக்கு, தமிழக கிராமவாழ்க்கையை நேரில் அனுபவித்த இன்பம். கிராமத்தின் ஏழை விவசாயக் குடும்பத்து மாணவியருடன் உரையாடியதுடன், அவர்களின் எண்ணங்கள், வாழ்க்கைமுறை, கனவுகளையும் தெரிந்துகொண்டனர். தாய்நாட்டின் வேறொரு முகத்தை தம் பிள்ளைகள் அறிந்துகொண்டதில், அவர்களுடன் சென்று தங்கிச் சேவைசெய்த தாய்மார்களுக்கும் பெருமகிழ்ச்சி. "தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளில் மட்டுமே நன்கு படிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆரம்பத்திலிருந்தே ஒழுங்காகப் படிக்க அழுத்தம் தரவேண்டும்" என்கிறார்கள் இந்த மாணவர்கள். நாமக்கல், திருவாரூர், காரைக்குடி போன்ற நகரங்களுக்கு அருகே உள்ள கிராமப் பள்ளிகளில் இன்டர்ன்ஷிப் செய்தனர் பிரகதீஷ், சித்தார்த் போன்றோர். "கிராமப்புற மாணவர்களுடன் எங்களை இணைத்த பெரிய பாலம் இந்த வாய்ப்பு" என்று நன்றியுடன் குறிப்பிட்டார் அட்லாண்டாவிலிருந்து வந்திருந்த பிரணவ் ஆதிமுத்து "காரப்பிடாகை கிராமப் பள்ளியில், TNF-ABC திட்டம் நடைமுறையில் இருக்கு. 8ம் வகுப்பு படிக்கும் ஒரு பையன், 'ஏபிசி கிளாஸுக்கு வர்றதுக்கு முன்னால என் பேரைக்கூட எழுதத் தெரியாது. ஆனா இப்போ நல்லா படிச்சு, நல்ல மார்க் எடுக்கிறேன்"னு சொல்லிட்டு அழுதான். இது மிகப்பெரிய சேவை. கிராமப் பள்ளிகளில் தண்ணீர் வசதி, கம்ப்யூட்டர் லேப், நூலக வசதி போன்றவை குறைவாக இருக்கு. முடிந்தால் அடுத்தமுறை இவற்றைச் சரிசெய்ய உதவ வேண்டும்" என்கிறார் இண்டியனாபோலிஸ் மாணவர் சித்தார்த் மோஹன்.
மாசசூசெட்ஸில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ப்ரஹதீஷ் சிவகுமார் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தில் காளப்பநாயக்கன்பட்டி என்ற குக்கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழு விளையாட்டு மூலம் பாடம் சொல்லிக் கொடுத்ததாகவும், கிராமச் சூழ்நிலை தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் கூறினார். மருத்துவ மரபியல் மையத்தில் (Center for Medical Genetics) இன்டர்ன்ஷிப் மேற்கொண்ட அஷ்வின் ஸ்ரீதர் (வடகரோலினா), நடேஷ் வைத்தியநாதன் (ஓக்லஹோமா) காவ்யா குமரன் (மேரிலாண்ட்), கயல் குமார் (புளோரிடா), திவ்யா ஷங்கர் (நியூ ஜெர்சி) அனன்யா கோவிந்தன் (டெக்சஸ்) ஆகியோருக்கு, அந்தப் பரிசோதனைக் கூடத்தின் நடவடிக்கைகளைக் கற்றுக்கொண்டதும் வித்தியாசமான அனுபவம். "அங்கே ஸ்டாஃப், குடும்பம்போல அன்பு காட்டினாங்க. சப்ஜெக்ட் பத்தி நிறையத் தெரிஞ்சுக்கிட்டோம்" என்கிறார்கள் காவ்யா குமரன் மற்றும் கயல் குமார்.

'அமெரிக்காவில் எல்லா வசதிகளுடனும் வாழும் நாம், தமிழ் நாட்டிற்கு ஏதேனும் செய்யவேண்டும்" என்ற ஆழமான எண்ணம் அவர்களுக்குள் முகிழ்த்துவிட்டதைப் பார்க்கமுடிகிறது. அடுத்த வருடம் மாணவர்களின் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும். இதில் அற்புதமான விஷயம், அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்து, ஆங்கிலத்திலேயே சிந்திக்கும் இந்தக் குழந்தைகள், தாய்மொழியில் கடும் முயற்சி செய்து, அருமையாகத் தமிழில் பேசி, பெற்றோர் உள்பட அனைவரையும் மூக்கில் விரல்வைக்கச் செய்ததுதான்.

மேலும் விபரங்களுக்கும், உங்கள் குழந்தைகள் அடுத்த வருடம் TNF தமிழகத்தின் பல பகுதிகளில் சேவை செய்வதற்கும்:
வலைமனை: tnfusa.org/internships
Facebook: www.facebook.com/TamilNaduFoundationUsa
email:
tnfinternship@gmail.com

பிரேமா நாராயணன்
Share: 




© Copyright 2020 Tamilonline