Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
தென்றல் பேசுகிறது
தென்றல் பேசுகிறது...
- |அக்டோபர் 2016|
Share:
சென்ற வார இறுதியில் Presidential Debate எனப்படும் அதிபர்பதவி வேட்பாளர்களின் விவாதத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கேட்பதற்கு இலகுவாகத் தோன்றுகிற தீர்வுகள் உண்மையிலேயே நீண்டநாள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் வெற்றிகாணுமா என்பது சந்தேகத்துக்குரியது. அதிலும் ஒவ்வொரு நொடியிலும் தனது தர்க்கத்தை மாற்றி மாற்றிப் பேசுகிற ஒருவரின் சொற்களுக்கு ஏது விலை? ஆமாம், நாம் டோனல்டு ட்ரம்ப்பின் வாதங்களைத்தான் குறிப்பிடுகிறோம். பலசமயம் தொடக்கத்தில் கூறிய வாதத்துக்கு எதிராகச் சில நிமிடங்களுக்குப் பின் தாமே பேசுவதையும் காணமுடிந்தது! முன்னுக்குப்பின் முரணாகப் பேசுபவர்கள் ஆபத்தானவர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதிலும் நாட்டின் தலைமைப்பதவிக்கான வேட்பாளர் என்னும்போது மிகவும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

*****


நட்புறவு, சமாதான சகவாழ்வு என்று சொல்லிக்கொண்டு பாகிஸ்தான் என்ன செய்தாலும் பொறுத்துக்கொண்டிருந்தோம். வரலாற்றுப் பிழைகளின் காரணமாகக் காஷ்மீரின் ஒரு பகுதி, கச்சத்தீவு போன்றவற்றை இந்தியா இழந்தது. அது போதாதென்று காஷ்மீர் முழுவதுமே எனக்குத்தான் என்று அடம்பிடித்துக்கொண்டு அதைத் தீவிரவாதிகளின் விளையாட்டு மைதானமாக்கி வைத்திருக்கிறது பாகிஸ்தான். ஊரியில் 18 இந்தியவீரர்களைத் தீவிரவாதிகள் பலிகொண்டது, 'அச்சைமுறித்த இறுதி மயிலிறகு' ஆகிப்போனது. இதற்குப் பதிலடியாக செப்டம்பர் 28ம் தேதி இரவு, இந்திய ராணுவம் ஒரு துல்லியமான தாக்குதலில் பாக் ஆக்கிரமித்த காஷ்மீரில் நமது கட்டுப்பாடு எல்லைக்கு (LOC) அருகில் 8 கூடாரங்களிலிருந்த 38 பயங்கரவாதிகளை நசுக்கியிருக்கிறது. பயங்கரவாதத்தின் நாற்றங்காலாக இருக்கும் பாகிஸ்தானை உலகசமுதாயம் ஒதுக்கத் தொடங்கிவிட்டதையும் பார்க்கமுடிகிறது. சீனாகூட "இந்தியாவுடன் போர் மூளும்பட்சத்தில் நாங்கள் பாகிஸ்தானை ஆதரிப்பதாகச் சொல்லவில்லை" என்று காலைப் பின்னுக்கிழுத்துவிட்டது. பாகிஸ்தானில் நடக்கவிருந்த SAARC மாநாட்டில் இந்தியா உட்பட 3 நாடுகள் பங்கேற்க மறுத்ததால் மாநாடே ரத்து செய்யப்பட்டுள்ளது. பாரதம் என்றைக்கும் போரைத்தேடிப் புறப்பட்டதில்லை. ஆனால், குட்டக்குட்டக் குனிந்துகொண்டிருக்க மாட்டோம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள பிரதமர் மோதி உலகுக்கு ஒரு முக்கியமான செய்தியை இவற்றின்மூலம் உணர்த்தியிருக்கிறார்.

*****
வாக்குரிமையைப் பயன்படுத்துவதில் அசட்டையாக இருந்தால், மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட அசட்டை செய்யும் நிர்வாகம்தான் கிடைக்கும் என்பது போன்ற பல முக்கியமான கருத்துக்களை மிகச் செறிவாகவும், உத்வேகத்துடனும் முன்வைக்கிறார் பெண்ணுரிமைப் போராளி கமலா லோபஸ். 'அமெரிக்க அரசியலமைப்பு பெண்களுக்குச் சமத்துவம் தரவில்லை' என்பதை ஆதாரபூர்வமாக அவர் நிறுவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தும். சமஉரிமைச் சட்டத்திருத்தத்தை (Equal Rights Amendment) அமெரிக்காவின் ஐக்கிய அரசு ஏன் கொண்டுவர வேண்டுமென்பதை விளக்கி இவர் 'Equal Means Equal' என்ற ஆவணப்படத்தைத் தயாரித்து, இயக்கியுள்ளார். இவரது நேர்காணல் ஒரு வெடிகுண்டு. அருகிலுள்ள பள்ளி நிர்வாகம் ஆகட்டும், கவுன்சில், மாநிலம், ஐக்கிய அரசாகட்டும், நம்மவர் கையில் அதிகாரம் கிடைத்தால்தான் நமது நலன்கள் காக்கப்படும் என்பதையும் இது நினைவூட்டுகிறது. கமலா ஹாரிஸ், ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால், ரோ கன்னா, ஏமி பெரா, ஆஷ் கால்ரா ஆகியோரை ஆதரிப்பதும், சுற்றியிருப்போரை ஆதரிக்கச் சொல்வதும் நமது கடமையாகும். பொதியமலைத் தென்றல்போலக் கவிதை நயத்தோடு சுவையான செய்திகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் கவிமாமணி இளையவன். இந்த இதழில் சிறுவர்தொடர் 'எர்த்தாம்டனின் சுடர்' நிறைவுபெற்றுள்ளது. இவ்வளவும் கொண்ட அற்புதமான தீபாவளி விருந்தைப்பற்றி உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

வாசகர்களுக்கு நவராத்திரி, தீபாவளி வாழ்த்துக்கள்.

தென்றல் குழு

அக்டோபர் 2016
Share: 




© Copyright 2020 Tamilonline