தெரியுமா?: அட்லாண்டாவில் TNFன் 45ஆவது மாநாட்டில் $100,000 நிதி திரண்டது தெரியுமா?:எழுத்தாளர் இமையத்துக்கு இயல் விருது
|
|
தெரியுமா?: சாகித்ய அகாதமி விருதுகள் |
|
- அரவிந்த்|ஜூலை 2019| |
|
|
|
|
2019ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
யுவபுரஸ்கார் 2019ம் ஆண்டிற்கான யுவ புரஸ்கார் விருது கவிஞர் சபரிநாதனுக்கு, "வால்" கவிதைத் தொகுப்பிற்காக வழங்கப்படுகிறது. தமிழ் நவீனக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவரான சபரிநாதன், கோவில்பட்டியைச் சேர்ந்தவர். 2011ம் ஆண்டில் இவரது முதல் தொகுப்பு 'களம் காலம் ஆட்டம்' வெளியாகி பரவலான கவனம் பெற்றது. இரண்டாவது கவிதைத் தொகுப்பு 'வால்' 2016ல் வெளியானது. இதற்கு 2017ல் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் 'குமரகுருபரன்' விருது கிடைத்தது. அதே தொகுப்பு தற்போது சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளது. டாக்டர் க. பஞ்சாங்கம், டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன், டாக்டர் ஆர். குறிஞ்சிவேந்தன் அடங்கிய நடுவர் குழு இந்நூலை விருதுக்குத் தேர்ந்தெடுத்துள்ளது. விருது செப்புப் பட்டயமும் 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் அடங்கியது. கவிதை, மொழிபெயர்ப்பு, திறனாய்வு எனப் பல திறக்குகளிலும் இயங்கிவரும் சபரிநாதன், சென்னையிலுள்ள அரசு வேலைவாய்ப்பகத்தில் செயல் அதிகாரியாகப் பணிபுரிகிறார். |
|
|
பால சாகித்ய புரஸ்கார் 2019ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார், குழந்தை இலக்கியத்திற்குச் செய்த வாழ்நாள் பணிகளுக்காகத் திருமதி தேவி நாச்சியப்பனுக்கு வழங்கப்படுகிறது. இவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் மகள். கீழச்சீவல்பட்டி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய தேவி நாச்சியப்பன், "பந்தும் பாப்பாவும்", "புத்தகத் திருவிழா", "பசுமைப்படை" உட்படப் பல நூல்களைக் குழந்தைகளுக்கென எழுதியிருக்கிறார். "நினைவில் வாழும் குழந்தைக் கவிஞர்" என்னும் இவரது நூல் குறிப்பிடத்தகுந்தது. ஆர். மீனாக்ஷி, கெ.மா. கோதாண்டம், குழ. கதிரேசன் அடங்கிய நடுவர் குழு தேவி நாச்சியப்பனை விருதுக்குத் தேர்ந்தெடுத்துள்ளது. விருது, செப்புப் பட்டயமும் 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் அடங்கியது. குழந்தைகள் தினமான நவம்பர் 14 அன்று இவ்விருது வழங்கப்பட இருக்கிறது. விருதாளர்களைத் தென்றல் வாழ்த்துகிறது!
அரவிந்த் |
|
|
More
தெரியுமா?: அட்லாண்டாவில் TNFன் 45ஆவது மாநாட்டில் $100,000 நிதி திரண்டது தெரியுமா?:எழுத்தாளர் இமையத்துக்கு இயல் விருது
|
|
|
|
|
|
|