Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | நூல் அறிமுகம் | குறுநாடகம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
ஆப்பிள் படுத்தும் பாடு (அத்தியாயம்-9)
- ராஜேஷ்|ஜூலை 2019|
Share:
மூன்று பேர் மட்டும் இருந்த சம்பாஷணை, அனுவும் அரவிந்தும் சேர்ந்தவுடன் களைகட்டியது. குழந்தைகள் உற்சாகத்துடன் ஆப்பிள் மெழுகு பற்றித் தகவல் சேகரிக்க ஆரம்பித்தார்கள். பக்கரூவும் அவ்வப்போது வாலை ஆட்டிக்கொண்டு கத்தியது. மூன்று சிறுவர்களும் ஆராய்ச்சியாளர்கள் போலச் செயல்பட்டனர்.

"இதோ, இங்கே பாரு, HealthyFamily.com என்ன சொல்லுதுன்னு" என்று அரவிந்த் காண்பித்தான். "வாவ்! இது எனக்குக்கூட புரியமாதிரி இருக்கே."

"அரவிந்த், நாம இதை ஒரு science project மாதிரி, ஆளுக்கு ஒரு வேலை எடுத்துப் பண்ணலாமா?" கேட்டது அனு.

அரவிந்த் முதலில் மறுத்தான். அவனுக்கு அவன் தங்கை அனுவுடன் சேர்ந்து வேலை செய்வது அவ்வளவு பிடிக்காது. ஏனென்றால், அனு உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு அரவிந்தை அதைப் பண்ணு, இதைப் பண்ணு என்று வேலை வாங்குவாள். அருணுக்கு கவனம் அவன் படிக்கும் கட்டுரையிலேயே இருந்தது. அவன், அனுவுக்கும் அரவிந்துக்கும் நடந்த உரையாடலைக் கவனிக்கவில்லை.

"அம்மா, அரவிந்தும் அருணும் என்னோட சேர்ந்து ப்ராஜெக்ட் பண்ணச்சொல்லுங்க" என்று அனு தன் அம்மா பாலாவிடம் கேட்டாள்.

"அரவிந்த், அருண், கொஞ்சம் அனு சொல்ற மாதிரி நீங்க எல்லாம் பண்ணலாமே?" என்று பாலா கூறினார்.

"வேண்டாம் அம்மா, அனு சரியான சண்டை பார்ட்டி" என்று அரவிந்த் பட்டென்று பதில் கொடுத்தான். "இவ பெரிய ராணியாட்டம் உட்கார்ந்துகிட்டே மத்தவங்க எல்லாரையும் ஏவுவா."

பாலாவுக்கு அரவிந்த் தன் தங்கையைப் பற்றி அப்படிச் சொன்னது பிடிக்கவில்லை. "அரவிந்த், சாரி சொல்லு அனுகிட்ட. என்ன இது, வந்த இடத்துல இப்படி அவளைப் பேசலாமா?" என்றார் பாலா.

அரவிந்த் முணுமுணுத்துக் கொண்டே வேலை செய்ய ஆரம்பித்தான். அருண் அவனைச் செல்லமாக கட்டிப்பிடித்து சமாதானம் செய்தான். மூவரும் மும்முரமாக ஆராய்ச்சியில் இறங்கினார்கள். "அருண், நீ பேப்பர், பென்சில் எடுத்துட்டு வரயா, ப்ளீஸ்," என்று அனு கேட்டாள். "நாம படிக்கிற தகவல்கள் மறந்து போயிடாம இருக்க அதைக் குறிச்சு வச்சிக்கிறது நல்லது."

"பாரு, ஆரம்பிச்சு ஒரு நிமிஷத்துல எப்படி விரட்றா பாரு, ராணியாட்டம்" என்று அரவிந்த் புகார் செய்தான். பாலா அவனைப் பேசாமல் வேலை செய்யுமாறு கூறினார். அருண் கடகடவென்று முக்கியமாகத் தோன்றும் செய்திகளை எழுதிக்கொண்டான். அரவிந்தும் அனுவும் மாறிமாறி அருணுக்கு இணையத்தில் தேடி, ஆப்பிள் மெழுகு பற்றிய எல்லா விவரங்களையும் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

பாலாவும் கீதாவும் மதிய உணவுத் தயாரிப்பு வேலையை ஆரம்பித்தார்கள். சிறுவர்கள் சத்தமே போடாமல் தங்களது விநோத வேலையில் முழுகிப்போனார்கள். பக்கரூ போர் அடித்து, ஒரு மூலையில் போய்ப் படுத்துக் கொண்டது. நேரம் போனதே தெரியவில்லை. அப்பாக்கள் இருவரும் மெல்லத் தூக்கத்தில் இருந்து எழுந்து கீழே வந்தார்கள். வீட்டில் எந்தச் சத்தமும் இல்லாததைப் பார்த்து, எல்லோரும் எங்கோ வெளியே போயிருப்பதாக முதலில் நினைத்தனர். ஆனால் எல்லாரையும் சமையலறைப் பக்கம் பார்த்த பின்னர் இருவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

"என்னப்பா, ஏதானும் சண்டை போட்டு டைம்-அவுட்ல இருக்கீங்களா? சத்தமே காணோம்?" என்று அஷோக் கேட்டார்.

"என்ன இது, அனுக் குட்டிகூட கம்முனு இருக்கா?" என்று ரமேஷ் கிண்டலடித்தார்.

யாரிடமிருந்தும் பதில் வரவில்லை. அம்மாக்கள் சமையல் வேலையில் முழுகி இருந்தார்கள்.
"என்னடா இது வம்பாப் போச்சு, யாரும் கண்டுக்க மாட்டேன்றாங்க" என்று அஷோக் அலுத்துக் கொண்டார். அப்போதும் யாரும் பேசவில்லை. பக்கரூ மட்டும் ஓடிவந்து ரமேஷின் மேல் பாய்ந்து ஏறி அவர் முகத்தை நக்கியது. "அப்பாடா, நீயாவது என்னை கவனிச்சயே" என்று ரமேஷ் பக்கரூவோடு விளையாடினார்.

"பாலா" அஷோக் சத்தமாக அழைக்க, பாலா தனது ஆள்காட்டி விரலை வாயில் வைத்து "உஷ்… அவங்க எல்லாம் சேர்ந்து ஒரு சயன்ஸ் ப்ராஜெக்ட் பண்ணிட்டு இருக்காங்க" என்று கிசுகிசுத்தார்.

"அப்படியா? எதைப்பத்தி?" அஷோக் கேட்டார். அவர் முகத்தில் பெருமை கலந்த ஆச்சரியம். அவர் அனுவையும் அரவிந்தையும் வீடியோ கேம் விளையாடமல் பார்த்து ரொம்பவும் ஆனந்தப்பட்டார்.

"கீதா, உண்மையாவா?" என்று ரமேஷ் கேட்டார். அதற்கு கீதா 'ஆமாம்' என்று தலையாட்டினார். ரமேஷ் ஆர்வம் தாங்காமல் அருண் என்ன எழுதுகிறான் என்று எட்டிப் பார்த்தார். அதைப் படித்தவுடன் அவருக்குப் பதட்டம் ஏற்பட்டது. "என்ன கீதா, இவன் இன்னும் நேத்திக்கு நடந்த விவகாரத்தை விடலையா? நீயும் இதுக்கு உடந்தையா?" என்று வெடித்தார்.

கீதா, ஏதும் ரகளை நடந்துவிடக் கூடாதென்று ரமேஷிடம் மெதுவாக விளக்கி, அவரைச் சமாதானப்படுத்தினார். கீதாவோடு, பாலாவும் சேரந்து கொண்டார். "ரமேஷ், இந்த ஒரு நாள்ல எங்க எல்லோருக்கும் அருண் மூலமா எவ்வளவு நல்ல விஷயங்கள் தெரியவந்திருக்கு தெரியுமா! அப்பப்பா, என்ன மூளை நம்ப அருணுக்கு. அதிலேயும், என்ன ஒரு சமூகசிந்தனை" என்று பாலா புகழ்ந்தார்.

என்ன சொல்வது என்று தெரியாமல் அங்கிருந்து நகர்ந்தார் ரமேஷ். அஷோக் அதற்குள் தனக்கும், ரமேஷுக்கும் கோப்பைகளில் காஃபி கொண்டு வந்தார். இருவரும் வீட்டின் பின்புறம் சென்றனர். பாலா அருணின் சாகசங்களைப் பற்றி நிறைய விளக்க, அரவிந்தும் அனுவும் வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டார்கள்.

சற்று நேரத்திற்குப் பின் அருண் "அம்மா, என்ன ப்ளான்? எப்படி ஆப்பிள் பத்தி நிரூபிக்கப் போகிறோம்?"

கீதா தொண்டையைச் செருமிக்கொண்டு, "அருண், அதான் படிச்சோமே அப்பா, செயற்கையான மெழுகு போடறது சட்டப்படி சரிதான்னு. அரசாங்கமே அனுமதிக்கும் போது நாம என்னப்பா பண்ண முடியும்?"

அருண் பதில் கூறவில்லை. பாலா மெதுவாக அனுவையும் அரவிந்தையும் பின்பக்கம் விளையாடப் போகச் சொன்னார். அவருக்கு அருண் என்ன அடுத்து செய்வான் என்று ஒரு யூகம் இருந்தது. "அரசாங்கம் அனுமதிச்சா அதை அப்படியே விட்டுடலாமா? அதனாலதான் ஹோர்ஷியானா மாதிரி நிறுவனங்கள் இப்படி நம்மளச் சுரண்டறாங்க. டேவிட் ராப்ளே மாதிரி ஆளுங்க அட்டூழியம் பண்ணறாங்க" அருண் பொரிந்து தள்ளினான்.

"அருண், ஹோர்ஷியானாவும் அரசாங்கம் அனுமதிச்சதைத்தான் பண்றாங்களா இருக்கும். நாம அதைத் தடுக்க முடியாது" என்றார் கீதா. "இப்படித்தான் போன தடவையும் சொன்னீங்க. ஆனா, ஹோர்ஷியானா அரசாங்கத்தையே ஏமாத்தினதைப் பாரத்தோமில்ல? என்ன அம்மா, நீங்களுமா ஹோர்ஷியானாகிட்ட பயப்படுறீங்க?"

"அருண், வேண்டாம்பா…" கீதா சொல்லும்போதே, ரமேஷ் தபதபவென்று வீட்டின் பின்புறத்தில் இருந்து வந்தார். "திரும்பவும் ரகளை பண்ணறானா? இவன…" என்று ரமேஷ் அருணை நெருங்க, கீதா ரமேஷைத் தடுக்கப் பார்க்க, அருண் படாலென்று தான் அமர்ந்திருந்த முக்காலியைத் தள்ளிவிட்டு, வீட்டின் பின்புறம் பார்த்து ஓடினான்.

(தொடரும்)

ராஜேஷ்
Share: 




© Copyright 2020 Tamilonline