Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | நூல் அறிமுகம் | குறுநாடகம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
டாக்டர் ஜெ. பாஸ்கரன்
- அரவிந்த்|ஜூலை 2019|
Share:
"அரசியல்வாதிகளின் சொத்துக் குவிப்பவர்களைப் பற்றிச் சொல்லும்போது 'He is buying left and right' என்பார்கள். பாஸ்கரனின் எழுத்துக் குவிப்புகளைச் சொல்ல வேண்டுமானால் இதே வாக்கியத்தைப் பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது. நண்பர் ஒன்றையும் விட்டுவைக்கவில்லை. அவ்வளவு வீச்சுகள்," இப்படிப் புகழ்ந்துரைக்கிறார், கல்கண்டு ஆசிரியர் லேனா தமிழ்வாணன். லேனா மட்டுமல்ல; அமரர் பாக்கியம் ராமசாமி, திரு. சுதாங்கன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், காந்தலட்சுமி சந்திரமௌலி, நவீன விருட்சம் அழகியசிங்கர், பாலசாண்டில்யன் என பலராலும் பாராட்டப் பெற்றிருக்கும் டாக்டர் பாஸ்கரன், மருத்துவத் துறையில் பணிசெய்பவர் என்றாலும் கதை, கட்டுரை, நூல் விமர்சனம், திறனாய்வு எனப் பல திறக்குகளிலும் தீவிரமாக இயங்கி வருபவர்.

Click Here Enlargeஜூலை 5, 1953 அன்று சிதம்பரத்தில், சாவித்திரி-ஜெயராமன் இணையருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை தட்டச்சு, சுருக்கெழுத்து பயின்றவர். ஜெமினி நிறுவனத்தில் தட்டச்சராகப் பணியாற்றினார். பாஸ்கரனுடன் பிறந்தோர் ஆறு பேர். சிதம்பரத்தில் தாத்தா வீட்டில் தங்கிப் பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார். தொடர்ந்து சென்னை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி. எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் பள்ளியிலேயே இரண்டாவது மாணவனாக அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றார். மேற்கல்விக்கு இந்திய அரசின் உதவித்தொகை கிடைத்தது. சென்னை லயோலா கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரியில் முறையே இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்று டாக்டர் பட்டம் பெற்றதுடன், தோல் மருத்துவத்திலும், நரம்பியலிலும் பட்டயம் பெற்றார். அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் இயக்குநரான டாக்டர் சாந்தாவிடம் உதவி மருத்துவராகப் பணியில் சேர்ந்து மூன்று வருடங்கள் பணியாற்றினார். பின்னர் மேற்கு மாம்பலம் பொதுச் சுகாதார மையத்தில் பணியாற்றினார்.

இவ்வளவுக்கும் நடுவே தொடர்ந்த வாசிப்பு இவரை எழுதத் தூண்டியது. பல இதழ்களில் மருத்துவக் கட்டுரைகளை எழுதியுள்ளார். கலைமகள், தினமணி கதிர், லேடீஸ் ஸ்பெஷல், விருட்சம், உரத்த சிந்தனை போன்ற இதழ்களில் சிறுகதை, கட்டுரை, விமர்சனங்களை எழுத ஆரம்பித்தார். வாசக வரவேற்பு அவரைத் தொடர்ந்து எழுத ஊக்குவித்தது. பின்னர் இணையத்தில் எழுத ஆரம்பித்தார். ஓய்வு நேரம் முழுவதையும் நல்ல நூல்களை வாசிப்பதிலும், அவைபற்றி எழுதுவதிலும், பேசுவதிலுமே செலவிட்டார். 'குவிகம்', 'நவீன விருட்சம்' இதழ்கள் நடத்திய இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.

Click Here Enlargeஇவரது முதல் மருத்துவ நூல் 'சரும நோய்கள் (சங்கடம் முதல் சந்தோஷம் வரை)' 2008ல் கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. தொடர்ந்து 'வலிப்பு நோய்கள்' 2010ல் வெளியாகி, தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு, சிறந்த ஆசிரியருக்கான விருது ஆகியவற்றை வென்றது. 2014ல் வெளியான 'தலைவலியும் பாதிப்புகளும்' நூலுக்கு 'உரத்தசிந்தனை' விருதுகிடைத்தது. முகநூலிலும் இணையத்திலும் எழுதிய கட்டுரை, விமர்சனங்களைத் தொகுத்து 'அப்பாவின் டைப்ரைட்டர்' என்ற பெயரில் ஒரு நூலாக வெளியிட்டார். பிரபலங்களுடனான சந்திப்புக்கள், அனுபவங்கள், புத்தக விமர்சனம், சினிமா விமர்சனம், கடிதங்கள், கட்டுரைகள், வாழ்வியல் அனுபவங்கள், எழுத்தாளர் சந்திப்புகள், நேர்காணல் எனப் பலவற்றின் தொகுப்பான இந்த நூல், பாஸ்கரனின் பல்துறை அறிவை, ஆர்வத்தை வெளிக்காட்டுவதாக அமைந்தது. இந்நூல் பற்றிக் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், "டாக்டர் பாஸ்கரன் தனக்கே உரிய பாணியில் தந்திருக்கும் அற்புதப் புதையல் இது" என்று பாராட்டுகிறார்.

நூலின் தலைப்பாக இடம் பெற்றிருக்கும் 'அப்பாவின் டைப்ரைட்டர்' ஸ்மித் கரோனா, ரெமிங்க்டன், ஹால்டா, போர்ட்டபிள் டைப்ரைட்டர், எலக்ட்ரானிக் டைப்ரைட்டர் என அவரது அப்பா வைத்திருந்த டைப்ரைட்டர் வகைகள் பற்றியும், அவர் அதில் தட்டச்சு செய்கையில் எழும் 'ரிதம்' பற்றியும் பேசுகிறது. அப்பா இவரது பிற சகோதரர்களை டைப்ரைட்டிங் கற்றுக் கொள்ளச் சொல்லிவிட்டு, இவருக்கு வேண்டாம் என்கிறார். "அன்று நானோ என் அப்பாவோ அறிந்திருக்க வாய்ப்பில்லை - இன்று கம்ப்யூட்டரில் ஒரு விரல்/இரண்டு விரல் தட்டச்சு செய்யும் நிலைமை எனக்கு வரும் என்று. அப்பாவின் டைப்ரைட்டர் அன்று எழுப்பிய ரிதமிக் தட்டச்சு சத்தம் எனக்குச் சோறு போட்டது. இன்று நான் செய்யும் ஒரு விரல் தட்டச்சு ஊருக்குள் என்னை நட்புடன் கொண்டு செல்கிறது" என்று கட்டுரையை முடிக்கிறார் பாஸ்கரன். இந்த நூலுக்கு, அமெரிக்காவின் உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகம், 'Best Appreciation Award' வழங்கிச் சிறப்பித்துள்ளது.

Click Here Enlargeமருத்துவக் கட்டுரைகளில், அச்சமூட்டும் வகையில் கூறாமல், நகைச்சுவை கலந்து, சொல்ல வந்த விஷயமும் நீர்த்துப் போகாமல் எழுதுவது டாக்டர் பாஸ்கரனின் தனிப் பாணி. தினமலர், தினமணி, தமிழ் இந்து உள்படப் பல முன்னணி இதழ்களில் மருத்துவக் கட்டுரைத் தொடர்கள் வெளியாகியுள்ளன. மக்கள் குரல் இதழில் வெளியான இவரது ஆட்டிசம் மற்றும் நரம்பியல் குறித்த கேள்வி-பதில் தொகுப்பு பலருக்கு மிகப் பெரிய திறப்பாக அமைந்தது. இசை, மனம், மூளை இவற்றுக்கிடையேயான ஒருங்கிணைவை 'நாதப் பிரம்மம்' இதழில் எழுதியிருக்கிறார். மருத்துவக் கட்டுரைகள், வாழ்வியல் கட்டுரைகள் என்று நூற்றுக்கணக்கில் எழுதியிருக்கும் பாஸ்கரன் சிறுகதை மற்றும் நூல் விமர்சனத்திலும் தேர்ந்தவர். 'காப்பு' என்ற இவரது சிறுகதை கி.வா.ஜ. நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. 'நப்பின்னையாகிய நான்' என்ற சிறுகதை லேடீஸ் ஸ்பெஷல் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது. சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 'தேடல்' என்ற தலைப்பில் நூலாக வெளியாகியுள்ளன. அத்தொகுப்பில் மொத்தம் 21 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.

பாஸ்கரனின் கதைகளில் வரும் மனிதர்கள் சாமான்யர்கள், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள். அவர்களது வாழ்க்கைச் சூழல்களை, அவலங்களை, எண்ண ஓட்டங்களை, நேர்மையை, தங்கள் குணத்தால், செயலால் அவர்களில் பலர் மானுடம் துலங்கும் மகத்தானவர்களாய் உயர்ந்து நிற்பதை இயல்பாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார் பாஸ்கரன். இச்சிறுகதைத் தொகுப்பிற்கு உரத்த சிந்தனையின் என்.ஆர்.கே. விருது கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு வெளியான 'அது ஒரு கனாக்காலம்' இவரது இளமைக்கால நினைவுகளின் கட்டுரைத் தொகுப்பாகும்.

Click Here Enlargeஅமுதசுரபி, நம் உரத்த சிந்தனை, லேடீஸ் ஸ்பெஷல், இலக்கிய பீடம், மக்கள் முழக்கம், ஆனந்த விகடன், அவள் விகடன், வலம், தோல் மலர் என பல இதழ்களில் தொடர்ந்து சிறுகதை, கட்டுரைகளை எழுதி வரும் பாஸ்கரன், தனது மருத்துவப் பணிகளுக்காகப் பல்வேறு விருதுகளையும், சான்றிதழ்களையும், பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார். லண்டன் க்வீன்ஸ் ஸ்கொயரில் உள்ள புகழ்பெற்ற நேஷனல் மருத்துவமனையில் (National Hospital for Nervous Diseases,Queen Square, London) நரம்பியலில் சிறப்புப் பயிற்சி பெற்றவர். II certificate of Honour in Bacteriology இவர் பெற்ற கௌரவங்களுள் முக்கியமானது. இந்திய மருத்துவக் கழகத்தின் கோடம்பாக்கம் கிளையின் 'வாழ்நாள் சாதனையாளர் விருது', பவித்ரம் தொண்டு நிறுவனத்தின் 'சேவா சக்ரா' விருது, அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 'மருத்துவ மாமணி' ஆகிய கௌரவங்களை இவர் பெற்றுள்ளார்.

Click Here Enlargeபல மருத்துவக் கருத்தரங்குகளில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றியிருக்கும் டாக்டர் பாஸ்கரன், பல கல்லூரிகளில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஆதரவற்றோர் நலனுக்காக 70 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் 'ஸ்த்ரீசேவா மந்திர்' நிறுவனத்தின் ஆலோசகராகவும், குழும உறுப்பினராகவும் செயல்படுகிறார். வாலண்டரி ஹெல்த் சென்டர் (VHS), ஹிந்து மிஷன் மருத்துவமனை போன்ற சேவை மனப்பான்மையுடன் நடத்தப்படும் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்து வருவதுடன் ஸ்ரீ சத்தியசாயி அமைப்பின் 'சாயி க்ருபா' இலவச சேவை மையங்கள் மூலம் மாதந்தோறும் இலவச சிகிச்சை/ஆலோசனை அளித்து வருகிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமும் தொடர்ந்து பங்களித்து வரும் டாக்டர் ஜெ. பாஸ்கரன், தற்போது மேற்கு மாம்பலம் பொது சுகாதார மையத்தின் மருத்துவக் கண்காணிப்பாளராகப் பணியாற்றுகிறார். மனைவி கலாவதியுடன் சென்னையில் வசிக்கிறார்.

இலக்கிய உலகின் நம்பிக்கை முகங்களுள் ஒன்று டாக்டர் ஜெ.பாஸ்கரன்.
அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline