Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | நூல் அறிமுகம் | குறுநாடகம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
'திருக்குறள்' முனுசாமி
- அரவிந்த் சுவாமிநாதன்|ஜூலை 2019|
Share:
இவரை நண்பர்கள் 'திருக்குறள்' முனுசாமி என்று அழைக்கிறார்கள். காரணம் இவர் 1330 குறட்பாக்களையும் பொருளோடு கூறி, முதற்பரிசு வென்றிருக்கிறார். அதிலும், அதனை இவர் செய்தபோது வேலூர் மத்திய சிறையில் வாழ்நாள் கைதியாக இருந்தார். இவருடைய 15 ஆண்டு சிறைவாசத்தைத் துக்கத்திலும் தூக்கத்திலும் கழிக்காமல், பட்டங்களும், பட்டயங்களுமாக இவர் பெற்றவை 18 தகுதிகள்! அவற்றில் B.A., B.C.A., நாகரிக ஆடை வடிவமைப்பு, செங்கல் தயாரிப்பு, மனித உரிமைகள், விழுமியக் கல்வி மற்றும் ஆன்மீகம் எனப் பலவகைக் கல்விகள் இதில் அடங்கும். திட்டமிட்டுச் செய்யாத குற்றம் என்றாலும், தண்டனையை முழுவதுமே அனுபவிப்பதே நியாயம் என்றெண்ணி இவர் கோர்ட்டுக்கே போகவில்லை. காதலித்துக் கைப்பிடித்த மனைவி மீனா, மணமாகி ஒரே ஆண்டில் இவர் சிறை சென்றபோதும், மிகுந்த தொந்தரவுகளுக்கு இடையே, இவரே வற்புறுத்தியும் வேறு மணம் செய்துகொள்ளாமல், 15 ஆண்டுகள் காத்திருந்தார்.

படித்துப் பாருங்கள், இப்படி ஒரு ஜோடியை நீங்கள் தென்றலைத் தவிர வேறெங்கும் சந்தித்திருக்கச் சாத்தியமில்லை.....

தென்றல்: நீங்கள் வந்த வழியைத் திரும்பிப் பார்க்கலாமா?
முனுசாமி: அம்மாவுக்கு உடல்நலமில்லாத காரணத்தால் கைக்குழந்தையாக இருந்த காலத்திலிருந்தே நான் பாட்டி வீட்டில்தான் வளர்ந்தேன். கிரிக்கெட் விளையாடுவேன். வீட்டருகில் வசித்த ஒருவரிடம் சிலம்பம் கற்றேன். பத்தாவது வகுப்பில் ஃபெயில் ஆனேன். அம்பத்தூர் எஸ்டேட்டில் ஒரு கம்பெனியில் டர்னர் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போதுதான் இவரை (மனைவி மீனாவை) சந்தித்தேன். இவர் ஒரு ஏற்றுமதி கம்பெனியில் வேலை பார்த்தார். நட்பு காதலானது. ஐந்தாண்டு காதலித்தோம். வீட்டில் எதிர்ப்பு. அதையும் மீறித்தான் திருமணம் செய்து கொண்டோம். வாழ்க்கை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

எனக்கு கிண்டியில் ஒரு வேலை கிடைத்தது. அம்பத்தூரில் இருந்து அங்கு வேலைக்குப் போவேன். அப்போதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் பெண்மணியுடன் ஒரு சண்டை வந்தது. அவர் வடபழனியில் இருந்தார். இவர் டைப்பிஸ்ட் மற்றும் அலுவலக நிர்வாகம் பார்த்தார். நல்லவர்தான். எனக்கு நிறைய உதவியிருக்கிறார். அன்றைக்குத் தன்னையறியாத ஆத்திரத்தில் நான் அவரைத் தள்ளினேன். அவர் கீழே விழுந்தார். விழுந்தவர் இறந்தேவிட்டார். நான் சிறை சென்றேன். அப்போது எனக்கு வயது 27. திருமணமாகி ஒரு வருடம்கூட முடியவில்லை. என் மனைவி நிறைமாத கர்ப்பிணி.



கே: சிறை வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்கள்?
ப: சிறைக்குள் சென்ற எனக்கு எதுவுமே புரியவில்லை. ஏன், எப்படி நடந்தது, என் வாழ்க்கை எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது, இனி என்ன ஆகும் என்றெல்லாம் யோசிப்பேன். தற்கொலை செய்து கொள்ளலாம் என்று அடிக்கடி தோன்றும். 'நீ வேறு யாரையாவது திருமணம் செய்துகொள்' என்று என் மனைவிக்குக் கடிதம் எழுதுவேன். பிரமை பிடித்த மாதிரிதான் இருந்தேன். என்னை நான் உணர்ந்து மீட்டுக் கொள்ளவே எனக்கு மூன்று வருடம் ஆனது. அதற்கு மிக முக்கியக் காரணம் சிறையில் இருந்த சில நண்பர்கள். அவர்கள் கூறிய ஆறுதல்கள். "நான் ஒரு ஆயுள் தண்டனை சிறைவாசி" என்ற நிலையை நான் உணரவே எனக்கு இரண்டு, மூன்று வருடங்கள் ஆகின.

கே: சிறையில் நல்லவர்களும் இருப்பார்கள், கொடூரர்களும் இருப்பார்கள். எப்படி உங்களைக் காத்துக் கொண்டீர்கள், அதற்கு உதவியது என்ன?
ப: நான் ஒரு முழுமனிதனாக மாறியதற்குக் காரணமே சிறைச்சாலைதான். அங்கிருந்த சில நண்பர்களின் வழிகாட்டல் என்னைப் புரிந்துகொள்ள எனக்கு உதவியது. ஒருவர் என்னுடன் வேலூர் சிறையில் இருந்தார். அவர் என்னைச் சிறையிலிருந்த பள்ளிக்கும், நூலகத்திற்கும் அழைத்துச் சென்றார். நூல்கள் சிலவற்றை எடுத்துக் கொடுத்து வாசிக்கத் தூண்டினார். மேலே படிக்க முடியும் என்ற ஆலோசனையைத் தந்தார். நூல் வாசிப்பு எனக்குள் பல கதவுகளைத் திறந்தது. குறிப்பாகத் திருக்குறள். திருக்குறள் எனக்கு முன்னமேயே வாசிக்கக் கிடைத்திருந்தால் நான் ஒரு குற்றவாளியாக மாறியிருக்க மாட்டேன் என்று நிச்சயமாகச் சொல்வேன். அது என்னை, என் மனதைச் செம்மைப்படுத்திக் கொள்ள உதவியது. பல நூல்கள் என் சிந்தனையைத் தூண்டின. எனது போக்கை மடைமாற்றின. பேச்சில், சிந்தனையில் நிதானம் வந்தது. சிறையிலிருந்தே 10, 12ம் வகுப்புகள் எழுதித் தேர்ச்சி அடைந்தேன்.

பி.ஏ. (வரலாறு), பி.சி.ஏ. பட்டங்கள் பெற்றேன். தமிழ், ஆங்கிலம் தட்டச்சு கற்றுத் தேர்ந்தேன். கம்ப்யூட்டரில் விஷுவல் பேசிக், அனிமேஷன் டிசைன் எல்லாம் படித்துத் தேர்ந்தேன். 18 பட்டயப் படிப்புகள் படித்தேன். எல்லாமே சிறைக்குள் இருந்தபடிதான்.

கே: சிறைச்சாலைக்குள் இதற்கு வசதிகள் இருந்தனவா?
ப: ஆம். சில இருந்தன. சில இல்லாவிட்டாலும் அவற்றுக்கான ஆசிரியர்களை, கருவிகளை வரவழைத்து வசதி செய்து கொடுத்தார்கள். கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெளியுலகில் இருக்கும் வசதிகள் சிறையில் கிடைக்காது. கிடைத்த வாய்ப்பை நான் தவறவிடவில்லை. உள்ளே பள்ளி இருந்தது. 9.00 மணிக்குப் போனால் 4.30 மணிக்குப் பள்ளி முடியும்வரை அங்கேதான் இருப்பேன். கைதிகள் சார்பிலான Prison Admin-ஐயே ஏழு வருடம் பார்த்துக் கொண்டேன்.



கே: ஆக, சிறைச்சாலையிலும் நிறையச் சுதந்திரம் இருந்தது என்கிறீர்கள்!
ப: ஆமாம். சுதந்திரம் இருந்தது. அது கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம். நிஜச் சிறைக்கும் சினிமாவில் காட்டப்படும் சிறைக்கும் 90 சதவிகிதம் வேறுபாடு உண்டு. அடிக்கிறார்கள், உதைக்கிறார்கள், கொடுமை செய்கிறார்கள் என்றெல்லாம் சினிமாவில் காட்டப்படுவது போல் சிறைச்சாலை இருக்காது. படங்களில் காட்டப்படுவது போல் கல் உடைப்பது கிடையாது. நாம் மரியாதையாகப் பழகும்வரை நமக்கும் மரியாதை கிடைக்கும். இப்போது வரும் அதிகாரிகள் நன்கு படித்துவிட்டு நேரடியாக வருகிறார்கள். முன்பெல்லாம் அனுபவத்தால் படிப்படியாக உயர்ந்து சிறையதிகாரி ஆனவர்களாக இருப்பார்கள். அவர்களது செயல்முறை வேறு. இப்போது நவீனக் கல்வியைப் படித்து அதிகாரிகளாகப் பலர் வருவதால் இவர்களது அணுகுமுறை, செயல்முறைகள் வேறு. பெரும்பாலான அதிகாரிகள் நேர்மையானவர்கள். கைதிகள் நலன்மீது அக்கறையும் அன்பும் கொண்டவர்கள். சகமனிதனாகக் கைதிகளை மதிக்கிறவர்கள். சட்டதிட்டங்களைச் சரியாகப் பின்பற்றுகிறவர்களாக இருக்கிறார்கள். ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார்கள். அட்ஜஸ்ட்மெண்ட் என்பதெல்லாம் அவர்களிடம் நடக்கவே நடக்காது. தவறு செய்பவர் ஓரிருவர் இருக்கக் கூடும். ஆனால் பெரும்பாலானவர்கள் நேர்மையானவர்கள் தான்.

கே: சிறைக்கைதியின் ஒருநாள் வாழ்க்கையை விவரியுங்கள்...
ப: காலை 6.00 மணிக்கு கைத்தடியால் சிறைக் கம்பிகளில் ஒலியெழுப்புவார்கள். எழுந்து போய் ஆஜர் கொடுக்க வேண்டும். மாலை அடைக்கும் போதும் கணக்கெடுப்பு உண்டு. பிறகு காலைக்கடன் கழிக்கப் போவோம். ஏழு மணிக்குச் சிற்றுண்டி வரும். உப்புமா, பொங்கல் என்று மெனுப்படி கொடுப்பார்கள். மிளகு இருந்தால் பொங்கல். பருப்பு இருந்தால் உப்புமா. அவ்வளவுதான். அதன் பிறகு வொர்க்‌ஷாப் செல்ல வேண்டும். சிறைக்குள் சேரும்போதே பாத அணி, பைண்டிங், அட்டை, தறி என்று வெவ்வேறு வொர்க் ஷாப்புகளுக்குப் பிரித்து விடுவார்கள். ஆனால் சும்மா சுற்றும் சிலரும் இருப்பார்கள். இதில் கொடுமை என்னவென்றால் வேலை செய்பவரின் ஊதியத்திலிருந்து 50% , சும்மா உட்கார்ந்து சாப்பிடுபவர்களின் செலவினங்களுக்காகப் பிடித்துக் கொள்வார்கள். அதாவது மாதம் 300 ரூபாய் சம்பளம் என்றால் அதில் 150 ரூபாய் மெயின்டெனன்ஸ் சார்ஜ் என்று பிடித்து விடுவார்கள். மீதி 150 ரூபாயில் 50 சதவிகிதம் எங்களால் பாதிக்கப்பட்ட குடும்பதினரின் நிதிக்குப் போகும். மீதி 75 ரூபாய்தான் எங்கள் கணக்கில் சேரும்!

இந்தப் பணி கடுமையாக, அடி, உதை வாங்கிக் கொண்டு செய்வதாக இருக்காது. வெளியில், ஒரு கம்பெனியில் ஒரு தொழிலாளி எப்படி வேலை செய்வாரோ அப்படித்தான் இருக்கும். என்ன வித்தியாசம் என்றால், நீங்கள் வெளியுலகத்தில் ஆசைப்பட்டதை உடனே செய்ய முடியும்; விரும்பியதை வாங்கிச் சாப்பிட முடியும்; விரும்பியவர்களோடு உடனே பேசமுடியும். ஆனால், சிறைச்சாலையில் அது நடக்காது. சிறைச்சாலையில் எங்கள் சுதந்திரம் வரையறுக்கு உட்பட்டது. சித்திரவதை கிடையாது, ஆனால் தவறு செய்தால் நிச்சயம் தண்டனை உண்டு. தவறுக்கேற்ப அது கடுமையானதாகவும் இருக்கலாம். விதிகளுக்கு உட்பட்டு நடந்தால் நமக்கு எந்தப் பாதிப்பும் வராது. கஞ்சா அடிக்கக் கூடாது, செல்ஃபோன் கூடாது, சண்டை போடக் கூடாது என்ற விதிகளை மீறினால், அது கண்டுபிடிக்கப்படும் போது கடுமையான தண்டனை கிடைக்கும். எப்படிப்பட்ட அதிகாரியும் ஒழுக்கமாக இருக்கும் கைதிகளுக்குத் தொந்தரவு தரமாட்டார்கள். கூடுமானவரை அவர்களுக்குச் சலுகைகளும் கொடுப்பார்கள்.



கே: நீங்கள் ஒழுக்கமாக இருக்கலாம். சுற்றியிருப்பவர்கள் இருக்க விடுவார்களா?
ப: கெடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது நமது மன உறுதியைப் பொறுத்தது. சிறைக்குள் செல்லும் மனிதன் நல்லவன் ஆகவும் வாய்ப்பு உண்டு. முன்பைவிடக் கெட்டவன் ஆகவும் வாய்ப்பு உண்டு. அவன் எதைத் தேர்ந்தெடுக்கிறான் என்பதுதான் முக்கியம். மனக்கட்டுப்பாடு மிக மிக அவசியம். கஞ்சா போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டால் அதற்காக அவன் எதையும் செய்யத் தயாராக இருப்பான். காலையில் எழுந்தோமோ, ஸ்கூல் போனோமா, படித்தோமோ, வொர்க் ‌ஷாப் போனோமா வேலை பார்த்தோமா என்று இருப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் எண்ணிக்கை குறைவுதான். எல்லாம் கலந்ததுதான் சிறைச்சாலை. தனிமை, இயலாமை, குற்றவுணர்ச்சி, குடும்ப சோகம், பிரிவுணர்ச்சி, கவலை எல்லாம் சேர, பெரும்பாலானவர்கள் அதில் சிக்கிச் சீரழிந்து விடுகிறார்கள். இதெல்லாம் அவர்கள் சிறைக்குள் தேர்ந்தெடுக்கும் நண்பர்களைப் பொறுத்தது. எனக்கு நல்ல நட்பு வட்டம் அமைந்தது. எல்லாருக்கும் அப்படி அமையும் என்று சொல்ல முடியாது.

கே: சிறையில் உங்கள் நட்பு வட்டம் பற்றிச் சொல்லுங்களேன்.
ப: என்னை ஓரளவுக்கு மனிதனாக மாற்றியதில் பெரும்பங்கு ஒரு குறிப்பிட்ட நண்பருக்கு உண்டு. உலகத் திருக்குறள் மன்றத்திலிருந்து 1330 குறட்பாக்களை ஒப்புவிக்கச் சொல்லி அறிவிப்பு வந்தது. வென்றால் 10,000 ரூபாய் பரிசு. அப்போது என் அம்மா உடல்நலமில்லாமல் இருந்தார். என் அண்ணன்தான் அவருக்கு உதவியாக இருந்தார். மிக வறுமையான சூழல். பரிசு வென்றால் அம்மாவுக்கு உதவுமே என்று நினைத்தேன். ஒரு மகனாக எதையும் என் அம்மாவுக்குச் செய்ய முடியாத நிலையில் இருந்தேன். போட்டிக்குப் பெயர் கொடுத்தேன். ஒன்றரை மாதத்திலேயே 1330 குறட்பாக்களையும், பொருளோடு கற்றுத் தேர்ந்தேன். போட்டியில் பங்கேற்றேன், ஜெயித்தேன்.

அதற்காகச் சிறைச்சாலையில் எனக்குப் பாராட்டு விழா வைத்தார்கள். சிறைக்குள் எந்தச் சிறைவாசிக்கும் அதுவரை 'பாராட்டு விழா' நடந்ததில்லை. தமிழகச் சிறை வரலாற்றிலேயே எனக்கு நடந்ததுதான் முதல் நிகழ்வு. இது நடந்தது வேலூர் சிறையில், 2008ம் வருடம். V.I.T. வேந்தர் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவர் கூடுதலாகப் பத்தாயிரம் தந்தார். மொத்தம் 20,000 ரூபாய் பணத்தை நான் என் அம்மாவின் மருத்துவத்துக்குக் கொடுத்தேன். அது மனதிற்கு மிகுந்த நிறைவைத் தந்தது. வாழ்க்கைக்கு எது அவசியமோ அதில் மட்டுமே நான் கவனம் செலுத்தினேன். 2009ம் ஆண்டு என்னைப் புழல் சிறைக்கு மாற்றினார்கள். அதைத் தண்டனைச் சிறைவாசிகளுக்காகத் திறந்ததே 2007ல் தான். 2003 முதல் 2008வரை வேலூர், 2009 முதல் 2018வரை சென்னை. ஜூன் 20, 2018ல் நான் விடுவிக்கப்பட்டேன்.



கே: உங்கள் மனைவி நீங்கள் சிறைக்குச் சென்றதை எவ்வாறு எதிர்கொண்டார்?
ப: அவருக்குத்தான் மிகக் கடினம். அதை அவரே சொல்லட்டும். நான் சிறைக்குப் போன பிறகுதான் என் பெரிய மகள் பிறந்தாள். பிறந்து மூன்று மாதம் கழித்து பெயிலில் வந்து முதன்முதலில் என் குழந்தையைப் பார்த்தேன். சில மாதங்கள் அவர்களுடன் இருந்தேன். வழக்கு ஃபாஸ்ட் ட்ராக்கில் நடந்தது. ஒரே வருடத்திற்குள் 'ஆயுள்தண்டனை' தீர்ப்பாகிச் சிறை சென்றுவிட்டேன்.

நான் கைக்குழந்தையுடன் மனைவியை விட்டுச் சென்ற அந்த நாட்கள் மிகக் கொடுமையானவை. குடும்பத்தின் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்ததனால் என் வீட்டாரின் ஆதரவு என் மனைவிக்குக் கிடைக்கவில்லை. அவரது அப்பா சிறு வயதிலேயே இறந்துவிட்டார். அம்மா மட்டும்தான். ஆனால், அவர்களும் முடியாதவர்கள். என் அப்பா-அம்மா வயதானவர்கள், உடல்நலமில்லாதவர்கள். அவர்கள் கும்மிடிப்பூண்டி அருகே கிராமத்தில் இருந்தார்கள். அவர்களுக்கும் வறுமைதான். உறவுகளைக் கைவிட்டு என்னையே நம்பி வந்தவரை, கைக்குழந்தையோடு தவிக்க விட்டுவிட்டு நானும் சிறைக்குச் சென்றுவிட்டேன். எந்த ஆதரவும் கிடைக்காத சூழல்.

ஓர் இளம்பெண், தனியாகக் கைக்குழந்தையுடன் வாழும் சூழலில் இந்தச் சமூகத்தில் எப்படிப்பட்ட பிரச்சனைகள் வருமோ அவையெல்லாம் அவருக்கும் வந்தன. அவருக்கு மனவுறுதி அதிகம். தைரியமாக நின்றார். சொல்லப் போனால் என்னைவிட அதிகக் கஷ்டங்களை, பிரச்சனைகளை அனுபவித்தவர் அவர்தான். என் மனைவியின் அக்காக்கள்தாம் அவரையும், குழந்தையையும் அரவணைத்துப் பராமரித்து வளர்த்தனர். இன்றுவரைக்கும் என் குழந்தையை அவர்கள்தான் வளர்க்கின்றனர். இன்று என் மகள் +2 படிக்கிறார்.

கே: சிறையிலிருந்து வெளியே வந்ததும் சூழல்களை எப்படி எதிர்கொண்டீர்கள்?
ப: நான் சிறையில் இருந்து வெளிவந்து ஒரு மனிதனாக இன்றைக்கு நிற்கிறேன் என்றால் அதற்குக் காரணம் என் மனைவிதான். அப்போதும் மாதாமாதம் எனக்குத் தேவையான உதவிகள் செய்து வந்ததது என் மனைவிதான். இப்போதும் என்னை நன்கு பார்த்துக் கொள்பவர் அவர்தான். நான் சிறையிலிருந்து வந்ததுமே என்ன செய்வது என்று தயங்கியபோது "நீ ரெண்டு மாதம் ரெஸ்ட் எடு மாமா. அதன் பிறகு வேலைக்குப் போகலாம்" என்றார். தான் சம்பாதித்துச் சேர்த்து வைத்த பணத்தில் ஒரு டூ-வீலர் வாங்கிக் கொடுத்தார். எனக்கு வேலை கிடைத்ததும், "நீ இதுவரை உழைத்தது போதும். இனி நான் உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றுகிறேன்" என்று சொல்லி அவரை வேலையை விடச் சொன்னேன்.

எனக்கு ஒரு பள்ளியில் தமிழாசிரியர் வேலை கிடைத்தது. அந்தப் பள்ளி சிறைக் கைதிகளின் ஆதரவற்ற குழந்தைகளுக்காக நடத்தப்படும் இலவச உண்டு, உறைவிடப் பள்ளி. நான் குழந்தைகளுக்கு தமிழ், சமூக அறிவியல், கம்ப்யூட்டர் கற்பிக்கிறேன். ஆர்வமுள்ளவர்களுக்குச் சிலம்பம் கற்பிக்கிறேன். சிறுவயதில் நான் கற்றது இப்போது பயன்தருகிறது. திருக்குறள் வகுப்பு எடுக்கிறேன். போட்டி வைத்து ஆயிரம் ரூபாய் பரிசளிக்கிறேன். இந்த வேலை எனக்கு மகிழ்ச்சி தருகிறது.

சம்பளம் அதிகமில்லை என்றாலும் சொந்த வீடு என்பதால் வாடகைப் பிரச்சனைகள் இல்லை. ஆனால், குழந்தைகள் தனியார் பள்ளியில் படிப்பதால் அதற்கான கல்விக் கட்டணம் அதிகமாக இருக்கிறது. ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக சாயிராம் ஐயா குழந்தைகளின் கல்விச் செலவை முழுமையாக ஏற்று உதவி செய்கிறார். இப்போது வாழ்க்கையில் நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம் என்றால் அதற்கு ஐயா ஒரு முக்கிய காரணம்.

சொல்லிவிட்டுப் புன்னகைக்கிறார் கே. முனுசாமி. மேலே நமது கேள்விகளை எதிர்கொள்கிறார் அவரது மனைவி மீனா முனுசாமி.



கே: உங்கள் கணவர் திடீரென்று சிறைக்குச் சென்றார். நீங்கள் எப்படித் தாங்கிக்கொண்டீர்கள்?
மீனா: என் கணவருக்குக் கிண்டியில் வேலை கிடைத்தது. அங்கிருந்த ஒரு பெண்ணால் அவருக்குச் சில தொந்தரவுகள் ஏற்பட்டன. அவர் விவாகரத்துப் பெற்றவர். என் கணவரை விரும்பினார். என்னிடமே அவர் விளையாட்டாக 'நான் முனுசாமியை லவ் பண்றேன்' என்றெல்லாம் பேசியிருக்கிறார். அதனால் என் கணவர் அந்த வேலையை விட்டுவிட முடிவு செய்தார். நானும் அப்போது கர்ப்பிணியாக இருந்ததால் அம்பத்தூர் எஸ்டேட்டிலேயே ஏதாவது வேலை பார்த்தால், இருவரும் ஒன்றாகச் சென்று வர வசதியாக இருக்கும் என்று சொன்னார். எஸ்டேட்டில் வேலையும் கிடைக்கவே, கிண்டி வேலையை விட்டுவிட்டார். அந்தக் கம்பெனியில் கொஞ்சம் பணம் வரவேண்டி இருந்தது. எனக்கு இரண்டு நாட்களில் பிறந்த நாள் வர இருந்ததால், அதை வாங்கலாம் என்று என்னையும் அழைத்தார். எனக்கு உடல் நலமில்லை என்று நான் போகவில்லை. அன்றுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. என் கணவரை அந்தப் பெண் ஏதோ வற்புறுத்த, இவர் கோபப்பட்டு அவரைத் தள்ளிவிட அவர் கீழே விழுந்து, இறந்தும் விட்டார். (அவருக்கு ஏற்கனவே இதயத்தில் ஏதோ பிரச்சனை இருந்திருக்கிறது). என் கணவர் கைதானார்.

ஆனால், என் கணவரைப்பற்றி எனக்குத் தெரியும். அவர் யாருக்கும் கெடுதல் நினைக்காதவர். அவர் தவறு செய்யப் போகிறவராக இருந்தால் அன்று என்னைக் கூப்பிட வேண்டிய அவசியமே இல்லையே. அவர்மீது பழி வந்தது குறித்து வருந்தினாலும், அன்பு இருந்தது, காதல் இருந்தது. இன்றளவும் அது குறையவில்லை. என்மீது கொண்ட அன்பால், காதலால்தான் மற்றொரு பெண் அழைத்தும் அவர் மறுத்திருக்கிறார் என்பது எனக்குப் புரிந்தது. அது எப்படி நடந்திருக்கும் என்பதும் புரிந்தது. அவர் வேண்டுமென்று செய்யவில்லை. கோபத்தில் செய்ததுதான். மனைவியை உண்மையாக நேசிக்கும் ஒரு ஆண் அப்படித்தான் நடந்து கொள்வான். என் கணவரும் அப்படித்தான் நடந்து கொண்டார். ஏனோ அன்று விதி அப்படி விளையாடி விட்டது.

அவர் சிறைக்குச் சென்றதும் மிகவும் மனக் கஷ்டமாகி விட்டது என்றாலும் அவர் வந்துவிடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அம்மா உடல்நலமில்லாதவர் என்பதனால் நான் என் அக்கா வீட்டிற்குப் போய்விட்டேன். அவர் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார். பிரசவம் ஆனதும் மீண்டும் வேலைக்குப் போக ஆரம்பித்தேன். நான் வேலை பார்த்து வந்த எக்ஸ்போர்ட் கம்பெனி எனக்கு மிகுந்த சப்போர்ட் ஆக இருந்தது. அதனால் வேலையில் மட்டுமே நான் கவனம் செலுத்தினேன். வேறெதிலும் கவனம் போகாதவாறு பார்த்துக் கொண்டேன். ஆனாலும் சில பிரச்சனைகள் வரத்தான் செய்தன.

கே: என்ன மாதிரிப் பிரச்சனைகள்?
மீனா: சமூகத்தில் என்மாதிரி இளம்பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள் எனக்கும் ஏற்பட்டன. "உன் வீட்டுக்காரர் ஜெயிலுக்குப் போயிட்டான். நீ வேறொரு மேரேஜ் பண்ணிக்கோ" என்று சிலர் சொன்னதுண்டு. ஆனால், நான் மிகவும் உறுதியாக இருந்தேன். கடிதம் மூலமாகவே நாங்கள் பேசிக் கொள்வோம். நான் தைரியமாக இருப்பதைப் பார்த்து பலருக்கு ஆச்சரியம், "நீ எப்படி இப்படி இருக்கிறாய், எப்படி உன்னால் இப்படி இருக்க முடிகிறது?" என்று ஆச்சரியப்பட்டார்கள். சிலர் என் காதுபடவே, "இவள் வீட்டுக்காரர் தான் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போயிட்டான்" என்று சொல்லும்போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனாலும் அதைக் கவனிக்காமல் நான் உழைப்பதில் கவனம் செலுத்தினேன்.

சிலர் கிண்டலாகப் பேசுவார்கள். "உன் வீட்டுக்காரர் தான் இல்லையே..." என்று இழுப்பார்கள். அவர்கள் நேரடியாகப் பேசும்போது நானும் நேரடியாகவே பதில் சொல்லியிருக்கிறேன். "எனக்கு என் வீட்டுக்காரர் தாங்க எல்லாம். அவர் இல்லாமல் நான் இல்லை" என்று சொல்லியிருக்கிறேன். நாங்கள் ஐந்து வருடம் காதலித்த பின்னர்தான் திருமணம் செய்து கொண்டோம். அதனால் என்னைப் பற்றி அவருக்கும், அவரைப்பற்றி எனக்கும் நன்கு தெரியும். எங்கள் அன்பு உண்மையானது. அவர் என்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாரோ அதைப் போல இரண்டு மடங்கு நான் அவர்மீது அன்பு வைத்திருக்கிறேன்.

"நான் சிறையில் இருந்து வரவேண்டும் என்று நினைத்திருந்தால் முன்னதாகவே முயற்சி செய்து வந்திருக்கலாம். ஆனால், என்னால்தானே ஓர் உயிர் போனது. அதற்கான தண்டனையை நான் அனுபவித்துத்தானே ஆக வேண்டும்" என்று என்னிடம் பலமுறை என் கணவர் சொல்லியிருக்கிறார். ஆனால், இவர்மட்டும் தண்டனை அனுபவிக்கவில்லை. நாங்களும் 15 வருடம் அந்தத் தண்டனையை அனுபவித்தோம்.

கே: விடுதலையாகி வந்த பின் எப்படி இருந்தது?
மீனா: மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. விடுதலை ஆனதும் நான் வேலையை விட்டுவிட்டேன். என் பி.எஃப். பணத்தில் ஒரு வண்டி வாங்கிக் கொடுத்தேன். ஏனென்றால் இன்றைக்கு வேலைக்கு வண்டி என்பது மிகவும் அவசியம். "குறைந்த சம்பளம் கிடைத்தாலும் போதும், அந்த வருமானத்தில் நான் குடும்பம் நடத்துகிறேன்" என்று சொன்னேன். பல இடங்களில் கேட்டும், அலைந்தும் வேலை கிடைக்கவில்லை. பின்னர் சீட்ஸ் பழனிசாமி சார்தான் வேலையில் சேர்த்துக் கொண்டார். எனது குழந்தைகள் தாம்பரத்தில் அக்கா வீட்டில் இருந்து படித்து வருகிறார்கள். அவர்களுக்கான படிப்புச் செலவை சாயிராம் சார் பார்த்துக் கொள்கிறார்.

சிறைவாச ஆரம்ப காலத்தில் இவர் ஒரு சமயம் "என் வாழ்க்கை அவ்வளவுதான். முடிந்துவிட்டது. நீ ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்" என்றார். நான்தான் "வாழ்க்கை என்றால் அது உங்களுடன் மட்டும்தான். வாழ்ந்தால் உங்களுடன்தான் வாழ்வேன். இல்லாவிட்டால் வேறு வாழ்க்கை இல்லை. நான் காத்துக் கொண்டிருப்பேன். குழந்தைகளுக்காக நான் இருக்கிறேன். நீங்களும் எனக்கு ஒரு குழந்தைதான். உங்களை குழந்தைபோலப் பார்த்துக் கொள்வேன்" என்றேன். இன்றுவரை அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இனிமேல் எங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவர் பொறுப்பு.

கே: குழந்தைகள் என்ன செய்கிறார்கள்?
மீனா: பெண் +2 படிக்கிறாள். பையன் ஏழாம் வகுப்பு. குழந்தைகளிடம் நாங்கள் நண்பர்களாகத்தான் பழகுகிறோம். என்னைவிட இவரைத்தான் குழந்தைகளுக்கு அதிகம் பிடிக்கும். பார்க்கும் எல்லாரும், "எப்படி உங்களால் இவ்வளவு, சந்தோஷமாக இருக்க முடிகிறது" என்று கேட்பார்கள். இதைக் கடவுளின் அருள் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் சிறையிலிருந்து வெளிவந்த பின் மிகவும் கஷ்டப்படும் பலரை நான் அறிவேன்.

சின்ன வயதிலிருந்தே அக்கா வீட்டினர் எங்கள் குழந்தைகளை நன்றாகப் பார்த்துக் கொண்டனர். அக்கா கணவர் கொத்தனார் மேஸ்திரிதான். ஆனாலும் எங்களுக்கு சப்போர்ட் ஆக இருக்கிறார்கள். நான் வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தேன். இவருக்கு இவருடைய மாமா பெண்ணைத் திருமணம் செய்வதாக இருந்தது. ஆனால் என்னைத் திருமணம் செய்து கொண்டார். இதில் என் அம்மாவுக்கு மிகுந்த மன வருத்தம் இவருடன் பேசாமலேயே இருந்தார். இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்தான் பேச ஆரம்பித்தார்.

எனக்கு அதிக ஆசைகள் இல்லை. கடவுள் பக்தி அதிகம். என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதுதான் எனக்குப் பெரியவர்கள் சொல்லிக் கொடுத்தது. அதிக ஆசை இல்லாததால் எதிர்பார்ப்புகள் இல்லை. ஏமாற்றங்களும் இல்லை. நமக்கு என்ன கிடைக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது கிடைக்கும். இத்தனை வருடங்களில் நாங்கள் இருவரும் எதற்காகவும் சண்டை போட்டுக் கொண்டதில்லை. வரவும் வராது. அதனால் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது.

சொல்லிவிட்டுப் புன்னகைக்கிறார் மீனா. தலையாட்டி ஆமோதிக்கிறார் முனுசாமி. பிரமிப்பில் நாம் கல்லாய்ச் சமைந்திருக்கிறோம்.

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்
*****


உண்மையான தண்டனை
ஒரு சிறைவாசிக்கான உண்மையான தண்டனை என்பது சிறையில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவன் குடும்பத்தைப் பிரிந்திருப்பதை எண்ணி எண்ணி வருந்துவதுதான். அந்தப் பிரிவுதான் தண்டனை. சிறைக்குள் வழங்கப்படும் வேறெதுவும் அவனுக்குத் தண்டனை அல்ல.

மீனாவின் அன்பும், மன உறுதியும்தான் சிறைச்சாலையில் என்னை நிம்மதியாக இருக்க வைத்தன. இன்றைக்குச் சிறையில் இருந்து வெளியாகி உங்கள் முன்னால் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதும் இவர்மீது வைத்த அன்பு, நம்பிக்கையால்தான். இவர் இல்லாவிட்டால் இந்த முனுசாமி சிறையிலேயே தன் வாழ்நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கும் பிற கைதிகளுள் ஒருவனாகத்தான் இருந்திருப்பான். என்னை மீட்டதில் இவருக்கு மிக முக்கியப் பங்குண்டு. அது ஒரு பெரிய கதை. படமாகவே எடுக்கலாம்.

நமக்காக இவர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், விடுதலையாகி வெளியில் சென்று நாம் இவர்களுக்கு என்ன செய்யப் போகிறோம்? இவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும், சந்தோஷமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று தோன்றும். அப்படி யோசித்துத்தான் நான் சிறையில் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன். திறமைகளை வளர்த்துக் கொண்டேன். இவர்களுக்காக வாழ வேண்டும் என்பதால், அதற்கான தகுதிகளை, சிறையில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வளர்த்துக் கொண்டேன்.

- கே. முனுசாமி

*****


திருக்குறள் மென்பொருள்
விஷுவல் பேசிக்கில் ஒரு ப்ராஜெக்ட் செய்தேன். திருக்குறளின் எண் இட்டால் குறளைக் காட்டுவது, குறளின் வார்த்தைகளுக்கு விளக்கம் தருவது என்று அந்த ப்ராஜெக்ட். திருக்குறள் சாஃப்ட்வேரை மூன்று மாதம் உழைத்து உருவாக்கினேன். இப்படி எனது கவனத்தை முழுக்க முழுக்க இதுபோன்றவற்றில் செலுத்தினேன். அட்மின் வேலைகளைப் பார்த்தேன். விடுதலையாகி வெளியே சென்றால் எந்த வேலை கொடுத்தாலும் செய்ய வேண்டும் என்பதற்கேற்ப என்னை வடிவமைத்துக் கொண்டேன்.

- கே. முனுசாமி

*****


சிறை அதிகாரிகள்
சிறை அதிகாரிகள் பலரும் கைதிகள் நலனில் மிகுந்த அக்கறை உடையவர்களாக இருந்தனர். நட்ராஜ் ஐயாதான் எல்லாரும் படிக்க வேண்டும் என்று சொல்லி, திருக்குறள் புத்தகத்தை சிறைக்கைதிகள் எல்லாருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்தார். சிறையில் நிறைய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர் அவர். 2003-2006ல் வேலூர் சிறையில் ராமச்சந்திரன் என்றொரு சூப்பிரண்டண்டெண்ட் இருந்தார். அவர் இருந்த அந்த மூன்று வருடங்களும் சிறைச்சாலைக்கு ஒரு பொற்காலம். சிறைவாசிகளின் மனநிலையைப் புரிந்து, சிறை விதிகளுக்கு உட்பட்டு அவர்களுக்கு என்னென்ன சலுகைகளைச் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தார். அவர்கள் குற்றச் செயல்களைச் செய்துவிட்டு குடும்பத்தைப் பிரிந்து வந்திருக்கிறார்கள்; அவர்கள் மென்மேலும் கடினமான குற்றவாளிகளாக மாறிவிடக் கூடாது என்பதில் அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். சிறைச்சாலைக்குள் இருந்த இறுக்கமான மனநிலை அவரால் - விதிகளுக்கு உட்பட்டு அவர் அளித்த சுதந்திரத்தால் - பெரிதும் மாறியது.

அதுபோல புழல் சிறையில் கண்ணபிரான், ராஜலட்சுமி, கனகராஜ், ஜெயிலர் தாமரைச் செல்வன், ருக்மிணி பிரியதர்ஷிணி, டோக்ரா என்று நல்ல பல அதிகாரிகள் இருந்தார்கள். சிறைவாசிகளுக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு பலர் செயல்பட்டார்கள். சிறைவாசிகளின் பிரச்சனைகளைக் காது கொடுத்துக் கேட்டார்கள். அதற்கு எங்களில் சிலரையே (நான், சீனிவாசன் என்னும் மற்றொரு சிறைவாசி) மீடியேட்டர்போல நியமித்துச் செயல்பட்டார்கள். சிறைவாசிகளின் பிரச்சனைகளுக்காக நேரடியாக, எந்த நேரத்திலும் சிறைக் கண்காணிப்பாளரை நாங்கள் சந்திக்கலாம் என்ற சிறப்பு அனுமதியையும் எங்களுக்குத் தந்திருந்தார்கள். அதனால் சில நல்லவையும் நடந்தன.

- கே. முனுசாமி

*****


ஆயுள் தண்டனையும் விடுதலையும்
ஆயுள் தண்டனை என்றால் ஒருவர் இறக்கும்வரை வாழ்நாளைச் சிறையில் கழிக்கவேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால், 14 ஆண்டுகள் கழித்து, அறிவுரைக் குழு (அட்வைஸரி போர்ட்) ஒன்று கூடும். அதில் சிறைச்சாலை அதிகாரி, போலீஸ், மாவட்ட நீதிபதி, நன்னடத்தை அதிகாரி என எல்லாரின் அறிக்கைகளும் திரட்டப்பட்டு மாவட்டக் கலெக்டரின் முன்னிலையில் ஒன்று கூடி, தனித்தனியாக அந்தச் சிறைவாசியை விசாரித்து விடுதலைக்குத் தகுதியானவர்தானா என்று தனித்தனியாக அறிக்கை தரவேண்டும். அது சிறைத்துறை தலைவர், அரசின் உள்துறை வழியே முதலமைச்சருக்குப் போகும். ஆளுநர், முதலமைச்சர் எல்லாம் கையெழுத்துப் போட்டு அது உத்தரவாக வந்து அமலாவதற்கு 5 வருடங்கள் ஆகிவிடும். எங்காவது ஓரிடத்தில் தொய்வாகி விட்டதென்றால் எல்லாமே சுணங்கிவிடும். ஆக, ஆயுள் தண்டனை பெற்ற ஒருவர், எல்லாம் நல்லவிதமாக நடந்தால், 15-20 வருடங்களுக்குள் வெளியே வர வாய்ப்பிருக்கிறது. அட்வைஸரி போர்டு பரிந்துரைத்து, விரைவில் வெளியில் வந்துவிடுவோம் என்று எதிர்பார்த்து, அது நடவாமல் சிறைக்குள்ளேயே இறந்தும் போனவர் பலர்.

அண்ணா நூற்றாண்டு வந்தபோது, முதல்வராக இருந்த கலைஞர், சிறப்புச் சலுகையாக ஏழாண்டு கடந்த கைதிகளை விடுவித்தார். அப்போது எனக்கு 6 1/2 ஆண்டுகள் மட்டுமே ஆகியிருந்தது. அப்போது நான் வெளிவந்திருந்தால் இன்றைக்கு இருக்கும் நிதானம், தெளிவு, பொறுமை எல்லாம் இருந்திருக்குமா என்று தெரியவில்லை. இவை ஏற்பட எனக்குப் பத்தாண்டுகள் ஆயின.

கடந்த ஆண்டு, தற்போதைய தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் எம்.ஜி.ஆர். பிறந்த நூற்றாண்டை முன்னிட்டுப் பலரை விடுதலை செய்ய ஆணையிட்டார். அதில் விடுதலை ஆனவர்களில் நானும் ஒருவன்.

- கே. முனுசாமி

*****


தொண்டு நிறுவனங்களுடன்...
தொண்டு நிறுவனங்கள் சிறையில் நடத்தும் நிகழ்ச்சிகளில் என்னைச் சிறப்பு அழைப்பாளராக அழைத்து பேசச் செய்கின்றனர். என்னுடைய சிறை அனுபவங்களை, அங்கு ஒழுக்கமாக இருந்ததை, பலவற்றைக் கற்றுக் கொண்டதை நான் இன்னாள் சிறைவாசிகளிடம் பகிர்ந்து கொள்கிறேன். அது அவர்களுக்கு ஊக்கத்தை, நம்பிக்கையைத் தருகிறது. சில நிகழ்வுகளுக்கு ஐ.ஜி. டி.ஐ.ஜி. எனப் பெரிய அதிகாரிகள் வருவார்கள். மேடையில் அவர்களுக்குச் சமமாக நாற்காலில் அமர்வது எனக்கு மிகுந்த கூச்சத்தைத் தருவதுண்டு.

சமீபத்தில் புதுக்கோட்டையில் இருக்கும் சிறார்களுக்கான சீர்திருத்தப் பள்ளியில் பேசினேன். என்னை நன்கறிந்த ருக்மிணி பிரியதர்ஷினி மேடம் அங்கே சூப்பரிண்டெண்ட். 'கிருபா' என்ற தொண்டு நிறுவனம் என்னைப் பேசப் பல இடங்களுக்கும் அனுப்புகிறது. அது போல Prism என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ரவிகுமார் பால் அவர்கள், முதல்முறையாகச் சிறைக்குச் செல்லும் விசாரணைக் கைதிகளின் உயர்வுக்காகப் பணி செய்கிறார். திருவள்ளூர் மாவட்ட நீதிபதி, ரவிகுமார் பால் ஆகியோர் இணைந்து கைதிகளின் நலனுக்காக உழைக்கிறார்கள். அவர்கள் அமைப்பின் அழைப்பின் பேரில் நான் சென்று பேசினேன். தற்போது வாராவாரம் கைதிகளிடம் பேசச் சொல்லி அழைத்திருக்கிறார்கள்.

- கே. முனுசாமி

*****
Share: 




© Copyright 2020 Tamilonline