Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | நூல் அறிமுகம் | குறுநாடகம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: துணைவலியும் தூக்கிச் செயல்
- ஹரி கிருஷ்ணன்|ஜூலை 2019|
Share:
பீமன், "நாம் வனவாசம் இருந்த காலம் முடிந்துவிட்டது என்று கருத சாத்திரத்தில் இடமுண்டு" என்று பேசி, பன்னிரண்டு ஆண்டு வனவாசத்தையும் ஓராண்டு அக்ஞாத வாசத்தையும் நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களைக் குறிப்பிட்டு, "நாடு திரும்புவோம், போரைத் தொடங்குவோம்" என்றெல்லாம் பேசியபோது தருமபுத்திரன் பெருமூச்சு விட்டுக்கொண்டு ஒரு முகூர்த்த காலம் யோசித்துவிட்டு அவனுக்கு பதில் சொல்லலானார். "பீமா!வெறும் தைரியத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தொடங்கப்படும் தீயசெயல்கள் துன்பத்தையே தருகின்றன. ஒரு செயலை நன்கு ஆலோசித்து, நன்கு நிச்சயித்து, நல்ல முறையில் தொடங்கினால், அச்செயலுக்கு தெய்வத்தின் அனுகூலமும் ஏற்பட்டு, நம்முடைய விருப்பங்கள் நிறைவேறுகின்றன. உன்னுடைய பலத்தையே அடிப்படையாக வைத்துக்கொண்டு ஒருசெயலைச் செய்யத் துணிந்திருக்கிறாய். நான் சொல்ல இருப்பதையும் கேள். "பூரிஸ்ரவஸும் சலனும் வீர்யமுள்ள ஜலஸந்தனும் பீஷ்மரும் துரோணரும் கர்ணனும் வீர்யமுள்ள அஸ்வத்தாமாவும் அசைக்க முடியாத துரியோதனன் முதலிய திருதராஷ்டிர புத்திரர்களும் ஆகிய யாவரும் அஸ்திராப்பியாஸம் செய்தவர்கள்; எப்பொழுதும் ஆததாயிகள். நம்மால் கஷ்டப்படுத்தப்பட்ட சிற்றரசர்களும் பேரரசர்களும் கௌரவபக்ஷத்தை அடைந்து இப்பொழுது சிநேகத்தை அடைந்திருக்கிறார்கள். ஓ! பாரத! துரியோதனனுடைய நன்மையில் விருப்பமுள்ளவர்களும் நமது நன்மையில் விருப்பமில்லாதவர்களும் பொக்கசமுள்ளவர்களும் (பொக்கிஷம் அல்லது செல்வ வளம் உள்ளவர்களும்) சைனியத்துடன் கூடியவர்களான கௌரவ சேனையின் சம்பளத்தோடும் உணவு முதலியவற்றோடும் எல்லாவிதத்திலும் ஒப்பப் பகுத்துக் கொடுக்கப்பட்டவர்கள் அல்லரோ?" (வனபர்வம், அர்ஜுனாபிகமன பர்வம், அத். 36, பக். 132).

எனவே இப்போது துரியோதனன் பக்கத்தில் அவனுடைய நலனை விரும்புகின்ற, அவனால் பொருள் தந்து ஆதரிக்கப்பட்ட, நம்மிடம் போரில் தோற்றுப்போய் நாடிழந்த அரசர்கள் என்று பல வகைப்பட்டோர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் துரியோதனனுக்காக உயிரையும் விடுவார்கள் என்பதில் ஐயமில்லை. இது ஒருபக்கம் இருக்க, பீஷ்மர், துரோணர், கிருபர் முதலானோர் நம்மிடத்தில் அபிமானம் கொண்டவர்கள்தாம் என்றாலும், போர் என்று வரும்போது இவர்கள் அனைவரும் துரியோதனன் பக்கத்தில்தான் நிற்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், "பீஷ்மர், துரோணர், மஹாத்மாவான கிருபர் இவர்களுக்கு நிலைமை நம்மிடத்திலும் அவர்களிடத்திலும் ஸமமாக இருக்குமானாலும் அரசன் அளித்த சோற்றுக்கடனைத் தீர்ப்பது அவச்யமாகும். ஆனது பற்றி, யுத்தத்தில் விடுதற்கரிய உயிரையும் விடுவார்கள் என்பது என் கருத்து. யாவரும திவ்யாஸ்திரம் அறிந்தவர்கள். யாவரும் தர்மத்தை முக்கியமாகக் கொண்டவர்கள். இந்திரனுடன் கூடிய தேவர்களாலும் ஜயிக்க முடியாதவர்கள் என்பதும் என்னுடைய எண்ணம்."

"எனவே, பீஷ்மர், துரோணர், கிருபர் முதலானோர் தர்மத்தின்மீதும் நம்மீதும் பரிவுகொண்டவர்களே என்றாலும் அவர்கள் செஞ்சோற்றுக் கடனால் பிணிப்புண்டிருக்கிறார்கள். போர் என்று வந்தால் அவர்கள் துரியோதனன் பக்கம்தான் நிற்பார்கள் என்பது என் கருத்து" என்று தருமபுத்திரர் சொல்வது தீர்க்கதரிசனம் வாய்ந்த ஒரு கருத்துதான். இத்தனை பேர் இருப்பது ஒருபக்கம். இன்னொரு பக்கத்தில், "அவர்களுள்ளும்எல்லா அஸ்திரங்களையும் அறிந்தவனும் அசைக்கமுடியாதவனும் பிளக்க முடியாத கவசத்தால் சூழப்பட்டவனும் பொறாமையுள்ளவனும் மஹாரதனுமான கர்ணன் எப்பொழுதும் முயற்சியுள்ளவனாய் இருக்கிறான். உதவியில்லாத உன்னால், யுத்தத்தில் இந்த எல்லாப்புருஷஸ்ரேஷ்டர்களையும் ஜயிக்காமல் துரியோதனன் கொல்லப்படக் கூடியவனல்லன். ஓ! வ்ருகோதர! வில்லாளிகள் யாவரையும் அதிகரித்த கர்ணனுடைய லாகவத்தை ஆலோசனை செய்கிறதனால் நான் தூக்கத்தை அடைவதில்லை' என்றார். " (மேற்படி இடம், பக். 132) இந்தப் பகுதியை கிஸாரி மோஹன் கங்கூலி, "There is again amongst them that mighty warrior--Karna--impetuous, and ever wrathful, master of all weapons, and invincible, and encased in impenetrable mail. Without first vanquishing in battle all those foremost of men, unaided as thou art, how canst thou slay Duryodhana? O Vrikodara, I cannot sleep thinking of the lightness of hand of that Suta's son, who, I regard, is the foremost of all wielders of the bow!"என்று மொழிபெயர்க்கிறார்.
இன்னும் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உத்தியோக பர்வத்தில், இங்கே 'மஹாரதி' என்று யாரை தருமபுத்திரர் சொல்கிறாரோ அந்தக் கர்ணனைத்தான் பீஷ்மர் 'அர்த்தரதி' என்று வரையறுக்கப் போகிறார். கர்ணனை பீஷ்மர் குறைத்து மதிப்பிட்டார் என்பவர்கள் உண்டு. அது அப்படியல்ல. அதற்கு வேறொரு பரிமாணம் இருக்கிறது. அதை உத்தியோக பர்வத்தில் இந்தக் கட்டத்தைப் பார்க்கும்போது பார்க்கலாம். ஆனால் இப்போதைக்குக் கர்ணனுடைய ஆற்றலின் பேரில் பீமசேனன் உள்ளிட்ட—அர்ஜுனனைத் தவிர்த்த—பாண்டவர்களுக்குக் கவலை இருந்தது உண்மைதான். இதனால்தானே தர்மபுத்திரர், "என்னால் கர்ணனை நினைத்தால் தூங்கமுடியவில்லை" என்கிறார்! ஏனெனில் இதுவரையில் அர்ஜுனனுடைய ஆற்றல், திரெளபதி திருமண சமயத்தின் போது மட்டும்தான் கர்ணனை வெற்றிகொண்டிருக்கிறது. பசுக்களைக் கணக்கெடுக்க வந்த கோஷாயாத்ரா போர், சித்திரசேனனாகிய கந்தர்வனுடன் போர், விராட நகரத்தில் உத்தரகுமாரனுடன் பிருஹன்னளையாக நின்றிருந்த அர்ஜுனன் தனியொருவனாக பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன் உள்ளிட்ட பெரும் சேனையை வென்றது எல்லாம் நிகழ இன்னும் பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கின்றன. தருமபுத்திரன் இப்போது செய்தது ஒருவகையான stock-taking என்றுதான் கொள்ளவேண்டும். இது ஒவ்வொரு அரசனும், குறிப்பாகப் போரைப்பற்றி எண்ணும் சமயத்தில் மேற்கொள்ளவேண்டிய ஒரு செயல். இதைத்தான் வள்ளுவர் வலியறிதல் அதிகாரத்தில் "வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்". என்கிறார். இந்தக் குறளில் பேசப்படும் ஒவ்வோர் அம்சத்தையும் தருமபுத்திரர் நாம் பேசியுள்ள மேற்படிப் பகுதியில் விரிவாக அலசியிருப்பதைப் பார்க்கலாம். இங்கே தருமபுத்திரன் மேற்கொண்டது வள்ளுவர் வலியுறுத்தியுள்ள அரச தர்மம் என்பது கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.

அதற்கும் மேல், இப்போது அர்ஜுனனிடத்தில் பாசுபதம் முதலான திவ்யாஸ்திரங்கள் இல்லை. இவை கர்ணனிடத்திலும் இல்லை. இவை இல்லாமலேயே அர்ஜுனனுடைய கை, கர்ணனுடைய கையைவிட ஒரு பங்கு அதிகமாக ஓங்கித்தான் இருக்கிறது என்றாலும் அவனுடைய ஆற்றல் இதுவரையில் நிரூபிக்கப்படாதது. பாசுபதம் பெற்று, இந்திரலோகம் சென்று அங்கே அர்ஜுனன் தேவர்களிடத்தில் வில்வித்தையை மேம்படுத்திக்கொண்டு நிவாதகவசர்களை வெற்றிகொள்ளும் போதுதான் அவனுடைய ஆற்றல் புடம்போடப்பட்டு வெளியுலகுக்கு அடையாளப்படுத்தப் படுகிறது. அந்தச் சந்தர்ப்பம் வந்தபிறகுதான் தருமபுத்திரரின் துலாக்கோல், அர்ஜுனன் கர்ணனைவிட வலியவனே என்று ஏற்றுக்கொள்கிறது.

போர், போருக்கான ஆயத்தம் என்று பார்த்தால் பீமன், துரியோதனன் ஆகிய இருவருக்கிடையில் துரியோதனன் மேற்கொண்ட பயிற்சியே மேலானது. 'இவர்கள் எப்படியும் திரும்பி வந்துவிடுவார்கள்' என்ற அச்சம் இருந்த காரணத்தால் துரியோதனன் எப்போதும் கதாயுதப் பயிற்சியைச் செய்துகொண்டே இருந்தான். பீமனைப் போல ஓர் இரும்புப் பதுமையைச் செய்துவைத்து அதை அடித்து அடித்துப் பழகிக் கொண்டிருந்தான். போரெல்லாம் முடிந்த பிறகு, பீமனைத் தழுவ விரும்பிய திருதராஷ்டிரனுக்கு இந்த இரும்புப் பதுமையைத்தான் 'பீமன் என்று சொல்லிக் கண்ணபெருமான் தழுவச் செய்தான். திருதராஷ்டிரன் அந்த இரும்புப் பதுமையைத் தழுவியே நொறுக்கினான் என்று வாசிக்கிறோம். இதில் பீமன், துரியோதனன் ஆகியோருடைய போர் ஆயத்தம் தென்படுகிறது. பீமன், வனவாச காலத்தில், நீர் அருந்த வேண்டுமானால், தன்னுடைய கதாயுதத்தால் நீர் நிலைகளை அடித்து, அப்படி அடிப்பதனால் தெறித்து விழுகிற நீரை மட்டுமே பருகிக் கொண்டிருந்தான் என்று வில்லி பாரதம் சொல்கின்ற குறிப்பைத் தவிர நமக்கு பீமன் செய்த போர்ப் பயிற்சியைப் பற்றிய குறிப்பு ஏதும் கிடைக்கவில்லை. திரெளபதி கேட்ட சௌகந்திகா புஷ்பத்தைக் கொண்டு வரும்போது குபேரனுடைய ஆட்களைக் கொன்றது, கீசக வதம், ஜயத்ரத மான பங்கம், துரியோதனைக் காப்பதற்காக பீமனும் அர்ஜுனனும் போரிட்டு கந்தர்வன் சித்திரசேனனுடன் போரிட்டது போன்ற சில இடங்களில் பீமன் போரிட்டதும் அவனுடைய போராற்றலும் தொடர்ந்து வெளிப்படுகின்றன என்பதைத் தவிர்த்து, அவனுடைய போர்ப் பயிற்சியைப் பற்றிய குறிப்புகள் எதுவும் வியாச பாரதத்தில் இல்லை.

அதைப் போலவே, அர்ஜுனனுடைய விற்பயிற்சி தொடர்ந்து மேம்பட்டுக் கொண்டே வந்த இந்த வனவாச காலகட்டத்தில், கர்ணன் எந்தத் தனிப்பயிற்சியையும் மேற்கொண்டிருக்கவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. இவன் திவ்யாஸ்திரங்களை அடையவேண்டும் என்று தர்மபுத்திரர் விரும்பினார். அண்ணன் எடுத்துரைத்த விரிவான சிரம-சாத்தியங்களைக் கேட்டுக்கொண்ட பீமன் தன் வாதங்களைக் கைவிட்டு, அவருமடய பேச்சைக் கேட்டு அடங்கினான் என்கிறார் வியாசர். "அதிகக் கோபமுள்ள பீமஸேனன் இந்த வார்த்தையை அறிந்துகொண்டு தமையானாருடைய வார்த்தையால் தடுக்கப்பட்டவனாகி அடக்கத்துடன் கூடியவனானான்" என்கிறார் (மேற்படி இடம்.) "Vaisampayana continued, "Hearing these words of Yudhishthira, the impetuous Bhima became alarmed, and forbore from speaking anything" என்பது கிஸாரி மோஹன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு.

இவர்கள் இருவரும் இவ்விதமாகப் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் அங்கே வியாஸர் வந்தார். இப்போதுதான் தருமனுக்கு 'பிரதிஸ்ம்ருதி' என்ற வித்தையைக் கற்பித்து, அதை அர்ஜுனனுக்குக் கற்றுக்கொடுத்து, திவ்யாஸ்திரங்களைப் பெறுவதற்காக சிவனையும் பிறரையும் சென்று பார்க்கும்படியாக அனுப்பும்படி வியாஸர் சொல்கிறார். இவற்றைப் பார்க்கலாம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline