|
எர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 5) |
|
- ராஜேஷ், Anh Tran|மார்ச் 2016| |
|
|
|
|
கதவின்கீழ் ஒரு கடிதம்
மறுநாள் மிகவும் மெதுவாக நகர்ந்தது. அருண் பள்ளிக்கூடம் போனான். ரமேஷ் அலுவலகம் போனார். பக்கரூவை கவனிப்பதற்காக கீதா விடுமுறை எடுத்திருந்தார். பக்கரூ உடலெல்லாம் வீங்கிப்போய் ஒரு
மூலையில் படுத்துக் கொண்டிருந்தான்.
கீதா பக்கரூவின் வலியைக் குறைக்க வேளை தவறாமல் மருந்து கொடுத்தார். என்னதான் பல டாக்டர்கள் கருத்துகளைச் சொல்லிவிட்டாலும், கீதா இன்டர்நெட்டில் சென்று தேடிப் பார்த்தார். அவரே ஒரு விஞ்ஞானி.
ஆராய்ச்சி செய்வதில் வல்லவர். தன்வீட்டின் செல்லநாய் – தனது இன்னொரு குழந்தை – பிழைப்பதற்காக ஏதாவது வழி உண்டா என்று மிகவும் முயற்சித்தார்.
கீதா ஆசைப்பட்டபடி எதுவும் கிடைக்கவில்லை. பக்கரூ சில நாட்களில் தங்களை விட்டுப் பிரியப்போவதை நினைத்து துக்கப்பட்டார். நேரம் போனதே தெரியவில்லை. ரமேஷும் அருணும் வீட்டிற்குள் நுழைந்த
பொழுதுதான் சாயந்திரம் ஆகிவிட்டதை உணர்ந்தார்.
"அம்மா, பக்கரூ நல்லாய்ட்டானா? வேறேதாவது டாக்டர்கிட்டே இருந்து தகவல் வந்துச்சா?" என்று நுழைந்தவுடன் கேள்விமேல் கேள்வி கேட்டான் அருண். கீதா ஏதும் பதில் சொல்லாமல் இருந்தார். ரமேஷ்,
நிலைமையைத் தெரிந்துகொண்டு, பேசாமல் தனது அறைக்குள் சென்றார். "அம்மா, என்னம்மா ஒண்ணுமே பேச மாட்டீங்கறீங்க? பக்கரூ எங்கே அம்மா?" அருணின் குரலில் பதட்டம், கோபம், அழுகை எல்லாம் இருந்தன. ஒருமூலையில் பக்கரூ படுத்திருப்பதைப் பார்த்து அவனை நோக்கி
அருண் ஓடினான். "அம்மா, பக்கரூவின் மூச்சு நின்னுபோச்சு அம்மா" என்று கத்தினான். "என்ன!" என்று ஓடிவந்தார் கீதா. அதற்குள் ரமேஷும் மாடியிலிருந்து தடதடவென்று ஓடி வந்தார்.
"பக்கரூவின் மூச்சு நின்னுபோச்சு அம்மா, நின்னுபோச்சு" என்று அருண் வெறிவந்தது போலக் கத்தி அழுதான். கீதா கண்ணில் பெருகிவந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு பக்கரூவைத் தொட்டுப் பார்த்தார். அவன் ஒரு
முனகலோடு கண்ணைத் திறந்து பார்த்து மீண்டும் மூடிக்கொண்டான். கீதாவிற்கும் அருணிற்கும் அழுவதா, சிரிப்பதா என்று புரியவில்லை. |
|
"கண்ணா, பக்கரூ மூச்சு விடறான் பாரு" என்று கீதா காண்பித்தார். "போய் முகம் கழுவி வா. களைப்பாக இருப்பாய். பால் சாப்பிடு முதலில்." அருண் அம்மாவின் சொல் கேட்டு உள்ளே சென்றபின், கீதா
தயக்கத்தோடு ஒரு பிசினஸ் கார்டை எடுத்து ரமேஷிடம் கொடுத்தார். அது ஒரு Pet Funeral Service கார்டு.
"ப்ளீஸ்… நாம ஆகவேண்டிய ஏற்பாடுகளைக் கவனிக்கலாம்" என்று ரமேஷின் கையை ஆதரவாகப் பிடித்தபடி சொன்னார் கீதா. கீதா கொடுத்த கார்டை வாங்கிக்கொண்டு, ரமேஷ் செல்ஃபோனை எடுத்துக்கொண்டு
பின்புறம் சென்றார். பக்கரூவின் இறுதி ஏற்பாடுகள்பற்றி விசாரிக்க அவர் ஃபோன் செய்தார்.
அப்பொழுது வீட்டில் அழைப்பு மணி ஒருமுறை மட்டும் அடித்து ஓய்ந்தது. அது ஒரு திங்கள் கிழமை சாயங்கால வேளை. யார் அந்த நேரத்தில் என்று யோசித்துக்கொண்டே கீதா வாசல் பக்கம் சென்றார்.
வாசல் கதவைத் திறந்தால் அங்கே யாரும் இல்லை. யாராவது வேண்டுமென்றே தொந்தரவு செய்கிறார்களோ! வெளியே ஆள் அரவமே இல்லை. அங்குமிங்கும் தேடிவிட்டுத் திரும்பி வீட்டுக்குள் நுழையும்பொழுது
வாசல் கதவின்கீழ் ஒரு கடிதம் இருப்பதை கவனித்தார்.
அந்த லெட்டரின் கவரில் இப்படி எழுதி இருந்தது:
"செல்ல அருணுக்கு, மிகவும் அவசரம். உடனே பிரித்துப் படிக்கவும்." - (தொடரும்)
கதை: ராஜேஷ்; படம்: Anh Tran |
|
|
|
|
|
|
|