Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | நூல் அறிமுகம் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சாதனையாளர்
இளம் சாதனையாளர்கள்
'குறளரசி' கீதா அருணாச்சலம்
- ராஜி ராமச்சந்திரன்|ஏப்ரல் 2014||(6 Comments)
Share:
பிப்ரவரி 15, 2014 அன்று டாலஸ் நகரில் நடந்த திருக்குறள் போட்டியில், திருவள்ளுவரின் 1,330 அருங்குறளையும் மூன்று மணி நேரத்தில் ஒரே மூச்சில் சொல்லி, கேட்டோரை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார் திருமதி. கீதா அருணாச்சலம். தமிழ்நாட்டில் பிறந்து, 2001ல் அமெரிக்காவுக்குக் குடியேறிய, கீதா, பிரபல திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் பஞ்சு அருணாச்சலத்தின் புதல்வி. அத்தனை குறட்பாக்களையும் கூறியதோடு மட்டுமல்லாமல், நடுவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் தெளிவான விளக்கம் கூறித் திணறடித்தார்.

தன் சிறிய தகப்பனார் கவியரசு கண்ணதாசன் வாய்மொழியாகக் கூறிய கவிதை, கட்டுரைகளை எழுதி நூலாக்கிக் கொடுத்தவர் பஞ்சு அருணாச்சலம் என்பது நினைவிருக்கலாம். இன்றைக்கு கீதா மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் தலைவர், நகரத்தார் சங்கத்தில் முக்கியப் பொறுப்பாளர், சமூகப் பணியாளர், தமிழ்ப்பள்ளி ஆசிரியர், தஞ்சாவூர் ஓவியக்கலை வல்லுநர், அதற்கென ஓவியப் பள்ளி நிறுவி நடத்துபவர், குடும்பத்தலைவி என்று அட்டாவதானியாகத் திகழ்ந்து வருகிறார்.

கண்ணதாசனின் மகள் வயிற்றுப் பேரன் திரு. சுப்பிரமணியனை மணந்தார் கீதா. இவர்கள் இருவரும் கண்ணதாசனின் 80வது பிறந்தநாளை ஒட்டிப் பல அறிஞர்களை வரவழைத்து 2007ல் டாலஸில் 'கண்ணதாசன் விழா' ஒன்றை வெகு சிறப்பாக நடத்தினர். குழந்தைகளாக இருந்த இவ்வாரிசுகளைக் கண்ணதாசன் மடியில் வைத்திருக்கும் புகைப்படத்தை நினைவுகூர்ந்து, "கவியரசர் ஒரே நேரத்தில் தன் இரு தொடைகளிலும் உங்கள் இருவரையும் அமர்த்தி இளமைப் பருவத்திலேயே வாழ்த்தியதால் வள்ளுவன் வசப்பட்டானா?" என்று கீதாவிற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கேட்டிருக்கிறார், 'சொல்லின் செல்வி' உமையாள் முத்து!இளவயதில், தந்தையாரின் படத் தயாரிப்பு, கதை, வசனம், பாடல்கள் என்று வீடெங்கும் தமிழ் தவழும் சூழ்நிலையில் வளர்ந்த கீதாவிற்குப் புத்தக ஆர்வம் இரண்டாம் வகுப்புப் படிக்கும்போதே வந்துவிட்டது. ஆறாம் வகுப்புப் படிக்கையில் தன் இரட்டைச் சகோதரியுடன் சேர்ந்து, நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் உட்படப் பல நாடகங்களை எழுதி மேடையேற்றி இருக்கிறார். இவர் பட்டம் பெற்றது ஆங்கில இலக்கியத்தில் என்றாலும், தமிழிலக்கியங்கள் பலவற்றையும் படித்து வருகிறார்.

2009, 2012ம் ஆண்டுகளில் முறையே 100, 200 குறள்களை அநாயாசமாகச் சொல்லி வெற்றிபெற்ற தன் மகள் நிவேதாவிற்குக் குறள் கற்பித்திருக்கிறார் கீதா. கற்பதில் 10 வயதே நிரம்பியிருந்த மகள் காட்டிய அசுரவேகம் கீதாவைத் தூண்டிவிட, முனைப்போடு படித்து, 2013ல் பெரியவர்களுக்கான போட்டியில் பங்கேற்று 500 குறள்களைப் பொருளுடன் கூறிப் பரிசை வென்றார். அதே வருடம் சிறியோருக்கான போட்டியில் இவரது மாணவி 13 வயது சீதா ராமசாமி 300 குறள்களைச் சொல்லி முதல் பரிசு வாங்கியதில் கீதாவுக்கு மிகவும் பெருமை.

அப்போதுதான் 'கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்திக் குறுகத் தறித்த' குறட்பாக்கள் அனைத்தையும் படித்துச் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது கீதாவுக்கு. முதலில் குறள்களைச் சிறு, சிறு பகுதிகளாகப் பிரித்துப் பொருளுடன் படித்தார். சுமார் 50 முறையாவது எல்லாவற்றையும் எழுதிப் பார்த்திருக்கிறார். பின்னர் ஒவ்வொரு குறளின் முதற்சொல்லை மட்டும் எழுதிக்கொண்டே பலமுறை சொல்லிப் பழகியிருக்கிறார். இதனால் அவருக்குக் குறளின் எண்கூட நினைவில் நிற்கத் தொடங்கிவிட்டது. இந்தப் பயிற்சிகள் அவருக்கு இந்த இமாலய வெற்றியைத் தேடித்தந்தன.
கவியரசரின் குடும்பத்தில் பிறந்ததைத் தான் பெற்ற பேறாக நினைக்கும் கீதா, "50 வருடத் திரையுலக வாழ்வில் பல விருதுகளை வாங்கும்போது அடைந்த மகிழ்ச்சியை விட உன் சாதனையை அறிந்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி பெரிது" என்று தந்தையார் பஞ்சு அருணாச்சலம் பாராட்டியது தன்னை நெகிழ வைத்ததாகக் கூறுகிறார்.

நாம் ஒவ்வொரு குறளையும் உள்வாங்கி அதன்படி நடப்போமேயானால் நாம் தவறே செய்ய மாட்டோம் என்பது கீதாவின் அசைக்க முடியாத நம்பிக்கை.

கீதா பல உரைகளை விரும்பிப் படித்தாலும், பரிமேலழகர் உரையில் அவருக்குக் கூடுதல் நாட்டம். தென்றலில் 'ஹரிமொழி' பகுதியில் வெளியான குறள் விளக்கங்கள் அவருக்கு மிகப் பிடித்தவை. அமெரிக்காவாழ் குழந்தைகளுக்குப் புரியும்படியாகக் குறளுக்கு எளிய உரை எழுதவேண்டும், "நித்தம் ஒரு குறள்" என முகநூலில் எழுதிக் குறளை அனைவருக்கும் சென்றடையச் செய்யவேண்டும் என்றெல்லாம் திட்டங்கள் அவரிடம் உண்டு.

"என் மக்கள் மூவருமே தமிழில் நன்கு பேசுவார்கள். எழுதப் படிக்கவும் தெரியும். வீட்டில் பெரியவர்களோடு தமிழில் நன்கு உரையாடுவார்கள்" என்று பெருமிதத்தோடு சொல்கிறார் கீதா. முன்னேர் சென்ற வழியேதானே பின்னேரும் செல்லும்!

ராஜி ராமச்சந்திரன்,
அட்லாண்டா

*****
மிகப்பிடித்த குறள்கள்
கீதாவுக்குப் பிடித்த குறள் எது என்றால், சட்டென்று

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்

என்கிறார். அவரது சாதனையைப் பார்த்தாலே இந்தக் குறள் அவர் நெஞ்சில் பதிந்துவிட்ட ஒன்றென்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற

என்று கூறிய அவரே அக்குறளுக்கு விளக்கமாகவும் தெரிந்தார். அவர் கூறிய அடுத்த குறளும் சுவையானதுதான்.

ஊடியவரை உணராமை வாடிய
வள்ளி முதல் அரிந்தற்று

இதற்கு "ஊடல் கொண்ட மனைவியிடம் கணவன் அன்பாகப் பேசிச் சமாதானப் படுத்தாமல் இருந்தால், அது முன்னமே வாடியிருக்கும் ஒரு கொடியைக் கீழிருக்கும் கிழங்கோடு தோண்டி அறுத்தல் போன்றது" என்று பொருள். இது போன்ற இன்பத்துப்பாலில் உள்ள குறள்கள், "ஓர் ஆணாக இருந்த திருவள்ளுவரால் எப்படி ஒரு பெண்ணின் மெல்லிய குணங்களைத் துல்லியமாக உணர முடிந்தது?" என்று தான் வியப்பதாகக் கூறினார்.

*****


குறளரசியின் நினைவில் கவியரசர்
"ஐந்து அல்லது ஆறு வயதில் கவிஞர் ஐயா வீட்டிற்குப் போனபோது அவரைப் பார்த்த ஞாபகம் இருக்கின்றது. நெடுநெடுவென்று உயர்ந்த கம்பீரமான தோற்றம், சிவந்த மேனி, நெற்றியில் திருநீறு எனப் பார்க்கவே தெய்வீகமாக இருப்பார். மற்றபடி அவரோடு பேசியது எதுவும் நினைவில் இல்லை. நானும் என் தங்கையும் இரட்டைச் சகோதரிகள் (identical twins). பார்க்க அச்சு அசல் ஒரேமாதிரி இருப்போம். எங்களை 'லலிதா பத்மினி' என்றுதான் ஐயா அழைப்பார்களாம்" என்று நினைத்துப் பார்க்கிறார் கீதா.
More

இளம் சாதனையாளர்கள்
Share: 
© Copyright 2020 Tamilonline