|
|
|
|
சிலர் விவாகம் செய்து கொள்ளுகின்றனர். சிலருக்கு விவாகம் செய்து வைக்கப்படுகிறது.
நமது தேசத்தில் அநேகமாய் விவாகம் செய்து வைக்கப்படுகிறது. ஆனால் கிருஷ்ணன் மட்டும்தான் எப்பொழுதாகிலும் விவாகம் செய்து கொண்டால்-அவன் என்னவோ சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ணர் இவர்களுடைய உபதேசங்களைப் படித்தபின் பிரம்மசாரியாகவே இருப்பதெனத் தீர்மானித்திருந்தான்; இருந்தும், எப்பொழுதாகிலும் கல்யாணம் செய்து கொள்வதென்றால்-பெண்ணை முன்னதாகப் பார்த்து, அவள் தனக்குப் பிடித்திருந்து, அவளுக்கும் தான் பிடித்திருந்தால்தான் விவாகம் செய்துகொள்ளத் தீர்மானித்திருந்தான்.
இவ்விதக் கொள்கைகளிலிருந்து கிருஷ்ணன்-ஆர்.டி. கிருஷ்ணன், இஞ்ஜினீரிங் காலேஜின் நான்காவது வருஷத்திய மாணாக்கன்-சாதாரண வாலிபர்களைப் போன்றவன் அல்ல என்பதும் வாழ்க்கையில் உயர்ந்த லக்ஷியங்கள் உடையவன் என்பதும் தெரியவரும்.
அவனுக்கு ஒரு தினம் ஒரு கடிதம் வந்தது.
"உனக்கு விவாகம் நிச்சயம் செய்திருக்கிறேன். காலேஜ் எப்பொழுது மூடுவார்கள் என்பதை எழுது. அதற்குத் தகுந்தபடி முகூர்த்தம் வைக்க வேண்டும்"-இவ்வாறு அவனுடைய தகப்பனார் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார்.
இதைப் படித்ததும் கிருஷ்ணனுக்குக் கோபம் அதிகமாக வந்தது. "இதென்ன! இந்தியர்களே இந்த மாதிரிதான். தாய் தகப்பன்மார்கள் நமக்குச் சிறிதும் சுதந்திரம் கொடுப்பதே இல்லை. வெளி மரியாதைக்காகிலும் "உனக்குச் சம்மதமா?" என்று ஒரு வார்த்தை கேட்பார்களா? கண்மூடி அதிகாரம். நியாயமென்பது கொஞ்சங்கூடக் காணவில்லை. பெண்சாதியைக் கட்டிக்கொண்டு ஆயுள் முழுவதும் கஷ்டப்படப் போகிறவன் நானா? நீங்களா? என் அபிப்பிராயத்தை ஒரு வார்த்தை கேட்டால் என்ன? தகப்பனாரின் அதிகாரத்திற்கும் ஓர் எல்லை இல்லையா?" என்று இரைந்தான். கோபத்தில் குதித்தான். ஆனால் இவையெல்லாம் கிண்டியில் அவனுடைய ஹாஸ்டல் அறைக்குள் நடந்தவை. அறையில் வேறு ஒருவரும் இல்லை. ஒரு பாவமும் அறியாத அந்த அறைச்சுவர்கள் அவனுடைய திட்டுக்களையும் கோபத்தையும் தெய்வமே என்று பொறுத்துக் கொண்டன.
கிருஷ்ணன் தன்னுடைய தந்தைக்குக் கோபமாகக் கடிதம் எழுதினான் - "நான் இப்பொழுது விவாகம் செய்துகொள்ளப் போகிறதாயில்லை. பிற்பாடு செய்துகொள்ளும்போது நானாகப் பார்த்து எனக்குப் பிடித்த பெண்ணைத்தான் செய்துகொள்ளப் போகிறேன்."
உரிய காலத்தில் அதற்கு விடை கிடைத்தது.
"நான் நிச்சயம் செய்திருக்கையில் மாட்டேனென்கிறாயா? கட்டாயம் செய்துகொள்ளத்தான் வேண்டும். பெண் நன்றாக இருக்கிறாள், படிக்கிறாள், சொத்து இருக்கிறது என்றெல்லாம் நான் சமாதானம் சொல்லப் போகிறதில்லை. அதெல்லாம் இந்தப் 'பாயிண்டி'ல் சேராது. நான் சொல்வதெல்லாம் 'நான் ஏற்பாடு செய்திருக்கிறேன். நீ செய்துகொள்ள வேண்டும்' என்பதே. என்னுடைய பிள்ளைக்கு நான் சொல்வதைக் கேட்க வேண்டுமென்று ஞானம் இருக்குமென்று நம்புகிறேன்"-இவ்வாறு தகப்பனார் எழுதினார்.
அவ்விதக் கண்டிப்பான பேர்வழி கிருஷ்ணனின் தந்தையாகிய ஸ்ரீ தேவராஜ ஐயர்.
தான் கோபித்துக் கொண்டிருப்பதைக் காண்பிப்பதற்காகக் கிருஷ்ணன் இந்தக் கடிதத்திற்குப் பதில் எழுதவில்லை.
அடுத்த மாதம் அவனுக்குப் பணம் அனுப்பின சமயம் அவனுடைய தகப்பனார் எழுதியிருந்தார்.
"உனக்கு இந்த மாதம் 18-ஆம் தேதியுடன் காலேஜ் மூடிவிடுகிறார்களென்று அறிகிறேன். இருபத்திரண்டாம் தேதி விவாகத்திற்கு முகூர்த்தம். ஆகையால் நீ சென்னையிலேயே இரு. நாங்கள் இருபதாம் தேதி அங்கே வருகிறோம்."
பிறகு அடியில் ஏதோ ஞாபக மறதியில் விட்டுப்போன சமாசாரம் மாதிரி இதையும் எழுதியிருந்தார்.
"பெண் ஸ்ரீ ஏ.வி. சாஸ்திரியின் ஒரே மகள், ருக்மிணி. அவர்கள் மயிலாப்பூரில் லஸ்ஸில் லக்ஷ்மி விலாஸத்தில் இருக்கிறார்கள்."
ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என்று ஒவ்வொன்றாய்ப் பத்துத் தேதியாகிவிட்டது. என்ன செய்வதென்று கிருஷ்ணனுக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மாத்திரம் அவன் தீர்மானித்திருந்தான்; என்ன ஆனாலும் சரி, இந்தக் கல்யாயணத்திற்கு மாத்திரம் தான் உட்படுவதில்லை என்று.
தன்னுடைய இஷ்டப்படிதான் இந்த விஷயத்தில் நடக்க வேண்டுமென்ற கொள்கையை ஸ்தாபிப்பதற்காகக் கிருஷ்ணன் தன்னுடைய உயிரை வேண்டுமானாலும் கொடுத்து விடுவதெனத் தீர்மானித்திருந்தான். "அப்படி ஏதாவது செய்தால்தான் இந்தத் தந்தைக்குப் புத்தி வரும். இனியாகிலும் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் செய்து வைக்காமல் இருப்பார்கள்" என்று எண்ணினான்.
ராஜமகேந்திரபுரத்தில் பெரிய இஞ்ஜினீயராக இருக்கும் ஸ்ரீ தேவராஜ ஐயர் தம் பிள்ளையின் மனத்தில் தோன்றும் இவ்வித எண்ணங்களைப் பற்றி ஒன்றும் அறியாதவராய், நிச்சிந்தையாகக் கல்யாணக் கடிதங்கள் அனுப்ப வேண்டியவர்களின் விலாசங்களைத் தம் குமாஸ்தாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
கிருஷ்ணன் இதே விஷயமாக அதிகம் ஆலோசித்த பின் சந்நியாசம் எடுத்துக் கொண்டு தன்னுடைய கல்யாணத்திற்கு நான்கு தினமும் முன்பே வடக்கே போய்விடுவதென்று தீர்மானித்தான். பிள்ளைகளுக்குத் தகுந்த சுதந்திரம் கொடுக்காத தகப்பன்மார்களுக்கெல்லாம் சரியான புத்தி கற்பித்து, தன்னுடைய லட்சியத்தை நிலைநிறுத்தத் தன்னையே பலியாக்கிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான். "இதை நன்றாக விளக்கி ஒரு கடிதம் எழுதி வைக்க வேண்டும். அந்தக் கடிதத்தைப் பத்திரிகைகளில் பிரசுரிக்க நேரிடலாமாகையால் அதை நன்றாக எழுத வேண்டும். என்ன என்ன எழுதுவது?" என்று கிருஷ்ணன் தன்னுடைய மனதிற்குள் யோசித்துக் கொண்டிருந்தான். "என்னுடைய கொள்கைக்காக நான் என்னுடைய வாழ்க்கையைத் துறக்கிறேன்" என்பது அதில் முக்கிய அம்சம்.
கிருஷ்ணனுக்கு மற்றோர் எண்ணம் உண்டாயிற்று. அவன் மிகவும் நல்ல குணமுள்ளவன். தன்னுடைய தந்தையுடன் எதிர்த்துச் சண்டையிட்டுத் தனது காரியத்தைச் சாதித்துக் கொள்ளாமல் இவ்விதம் தன்னையே தியாகம் செய்யத் தீர்மானித்திருப்பதிலிருந்தே அவன் மிகவும் சாது என்பது தெரிய வரும். வீணாக ஒருவரை மனவருத்தமடையச் செய்யும் சுபாவம் அவனுக்கு இல்லை.
ஆகையால் அந்தப் பெண் இருக்கிறாளே, அவளுடைய பெயர் என்ன? ருக்மிணி, பாவம்! அவளை நினைத்தபோதுதான் அவன் மனசு கஷ்டப்பட்டது. தனக்குக் கல்யாணமாகப் போகிறதென்று அவள் எண்ணிப் பிற்பாடு திடீரென்று அவன் போய்விட்டதால் கல்யாணம் நின்றுபோய், பெரிய ஏமாற்றம் அடையப் போகிறாளே என்ற எண்ணம் கிருஷ்ணனை வருத்திற்று. இரண்டு நாள் இந்த எண்ணம் அவனுடைய மனத்தை உறுத்தவே, அவனால் பொறுக்க முடியவில்லை. ருக்மிணி, பாவம், ஏமாறக்கூடாது என்று தீர்மானித்து அவளுக்கு, தன்னுடைய தகப்பனார் எழுதியிருந்த விலாசத்திற்கு ஒரு கடிதம் எழுதினான்:
"அன்புள்ள ருக்மிணி,
நம் இருவருக்கும் விவாகம் நடக்கப் போகிறதாக நான் கேள்விப்பட்டேன். இது விஷயமாக நானும் சில சொல்ல வேண்டும். நான் உன்னைக் காணக்கூடுமா? எங்கே, எப்போது செüகரியப்படும்?"
மறு தபாலில் அவளிடமிருந்து பதில் வந்தது:
"ஆமாம், நானும் நம் இருவருக்கும் விவாகமென்றுதான் கேள்விப்பட்டேன். இந்தக் காலத்திலும் இவ்விதக் கர்நாடகத் தாய் தந்தையர் இருக்கிறார்கள். அவர்களை மியூஸியத்தில் வைக்கலாமென்று எனக்குத் தோன்றுகிறது. நான் தினமும் காலேஜிலிருந்து வந்ததும் கடற்கரைக்குச் செல்வது வழக்கம். மேரி காலேஜ் எதிரில் ஆ.ந. 1828-ஆம் நம்பர் மோட்டாரில் நான் உட்கார்ந்திருப்பேன். நாளை மாலை ஆறு மணிக்கு அங்கே உங்களை எதிர்பார்க்கிறேன்."
கிருஷ்ணன் தன்னுடைய கடிதத்திற்கு எவ்வித விடையை எதிர்பார்த்தானென்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் ஒன்று நிச்சயமாகச் சொல்லக்கூடும். அப்பெண்மணி இவ்விதம் அவனுடைய மனத்தில் இருப்பதையே எழுதுவாளென்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவேயில்லை. அதனால்தான் போலும். அந்தக் கடிதத்தை மறுபடி மறுபடி படித்தான். பிறகு மறுநாள் சாயங்காலம் வருவதற்கு இப்பொழுதிலிருந்தே எவ்வளவு மணிநேரம் இருக்கிறதென்று கணக்கிட்டான். அதற்குமேல் அவளிடம் எவ்விதம் நடந்து கொள்வதென்று யோசித்தான். மரியாதையாக, ஆனால், கண்டிப்புடன் நடந்து கொள்வதென்று தீர்மானித்தான்.
"உனக்கு வீண் கஷ்டம் கொடுக்க இஷ்டமில்லை. அதனாலேயே முன்னதாகச் சொல்ல விரும்பினேன். ஆனால் என்னுடைய தீர்மானம் இது. இந்த மாதிரிதான் நான் செய்யப் போகிறேன்" என்று அவன் சொல்லுவான்; அவள் என்ன சொன்னால் என்ன? அதற்காகத் தன்னுடைய தீர்மானத்தை என்னவோ மாற்றப் போவதில்லை. இருந்தும் அவள் சற்று வருத்தம் காண்பிப்பாள் என்று அவன் நம்பினான்.
மறுதினம் எந்த 'டை’ கட்டிக்கொண்டு எந்தக் கோட்டுத் தரித்துக் கொள்வதென்று நிச்சயித்துவிட்டுக் கவலையின்றி தூங்கச் சென்றான் கிருஷ்ணன்.
***** |
|
மயிலாப்பூர் சமுத்திரக் கரையை உங்களுக்குத் தெரியுமல்லவா? ஆகையால் நான் அதை வர்ணிக்க வேண்டியதில்லை. வழக்கம்போல் அங்கே சமுத்திரம். கரை, மணல், காற்று, தார் ரோடு, மோட்டார் வண்டிகள், காற்று வாங்குவதற்கென்று அலங்கரித்துக் கொண்டு வந்திருக்கும் பெண்மணிகள், அங்கே வருவதற்கென்று தாமொன்றும் அலங்கரித்துக் கொள்ளவில்லை என்று பாவிக்கும் ஆடவர்கள் ஆகிய எல்லோரும் ஆஜராக இருந்தனர்.
கிருஷ்ணனும் ஐந்தே முக்கால் மணிக்கு அங்கே வந்து சேர்ந்தான். மறுதினம் உலகத்தையே துறந்து சந்நியாசியாகப் போகிற வைராக்கியம் அவனுடைய முகத்தில் காணப்பட்டது. குறிப்பிட்ட இடத்திற்குச் சற்றுத் தூரத்திலேயே நின்று கொண்டு ஆறு மணியாகும்வரை காத்திருந்தான்.
ஐந்து ஐம்பதிற்கு ஒரு சிவப்பு ஸலூன் 1828-ஆம் எண்ணுடன் கம்பீரமாக வந்து மேரி காலேஜிற்கு எதிரில் நின்றது. அவ்வண்டியின் முன்புறம் வண்டி ஓட்டுபவனும் ஓர் ஆயாவும் உட்கார்ந்திருந்தார்கள். பின்புறம்: அவள் சுமாராக லக்ஷணமாக இருப்பாளென்றே கிருஷ்ணன் எதிர்பார்த்தான். ஆனால், இவ்வளவு அழகா! முற்றாத பூங்கொடி போன்ற மெலிந்த சரீரமும், உயரமான வாட்டமான தேகமும் கொண்ட தேவமங்கை போன்ற பெண் உட்கார்ந்திருந்தாள். வயது பதினெட்டிருக்கலாம். அவள் தான் உட்கார்ந்திருப்பதால் அந்த வண்டிக்கே ஓர் அழகு கொடுத்து அதைப் பிரகாசிக்கச் செய்பவளாய், யாரையோ எதிர்பார்ப்பவள்போல் பாதையில் செல்பவர்களை ஆவலாய் நோக்கினாள். கிருஷ்ணன் மறுபடி வண்டியின் எண்ணைப் பார்த்துத் தன்னுடைய ஜேபியிலிருக்கும் கடிதத்தின் எண்ணுடன் ஒப்பிட்டுக் கொண்டான். இது முற்றும் அநாவசியமான செய்கை. அந்த வண்டியின் எண் அவனுக்கு நெட்டுருவாகியிருந்தது. இருந்தும் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அவனுக்கு உண்டான உணர்ச்சி சற்றுத் தணிவதற்கு இச்செய்கை அவகாசம் அளித்தது. பிறகு ’டை'யைச் சரிப்படுத்திக் கொண்டு முகத்தில் வைராக்கியம் தோன்ற வண்டியண்டையில் சென்றான்.
இருவர் கண்களும் சந்தித்தன. ருக்மிணி புன்சிரிப்புடன் நமஸ்கரித்தாள். "வண்டியில் உட்காருகிறீர்களா அல்லது கீழே இறங்கி நடக்கலாமா?" என்று கேட்டாள். கிருஷ்ணனுக்குத் தான் சொல்ல வந்ததை அந்த ஆயாவின் எதிரில் செல்ல விருப்பமில்லை. ஆகையால் மிக மரியாதையுடன் வண்டியின் கதவைத் திறந்து கொடுத்து, "கொஞ்சம் நடக்கலாமா?" என்றான்.
ருக்மிணியும் சம்மதிக்கவே இருவரும் இறங்கிச் சென்றனர்.
கிருஷ்ணனுக்கு எப்படி ஆரம்பிப்பது, என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆகையால், "உன்னுடைய பாடம் என்ன?" என்றான்.
"எகனாமிக்ஸும் பாலிடிக்ஸும்" என்றாள் அவள்.
"மூன்றாம் வகுப்பா?"
"ஆம்."
இப்படிப் பேசிக்கொண்டே இருவரும் சென்று கரையோரமாக மணலில் உட்கார்ந்தனர்.
"இந்தக் கல்யாணம்" என்று வெறுப்புடன் ஆரம்பித்தான் கிருஷ்ணன்.
"ஆமாம்" என்று வருத்தத்துடன் தலை ஆட்டினாள் ருக்மிணி.
"உனக்கும் இஷ்டமில்லையா?"
"கொஞ்சங்கூட இல்லை. அவரவர்கள் அபிப்பிராயத்தைக் கேட்காமல் செய்வதென்றால்!"
"நீ இதற்குச் சம்மதிக்கமாட்டாயே!"
"சம்மதிக்கக்கூடாது. என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை" என்று தலையைத் தொங்கவிட்டுக்கொண்டு சொன்னாள் ருக்மிணி.
அவளுடைய வருத்தம் கிருஷ்ணனின் மனத்தை கரைத்துவிட்டது.
"சம்மதிக்கவே சம்மதிக்காதே. நான் உனக்கு உதவி செய்கிறேன். நான் ஓடிப் போய்விடப் போகிறேன்" என்றான்.
"என்ன!"
"ஆமாம். அதைச் சொல்வதற்காகத்தான் உன்னைப் பார்க்க வேண்டுமென்றேன். கல்யாணம் செய்துகொள்ளப் போகிறது நாம்தானே! அப்படியிருக்க நம்மைக் கேட்காமல் ஏற்பாடாகியிருக்கும் இந்தக் கல்யாணத்திற்குக் கொஞ்சமும் சம்மதிக்கக்கூடாது. நான் சந்நியாசம் வாங்கிக்கொண்டு வடக்கே போய்விடப் போகிறேன்."
"அப்படிப் போனால் உங்களுடைய அப்பா என்ன செய்வார்?"
"செய்வதென்ன! புத்தி வரும்" என்று ஆத்திரமாகக் கூறினான் கிருஷ்ணன். அவனுடைய கண்களில் தீப்பொறி பறந்தது. நிமிர்ந்து உட்கார்ந்தான். அவனுக்குத்தான் என்ன தைரியம்! கோபத்தில் எவ்வளவு அழகாயிருந்தான்! ருக்மிணி அவனைப் பரிந்த கண்களுடன் நோக்கினாள். அவளுக்கு அவனிடம் பக்தி உண்டானதில் ஆச்சரியமில்லையே!
"எல்லாவற்றையும் நான் துறந்துவிடப் போகிறேன். எனக்கு உலகமே வேண்டாம். இருபதாம் தேதி நான் மறைந்துவிடப் போகிறேன். அன்றைக்கு என்னுடைய தகப்பனார் வருவார். ஆனால் அவர் என்னைப் பார்க்கமாட்டார். இவ்விதம் நான் கண்டிப்புடன் இருந்தால்தான் இனி மேலாகிலும் மற்றத் தகப்பன்மார்கள் தங்களுடைய பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தாமல் இருப்பார்கள். பிள்ளைகளுக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்!"
"ஆனால் நீங்கள் கஷ்டப்பட வேண்டுமே!" என்று அனுதாபத்துடன் கூறினாள் ருக்கு.
"ஒரு லக்ஷியத்திற்காக நமது உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டாமா!"
"ஆமாம், ஆமாம்" என்றாள் ருக்கு. இப்பொழுது அவளுடைய கண்களும் தான் செய்யப்போகும் தியாக உணர்ச்சியினால் பளபளவென்று பிரகாசித்தன. "முன்பின் அறியாத ஒரு மிருகத்திற்குக் கல்யாணம் செய்துகொடுத்து, அவன் திட்டினாலும் அடித்தாலும் பொறுத்துக்கொண்டு அவனுடைய இஷ்டப்படியெல்லாம் ஆடிக்கொண்டு, சாகும்வரை அவனைத் தவிர வேறு கதி இல்லை என்று எவ்வளவு பெண்கள் திண்டாடுகிறார்கள்!" என்று ருக்கு ஆத்திரமாகப் பேசினாள். அவ்வப்போது அவளுடைய வதனத்தில் வெறுப்பு, உதாசீனம், ஆத்திரம், கோபம், வருத்தம் முதலிய எல்லா உணர்ச்சிகளும் மாறிமாறித் தோன்றும் சமயம் அது எவ்வளவு வசீகரமாகத் தென்பட்டது! அந்த முகத்தைக் கண்டவர் அதனுடைய அழகில் ஈடுபடாமல் இருக்க முடியுமா?
"நான் உன்னைத் திட்டுவேனா? அடிப்பேனா? எந்த விஷயத்திலாகிலும் சிறிதாகிலும் நிர்ப்பந்தம் செய்வேனா?" என்று சற்று மனஸ்தாபப்பட்டுக் கேட்டான் கிருஷ்ணன்.
ருக்குவின் முகம் வெட்கத்தால் சிவந்தது; "இல்லை உங்களைச் சொல்லவில்லை. பொதுவாகச் சொன்னேன்" என்று தலையைக் குனிந்துகொண்டு சொன்னாள்.
கிருஷ்ணன் தலையை ஆட்டினான். "ஆமாம், ஆமாம். எனக்குத் தெரியும். சதா நச்சு நச்சு என்று புருஷனுடைய வருத்தம் தெரியாமல் அவனைத் தொந்தரவு செய்து, அவனுடைய ரத்தத்தை உறிஞ்சுவதுபோல் அவன் எவ்வளவு சிரமப்பட்டு எவ்வளவு சம்பாதித்தாலும் அத்தனைக்கும் புடவையும் நகையும் வாங்கிக் கொண்டு அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் தங்களுடைய பெருமையிலும் வம்பு பேசுவதிலுமே காலம் கழிக்கும் பெண்களைக் கட்டிக்கொண்டு எத்தனை பேர்கள் திண்டாடுகிறார்கள்!" என்றான்.
ருக்மிணி அவனுடைய பக்கமே பார்க்காமல் சமுத்திரத்தைப் பார்த்துக்கொண்டு, "எனக்கு நகையே பிடிக்காது. தவிர புருஷனாகக் கொடுக்காததை நான் வாயைத் திறந்து கேட்பேனா? அதைவிடப் பிராணனை விடுவது மேல்" என்று ரோஷமாகச் சொன்னாள்.
கிருஷ்ணன் ஒரு பெருமூச்சு விட்டான். இருட்டிவிட்டது. தூரத்தில் பாதையிலிருக்கும் விளக்கு வரிசைகள் அழகாயிருந்தன. நடுவானத்தில் அர்த்த சந்திரனுக்கு அருகில் இருக்கும் நக்ஷத்திரங்கள் அவர்களைப் பார்த்து மகிழ்வனபோல் மினுக்கு மினுக்கென்றன.
"ஸம்சார வாழ்க்கையைப் பற்றி நான் அதிக மனக்கோட்டைகள் கட்டியிருந்தேன். ஒரு சிறிய விஷயத்திலும், ஓர் அற்ப விஷயத்திலுங்கூட என்னுடைய மனைவியைக் கட்டுப்படுத்த மாட்டேன். அவளை என்னுடைய கண்ணுக்குள் மணியாக வைத்திருப்பேன். அவள் என்பேரில் சம்சயப்படும்படி நடந்து கொள்ள மாட்டேன். கல்யாணமாகிக் கொஞ்ச நாளானால் பல பேர்கள் ஒருவருக்கொருவர் அலுத்துக்கொண்டு சண்டையிடுகிறார்களே! நான் அந்த அலுப்புக்கு இடம் கொடுக்கமாட்டேன். தினமும் என்னுடைய மனைவிக்கு ஒரு புதுவிதத்தில் சந்தோஷமுண்டாக்கப் பார்ப்பேன்" என்றான். அவன் கடலின் அழகையாகிலும் நிலாவின் ரம்யமான காட்சியையாகிலும் கவனிக்கவேயில்லை. அவை இருப்பதுகூட அவனுக்குத் தெரியுமோ என்பது சந்தேகம். தலைகுனிந்து மணலில் ஏதோ கோலம் போட்டுக்கொண்டு இருக்கும் ருக்மிணியின் முகத்தைக் கவனித்தவண்ணம் அவன் ஆவலுடன் நெருங்கிப் பேசினான். முதலில் அவர்கள் உட்கார்ந்த சமயம் இருவருக்கும் இடையில் ஐந்தடி தூரம் இருந்தபோதிலும் இப்பொழுது ஒரே ஓர் அடி (பன்னிரண்டு அங்குலம்) இருந்தது.
"நானுந்தான்" என்று ருக்மிணி தலைநிமிர்ந்து உருக்கமாய்ச் சொன்னாள். "நான் என்னுடைய கணவரைத் தெய்வம்போல் எண்ணுவேன். அவர் என்னை எந்த விஷயத்திலும் கட்டாயப்படுத்துவதாவது! அவருக்கும் எனக்கும் அபிப்பிராய பேதமே இராதே. அவர் எது சொன்னாலும் அந்தப்படியே நான் கேட்பேன். அவ்விதம் செய்வதில்தான் எனக்குச் சந்தோஷம் இருக்குமே தவிர என் இஷ்டப்படி நடப்பதில் இல்லை" என்று சொல்லி அவளும் பெருமூச்சுவிட்டாள்.
"எல்லாம் வீணாகிவிட்டது. அதைப்பற்றிப் பேசி என்ன பயன்?" என்றான் கிருஷ்ணன்; "என்னுடைய வாழ்க்கையே வீணாய்விட்டது!" என்று மேலும் சொல்லிப் பெருமூச்செறிந்தான்.
இளகிய மனத்தினளாகிய ருக்மிணியின் கண்களில் ஜலம் ததும்பிற்று.
மௌனமாக இருவரும் துயரத்தில் ஆழ்ந்தவர்களாய்ச் சற்று நேரம் கடலை நோக்கியவண்ணம் உட்கார்ந்து, பிறகு ருக்மிணிக்கு ஓர் எண்ணம் தோன்றவே, "தகப்பனார் நிர்ப்பந்திக்கிறார் என்பதனால் இந்தக் கல்யாணம் பிடிக்கவில்லையா? அல்லது... அல்லது என்னைக் கண்டாலே பிடிக்கவில்லையா?" என்று மிருதுவான குரலில் கேட்டாள்.
கிருஷ்ணன் திடுக்கிட்டு உட்கார்ந்தான். "என்னது! உன்னைக் கண்டால் பிடிக்கவில்லையா? உன்னைப் போன்ற பெண் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே! அந்த மாதிரியெல்லாம் சொப்பனத்திலும் நினைக்காதே. ஒரு கொள்கை என்று இருக்கிறதல்லவா? ஒரு வார்த்தை என்னைக் கேட்டிருக்க வேண்டாமா? உன்னையும் கேட்டிருக்க வேண்டாமா? உனக்கு இஷ்டமில்லாதிருக்கும்போது உன்னைக் கல்யாணம் செய்துகொள்வது போன்ற கஷ்டம் எனக்கு வேறு எதுவும் இல்லை. உன்னுடைய மனசு சிறிது புண்படுவதைத் தடுக்க நான் ஏழு ஜன்மத்திற்கு நரகத்தை அனுபவிப்பேன்" என்று ஆவலாய்ச் சொன்னான்.
அப்பொழுது ருக்மிணியின் முகம் சிவந்ததா இல்லையா என்பதைச் சொல்ல முடியாது. நிலாவின் மங்கின வெளிச்சத்தில் அவளுடைய முகத்தைக் கூர்ந்து பார்க்கும் கிருஷ்ணனுக்கே அது தெரியவில்லை.
"இருந்தாலும் உங்களுடைய அப்பாவிற்கு நீங்கள் ஒரே பிள்ளையல்லவா? அவர் எவ்வளவு வருத்தப்படுவார்?" என்றாள்.
"உன்னுடைய கஷ்டத்திற்கு மேற்பட்டதல்ல எனக்கு அவருடைய கஷ்டம். உனக்கு இஷ்டமில்லை என்ற ஒரே காரணத்திற்காகத்தான் நான் இந்தக் கல்யாணம் கூடாதென்கிறேன். எனக்கும் அப்பாவையும் அம்மாவையும் பற்றின கவலை இல்லையா? அவர்களுக்கு வருத்தம் கொடுக்கக் கூடாதுதான்."
ருக்மிணி தடுமாறினாள். என்ன சொல்வதென்று தெரியவில்லை. சற்று மௌனமாக உட்கார்ந்திருந்தாள்.
கிருஷ்ணன் மறுபடி ஒரு பெருமூச்சு விட்டுத் தனது கைக்கடியாரத்தைப் பார்த்தான். "நாழியாகிவிட்டது நான் போகவேணும். வருத்தப்படாதே. உனக்கு வேறு நல்ல அகத்துக்காரர் கிடைப்பார். உனக்காக உலகத்தைத் துறந்த சந்நியாசியைப் பற்றி எப்போதாகிலும் நினைப்பாயோ?" என்று கேட்டான்.
ருக்கு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள். "ஐயோ, நீங்கள் போகக்கூடாது. உங்களைத் தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன். வீணாக ஒரு லக்ஷியத்திற்காக நம்முடைய தாய் தந்தையர்களுக்கும் கஷ்டம் கொடுத்து, நம்முடைய வாழ்க்கையையும் பாழ் செய்யாதீர்கள். ஏதோ நாம் தகப்பனார்களின் கொடுமையால் கஷ்டப்பட்டால், இனி நம்முடைய குழந்தைகளை அந்தமாதிரிக் கஷ்டப்படுத்தாமல் இருக்கலாம். அதை விட்டு, நீங்கள் சந்நியாசியாகப் போய்விடுவதென்றால் நான் திரும்பி வீட்டிற்குப் போகமாட்டேன். இங்கேயே சமுத்திரத்தில் விழுந்து விடுகிறேன்" என்று கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.
"என் கண்ணே!" என்றான் கிருஷ்ணன்.
பிறகு, "நாமாகிலும் நம்முடைய குழந்தைகளுக்குப் பூரண சுதந்திரம் கொடுக்க வேண்டும். நம்மைப்போல் அவர்கள் கஷ்டப்படும்படி செய்யக்கூடாது" என்றான்.
ருக்மிணியும் அதற்குச் சம்மதித்தாள். கிருஷ்ணன் அவளை ஜாக்கிரதையாகக் கையைப் பிடித்து அழைத்து வண்டியில் கொண்டு போய்விட்டான்.
இருபத்திரண்டாம் தேதி கிருஷ்ணனுக்கும் ருக்மிணிக்கும் விவாகம் இனிது நடந்தது.
தம்முடைய கொடூரச் செய்கையால் பிள்ளை சந்நியாசியாகப் போக இருந்தவன் தெய்வகதியாய்த் தப்பினான் என்பதை உணராமலே கிருஷ்ணனின் தகப்பனார் தம்பதிகளின் சந்தோஷத்திற்குத் தாமே காரணம் என்று கர்வப்பட்டு ஜரிகை உத்தரீயமும் சந்தன மார்புமாய்க் கல்யாணத்தில் குறுக்கும் நெடுக்குமாக உலாவினார்.
குமுதினி |
|
|
|
|
|
|
|
|