Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | சிறப்புப் பார்வை | அஞ்சலி | சமயம்
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | அமெரிக்க அனுபவம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
'காதலா? கடமையா?' நாவலிலிருந்து....
- சித்தி ஜுனைதா பேகம்|மார்ச் 2014|
Share:
அத்தியாயம் 1

ஒரு சிறு குடும்பம்
பாண்டிய நாட்டின் தலைநகராய் ஒரு காலத்தில் சிறப்புற்றோங்கிய மதுரையம்பதியில், ஒரு பகுதியின்கண், ஒரு சிறு குடும்பத்தார் நமது கதை நிகழுங்காலையில் வசித்து வந்தனர். விமலநாதன் என்பாரே இக்குடும்பத்தலைவர். சுரேந்திரநாதன் என்னும் அவர்தம் இளஞ்சகோதரனொருவனும். அவர் மனைவியொருத்தியுமே இக்குடும்பத்திலுள்ளவர்கள். இவர்கள் மாயாபுரியின் அரசகுடும்பத்தை சார்ந்தவர்களென்றும், பல்லாண்டுகட்கு முன்னரே இவர்கடம் முன்னோர் இவ்வூரில் குடியேறினரென்றும் கூறப்பட்டது. மாயாபுரியின் அரசவம்ச சாடை பெரும்பாலும் இவர்கட்கிருப்பதாயும் ஓர் வதந்தியுண்டு.

விமலநாதன் தனது உழைப்பினால் கொண்டுவரும் பணத்தைக் கொண்டே மூவரும் மிகச் சிக்கனமாய் வாழ்க்கை நடத்தினர். சுரேந்திரன் பல உயரிய குணங்கள் இயற்கையிலேயே அமையப் பெற்றவனாயினும் கவலையின்றி ஊர் சுற்றி அலைவதையே தொழிலாய்க் கொண்டிருந்தான். விமலநாதன், தன் தம்பியின் மாட்டு கொண்டுள்ள அளப்பரிய அன்பால் அவனை கடிந்து ஏதுங் கூறுவதில்லை. ஆனால், அவர்தம் மனைவியோ, தங்கணவனின் தம்பியை தன் சொந்த சகோதரனைப் போன்றே எண்ணி நேசித்தாளாதலின், அடிக்கடி சுரேந்திரனிடம் இங்ஙனம் ஊர் சுற்றித் திரிய வேண்டாமென்றும் ஏதேனும் ஓர் வேலையில் அமர்ந்து, ஓழுங்காய் நடந்து கொள்ளும்படியும் அன்பாய் கடிந்து புத்தி புகட்டுவாள். இங்ஙனம் தன் அண்ணியார் அடிக்கடி கூறிவந்தது சுரேந்திரனது மனத்தை உறுத்தியது. அன்றியும், மாயாபுரிக்கும், மற்றும் பிற ஊர்கட்குஞ் சென்று பார்த்து வரவேண்டுமென்னும் மனோவெழுச்சி உண்டானது. ஆகவே, தமையனும் தமையன் மனைவியும், அறிந்தால் தன்னைப் போக விடாரென்றெண்ணி, ஒருநாளிரவு ஒருவருமறியாவண்ணம் தான் சேர்த்து வைத்திருந்த 25 ரூபாயை எடுத்துக்கொண்டு மாயாபுரியை நோக்கிப் பிரயாணமாயினான். காலையில் விழித்தெழுந்த விமலநாதன் மனைவி சுரேந்திரனைப் படுக்கையிற் காணாமையான் வெளியிற்சென்றிருக்கக் கூடுமென்றெண்ணி வாளாயிருந்து விட்டாள். ஆனால் பொழுதேற அவள் மனத்தில் விவரிக்க வொண்ணா அச்சம் பூண்டு வதைத்தது. 'வருவான் வருவான்' என்று எதிர்பார்த்து ஏமாந்து போனாள். இதற்குமேல் உண்மையை உரைக்காதிருத்தல் கூடாதென்றெண்ணி, தங் கணவர் வந்ததும் சுரேந்திரன் காலையிலிருந்து காணப்படவில்லை யென்னும் உண்மையை உரைத்தனள். திடுக்கிட்டுப்போன விமலநாதன் பல ஆட்களைக் கொண்டு எங்குந்தேடியும் அவன் அகப்பட்டானில்லை. பல ஊர்கட்கும் ஆளனுப்பியதன்றி. ஊர்க்காவற்சாவடியிலும் எழுதி வைத்தார். ஒன்றும் பயனளிக்கவில்லை. இதே கவலையால் ஏக்கம் பிடித்த இருவரும் செய்வதியாதெனத் தெரியாமல் கலங்கித் தவித்துக் கொண்டிருந்தனர். இவர்கடம் நிலைமை இங்ஙனமிருக்க, மாயாபுரியினை நோக்கிச் சென்று நமது இளவலைக் கவனிப்போம். பல ஊர்களையுஞ் சுற்றிக்கொண்டு. வருவோர் போவோரிடங் கேட்டு மாயாபுரியின் எல்லையைக் குறுகினான். கையிற் பணமில்லை என்ன செய்வதெனத் தெரியாது சற்றுத் தயங்கினன். மீண்டும் அவனுக்கு இயல்பாய தைரியம் திரும்பி வந்தது. நேரமோ கழிந்து கொண்டே சென்றது. அன்று பொழுது போவதற்கு முன் மாயாபுரியின் எல்லைக்குள் சென்று விட்டதற்கடையாளமாய் அவ்வெல்லையின் ஆரம்பத்தில் அழகியதோர் சிற்றுண்டிச்சாலை அமைக்கப்பட்டிருந்தது.

சுரேந்திரனுக்கு பசியோ மிகவும் அதிகமாயிருந்தது. அன்றியும் வழிப் பிரயாணத்தினாலும் மிகவுங் களைப்படைந்திருந்தான். மழைத்துளிகள் சிறு சிறு துளிகளாய் விழுந்து கொண்டிருந்தன. அச்சிற்றுண்டிச் சாலையின் கதவு மூடிவைக்கப் பட்டிருந்தது. சுரேந்திரன் மெதுவாய்ச் சென்று கதவைத் தட்டினான். சிற்றுண்டிச் சாலையின் சொந்தக்காரனது இளம் மகளொருத்தி கதவை திறந்தாள். கதவினைத் திறந்து விட்ட அவ்விளம் பெண் சுரேந்திரனைக் கண்டதும் வியப்போடு உற்று நோக்கி தலைவணக்கஞ் செய்தாள். அவட்கு சிறிது நேரம் பேச வாயெழவில்லை. பிறகு அவள் சுரேந்திரனை நோக்கி, "மாட்சிமை தாங்கிய பெருமானே, வருக! எங்கள் மனைக் கெழுந்தருளி எங்களைக் கௌரவித்த கோமானே வருக!" எனக் கூறிவிட்டு, தன் தாய் தந்தையரை அழைக்கும் பொருட்டு உள்ளே ஓடிச் சென்றாள். அவள் செய்த தலைவணக்கமும், தோற்றுவித்த வியப்புக்குறியும் சுரேந்திரனை, திக்பிரமை அடையும்படிச் செய்துவிட்டன. எதற்காக தனக்கு அவள் இத்துணை கௌரவங் கொடுக்க வேண்டுமென எண்ணி வியப்புக்கடலுள் ஆழந்திருக்கும் சுரேந்திரனை, அவள் கூறிய மொழிகள் பின்னும் ஆச்சரியத்தில் அவனை ஆழ்ந்துபோமாறு செய்து விட்டன. அவன் ஒன்றுந் தோன்றாமல், வியப்பே வடிவாய் பேசா ஊமை போன்று நின்று கொண்டிருந்தான்.
அத்தியாயம் 2

வனமாளிகை
இச்சிற்றுண்டிச் சாலைக்கு ஏறக்குறைய ஒரு மைல் தூரத்தில் அழகிற் சிறந்த வனமாளிகை யொன்றுண்டு. அதைச் சுற்றிலும் விசாலமான எழில் நிறைந்த சிங்காரவன மொன்றிருந்தது. சில தென்னை மரங்கள், ஒன்றிரண்டு மாமரங்கள் தவிர அத்தோட்டத்தில் இருந்தவை பூத்தொட்டிகளும். 'குரோடன்' வரிசைகளும் கொடிப் பந்தல்களுந்தான். அவ்வனமாளிகைக் கெதிரில் ஒரு கொடிப் பந்தரின் மறைவில் அழகியதோர் ஊற்றுக் குழாய் நடுவில் அமைக்கப்பட்ட வட்டம் ஒன்றிருந்தது. இந்த வட்டத்தில் பன்னீர் தெளிப்பதேபோன்று, சுழல் குழாய் நீரைத் தெளித்தபோது சூரிய கிரணங்கள் நீர்த்துளிகளில் பட்டு இடைவிடாமல் வானவில் நிறங்களை மிக்க அழகாய்த் தோன்றச் செய்த காட்சி, காண்போர் கண்ணையுங் கருத்தையும் ஒருங்கே கவர்ந்தது. இங்ஙனமே பல சிறு குழாய்கள் ஆங்காங்கு கொடிகட்கும் நீரூட்டின.

இங்ஙனம் மிக்க வனப்போடு விளங்கிய அவ்வனமாளிகையின் உட்புறத்தில், ஒரு விசாலமான அறையில் நான்கு ஆடவர் அமர்ந்து சீட்டாடிக் கொண்டிருந்தனர் மேசையின்பேரில் பல உயர்ந்த மதுபான வகைகளும், தட்டுகளில் பலவிதமான தின்பண்டங்களும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு பணிமகன் மிக்க அடக்க ஒடுக்கத்தோடு வாயிலில் நின்று கொண்டிருந்தான்.

அவ்வாறு சீட்டாடிக் கொண்டிருந்த நால்வரின் தோற்றமும், பிறப்பாலும், செல்வத்தாலும் உயர்ந்த கண்ணியமான பெரிய மனிதர்களுடையதாய்த் தோன்றியது. ஒருவர்க்கு ஏறத்தாழ 25 வயதிருக்கலாம். இயற்கையில் மிக்க அழகுடையராயினும், உடம்பு சரியான நிலைமையில் இல்லாமையாலோ, துர்ச்செயல் காரணமாயோ வதனஞ்சுருங்கி, கன்னங் குழி விழுந்து மிக்க மெலிந்த தோற்றமுடையராய்க் காணப்பட்டார். அவர்க்கு மற்ற மூவரும் மிக்க பணிவோடும், மரியாதையோடும் நடந்து கொண்டனர். மற்றும் அவர்க்கருகில் நெருங்கி உட்கார்ந்திருந்த இன்னொருவர்க்கு 50 வயதிருக்கலாம். பரந்த முகமும், விசால நுதலும், கம்பீர தோற்றமும் உடையராய்த் தோன்றினார். மற்றுமிருந்த இரண்டு பேர்க்கும் நடுத்தர வயதிருக்கலாம். அவர்களும் உயர்வகுப்பைச் சேர்ந்த பிரபுக்களைப் போன்றே காணப்பட்டனர்.

அப்போது இரவு மணி எட்டு இருக்கலாம். ஆட்டத்திலேயே முற்றும் மனத்தை செலுத்தி, தம்மையும் உலகையும் மறந்திருந்த மூவரையும், 50 ஆண்டெய்திய முற்கூறிய பெரியார் நோக்கி மிக்க வினயமாய், "நேரமாகி விட்டது, இதோடு ஆட்டத்தை நிறுத்திவிடுவோம்" என்றார். ஆனால். அவர் கூறியதை ஒருவரும் செவிமடுத்ததாய்த் தோன்றவில்லை. சிறிது நேரம் ஏதோ சிந்தித்திருந்த பெரியவர், மீண்டும் 25 ஆண்டுடைய யௌவன வாலிபனை விளித்து, 'இளவரசரே! தாங்கள் இச்சூதாட்டத்தில் இத்துனை ஆர்வங் காட்டலாமா? பொதுமக்கள் தங்களைப்பற்றி பலவாறாய்ப் பேசிக்கொள்ளுவதாய் வதந்தி. இராகுலப் பிரபு தங்களைப் பற்றி பொதுமக்கள் கெட்ட அபிப்பிராயங் கொள்ளும்படி தந்திரமாய்ப் பல சூழ்ச்சிகள் செய்வதாயுங் கேள்வியுற்றேன். ஆதலின், முடிசூட்டும் வரையிலாயினும் தாங்கள் இம்மாதிரி காரியங்களை நிறுத்தி வைத்தலே நலமென எண்ணுகின்றேன்" என்று பணிவுடன் மொழிந்தார்.

அங்கிருந்த மற்றவர், "ஆம், இளவரசே! சேனைத் தலைவர் கூறுவது முற்றிலும் உண்மையே. இராகுலப்பிரபு இவ்வன மாளிகைக்கு தங்களை வரவழைத்தது கூட ஏதும் சூழ்ச்சியா யிருக்குமென்றே எண்ணவேண்டி யிருக்கின்றது. பொதுமக்களிடை தங்களைப்பற்றி கெட்ட அபிப்பிராயத்தைப் பரப்பிவிட்டால், அஃது இராகுலனுக்கு அநுகூலமானதன்றோ?" என்றார்.

இன்னொருவர், "ஆம் ஒருசாரார் இராகுலனுக்காக உழைத்து வருவதாய்த் தெரிகின்றது. தங்களின் நடத்தை கெட்டதென நிரூபிக்கப்படுமாயின், அதை இராகுலப் பிரபுவுக்கு அநுகூலமாய் உபயோகித்துக் கொள்ளவும் அவர்கள் விருப்புகின்றனர்" என்று கூறி வரும்பொழுது, இளவரசர் அவரை இடைமறித்து, "ஆம், நண்பர்களே! நீங்கள் இப்போது கூறியவையெல்லாம் உண்மையே. இராகுலனது சூழ்ச்சிகளை அறியாமல் நாம் இங்கு வரவில்லை. அவன் செய்வனவற்றை நாம் அறிந்து கொள்ளாதது போன்றே நடிக்கவேண்டும். என் பேரில் குடிமக்களிடையே கெட்ட அபிப்பிராயம் பரப்பப்படுமாயின். இராகுலனையே தமக்கரசனாய்த் தேரந்தெடுப்பார்களென்று அவன் நம்பியிருக்கிறான்" என்றார்.

"அங்ஙனம் அவர் எண்ணுவது இயல்புதானே? தாங்கள் அரசராய் வராவிடின். தங்கட்கடுத்தபடி அரசுரிமைக்குரியார் இராகுலப் பிரபுவன்றோ? அதுவன்றி பிரபு இராகுலன். இளவரசி விஜயாளை மணக்க பெரிதும் விரும்புவதாய்த் தெரிகின்றது. இன்னொரு விஷயத்தையும் நாம் முக்கியமாய் கவனிக்கவேண்டும். பொதுமக்களின் விருப்பம், விஜயசுந்தரி தங்கட்கரசியாக வேண்டுமென்பதே" என்றார் சேனாதிபதி கமலாகரர்.

"ஆம், கமலாகரரே! நீர் கூறுவது உண்மையே. ஆனால் அரசிளங்குமரி விஜயம் என்னை நேசிக்கின்றாளா என்பதை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. அவளிடத்து என் மனத்தை எத்துணை வெளிப்படையாய்த் திறந்து காட்டியபோதினும் அவள் தன் உள்ளக்கருத்தை ஒருவராலும் அறிந்துகொள்வதற் கியலவில்லை" என்று ஒருவாறு வருத்தத்தோடு கூறினார் இளவரசர்.

"ஆயினும், அவள் கடமை தவறாதவள். பொதுமக்கள் தன்னை அரசியாக கண்டு களிக்க விரும்புவதை அவள் நன்கறிவாள். குடிமக்களின் விழைவையும், இறந்துபோன தன் தந்தையாரின் விருப்பத்தையும் நிறைவேற்றுவதே தங்கடனென எண்ணுவாளேயன்றி, அதற்கு மாற்றமாய் நடக்கச் சிறிதும் துணியாள்" என்றார் கமலாகரர்.

அத்துடன் அவர்கடம் பேச்சு முடிவுற்றது. அதற்குமேல் ஆட்டத்தை நிறுத்திவிட்டு. ஆகாரம் அருந்துதற்கு சமையல் கட்டிற்குச் சென்றனர்.

அத்தியாயம் 3

மாயாபுரி
நாம் கதையைத் தொடர்ந்து செல்லுதற்கு முன் மாயாபுரியைப் பற்றிச் சிறிது அறிந்து கொள்ளுதல், கதா நிகழ்ச்சிக்கு இன்றியமையாது வேண்டப்படுவதால், அதைப்பற்றிய சில விவரங்களை அறிவதற்காக, நாம் இங்கே சற்று தாமதிப்போம்.

மாயாபுரியென்பது இரண்டு மலைகட்கு நடுவே, அழகான பள்ளத்தாக்கில், ஆற்றங்கரையோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு மலைப்பிரதேசம். அப்பிரதேசத்தை அரச குடும்பத்தின் வழித்தோன்றலாக வந்த சுசீலரென்பார் ஆட்சி புரிந்து வந்தார். அவர்க்கு விஜயசுந்தரி என்ற பெண்மகவைத் தவிர, வேறு குழந்தைகள் கிடையா. ஆகவே சுசீல மன்னர்க்குப் பிறகு, அவர் சகோதரி புதல்வனான பிரதாபனே பட்டத்திற்குரியனாய், அந்நாட்டு வழக்கப்படி கருதப்பட்டான். அதுபற்றி குடிமக்களும், உற்றார் உறவினரும், பிரதாபனை இளவரசனாகவும், விஜயத்தை இளவரசியாகவுங் கருதி மரியாதை செலுத்தி வந்தனர்.

செல்வி விஜயாள் மக்கள் மனத்தைக் கவரும் மாண்புடன் விளங்கினாள். சிறந்த அழகும், பரந்த ஞானமும், சீரிய குணமும் ஒருங்கமையப்பெற்ற இளவரசியை மக்கள் விரும்பியது வியப்பாமா? அவள் ஏழைகளிடத்து காட்டும் அன்பும், ஆதரவற்றவரிடங் கூறும் இனிய மொழிகளும் அவட்கு தனி மதிப்பைக் கொடுத்தன.

இளவரசன் பிரதாபனுக்கடுத்தபடியாய், பிரபு இராகுலனே பட்டத்திற்குரியனாய்ப் பொது மக்களாற் கருதப்பட்டான். அவன், கோமகன் பிரதாபனுக்கு ஒன்றுவிட்ட சகோதரனாவான்.

இஃதிங்ஙனமிருக்க, தமக்கு மரணகாலம் கிட்டிவிட்டதென உணர்ந்த சுசீல மன்னர், தமது மந்திரி, பிரதானிகள், சேனைத்தலைவர் முதலியோரை அருகழைத்து. பிரதாபனையும் விஜயாளையும், தமக்குப் பிறகு அரசனையும் அரசியாயும் ஏற்றுக்கொள்ளும்படி கூறினார். அரசர் கூறியதை மந்திர சுற்றத்தார், தந்திரச் சுற்றத்தார் முதல் எல்லோரும் அன்போடு ஏற்றுக் கொண்டனர். பிறகு, தம் மகளையும் மருமகளையும் மருங்கழைத்து, இருவரும் ஒருவரையொருவர் மணந்துகொண்டு, அரச பாரத்தை ஏற்று, நீதிநெறி வழுவாது ஆட்சி புரிந்து வருவதே தம் விருப்பமெனக் கூறி, மீண்டும் தம் மகளை நோக்கி, "குழந்தாய்! நான் கூறியவைகளை யெல்லாம் உன் மனதில் பதிய வைத்துக்கொள். உன் அன்னையார் இறந்து இத்தனை ஆண்டுகளாய், அவளது விருப்பத்தை நிறைவேற்றுவான் வேண்டி, நான் மற்றோர் மாதை மணம் புரிந்து கொள்ளவில்லை. உன்னையே என் ஏகபோக சொத்தாக நினைந்து அன்பு பாராட்டி வந்தேன். நீ கடமை தவறாது நடந்து கொள்ளுவாயாக. நீயும் பிரதாபனும் ஒன்றுபட்டு, நெறி பிறழாது ஆட்சி புரிந்து வருவீர்களாயீன், குடிமக்கள் உங்களை வாழ்த்துவர். நாட்டில் அமைதி நிலவும். பகைவர் அஞ்சியோடுவர். இம்மாயாபுரி. பிற ஆட்சிக்குட்பட்டதன்று. இஃது தனிப்பட்ட பிரதேசம். நீ என் விருப்பத்தை மீறி. பிரதாபனை விடுத்து, பிறனொருவனை மணந்துகொள்ளுவாயின்.அரசுரிமையைப்பற்றிய கிளர்ச்சிக்கு இடமளித்தவளாவாய். விஜயா! இன்னும் அரை நாழிகையிலோ ஒரு நாழிகையிலோ என் உயிர் போய்விடும், ஆகவே, நீ என் விருப்பப்படியே பிரதாபனை மணந்து கொள்ளுவாயென்று உறுதியாய் நம்பி, நான் மன அமைதியுடன் உயிர் விடுகின்றேன். இறக்குந் தறுவாயிலிருக்கும் எனது இந்த விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டியது புதல்வியாகிய உனது கடமை" என்று உருக்கத்தோடு கூறினார்.

பிறகு பிரதாபனை அருகழைத்து, பல்வேறு புத்தி புகட்டி, ஒழுக்க நெறி கற்பித்து, தமது சேனைத் தலைவர் கமலாகரர் கூறும் புத்திமதியைக் கேட்டே நடந்துகொள்ள வேண்டுமென்று கூறினார். அதன் பிறகு கமலாகரரை அழைப்பித்து, பிரதாபனை அவரிடம் ஒப்படைத்து, அவரது சொந்தக் குழந்தையைப் போலவே அவனை பாவித்து, எல்லா விஷயங்களிலும் அவர் தம் விருப்பப்படியே செய்து வரவேண்டு மென்றுந் தெரிவித்துதன்றி கமலாகரர் கடமை தவறாத உத்தமபுருடராகலின், அவரிடத்து தமக்கு முழு நம்பிக்கையும் உண்டெனத் தெரிவித்தார். இங்ஙனம் பேசிக்கொண்டிருந்த சில வினாடிகட்கெல்லாம், அவ்வரசர் பெருமான் என்றும் எழுந்திரா நித்திரையிலாழ்ந்தார்.

ஆறு மாதங்கள் கடந்தன. விஜயாளின் இளம் பருவத்திலிருந்தே அவள்மாட்டு அளப்பரிய அன்பு பாராட்டி வந்த இளவரசன் பிரதாபன், சுசீல மன்னர் இறந்த பிறகு இன்னும் அதிகமாய் அவளை நேசித்து வந்தான். ஆனால் செல்வி விஜயாள், பிரதாபனை அத்துணை தூரம் நேசித்தாளா? இல்லையா? என்பதை ஒருவராலும் உணர்ந்து கொள்ளுதற் கியலவில்லை. விஜய சுந்தரியின் உள்ளப் பான்மையை ஒருவராலும் வெளிப்படையாய் விளங்கிக்கொள்ள முடியாமையான் பிரதாபன் தனது விருப்பத்தை அவளிடம் அத்துணை அதிகமாய்த் தெரிவிக்க அஞ்சினான். ஆனால் பொது மக்களோ விஜயாளை அரசியாகக் கண்டு களிக்க ஆவலுற்று துடித்துக்கொண்டிருந்தனர்.

இளவரசன் ஒரு உல்லாச புருஷன். மக்கட்கு அவனது நடத்தைகளில் சில பெரும்பாலும் அருவருப்பைத் தந்தன. அவனது நடத்தையைப்பற்றி மக்கள் பலவாறு பேசிக்கொள்ளுவாராயினர். குடியிலும் ஆடம்பரத்திலும் மூழ்கியிருப்பதாய் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். இங்ஙனம் பிரதாபனின் நடத்தையைப்பற்றி குடிமக்களிடம் மிகைப்படுத்தி, மிகத் தந்திரமாய்ப் பிரசாரம் புரிந்து வந்தது பிரபு இராகுலனது வகுப்பாரே. ஆயினும், குடிமக்கள் தாம் அன்போடு நேசித்துவரும் செல்வி விஜயாளுக்கு கணவனாகப் போகிறவரும், இறந்துபட்ட மன்னரின் விருப்பப்படி தங்கட்கு அரசராய் வரக்கூடியவரும், அத்தேய வழக்கப்படி நேரிய முறையில் அரசுரிமைக் குரியருமான இளவரசன் பிரதாபனைப் பற்றி வெளிப்படையாய் பேசிக்கொள்ள அஞ்சினார். இந்நிலையில்தான் முடிசூட்டுதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றன.

முடி சூட்டுதற்கென்று நல்ல நாளொன்று குறிப்பிடப்பட்டது. அன்று எப்படியும் முடிசூட்டியே தீர வேண்டுமென்பது குடிமக்களது அவா.

பிரபு இராகுலனோ, இளவரசி விஜயாள்மாட்டு தன் மனத்தைப் பறிகொடுத்திருந்தான். அவளையும் அவட்கே நியாயமாய் உரித்தான சிம்மாசனத்தையும் கவர்ந்து கொள்ள பெரிதும் பேராசை கொண்டான். இயற்கையிலேயே ஆழறிவும் அரியசூழ்ச்சியும் உடைய இராகுலனது மூளை பிரதாபனுக்கு முடிசூட்டுதற்கியலாமல் எங்ஙனம் தடுக்க முடியுமென்பதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தது.

சில நாட்களாய் உடல்நல மின்மையான் மெலிந்து தோன்றிய பிரதாபனைக் கண்ட இராகுலன், அதுவே தான் சூழ்ச்சி செய்தற்கு ஏற்ற தருணமாய் நினைந்தான். அடிக்கடி பிரதாபனிடத்து, கிராமத்திற்குச் சென்று, சில நாட்கள் ஆங்கிருக்கும்படியும், அங்ஙனம் கிராமத்திற்குச் செல்லின், கிராமக் காற்றும், இனிமையான இயற்கைக் காட்சிகளும் அவன் மனத்தைக் கவரக்கூடுமென்றும் கூறிவந்தான்.

பிரதாபனின் மனத்திற்கு இராகுலனது மொழிகள் சூழ்ச்சியாய்த் தோன்றியபோதிலும், கிராமவாசமே உடல்நலத்திற் கேற்றதென நினைந்து, சில நாட்கள் கிராமத்திலுள்ள இராகுலனது வனமாளிகையிலேயே தங்கியிருக்கத் தீர்மானித்தான். இராகுலன் தன் கருத்து நிறைவேறுதற்குரிய ஏற்ற தருணத்தை எதிர்நோக்கி யிருந்தமையான், தன் சொந்தப் பணிமக்கள் மூலமே எல்லா ஏற்பாடுகளுஞ் செய்து தெரிவித்தான், குறித்த நாளொன்றில் இளங்கோ பிரதாபன், இராகுலனது சூழ்ச்சியை சிறிதும் அறிந்துகொள்ளாததே போன்று நடித்து அவனது வனமாளிகைக்குச் செல்ல, கமலாகரரும் இன்னும் முக்கியமான சில பிரபுக்களும் பின்தொடந்தனர்.

இங்ஙனம் இளவரசன் பிரதாபன், பிரபு இராகுலனது வனமாளிகைக்குச் சென்றபொழுதுதான், நமது கதை ஆரம்பமாகின்றது.

சித்தி ஜுனைதா பேகம்
Share: 




© Copyright 2020 Tamilonline