Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | நூல் அறிமுகம் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
தென்றல் பேசுகிறது
தென்றல் பேசுகிறது....
- |ஏப்ரல் 2014|
Share:
இணையம் எனப்படும் மாய வலைப்பின்னலின் பிறப்பிடம் அமெரிக்கா. அலுவலகங்கள் செயல்படும் வேகத்துக்கும், சேவைத் திறனுக்கும் ஆதாரமாக இருப்பது இணையவேகம் (Internet speed). சிறிய சில்லுகளில் டெராபைட் தகவலைத் தேக்கி வைத்துக்கொண்டு, அவற்றை வெகுவேகமாகத் துழவி எடுக்கும் அதிவேகக் கம்ப்யூட்டர்களும் செர்வர்களும் தேடு பொறிகளும் (search engines) வந்துவிட்ட நிலையில் தகவல் பரிமாற்றத்தை கண்ணிமைப்பின் துளிப்பகுதி நேரத்தில் நடத்துவதற்குத் துணை புரிவது இணையவேகம். இந்த வேகம் தகவல் தொழில்நுட்பத்தின் தொட்டிலான அமெரிக்காவில் குறைவாக இருக்கிறதென்பது அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. டௌன்லோடு வேகம் 20.77Mbps (உலக அளவில் 31வது இடம்), அப்லோடு வேகம் 6.31Mbps (42வது இடம்) என்பதை அனேகமாக நாம் கவனிக்கக்கூட இல்லை. தொடக்க காலத்தில் இணையத் தொடர்பு வழங்க உரிமம் பெற்ற AT&T, Comcast, வார்னர் பிரதர்ஸ் போன்ற நிறுவனங்கள் தமக்குள் ஆட்சி எல்லையைப் பிரித்துக்கொண்டு தனியரசாளத் தொடங்கிவிட்டதுதான் இதற்குக் காரணம் என்று அறிந்தோர் கூறுகின்றனர். தனிவல்லாண்மை (monopoly) நிலைமை என்றாலே பயனாளியின் கருத்துக்கு மதிப்புத் தராமல், தாம் விரும்பிய கட்டணத்தை வசூலித்து வருமானம் பெருக்கும் நிலை மேலோங்கி நிற்கும் என்பது இணைய சேவை விஷயத்திலும் உண்மையாகிவிட்டது. ஆனால், கண்ணாடி நாரிழை (fiber optic cable) வழியே கிகாபைட் கணக்கில் அலைப்பட்டையகலம் (bandwidth) தரமுடியும் என்கிற காலத்தில் வேரூன்றி நிற்கும் இந்த நிறுவனங்களின் மெத்தனம் நீடிக்காது. கூகிள் நாரிழை (fiber.google.com/cities) போன்ற சேவைகள் நாடெங்கும் விரிவடைய வேண்டும். ஹார்டுவேர் முன்னேற்றத்தின் வேகத்துக்கு இணையாகத் தகவல் பரிமாற்ற வேகமும் அலைப்பட்டை விரிவாக்கம் மூலம் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதை நம் அறிவார்ந்த சமூகம் நினைவில் கொண்டு தமது உரிமைக்குக் குரலெழுப்ப வேண்டும்.

*****


சர்ஜன் ஜெனரல் ஆக அதிபர் ஒபாமாவால் பரிந்துரைக்கப்பட்ட டாக்டர். விவேக் மூர்த்தி ஒரு சராசரி மருத்துவரல்ல. ஹார்வர்டில் பயின்றவர். நாடெங்கிலுமுள்ள மருத்துவர்களையும் மருத்துவ மாணவர்களையும் ஒருங்கிணைத்து எல்லா நோயாளிகளுக்கும் தரமான, நியாய விலையில் மருத்துவ வசதி தருவதற்காக 'Doctors for America' என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர். பொது உடல்நலம், பொருளாதாரக் கோட்பாடுகளை அறிந்திருப்பதோடு, மக்கள் நலனை முன்னிறுத்தக் கூறி மருத்துவ உலகுக்கு நினைவூட்டும் நாயகர். அச்சந்தரும் அளவுக்கு மக்களிடையே பெருகிவரும் உடற்பருமனைச் சமாளிப்பதைத் தனது முதல் குறிக்கோளாக (சர்ஜன் ஜெனரல் ஆகும் பட்சத்தில்!) அறிவித்திருப்பவர். ஆனால் இவர் அந்த முக்கிய இடத்தைப் பிடிப்பதில் குறுக்கே சீனப்பெருஞ்சுவராக நிற்பது National Rifle Association! NRAவின் மகுடிக்கு இசைந்தாடும் மக்கள் பிரதிநிதிகளும் செனட்டர்களும் விவேக் மூர்த்தி சர்ஜன் ஜெனரலாவதற்கு எதிராக இயங்குவதால், அதிபரின் காலும் பின்னுக்கிழுக்கிறது. துப்பாக்கி முனைக்கு அஞ்சி மக்கள்நலன் கைவிடப்படுமோ என்பது ஜனநாயக ஆர்வலர்களின் அச்சமாக இருக்கிறது.

*****


கிரைமியாவை ரஷ்யா தன்னோடு இணைத்துக் கொண்டது (என்னதான் வாக்கெடுப்பு என்ற கண் துடைப்பு நடந்த போதும்) அமெரிக்க மேலாண்மைக்குச் சவால் என்று கருதப்படுகிறது. உக்ரைன் NATO அங்கத்தினரல்ல என்றாலும், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யக் கச்சா எண்ணெயைப் பெரிதும் சார்ந்திருப்பதால், அவை 'சூ! உஷ்' என்று சொல்லுமே தவிரப் போரில் இறங்கத் துணியாது. உலகில் பல பகுதிகளில் இன்னமும் அமெரிக்கப் படைவீரர்கள் யார் யாருக்காகவோ போராடிக் களைத்திருக்கும் இந்நேரத்தில் அமெரிக்க மக்கள் இன்னொரு போரை விரும்புவார்களா என்பது ஐயமே. இன்றைய பொருளாதார நிலையில் உலக நாடுகளில் எதுவுமே போரை வரவேற்காது. இதை நாடி பிடித்தறிந்ததனாலேயே ரஷ்ய அதிபர் வ்ளாடிமிர் புடின் கிரைமியாவை, சிதைந்து நிற்கும் தனது ரஷ்யாவுடன் சேர்த்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும், மேலே என்ன நடக்கும் என்பதை நாமும் ஆவலோடும், சிறிதே அச்சத்தோடும், கவனித்துக் கொண்டிருக்கிறோம்.

*****
கலாக்ஷேத்ரா என்ற மகத்தான கலை ஆலமரத்தைப் போஷிக்கும் பொறுப்பை ஏற்றிருப்பவர் நடனமணி ப்ரியதர்ஷினி கோவிந்த். பாரம்பரியத்துக்கு உள்ளேயேதான் புதுமை இருக்கிறதென்பதை உணர்ந்து, அதற்கு உரமூட்டுவதில் முனைந்திருந்த போதும் நம்மோடு கருத்துப் பகிர்ந்துகொண்டார். தமிழ்மறை என்ற புகழுக்கு முற்றிலும் தகுதி வாய்ந்த திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் பொருளோடு மனப்பாடமாகக் கூறிப் பரிசில் பெற்ற சாதனைப் பெண்மணி கீதா அருணாச்சலம் பற்றிய கட்டுரை மற்றொரு ரத்தினக்கல். இளம் சாதனையாளர் பலர் குறித்த தகவல்களும், வெவ்வேறு ரசங்களைப் பிரதிபலிக்கும் சிறுகதை, கவிதை, கட்டுரைகளும் இந்த இதழை இந்திரவில்லாக ஒளிரச் செய்கிறது.

வாசகர்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு, ராமநவமி, புனிதவெள்ளி, ஈஸ்டர் வாழ்த்துக்கள்!

தென்றல் குழு

ஏப்ரல் 2014
Share: 


© Copyright 2020 Tamilonline