|
தென்றல் பேசுகிறது... |
|
- |மார்ச் 2014| |
|
|
|
|
|
எதிரெதிர் அணிகளில் இருக்கும் ஹில்லரி கிளின்டனும் ஜான் மெக்கெய்னும் அரிசோனாவின் கவர்னர் ஜேன் ப்ரூவரைப் பாராட்டியதற்குத் தக்க காரணம் உண்டு. மதநம்பிக்கையைக் காரணமாகக் காட்டி ஒருபாலினச் சேர்க்கையாளர்களுக்கு எந்தச் சேவையும் வழங்கக்கூடாது என்பதாக அங்கே ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதைக் குறித்து ஜேன் ப்ரூவர் பலதரப்பினரிடமும் விவாதித்துக் கொண்டிருக்கும் போதே அந்த மாநிலத்தின் வணிக வாய்ப்புகள் ஒவ்வொன்றாகக் கழண்டு கொண்டிருந்தன. வணிகம் மட்டுமல்ல, சம உரிமைத் தத்துவத்துக்கும் இந்த மசோதா எதிரானது. அரசியல் ரீதியான விளைவுகளுக்கும் அஞ்சாமல் ஜேன் ப்ரூவர் மசோதாவைத் தனது 'வீடோ' அதிகாரத்தால் தள்ளுபடி செய்ததே அவருக்குக் கட்சிப் பாகுபாடில்லாமல் கிடைத்த புகழாரங்களுக்குக் காரணம். ஒருபாலின ஈர்ப்பு ஒரு நோய் என்ற நிலைப்பாடு மாறி, அது தனிமனித விருப்பம் என்றாகிவிட்டது. அதற்கான உடலியல், உளவியல் பலாபலன்களை அதை நுகர்வோர் எதிர்கொள்கின்றனர். ஆனால், அதனை அடிப்படையாகக் கொண்டு சமூகம் அவர்களுக்குச் சேவைகளை மறுப்பதும் ஒருவகைத் தீண்டாமையே ஆகும். சமத்துவத்தின் கலங்கரை விளக்கமாக இருக்கும் அமெரிக்காவில் அத்தகைய சட்டத்தை அங்கீகரிப்பது ஏற்கத் தக்கதல்ல. "எல்லாத் தரப்பையும் அரவணைத்துச் செல்லுதலே 21ம் நூற்றாண்டின் தலைமைப் பண்பு" என்று இத்தருணத்தில் ஹில்லரி கிளின்டன் கூறியதை நாமும் ஆமோதிக்கிறோம்.
*****
2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுக் கணக்குகளைப் பார்த்து முடித்த வருவாய்த் துறை, நிம்மதிப் பெருமூச்சு விட்டதில் அதிசயமில்லை. முந்தைய ஆண்டில் 1.1 டிரில்லியன் டாலராக இருந்த பட்ஜெட் பற்றாக்குறை, 2013ல் 680 பில்லியன் டாலராகக் குறைந்திருப்பதே அதற்குக் காரணம். இரண்டாம் உலகப் போர்க் காலந் தொடங்கி, இதுவரையுள்ள எந்த ஆண்டிலும் மிகக் குறைந்த பற்றாக்குறை அளவு இதுவே என்கிறது அறிக்கை. 2008 முதல் தொடங்கிய ஐந்தாண்டுக் காலத்தில் ஒரு பில்லியனுக்குக் குறைவாகத் துண்டு விழுவது இந்த ஆண்டில்தான் என்பது ஒரு பொருளாதாரத் திருப்புமுனையின் அறிகுறியாக உணரப்படுகிறது. வணிக நிறுவனங்களின் விற்பனை அதிகரித்து அவை செலுத்தும் வரி அதிகரித்ததனாலேயே இந்தப் பற்றாக்குறை இடைவெளி குறுகியுள்ளதாம். பொருளாதாரச் சரிவு, தேக்கம் என்ற நிலைகள் மாறி, வளர்ச்சி என்ற கட்டத்தை நோக்கி நகர்வது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஒன்றே.
*****
ஆஃப்ரிக்க-அமெரிக்க இளைஞர்களிடையே அண்மையில் பேசிய அதிபர் ஒபாமா, எப்படித் தந்தையற்ற கறுப்பு இளைஞனாக வளர்ந்தது தன் வாழ்வில் தோல்வியின் சாத்தியக்கூறுகளை அதிகமாக்கியது என்பதை உணர்ச்சி பூர்வமாக நினைவு கூர்ந்தார். 'My Brother's Keeper' என்ற ஐந்தாண்டுக் கால 200 மில்லியன் டாலர் திட்டத்தை அறிவித்துப் பேசிய அவர், கறுப்பினச் சிறுவர்களே அதிகம் பள்ளியிலிருந்து நீக்கப்படுகிறார்கள், படிப்பறிவற்றவர்களாக இருக்கிறார்கள், குற்றம் இழைப்பவராகவோ, இழைக்கப்பட்டவராகவோ அவர்கள் குற்றவியல் நீதித் துறையைச் சந்திக்க நேர்பவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் புள்ளி விவரங்களோடு எடுத்துரைத்தார். "தந்தை இல்லாமை எனக்குள் மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. நான் போதைக்கு ஆட்பட்டேன், அதன் தீமையைப் புரிந்துகொள்ளாமலே. பள்ளிக்கூடத்தை அலட்சியப் படுத்தினேன்" என்றெல்லாம் அவர் அந்தரங்கமாகப் பேசியவை அங்கிருந்த கறுப்பினச் சிறுவர்களுக்கும் நெஞ்சைத் தொட்ட பாடமாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு. ஒபாமாவின் இந்தத் திட்டம் அவர்களின் வாழ்க்கையைத் தொட்டு மாற்றியமைக்கட்டும்.
***** |
|
இது மகளிர் சிறப்பிதழ். இரண்டு நூற்றாண்டுகளுக்கு ஒளியூட்டிய சாதனை மகளிரான ருக்மிணிதேவி அருண்டேல், சித்தி ஜுனைதா பேகம் தொடங்கித் தென்றலின் அன்புள்ள சகோதரி டாக்டர். சித்ரா வைத்தீஸ்வரன் வரை இந்த இதழுக்கு அணி சேர்க்கிறார்கள். சித்ராவின் அனுபவங்கள் பிரமிக்க வைக்கும் அதே நேரத்தில் நம் வாழ்வுக்கும் பாடமாக அமைபவை. வலையுலகைக் கலக்குகிற வளைக்கரங்கள் குறித்த தொகுப்பும், மலேசிய எழுத்தாளர் நிர்மலா ராகவனின் நேபாளப் பயணக் கட்டுரையும் தென்றலைத் தேனாக்குகின்றன. ஹூஸ்டன் சந்திரமௌலி அவருக்கேயுரிய விறுவிறுப்போடு 'ஆத்ம சாந்தி' நாவலைத் தொடங்கியுள்ளார். இங்கேயே மயங்கி நின்றுவிடாமல், நுழையுங்கள் உள்ளே. தன்னை மறக்கத் தயாராகுங்கள்.
வாசகர்களுக்கு ஹோலி, யுகாதி வாழ்த்துக்கள்!
தென்றல் குழு
மார்ச் 2014 |
|
|
|
|
|
|
|