Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
March 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | அஞ்சலி
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சமயம்
சிங்கப்பெருமாள் கோயில்
- சீதா துரைராஜ்|மார்ச் 2013|
Share: 
Click Here Enlargeசென்னை-செங்கல்பட்டு வழியில் அமைந்துள்ள புனிதத்தலம் சிங்கப்பெருமாள் கோவில். நெற்றியிலே கண்ணை உடைய ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மர் இங்கு கன கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். தாயார் அஹோபில வள்ளித் தாயார். உற்சவரின் பெயர் பிரகலாத வரதன். சுவாமி ஸ்ரீ பூதேவியுடன் எழுந்தருளியுள்ளார். தீர்த்தம் சுத்த புஷ்கரணி. தலவிருட்சம் பாரிஜாதம். இங்கே வைகானஸ ஆகமவிதிப்படி பூஜை நடைபெறுகிறது. நரசிம்மாவதாரத்தில் இக்கோவிலைச் சுற்றி காடு இருந்ததாகவும் அக்காட்டில் ஜாபாலி மகரிஷி தவம் செய்து கொண்டிருந்ததாகவும் அவர் வேண்டுகோளின்படி நரசிம்மர் ஹிரண்ய வதம் செய்தபின் கோப மூர்த்தியாக அவருக்குக் காட்சி கொடுத்ததாகவும் வரலாறு.

இது பல்லவர் காலத்திய குடைவரைக் கோயில் எனக் கல்வெட்டு மூலம் அறிய இயலுகிறது. பாடலாத்ரி என்றால் 'சிவந்த குன்று' என்பது பொருள். இங்குள்ள மூலவர் குகையின் உள்ளே பர்வதத் திருமேனியாக உள்ளதால், பெருமாளை வலம்வர வேண்டுமானால் சிறிய குன்றையும் சேர்த்தே வலம்வர வேண்டும். அதனால் கிரி பிரதட்சிணம் இங்கு மிகவும் விசேஷம். மூலவர் நான்கு கைகளுடன் ஒரு கையில் சங்கு, மறு கையில் சக்கரத்துடன், வலது கை அபயம் அளிக்க, இடது கையைத் தொடையின் மீது வைத்து, வலதுகாலை மடித்து, இடது காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு மூன்று கண்களுடன் வீற்றிருக்கிறார். பொதுவாக நரசிம்மர் ஆலயங்களில் இடதுகாலை மடித்து வலது காலைத் தொங்கவிட்ட நிலையில் தரிசனம் கொடுப்பார். ஆனால் இக்கோயிலில் மாறி இருப்பதும், நெற்றிக் கண்ணும் மிக விசேஷம். மார்பில் மகாலக்ஷ்மி, சாளக்ராம மாலை, சகஸ்ரநாம மாலைகளுடன் காட்சி தருகிறார் நரசிம்மர். ஆண்டாளுக்கும் லக்ஷ்மி நரசிம்மருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. ஆழ்வார்கள், ஆசார்ய புருஷர்கள் சன்னதிகளும் உள்ளன. சன்னதித் தெருமுனையில் அனுமார் சன்னதி உள்ளது.

பிரார்த்தனைத் தலமான இது இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. ஸ்ரீ முதலியாண்டான் வம்சத்தாரால் முதல் தீர்த்த கைங்கர்யம் மற்றும் வேதபாராயணம் தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்றன. கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு மூலவர், தாயார், விமானங்கள், மதில் சுவர்கள், கருவறை என அனைத்துச் சன்னதிகளும் புதுப்பிக்கப்பட்டு 2005ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
Click Here Enlargeஅங்கண் ஞாலம் அஞ்ச அங்கோர் ஆளரியாய்
அவுணன் பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்
பைங்கண் ஆனைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்
செங்கண் ஆளி இட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே”

என்ற தொடக்கத்துடன் கூடிய 'சிங்கவேள் குன்றம்' என்ற இப்பாடல்கள் தினந்தோறும் கோயிலில் பாடி சேவிக்கப்படுகிறது. மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலம் சுற்றி வந்தால் புத்திர பாக்கியமும் சகல நன்மைகளும் ஏற்பட்டு, குடும்பத்தில் கஷ்டங்கள் நீங்கி அமைதி நிலவும், ஸ்ரீ நரசிம்மப் பெருமானின் அருளும் கிடைக்கும் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கை. மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரின் திருவடியிலும், ரதசப்தமி நாளில் நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படுகிறது.

சீதா துரைராஜ்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா
Share: