Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | அஞ்சலி
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
'பைக் ராணி' சித்ரா ப்ரியா
- பா.சு. ரமணன்|மார்ச் 2013||(2 Comments)
Share:
ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பைக் ரேஸ். முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் தயாராய் இருக்கின்றனர். எல்லாரும் ஆண்கள். 'வ்ர்ர்ர்ரூம்ம்... வ்ர்ர்ர்ரூம்ம்...' - பைக்குகள் உயிர் பெறுகின்றன. ஒரு சிலர் மட்டும் கொஞ்சம் நக்கலாக ஒருவரைப் பார்க்கின்றனர். கொடி அசைய பைக்குகள் சீறிப் பாய்கின்றன. கிண்டலாகப் பார்த்தவர்களையும், ஏளனமாகச் சிரித்தவர்களையும் பின்தள்ளிவிட்டு முதலில் இலக்கை அடைகிறார் அவர். மேடையேறிப் பரிசு பெறுகிறார். சிரித்தவர்கள் தேடிவந்து கை குலுக்குகின்றனர். பாராட்டுகின்றனர். அந்த வெற்றி நங்கை சித்ரா ப்ரியா, தமிழகத்தின் முதல் பெண் பைக் ரேஸர்.

சித்ராவுக்குச் சிறுவயதிலேயே பைக் ஆர்வம் வந்துவிட்டது. முதலில் ஸ்கூட்டிதான் ஓட்டினார்; சகோதரர்கள் பைக் ஓட்டுவதைப் பார்த்ததும், தானும் கற்றுக்கொண்டு பைக் ஓட்ட ஆரம்பித்தார் பெற்றோர்களின் ஊக்குவிப்பில் 'பைக் பிரியை' ஆனார். படிக்கும் காலத்திலேயே அண்ணா நகர் வீட்டிலிருந்து காட்டாங்கொளத்தூர் கல்லூரிக்கு பைக்கில்தான் பறப்பார். சித்ராவின் பைக்குக்கு மெதுவாகச் செல்வதென்றால் என்னவென்றே தெரியாது. 2005ல் பெங்களூருவில் நடந்த ட்ராக் ரேஸில் கலந்து கொண்டார். கிடைத்தது முதலிடம். ஆண்களின் கோட்டை ஒன்று தகர்ந்தது. பல போட்டிகள், பல வெற்றிகள். 2010ல் மகேந்திராவின் கிரேட் இந்தியன் ரைடில் (Mahindra and Mahindra Great Indian Ride) கன்னியாகுமரி முதல் பூனா வரை 45 நாட்கள் பைக்கிலேயே பயணித்தது ஒரு சாதனை. இந்தச் சாதனை செய்த முதல் பெண் பைக் ரேஸர் சித்ரா ப்ரியாதான். 2011ல் ஹீரோ ஹோண்டா தமிழ்நாடு ரெய்டில் கலந்து கொண்டு 15 நாட்களில் 2500 கி.மீ. வலம் வந்தார். இவரது முயற்சி இவரை 2011ன் 'பைக்கர் ஆஃப் த இயர்' ஆக்கியது.

"இதைச் செய்த முதல் பெண்" என்று தொடங்கினால் ஒரு பட்டியலே இருக்கிறது. உலகின் மிக உயரமான மோட்டார் வாகனச் சாலையான (world's highest Motorable pass) கார்துங்காலாவுக்குத் தென்னிந்தியா சார்பாக சென்று வந்தவர் இவர். கடல் மட்டத்திலிருந்து 18,380 அடி உயரமுடையது அச்சிகரம். இமாலய பைக் ரேஸின் 10 பேர் கொண்ட குழுவில் கலந்துகொண்ட முதல் பெண். டெல்லியிலிருந்து இமயத்தின் 80,900 அடிவரை 15 நாட்கள் பைக்கிலேயே பயணித்தது இவரது உலக சாதனை. பெங்களூரு-பூனா-பெங்களூரு இடையிலான 1,600 கி.மீ. தூரத்தை 24 மணி நேரத்துக்குள் கடந்தது மற்றோர் உலக சாதனை.

சேடில் ஸோர் ரைட்' (Saddle Sore Ride) எனப்படும் அச்சாதனைப் பட்டியலில் இடம் பிடித்த ஆசியாவின் முதல் பெண் சித்ராதான். அதைப்பற்றிச் சொல்லுகையில் "24 மணிநேரத்துக்குள் பெங்களூர்-புனே சென்று பெங்களூர் திரும்புவதுதான் பயணத் திட்டம். சாப்பாடு, ஓய்வு எல்லா நேரமும் அந்த 24 மணி நேரத்திற்குள் அடக்கம். பலர் இதில் தோற்றுப் போயிருக்கிறார்கள். வென்றது ஆண்கள் மட்டுமே. நான் துணிந்து இறங்கினேன். திட்டப்படி பூனே சென்று, திரும்பி பெங்களூர் வரும்போது இரவாகி விட்டது. பயங்கரக் குளிர் வேறு. இரவுப் பூச்சிகள் கண்ணை மறைக்கின்றன. உடலோ தொடர்ந்த பயணத்தால் டயர்ட் ஆகிவிட்டது. நேரமோ ஓடிக் கொண்டிருக்கிறது. சாதிக்கும் உறுதியோடு, நடுவே கொஞ்சம் வழி தவறினாலும், பெட்ரோல் போட இயலாமல் திண்டாடினாலும், சிரமப்பட்டு ஓட்டினேன். இருபத்தி மூன்று மணி, நாற்பது நிமிடங்களில் பயண இலக்கை அடைந்தேன். இது மறக்க முடியாதது" என்கிறார் சித்ரா. லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் இந்தச் சாதனையை அங்கீகரித்துள்ளது.
இந்தச் சாதனைக்காகவே அமெரிக்காவுக்குக் கலாசாரத் தூதுவராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார் சித்ரா ப்ரியா. அமெரிக்காவின் U.S. International Ride நடத்தும் போட்டியிலும் கலந்து கொண்டார். கலிஃபோர்னியா சூப்பர் பைக் ஸ்கூல் (CSS) நிறுவனர், உலகின் பைக் ரேஸ் சாதனையாளர் கெய்த் கோட் (Keith Code) சித்ரா ப்ரியாவின் திறமையைப் பாராட்டி, நுணுக்கங்கள் பலவற்றைச் சொல்லித் தந்திருக்கிறார். அமெரிக்கப் பயணம் பற்றி சித்ரா, "நான் அமெரிக்காவிற்குப் போனபோது நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். மிகவும் அன்பாக இருந்தார்கள். பலரின் அறிமுகமும் நட்பும் கிடைத்தன. பெரிய, பெரிய பைக்குகளை ஓட்டிப் பார்த்தேன். அங்கே ரோடுகள் எல்லாம் பெரிதாக, நன்றாக இருக்கவே ஜாலியாக பைக் ஓட்டினேன். அங்கு பைக்கிங் நிபுணர்கள், கம்பனிகள் எல்லாம் பார்த்தேன். கிட்டத்தட்ட ஒரு மாதம் இருந்தேன். நல்ல அனுபவம்" என்கிறார்.

பைக் ரேஸ் ஆபத்தானது என்று சொல்கிறார்களே எனக் கேட்டால், "ஆமாம். ஆனால் ஆபத்தில்தானே த்ரில் இருக்கிறது!" என்று சொல்லிச் சிரிக்கிறார். ரேஸ்களில் ஏற்பட்ட விபத்துக்களின் காரணமாக இதுவரை 21 இடங்களில் தையல் போடப்பட்டிருக்கிறது. "ஆமாம். நிறைய விபத்துக்கள் ஏற்பட்டன. அடிபட்டிருக்கிறேன். ஆபரேஷன் ஆகியிருக்கிறது. ஆனாலும் உடல் குணமானதும் மீண்டும் அடுத்த பயணத்துக்குத் ரெடியாகிவிடுவேன். It's my Passion. ஒவ்வொரு பயணமும் ஒரு சவால். இந்தச் சாகஸம் எனக்குப் பிடித்திருக்கிறது" என்கிறார். எதிர்காலத் திட்டம் பற்றிக் கேட்டால், "விரைவில் அகில இந்திய ரைடு போகப்போகிறேன். பெங்களூர்-மும்பை-டெல்லி-கல்கத்தா-வைசாக்-சென்னை-பெங்களூர் என்று ஒரு முழுச்சுற்று வர இருக்கிறேன். கிட்டத்தட்ட 7000 கி.மீ. தூரம், ஏழு நாட்களில் முடிப்பதாகத் திட்டம். அதற்குப் பின்பு வேறு பயணத் திட்டங்கள் உள்ளன" என்கிறார்.

முன்பு இவரிடம் எட்டு பைக்குகள் இருந்தனவாம். தற்போது நான்கை மட்டும் வைத்திருக்கிறார். யமஹா R15 மிகவும் பிடித்த பைக். விஷுவல் கம்யூனிகேஷன் படித்திருக்கிறார். டிஜிடல் ஃபில்ம் மேக்கிங், எம்.பி.ஏ. என்று முதுகலைப் பட்டங்களும் கைவசம். பைக் சாகசப் பயணங்களை ஒரு ஃபில்ம் ஆக எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதுவரை 600,000 கி.மீ. பைக்கிலேயே சுற்றி வந்திருக்கிறார். அப்பா டாக்டர், அம்மா ஓவியர். அண்ணாநகரில் ஓவியக்கூடம் வைத்திருக்கிறார். அண்ணன்கள் இருவரும் கனடாவில் சாஃப்ட்வேர் வல்லுநர்கள். அமெரிக்கா, கனடா, செஷல்ஸ் என்று சித்ரா ப்ரியா சென்ற வெளிநாடுகளில் மிகவும் பிடித்தது கனடா என்கிறார்.

Tree Foundation என்ற அமைப்பின்மூலம் சமூகப் பணிகள் செய்ததுண்டு. "முன்பு மிகவும் ஆக்டிவாக இருந்தேன். தற்போது அதிகம் ஈடுபட முடியவில்லை. ஆமைகள் 100 வருஷம் வரை உயிரோடு இருக்கும். அவை எங்கே முட்டை போட்டு, குஞ்சு பொரித்ததோ அதே இடத்திற்குத் திரும்ப முட்டை போட வரும். அப்படி வரும்போது வலைகளில் சிக்கிக் கொண்டு கொல்லப்படுவதால் அவை நசிகின்றன. நாங்கள் மீனவ கிராமங்களுக்கு இதுபற்றி எடுத்துச் சொல்லி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறோம். அதனால் முன்பு இருந்ததைப் போல இருமடங்கு எண்ணிக்கை தற்போது ஆமைகள் உள்ளன" என்கிறார்.



2004ல் தனது பைக் பயணத்தின்போது சுனாமியைச் சந்தித்திருக்கிறார். "2004ல் ஒரு நீண்ட பைக் ஓட்டம். விடியற்காலையில் எழுந்து பாண்டிச்சேரிக்குக் கிளம்பினேன். பாண்டிச்சேரி கடற்கரை ஓரமாகச் சென்று கொண்டிருக்கும் போது சாலையெல்லாம் ஒரே தண்ணீர். மக்கள் ஒதுங்கி நின்று கடலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஏதோ ஷூட்டிங் நடக்கிறது போல என நினைத்த நானும், யதேச்சையாக பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டுக் கடற்கரையைப் பார்த்தேன். பார்க்கும்போதே கடல் வெகுவிரைவாக உள்வாங்கியது. அது எப்படியும் ஒரு ஆறேழு கி.மீ தூரமாவது இருக்கும். எவ்வளவு விரைவாகச் சென்றதோ அதைவிட வேகமாக, மிக உயரமான அலைகளோடு மேலே வந்து அங்குள்ள பாறையில் மோதியது. சாலை எங்கும் சிதறியடித்தது. மழை பெய்யாதபோதும் சாலை ஈரமாக இருக்கக் காரணம், கடல் உள்வாங்கி மேலேழுந்து வருவதுதான் என்பது புரிந்தது. இதற்குப் பெயர்தான் 'சுனாமி' என்று பின்னர் கூட்டத்தில் ஒருவர் சொன்னார். பின்னர் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து சுனாமியில் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கும் சென்று மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவினோம். எங்களிடம் பைக் இருந்ததால் சின்னச் சின்ன இடங்களுக்கும் விரைவாகச் செல்ல முடிந்தது. பல பேருக்கு உதவ முடிந்தது," என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

இந்தியச் சாலைகளைப் பற்றிக் கேட்டால், "தேசிய நெடுஞ்சாலைகள் சூப்பர். ஆனால் ஊருக்குள் சாலைப் பணிகள் மிக மெதுவாக நடக்கின்றன. அதை விரைவுபடுத்த வேண்டும். இரண்டாவது, இந்தியாவில் இரவில் பயணம் செய்வதில் நிறைய பிரச்சனைகள். அவை களையப்பட வேண்டும். மக்கள் சாலை விதிகளை அலட்சியம் செய்கிறார்கள். அது மாற வேண்டும். வெளிநாடுகளோடு நம் சாலைகளை ஒப்பிட்டால் நிறையவே மேம்பட வேண்டும்" என்கிறார்.

இந்திய அளவில் சிறந்த பைக் ரேசர்களுக்கான 'டாப் 6' அட்டணையில், தென்னிந்தியாவின் ஒரே பெண் சித்ரா ப்ரியா. ரோடரி இளம் சாதனையாளர், Big FM Big Chennaite, The World's Toughest Motorcycle Rider என்று பல விருதுகள் பெற்றிருக்கும் சித்ரா ப்ரியா, உண்மையில் பைக் ரைடிங்கில்தான் கடுமை, மற்றபடி ரொம்பவே கலகல இளைஞிதான்!

பா.சு.ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline