|
|
|
|
கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து 100 கி.மி. தூரத்தில் அமைந்துள்ள தலம் சிருங்கேரி. அழகிய மலைகள் சுற்றிலும் அரண் செய்ய, புனித நதி துங்கபத்திரா குளுமையைத் தர, எழில்மிகு கோலத்துடன், ஆன்மீகச் சிறப்புடன் விளங்கி வருகிறது இவ்வாலயம். சுற்றிலும் உள்ள மலை ரிஷ்யசிருங்க பர்வதம் என்று அழைக்கப்படுகிறது. அத்வைத வேதாந்த தத்துவத்தைத் தென்னாட்டில் ஸ்தாபிக்க ஓர் மடத்தை நிறுவ விரும்பினார் ஸ்ரீ ஆதிசங்கரர். அதற்காகத் தகுந்த இடம் தேடி அவர் பாத யாத்திரை வரும்போது சிருங்கேரியில் ஓர் அற்புதக் காட்சியைக் கண்டார். கொளுத்தும் வெயிலில் நிறைமாத கர்ப்பிணியான தவளை ஒன்று பிரசவ வேதனையால் துடித்தபோது, ஒரு நல்ல பாம்பு படமெடுத்து தவளைக்கு நிழல் கொடுத்தது. ஒன்றுக்கொன்று பகையான அவை தம் பகையை மறந்து ஒன்றன்மீது ஒன்று அன்பு செலுத்தும் காட்சியைக் கண்ட அவர், அதுவே தாம் மடம் நிறுவத் தகுந்த இடம் என்று தீர்மானித்தார்.
ஆதிசங்கரர், மண்டனமிச்ரர் மனைவியும், சாட்சாத் ஸ்ரீ சரஸ்வதி தேவியின் மறு அவதாரமுமாகக் கருதப்படும் பாரதி, தன்னிடம் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளித்து விவாதத்தில் வென்றார். அதனால் மனமகிழ்வு கொண்ட அன்னை, தான் சிருங்கேரியிலேயே நிரந்தரமாகத் தங்குவதாக வரம் தந்தாள். சங்கரர் தன் 32 வருட வாழ்நாளில் சுமார் 12 வருடம் சிருங்கேரியில் தங்கி, சாரதாம்பாள் கோவிலையும், மடத்தையும் அமைத்து, அத்வைத வேதாந்தம், உபநிஷதத்தின் உண்மைப் பொருள் விளக்கம் எல்லாம் செய்தார். தமது சீடர்கள் மூலம் அவ்வுண்மைகள் எல்லா இடத்தும் பரப்பினார்.
ஆதி காலத்தில் துங்கபத்திரா நதியின் நடுவில், மலைப்பாறையில் கூரையினால் வேயப்பட்டு ஸ்ரீ யந்திரம் ஸ்தாபிக்கப்பட்டு சந்தன மரத்தினால் செய்யப்பட்ட ஸ்ரீ தேவியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின் வித்யாரண்யரை அடுத்து வந்த ஆச்சாரியர்களால் கற்களால் மேலே கோபுரம் எடுத்துக் கட்டப்பட்டது. 1906ல் மைசூர் மகாராஜா முன்னிலையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
சாரதாம்பாள் கோவில் நுழைவாயில், கோபுரம், பிரதட்சிணம் செய்ய மூடிய பாதையுடன் கூடிய விஸ்தாரமான ஹால், பெரிய கல் தூண்கள், வளைவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சாரதா தேவி வியாக்யான தர்ம சிம்மாசன ஸர்வஜன பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளாள். சாரதாம்பாள் குரு ரூபமாக அருள்கிறாள். கையில் அமிர்த கலசம், புத்தகம், அக்ஷர பீஜங்களைக் குறிக்கும் ஜபமாலை, ஜீவன், பிரம்மனைக் குறிக்கும் சின்முத்திரையுடன், உபநிஷத அறிவின் ஒளியாக, பிரம்ம வித்யாவாக விளங்குகிறாள். ஸ்ரீயந்திரத்தில் அமர்ந்துள்ளதாலும், லலிதா திரிபுர சுந்தரியாகவும் சாரதா பரமேஸ்வரியாகவும் துதிக்கப்படுவதாலும், தினம் லலிதா ஸஹஸ்ரநாமம், லலிதா த்ரிசதி சொல்லி பூஜை செய்யப்படுகிறது. ஸ்ரீசாரதாம்பாள் பிரம்ம வித்யாவாக பிரம்மா, விஷ்ணு, சிவன் அவர்களது சக்தியான சரஸ்வதி, லக்ஷ்மி, உமை ஆகியோர்களுடன் துதிக்கப்படுகிறாள். |
|
|
இக்கோவிலில் சாரதாம்பாள் சகுண பிரம்மமாக கருதப்படுவதாலும், எல்லாவித சக்திகளுடன் இருப்பதாலும் சுவாமி, அம்பாள் யாவும் ஸ்ரீசாரதா பரமேஸ்வரியே என வணங்கப்படுகிறாள். சாரதா நவராத்திரி விழா இக்கோவிலில் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி ஒன்பது நாளும் ஒன்பது வித வாகனத்தில் தேவி அலங்கரிக்கப்பட்டு 9ம் நாள் சரஸ்வதி பூஜையன்று மிகவும் சிறப்பாக வழிபாடு நடத்தப்படும். தற்போது 36வது பீடாதிபதியாகிய ஸ்ரீ ஜகத்குரு பாரதி தீர்த்த ஸ்வாமிகளின் தலைமையில் மடம் மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. மடத்தில் ஆசார்யர்களால் மாணவர்களுக்கு வேதம், உபநிஷதம், சமஸ்கிருதம் என யாவும் போதிக்கப்படுகின்றன. காசி, கயை, ஹரித்வாரம், சென்னை, திருப்பதி, ராமேஸ்வரம் எனப் பல இடங்களில் இம்மடத்தின் கிளைகள் உள்ளன. யாத்திரீகர்கள் தங்க வசதி, இலவச மருத்துவமனை, மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டு உயர்தரக் கல்வி, வேதாந்தப் பாடங்கள் கல்லூரிகளில் போதிக்கப்படுகின்றன. ஆன்மீக வளர்ச்சிக்காகப் பத்திரிகைகள், இதழ்கள், நூல்கள் வெளியிடப்படுகின்றன. வருடந்தோறும் சிறந்த பண்டிதர்களைக் கொண்டு நடத்தப்படும் 'சதஸ்' மிகச் சிறப்பானது.
சங்கரர் மடத்தை ஸ்தாபித்தபோது சிருங்கேரி கிராமத்தை தீயசக்தி மற்றும் நோய்கள் தாக்காமல் இருக்க நான்கு திசைகளிலும் நான்கு கோயில்களை அமைத்தார். கிழக்கில் கால பைரவர், மேற்கில் ஆஞ்சநேயர், தெற்கில் துர்கை, வடக்கே காளி ஆகியோருக்குக் கோயில்கள் கட்டினார். சாரதாம்பாள் ஆலயத்தை அடுத்துள்ள வித்யா சங்கரர் ஆலயம் கலை, நுணுக்க வேலைப்பாடுகளுடன் கற்களால் மிக அழகுற அமைக்கப்பட்டுள்ளது. அளவற்ற ஆன்மீக அதிர்வலைகளை உடையது இவ்வாலயம். இங்கு வந்து தரிசித்தால் மன அமைதியையும், ஆன்மீக உணர்வுகளையும் ஒருவர் நன்கு உணர முடியும். திரும்ப ஒருமுறை சிருங்கேரி செல்ல மாட்டோமா என்ற ஆர்வத்தையும் ஏக்கத்தையும் தோற்றுவிக்கிறாள் சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள்.
சீதா துரைராஜ், சான்ஹோஸே, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|