|
திருவிடைமருதூர் ஸ்ரீ மஹாலிங்க சுவாமி |
|
- சீதா துரைராஜ்|ஏப்ரல் 2013| |
|
|
|
|
|
தமிழகத்தின் புகழ்பெற்ற திருத்தலம் திருவிடைமருதூர் ஸ்ரீ மஹாலிங்க சுவாமி ஆலயம். இது கும்பகோணம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் அமைந்துள்ளது. இறைவனின் பெயர் மஹாலிங்க சுவாமி. இறைவி பெயர் பெருநலமாமுலையம்பிகை. இத்தலம் மத்யார்ஜுனம் எனப் பெயர் பெற்றது. அர்ஜுனம் என்றால் மருதமரம். மருதமரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட தலங்கள் அர்ஜுனத் தலங்கள் எனப்படும். வடக்கே ஸ்ரீசைலம், மல்லிகார்ஜுனம் என்றும், தெற்கே திருநெல்வேலி அருகேயுள்ள திருப்புடைமருதூர் புடார்ஜுனம் என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்விரு தலங்களுக்கும் இடையே அமைந்துள்ளதால் திரு இடை மருதூர், மத்யார்ஜுனம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள தீர்த்தம், காருண்ய தீர்த்தம். ஒருமுறை சிவன், அம்பிகையிடம் இத்தலத்தின் பெருமைகளை எடுத்துக் கூற அம்பிகையின் கண்களில் இருந்து வழிந்த ஆனந்தக் கண்ணீரே தீர்த்தக் குளமாக உருவாயிற்றாம். அம்பாளின் கருணை மிக்க கண்களில் இருந்து தோன்றியதால் 'காருண்ய தீர்த்தம்' என்று பெயராயிற்று. அமாவாசை, தமிழ் மாதப் பிறப்பில் தீர்த்த்தவாரி நடைபெறுகிறது.
ஏழு பிரகாரம் கொண்டதாக இக்கோயில் அமைந்துள்ளது. திருச்சுற்று மட்டுமல்ல; கோபுரம், கிணறு என அனைத்துமே 'ஏழு' என்ற எண்ணிக்கையிலேயே அமைந்துள்ளன. தமிழகத்தில் ஏழு பிரகாரம் கொண்ட ஒரே கோயில் இதுதான். கோயில் முகப்பில் மிகப்பெரிய 'தேவ நந்தி' உள்ளது. அம்பிகை, அகத்தியர், மகரிஷிகள், முனிவர்கள் வழிபட்ட தலம். முன்மண்டபத்தில் தக்ஷிணாமூர்த்தி அம்பிகையுடன் சுதைச் சிற்பமாகக் காட்சி தருகிறார். பெரும்பாலும் ஆலயங்களில் தக்ஷிணாமூர்த்தி தனியாகத் தென்திசை நோக்கி எழுந்தருளியிருப்பார். இங்கு அம்பாளுடன் காட்சி தருவது விசேஷம். இவரை 'சாம்ப தக்ஷிணாமூர்த்தி' என்பர்.
சந்திரன் தனது குருவான பிரஹஸ்பதியின் மனைவியான தாரை மீது கொண்ட மையலால் விளைந்த சாபம் நீங்க முனிவர்களின் ஆலோசனைப்படி இங்கு வந்து சிவனை நோக்கித் தவம் செய்தான். சிவன் மனமிரங்கி சந்திரனுக்கு விமோசனம் அளித்த தலம் இது. சந்திரனுடன் அவனது மனைவியர்களான 27 நட்சத்திரங்களும் இங்கே வந்தனர். சந்திரனுக்கு அருள்செய்த சிவன், அவற்றுக்கும் அருள் செய்தார். அவை இங்குள்ள 27 நட்சத்திரங்களில் ஐக்கியமாகின. இவை யாவும் ஒரே சன்னதியில் அமைந்துள்ளன. சந்திரன், சிவனை வழிபட்ட தலம் என்பதால், சந்திரன் பெரிய மூர்த்தமாக அமைந்துள்ளார்.
மூகாசுரனை வதம் செய்த மூகாம்பிகை, தன் பாவம் நீங்க இங்கு வந்து சிவனை வழிபட்டாள். சிவன் மூகாம்பிகையின் பாவம் நீக்கி மணந்து கொண்டார். வைகாசி மாதம் உத்திர நட்சத்திரம் அன்று இவர்கள் திருமண வைபவம் நடக்கிறது. மூகாம்பிகை தனிச் சன்னதியில் அமைந்துள்ளாள். அருகே மகாமேரு சன்னதி உள்ளது. பௌர்ணமியில் மேருவுக்குச் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது வழியெங்கும் லிங்கமாக இருப்பதால் கால் வைக்க அஞ்ச, சிவனின் ஆணைக்குட்பட்டு உமை வந்து, பெருமானை இடுப்பில் தூக்கிக்கொண்டு வந்தாள். இந்த அம்பிகை பிரகாரத்தில் சிவனுடன் கைலாயத்தின் மீது காட்சி தருகிறாள். இவளை "அன்பிற் பெரியாள்” என்று அழைக்கின்றனர். புத்திர பாக்கியம் வேண்ட இவ்வம்மனை வழிபடுகின்றனர். கோயிலின் இரண்டாவது பிரகாரமான பிரணவப் பிரகாரத்தில் வேம்படி முருகன் சன்னதி உள்ளது. அதன் எதிரே வேல் சன்னதி உள்ளது. |
|
மகரிஷி காச்யபருக்கு சிவனே குழந்தை கண்ணனாக, தலவிருட்சமான மருத மரத்தின் அடியில் காட்சி அளித்த தலம் இது. சட்டைமுனி நாதர், ஞானசம்பந்தர், பட்டினத்தார், பத்திரகிரியார் ஆகியோருக்குத் தனித்தனி சன்னதிகள் உள்ளன. இத்தலத்து இறைவனே பட்டினத்தாரின் மகன் மருதவாணனாக வந்து, வாழ்க்கையின் நிலையாமையை "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்று போதித்து உணர்த்தினார். பட்டினத்தாரின் பெருமை உணர்ந்து அவர்தம் சீடரான மன்னர் பத்திரகிரியாருக்கு இறைவன் முக்தி கொடுத்த தலமும் திருவிடைமருதூர்தான். வரகுண பாண்டிய மன்னனின் 'பிரம்மஹத்தி' தோஷம் நீங்கிய தலமும் இதுவே. சிவன் சன்னதி இரண்டாம் கோபுரத்தில் பிரம்மஹத்தி சிலை உள்ளது. இச்சிலை முன் உப்பு, மிளகு போட்டு பக்தர்கள் தங்கள் தோஷம் நீங்க வேண்டிக் கொள்கின்றனர். வரகுண பாண்டியன் தான் விரும்பி மணந்த ராணி காந்திமதி உட்பட அனைத்தும் சிவனுக்கே சொந்தம் என்பதை உணர்ந்து, சிவனிடம் ராணியை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்ட, ஈசனும் அதனை ஏற்று ராணியைத் தன்னுள் இணைத்துக் கொண்டார். ராணி அம்பிகைக்கு பிரகாரத்தில் சிலை உள்ளது.
இக்கோயிலில் எந்தவழியில் நுழைந்தோமோ அவ்வழி திரும்பக் கூடாது என்பது நியதி. மனிதனுக்கு ஏதேனும் தோஷங்கள், பீடைகள் இருந்தால் அவை நுழைவாசலில் நின்றுகொண்டிருக்கும், கோயிலை விட்டு வெளியேறுகையில் அவர்களை மீண்டும் பிடித்துக் கொள்ளும் என்றும், ஆனால் வேறு வாசல் வழியாக வெளியேறினால் அவை பீடிப்பதில்லை என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது. தைப்பூச விழாவின்போது 63 நாயன்மார் உலா இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
சீதா துரைராஜ், சான் ஹோஸே, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|